சசிகலா விஸ்வநாதன்/சுல்தானியா

            ஜமின் சுல்தானியா சோர்வுடன் காரில் வந்து அமர்ந்தாள். செழியனும் பிள்ளை சிந்தூரானோடு வந்து அவள் அருகில் அமைதியாக அமர்ந்தான். சிந்தூரான் தன் போக்கில் கார் கண்ணாடியில் விரலால் ஏதோ வித்தை காட்டி தனக்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தான்.
              " செழியா!  இது ரொம்ப சீரியஸான இஷ்யு. நாம் இதை எப்படி சமாளிப்பது, என்பதை தீவிரமாக யோசிக்க வேண்டும்.

சிந்தூரான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தில் மூன்றாம் லெவலில் இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இப்போது நாம் இவனை சரியாக கவனிக்காமல் விட்டால் நாளை அவன் நமக்கு பெரிய பொறுப்பாகி விடுவான். அதுமட்டுமல்லாமல் அவனுக்கே அவன் பாரமாகி நிலை உருவானது கூட அறியாமல் இருப்பான். என்ன செய்யப் போகிறோம்; எப்படி செய்யப் போகிறோம்?”
செழியன், ஆணுக்கே உள்ள பதட்டத்துடன், ” என்னசொல்றே! வீணா பயப்படுத்தாதே; உன் அப்பா- அம்மா அல்லது என் அப்பா- அம்மாவைக் கூப்பிடலாமா; உதவிக்கு”, என்று கேட்கவும் சுல்தானியா அவனை முறைத்தாள். ” ஆமாம்,! வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்! எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவோம்? நல்ல வேளை அமெரிக்கா வந்தோம்! இல்லை யென்றால்; அவர்களோடு வேறு ஒரு போராட்டம் இருந்திருக்கும். இப்போதுதான் நமது
ஃ போனை எடுத்து பேசும் நிலைமை வந்துள்ளது. சிந்தூரானுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பது தெரிந்தால் .. வேறு வினையே வேண்டாம். அவனை மூளை சரியில்லாத பிள்ளை என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார்த்தி விடுவார்கள். உற்றார் உறவினரிடம் செழியன் மகனுக்கு மூளை வளர்ச்சியில்லை என்று வம்பு பரவும். தேவையா; அது? வேறு வழிதான், யோசிக்கணும். என்றாள்; சுல்தானியா.
‌. அவள் சொல்வதில் உள்ள எதார்த்தம் உள்ளத்தில் உறைக்க, மௌனமானான்; செழியன்.
மறுநாள் ஆட்டிசம் தெரப்பிஸ்ட் நேர்காணலை முடிவு செய்து கொண்டு இல்லம் திரும்பினர்; இருவரும்.
வழக்கம் போல் சிந்தூரான் சன்னல் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்துடன் ; விளையாடுவதைப் பார்த்த சுல்தானியாவுக்கு மனம் கலங்கியது.
மூன்று வயதாகும் சிந்தூரான் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே; என்றுதான் இன்று குழந்தை மருத்துவரிடம் இன்று சென்றிருந்தார்கள். அவர் குழந்தைக்கு ஆட்டிசம் என்று கண்டுபிடித்துள்ளனர். இருவருக்கும் இப்போதுதான் அமெரிக்கா க்ரீன் கார்டு வந்துள்ளது. சிந்தூரான் அமெரிக்க மண்ணின் மைந்தன். இருவருக்கும் அமேசானில் நல்ல வேலை. புது இல்லம் ஒன்று இப்போதுதான் வாங்கியிருந்தார் கள். தம் பணியில் வேகமாக முன்னேறும் உத்வேகத்தில் இருந்தவர்களுக்கு, இப்போது ஒரு தடங்கல்.
மறுநாள் தெரப்பிஸ்ட் அவர்களிடம் பேசியதன் விளைவு அவர்களை திக்கு முக்காட செய்தது. இருவரில் ஒருவர் அமேசான் வேலையை விட முடிவெடுத்தார்கள். மற்றோருவர் ஃப்ரி லேன்ஸாக அதிகம் பளு இல்லாத வேலையை எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர்.
சுல்தானியா,” செழியா! நான் சிந்தூரானை கவனிக்கிறேன். குழந்தை சிறியவனாக இருக்கிறான்.டாய்லட் ட்ரெயினிங் கூட சரிவர ஆகவில்லை. நீ வேலையில் முன்னேறி வா. எப்படி போகிறது என்று பார்க்கலாம். நான் வீட்டில் இருந்தே ஃப்ரீ லேன்ஸாக ப்ராஜக்ட் செய்து கொடுக்கிறேன். நம் தொடர்பில் உள்ளவர்களிடம் பேசி என் ப்ராஜக்ட் வேலைகள் கிடைக்க முயற்சி செய்யலாம்.காதல் திருமணம் செய்ததை விட; சரியாகவும் வெற்றியுடன் உலகில் வாழ்ந்து காண்பிப்பது தான் நம் லட்சியமாக இருக்க வேண்டும்” என்று தெளிவாகப் பேசினாள்.
தெரப்பிஸ்ட், மருத்துவர், கவுன்சிலிங்,என்று சிந்தூரானோடு நாளில் பெரும்பகுதியை செலவழித்தாள் சுல்தானியா. இடையிடையே நண்பர்கள் மூலமாக அவ்வப்போது சிறிது சிறிதாக செய்து கொடுத்த ப்ராஜக்ட் வேலைகள் அவளை மென்பொருள் வட்டத்திலேயே வைத்திருக்க உதவியது. சிந்தூரானின் வளர்ச்சியிலும் நல்ல முன்னேற்றம்.
இரு வருடங்களில் சாதாரண வாழ்வியலுக்கு வந்துவிட்டான்.
வாழ்வின் எதிர்பாரா திருப்பம் எப்போது எப்படி ஏற்படும்; என்று எவருக்குத் தெரியும்?
இன்று தெரப்பிஸ்டிடம் போனபோது, ” சுல்தானியா! இத்தனை நாள் உன் மகனை நன்கு கவனித்து முன்னேற்றம் செய்து காண்பித்துள்ளாய். அது ஏன் வீண்போக வேண்டும்; இதற்கான இரண்டு வருட படிப்பு நீ படி. நானும் உனக்கு உதவுகிறேன். வயோதிகம் காரணமாக இந்த நிலையத்தை எவரிடமாவது ஒப்படைக்க இருக்கிறேன் நீ ஏன் இதை நிர்வகிக்க கூடாது” என்று புது எண்ணத்தை சுல்தானியா மனதில் விதைத்தாள்
செழியனுக்கும் அது நல்ல யோசனை யாகத் தோன்ற; சுல்தானியா ஆட்டிசம் தெரப்பி படிப்பில் சேர்ந்து,முறையாக லைசென்ஸ் வாங்கிய தெரப்பிஸ்ட்டாக உருவானாள். பல அன்னையின் கண்ணீரைத் ஒற்றி எடுத்து, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்வின் ஒளியாகத் திகழுகிறாள். தனது நிறுவனத்தை விரிவு படுத்தி நான்கைந்து உதவியாளர்களின் சேவையையும் பயன்படுத்திக் கொண்டாள். இரண்டொரு குழந்தைகள் மருத்துவமனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளதால், “சோபியா ஆட்டிசம் தெரப்பி சென்டர்” அந்த நகரத்தில் அதி விரைவிலேயே பிரபலம் ஆயிற்று. சுல்தானியா தொடர்ந்து தனது ப்ராஜக்ட் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறாள்…. என்றாவது ஒருநாள், ஒரு முழுநேர மென்பொறியாளராக ஆகலாம்; என்ற நம்பிக்கையில்.