
அமைதியாக இருந்தது அந்தக் குளம்
நான் எறிந்த கல் அலையலையாய்
தாத்தாப் பூச்சி பறப்பது போல
நடனமிட்டு அதன் சலனத்தின் மேல்
எழுதி எழுதி மூழ்கியது.
அரசிலைகள் கீழ் நோக்கி வளைந்து
அதைப் படிக்கப் பார்த்தன.
மதியின் ஒளியும் அதை ஆய்வு செய்யப் பார்த்தது
மௌன குருவும், அங்கிருந்த பிள்ளையாரும்
சிரித்த ஒலி அதன் காதுகளுக்கு மட்டும் கேட்க
குளம் மீண்டும் அமைதியானது சலனமெழுத்தை
உள்ளடக்கிக் கொண்டு.
பேரிளம் பெண்
இரு கைகளிலும் சுமைகள்
தோளில் தொங்கும் கைப்பை வேறு
தளரத் தொடங்கி விட்டது உடல்
ஊசித் தூற்றலாய்த் தொடங்கியது மழை
நிற்போமா, போவோமா என சிந்தனை அவளுக்கு
உள்ளே இருக்கும் சிறுமி நச்சரித்திருக்கக் கூடும்
கதவிடுக்கில் மாட்டிய மிதியடி போல் தத்தளித்தாள்
உதடுகள் அசைய அதிகரித்த மழைக்குள் சென்றாள்
என்ன பாடியிருப்பாள்? மழையின் லயமே தாளமாக,
கைச்சுமைகள் பார்வையாளராக
தோள் பை ஸ்ருதியாக
நடக்கும் நடையே நாட்டியமாக
அவளைப் பார்த்து நகைக்காதீர்கள்.
அவள் வாழ்வின் இன்பமான தருணம் இது
ஒன்று மட்டுமேயாக இருக்கலாம்.
இன்று 19.07. 2024 கவிதை வாசிப்பு நிகழ்வில் வாசித்த கவிதை
