ஆசிரியர் கலைமகள்……………
வட இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். தாஹி வாடா சாப்பிடலாமா? என்று கேட்டார். எனக்குத் தயிர் வடை என்றால் ரொம்பப் பிடிக்கும்! எனவே உடனே சரி என்று சொல்லி விட்டேன். சென்னையில் வெயில் இல்லை என்றாலும் கூட தயிர் வடையைச் சாப்பிடுவது என்று முடிவு செய்து ஆர் ஏ புரத்தில் உள்ள ஹோட்டலுக்குள் நுழைந்தோம்!
தயிர் வடை என்பது ஹிந்தியில் தாஹி வாடா என்றும் மலையாளத்தில் தைரு வடை எனவும், தெலுங்கில் பெருகு வடை எனவும் அழைக்கப்படுகிறது.
மிகவும் லாபகமாக தயிர்வடையின் மீது தூவி இருக்கும் கேரட் துருவலையும் கொத்தமல்லியையும் பக்குவமாகக் கையாள வேண்டும்! என்று நண்பரிடம் சொன்னதும் அவர் தலையை ஆட்டினார். வட இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் ஆசாமி நம்ம ஊர்க்காரர் தான் என்பதால் தயிர் வடையைச் சாப்பிட்டு விட்டு, கண்ணாடி பவுலில் இருந்த மீதி தாஹியையும் (தயிரையும்) சொட்டு விடாமல் சாப்பிட்டு விட்டார்!! அவர் சாப்பிட்ட அழகைப் பார்க்க கண் கோடி வேண்டும்!
முதலில் அரசி, உளுந்தை
ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாகத் தயிரை நன்கு அடித்துகொண்டு அதில் தேங்காய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றைத் தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் கடுகு தாளித்து ஒரு சட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் வடைக்கு அரைத்த மாவை வடையாக எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அவற்றை ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து வடையைத் தயிரில் போட வேண்டும்.தயிரில் வடைகள் ஒரு மணி நேரமாவது மூழ்க வேண்டும். மூழ்கிய பின்னர் கேரட் கொத்தமல்லி வெங்காயம் போன்றவற்றைத் தூவி பரிமாறினால் சுவையான தயிர் வடை ரெடி! என்று எனக்கு செய்முறை விளக்கம் வேறு கொடுத்தார் என் நண்பர்
கர்நாடகாவை ஆட்சி செய்த மூன்றாம் சோமேஸ்வரனால் தொகுக்கப்பட்ட 12ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் க்ஷிரவதம் என்ற பெயருடன் காணப்படுகிறது தயிர் வடை!!

