இது வரை வந்த “தேவதாஸ்”/,கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன்

இது வரை வந்த “தேவதாஸ்” திரைப்படங்களில் மிகவும் உயர்வானது பாலிவுட் மூத்த நடிகர் திலிப்குமார் அவர்கள் நடித்து 1955 ஆம் ஆண்டு வெளிவந்த வடிவமே.

எப்படி கடைசி காட்சியில் குடிகாரன் ஒருவன் நிஜமாக உயிர்விடுவது போல நடித்திருப்பதைப் பாருங்கள்,தேவதாஸ் என்றாலே தாடி என்பர்,உடன் ஒரு வழிகாட்டி நாய் இருக்கும், ஆனால் தாடி வைக்காமல் முழு சோகத்தை பார்வையாளர்களுக்கு கடத்திய நடிகர், சத்யஜித் ரே அவர்களின் ஆதர்ச நடிகர் திலீப்குமார்,ஆனால் இருவரும் இணைந்து படம் செய்ததில்லை .

இந்திய சினிமாவில் மெதட் ஆக்டிங் பாணி நடிப்பின் முக்கியமான முன்னோடி, 98 ஆண்டுகாலம் வாழ்ந்தவர், மிகக் குறைவாக படங்கள் நடித்தவர், கதாநாயகனாக மட்டும் நடிப்பேன் என அடம் பிடிக்காதவர்.

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இவர் நடிக்கையில் நான் ஆணையிட்டால் என சாட்டையை என்னால் வீசிப் பாடமுடியாது, அது நம்பகத்தன்மையுடன் இருக்காது என மறுத்து விட்டவர்.

54 ஆண்டுகள் திரை வாழ்வில் 57 திரைப்படங்கள் மட்டுமெ செய்த நடிகர், எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல் தன் மனதுக்குப் பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து சாவகாசமாக ரசித்து நடித்த நடிகர், வருடத்துக்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடித்து வாழ்க்கையை உள்ளச் சமநிலையுடன் வாழ்ந்தவர்,

நடிகர் கமல்ஹாசனின் ஆதர்சம், இன்னும் நம் அப்பாமாரின் அம்மாமாரின் ஆதர்சம் நடிகர் திலிப்குமார்.

எழுத்தாளர் அசோகமித்ரன் தனது மானஸரோவர் நாவலில் நடிகர் திலிப்குமார் கதாபாத்திரத்தை நடிகர் சத்யன் குமார் என்று மாற்றி அவரது வாழ்க்கை வரலாறாகவே புனைந்திருப்பார்,அத்தனை தத்ரூபமாக இருக்கும், அத்தனை பெரிய இந்தி சினிமா ஜாம்பவான் கதை விவாதத்திற்கு சென்னை வந்து அங்கு ஸ்டுடியோவில் தனக்கு மிகவும் தோழமையாகிவிட்ட புத்திஜீவி தாரித்ரிய வசனகர்த்தாவைத் தேடி அவனின் ஒண்டுக் குடித்தனத்திற்கே வருகிறார், தாரித்ரிய வசனகர்த்தா குசேலன் கிருஷ்ணனிடம் கேட்டது போல என்ன வரம் வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்,ஆனால் கிஞ்சித்தும் கேட்பதில்லை, ஆனால் அவர் அடுக்கடுக்கான துயரின் பின்னால் நின்று உதவுகிறார்,நிரந்தரமாக ஊரை விட்டு வெளியேறிய வசனகர்த்தாவை ஊர் ஊராகத் தேடுகிறார்,அத்தனை அற்புதமான புனைவெழுத்தில் பாலிவுட்டையும் கோலிவுட்டையும் பாலமாக இணைத்திருப்பார் .

திலீப் குமாரும் அசோகமித்திரனும் ஸ்டுடியோவில் சந்தித்து நட்பை வளர்த்திருக்கலாம் என்பது என் ஊகம், ஊகம் தான் ,காரணம் அத்தனை வலுவான கதாபாத்திரம் அது, அதுவே ஆசிரியரை மானஸரோவர்’ என்ற நாவலை இத்தனை நம்பகத்தன்மையுடன் எழுதத் தூண்டியுள்ளது, 1989 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட நாவல் இது , திலீப் குமாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. நாவலில், பாலிவுட் நடிகரான சத்யன் குமார் என்ற கதாபாத்திரம், பெஷாவரில் பிறந்து, பிரிவினைக்கு முன் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்குச் சென்று ஒரு மெதட் ஆக்டராக, ட்ராஜடி கிங் ஆக, அபிநய சாம்ராட் ஆக, The first khan ஆக திலீப் சஹாப் ஆக உயர்வதை விவரிக்கிறது நாவல் . அவருக்கு முகமது யூசுஃப் கான் என்ற இயற் பெயர் இருந்தது, அவர் பாலிவுட் திரைப்படத் துறையில் நுழைந்த பிறகு அது திலீப்குமாராக மாற்றப்பட்டது, அதுவும் மானஸரோவர் நாவலில் வருகிறது.