
காலையில் கோலமிட்டுக்
கொண்டிருக்கிறேன்
அருகே வந்து உரசி நிற்கிறது
கன்றுக்குட்டியொன்று…
மணிக்கண்களின் யாசிப்பில்
இரங்கி
வாழைப்பழங்கள் எடுத்து வந்து
அதனருகே வைத்து விட்டு
கோலமிடக் குனிகிறேன்
கோபித்துக் கொண்டாற்போல்
விருட்டென்று திரும்பி நடக்கிறது
அழைத்து அறியா தடுமாற்றத்துடன்
டேய் ஏன் இப்படி செய்கிறாய்?
என்கிறேன்
நின்றபடி திரும்பிப் பார்க்கிறது
கையிலேந்தி நீட்டுகிறேன் பழங்களை
நாவால் கையை ஈரப்படுத்தியபடி
உண்டு விட்டுநகர்ந்து செல்கிறது
இப்பொழுது வரை..
மனம் மட்டும் நகரவேயில்லை.
கையோடு சேர்ந்து
குறுகுறுத்துக் கிடக்கிறது
