
- சுவையான விவாதம்
க.நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டியதில்லை. என்றாலும், முதன் முதலாக யாப்பிலாக் கவிதையான வசனகவிதை சம்பந்தமாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பெருமை அவருக்கே உரியது.
‘சூறாவளி’ வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது. க.நா. சுப்ரமண்யம் நடத்திய அப்பத்திரகை கவிதையில் அதிக அக்கறை காட்டவில்லை. ச.து.சு. யோகியாரின் படைப்பு எப்பவாவது இடம் பெற்றுக் கொண்டிருந்தது.
என்றாலும், ‘சூறாவளி’ நான்காவது இதழில் ‘மயன்’ எழுதிய வசனகவிதை வந்தது. க.நா.சு. தான் ‘மயன்’
மணப் பெண்
திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அறியாவண்ணம்
அழகி என்று
அவளை அறிவ தெப்படி?
அவள் அழகி
ஆடை உடுத்தி
அழகு படுத்தி
அலங் கரித்து
மணமேடை யேற்றிக்
கண்டின் புற்றது
நாங்கள்.
அவள் அழகைத்
திரையிட்டு மூடுவானேன்?
அழகு கண்டு
கண் மங்காதிருக்க
அவன் அதிர்ஷ்டங் கண்டு
பிறர் பொங்காதிருக்க.
பின் அவளழகை
உரக்கப் பாடுவானேன்?
பாட்டை நம்புவார் யார்!
வெறும் சொல்லடுகக் கென்று
எண்ணி ஏமாறுவார்
யாருமே என்று
அவளழகைப் பாடுவோம்
நாரியர் புடை சூழ
மேக மண்டலத்தில்
மின்னென நடக்கிறாள்-
மாலை வானத்திலே
மின்னும் சுடரெனவே
மணவறை சேருவாள்-
அவன் கூடுவான்
அழகுடன்
அழகு பொருந்த.
இந்தக் கவிதையைக் குறை கூறி ஒரு கடிதம் ‘சூறாவளி’ ஆறாவது இதழில் பிரசுரமாயிற்று. ‘மகராஜ்’ என்பவர் எழுதியது.
‘சூறாவளியில் ‘மயன்’ எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும், பிற பாஷைகளிலும் இந்தப் புதிய மோஸ்தரில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப் பார்த்து அவ்வளவு வருத்தப்பட்டதில்லை. மற்ற பாஷைகளை பிடித்த பீடை தமிழையும் ‘தொத்த’ ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.’
செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப் பாடில்லாமல் எழுதப்படும் கவியை பிரஞ்சு பாஷையில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக் கட்டுப்பாடில்லாத கவியினால் ஏற்படும் குணா குணங்களை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.
கவிஞனுக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞனுடைய கற்பனா சக்திக்கும், வெற்றிக்கும் ஓரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆனால், கவியானது சப்பாத்திக் கள்ளி படர்ந்தது போல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானால் வியர்த்தமாகிவிடும் என்பது திண்ணம்.
தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாளலயத்தையும் தள்ளி வைத்துவிட்டு வசனத்தையே கவிரூபமாக கடுதாசியில் எழுதிவிட்டால் கவியென்று ஒப்புக் கொள்ள முடியுமா?
உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள், வார்த்தைச் சேர்க்கையினால் உண்டாகும் புதிய சக்தி; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக்கூடிய தாளம், Rythm இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில. இவற்றில் சிரேஷ்டமானது தாளம்தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டுதான் கவிஞன் கேட்போருடைய ஹிருதயத்தைத் தட்டி எழுப்பப் ‘பாடாகப்படுத்திவிடுகிறான்.’
இந்தப் “புதுரகக் கவிகளோ தாளத்தைக் கைவிட்டு விட்டார்கள். உரையும் செய்யுளுமில்லாத வௌவால் கவிதைக்கு தமிழில் ஒரு ஸ்தானம்- நிரந்தரமான ஸ்தானம்-உண்டா?”
28-5-1939 ‘சூறாவளி’ இதழில் வந்த இதுதான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.
4-6-1939 இதழில் ‘மயன்’ சிறுபதில் ஒன்று கொடுத்திருந்தார்.
“Vers Libre” என்ற பதம் ‘சுதந்திரத்தை நோக்கி’ என்று அர்த்தப்படும்- மேல் நாடுகளில் சென்ற ஒரு நூற்றாண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச் செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது.
கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக்கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து எழுதினால்தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.
என்னைப் பற்றிய வரையில் “எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை, அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்”.
அதே இதழில், வசனகவிதை முயற்சியைக் கேலி செய்யும் ‘வசனகவிதை’ என்னும் பரிகாசப் பாடல் ஒன்றும் வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் ‘எஸ்’ என்றே தரப்பட்டிருந்தது.*
வசன கவிதை
எதுகையும் மோனையும்
வேண்டவே வேண்டாம்
சீரும் கீரும்
சுத்தச் சனியன்கள்
வெண்பாவும் கிண்பாவும்
விருத்தமும் திருத்தமும்
வேண்டாத தொல்லைகள்
மட மட வென்றும்,
கட கட வென்றும்,
மள மள வென்றும்
வசன கவிதை
எழுதித் தள்ளுவோம்
“ததாஸ்து”
வாணியின் விலங்குகள்-
கைவிலங்கும் கால்விலங்கும்
படார், படார்!
டணார், டணார்!
விலங்குகள் எல்லாம்
பொடிப் பொடியாகுக!
பொடிந்த பொடியை
ஹே காற்றே.
கடலில் சேர்ப்பாய்.
ஜல்தி! ஜல்தி!
டம், டம், டம்.
புரட்சி, புரட்சி
இலக்கிய உலகில் புரட்சி செய்வோம்
தாளத்தைப் போக்கிக்
கூளத்தைக் கூப்பிடுவோம்.
இசையைத் தகர்த்து
இம்சைகள் செய்வோம்.
அமைப்பை நொறுக்கி
அலங்கோலம் செய்வோம்
அகத்திய முனிவரை
“ஹோ ஹோ” வென்று
அலற வைப்போம்.
கம்பனைக் கதற வைப்போம்.
எத்தனை சாத்தனார்
எதிர்த்து வந்த போதிலும்
அச்சம் இல்லை; அச்சம் இல்லை
அச்சம்
என்பது
இல்லையே
இதற்குப் பதில் பரிகாசச் செய்யுள் ஆக 11-6-39 இதழில் வந்தது. ‘நாணல்’ எழுதியிருந்தார். அந்நாட்களில் நாணல் (பேராசிரியர் அ. சீனிவாசராகவன்) வசன கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக்கள் ‘காலேஜ் மேகஸின்’ களில் பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா.
‘சூறாவளி’யில் அவர் எழுதிய பரிகாசம் ‘யாப்பின் பெருமை’. அது பின்வருமாறு;
‘சில ஆண்டுகளுக்குமுன், வளையாகேசி என்ற பழந்தமிழ் நூலைப்பற்றிய வரலாற்றை ஆராய நேர்ந்த பொழுது பஃறுளிப் பள்ளம் என்ற ஊரிலே வேளாண் மரபிலுதித்தவரும், புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவநேசச்செல்வருமான உயர் திருவாளர் பலகந்தற் பிள்ளையவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்பதைக் கண்ணுற்று, பிள்ளையவர்களின் பேரன்பின் வழியாக அமைவதைப் பெற்றுப் பல காலம் ஆராய்ச்சி செய்ததன் பயனாக தற்போது, வசனக்கவிதை என்று உலவி வருகின்றவிடமானது பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்றோற்ற, அவ்வமயம் பாற்கடலிற்றோற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மானைப்போற் பல புலவர்கள் இந்நஞ்சைத் தலைசக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய தமிழ்மொழியைக் காத்தனர் என்பதும், ‘ரிதும்’ என்று இக்காலத்தில் வழங்கிவருஞ் சொல் ஆங்கிலச் சொல்லல்ல தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற்பிறவும் தெற்றென விளங்க, சூறாவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள ‘வசனகவிதை’ என்ற கட்டுரையைக் கண்ணுற்றுக் கலங்கியாப்பின் பெருமையைக் காக்கத் தொல்காப்பியனார் மரபிற் றோன்றிய எதுகைக் கீரி, மோனைப் பூனை முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மாணாக்கனார் தவளைக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஏட்டுப் பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதரிதாமென நினைத்து சிற்சில மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகலின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய ஆற்றலை அளித்த அருமறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்;
கரும்பு போலத் தித்திக்கும்
கற்கண்டைப் போலினிதாகும்
துரும்பு போல வலிதாகும்
தூவென்றால் பின் சூவாகும்
கரும்பு மலர் கண்டிசை பாடும்
கடுகற் பொதிய முனிவன் சொல்
விரும்பிச் சீர்தளை யெதுகையினை
விரும்பிற் பொருளை விரும்புவரோ?
விரும்பு சோளக் கவின் கொல்லை
வித்தங் காக்கு விம்மம் போல
திரும்பிப் பொருளைப் பாராமல்
திருதிரு வென்று தயங்காமல்
அரும்பு சொல்லின் செல்வமெலா
மசையில நிறைந்து நேராக
எறும்பு கல்லைத் தோய்ப்பதுபோ
லிசைமின் னெதுகை சீர்தளையே.
தளையைத் தளர்த்த முற்படுவீர்
தலைவேதனையைக் கவி யென்பீர்
கிளைக்கு மேலே நின்றிடுவீர்
கீழ்மர மெய்யு மதியுடையீர்
தளைசீர் மோனை யெதுகைப் பாவும்
பாவினமு மென்றாகி
விளைக்குஞ் சேற்றுநிலந்தனிலே
விழுத்தீராயி னெழுந்தீரே
எழுந்தீரென்றே னேதென்றா லெழுதாக்
கவிதை யெலா முமதே
செழுந்தீ சூழுஞ் சுடுகாட்டிற்
செந்நாப் பேய்களாடுவதும்
கொழுந்து விட்டே வுலக்கைத்தாய்
கோலா கலமாய் வளருவதும்
விழைந்து கண்டு விரைவில்நீர்
வீங்கு யாப்பாற் கவியாவீர்
கவியாம் பெருமை வேண்டுமெனிற்
கண்கள் முழுதும் பஞ்சாகத்
தவியாய்த் தவித்துத் தாளத்தைத்
தத்தித் தத்திப் போட்டிட்டு
அவியாவொளி போலணைந்திட்டே
அறியா ‘ரிதுமை’க் கும்பிட்டுச்
செவியே யில்லாக் கட்செவி போற்-
செஞ் சொன் மேலே யூர்வீரே
வேறு
வெண்ணெயானது நெய்யா யுருகிடுங்
கண்ணி லாதவனைக் குருடனெனலாம்
அண்ணனானவன் தம்பிக்கு மூத்தவன்
எண்ணி யாப்பி சைத்தாற் கவியாகுமே.
வேறு
வாழ்க சீர்தளை மோனை
வாழ்க காரிகை யெதுகை
ஆழ்க வசனக் கவிதை
சூழ்க இலக்கண இருளே.
வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று சூறாவளி ஒன்பதாவது இதழில் (18-6-1939) இடம் பெற்றது. அதை எழுதியவர் ‘கவிதைத் தொண்டன்’.
பொதுவாகவே வசனகவிதையைக் கண்டிப்பவர்களுடைய வாதம் நூதனமாக இருக்கிறது – வசன கவிதை நூதனமோ இல்லையோ! வசன கவிதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை. சீர், தளை, எதுகை, மோனைகளை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய கட்சிபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப் பரீக்ஷை என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும்?
சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள். பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களை இரண்டு பகுப்பாகப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின்பற்றாமல் நவீனமாகப் புரட்சிப் பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம் பழையதுதான்.ஆகையால் அதைப் புதுப் பரீக்ஷை என்று சொல்லிக் கொண்டு கூத்தாடுவது பிசகு என்ற கட்சி.
முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர்கள் குணத்தைப்பற்றியோ கவிதையைப் பற்றியோ பேசத் தயாரில்லை. கவிதையின் அணி அலங்காரத்தைப்பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்குமட்டும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப்பட்டு வரும் வசன கவிதைமுறை புதிதுதான். நவீனம்தான். முற்காலத்தில் இருந்ததாக அவர்கள் குறிப்பிடும் வசன கவிதைக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.
ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக அதற்கும் ‘ரிதும்’ உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவதுசிரமம் செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது-வெறும் வசனம்தான்.
இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர் சுப்பிரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப் படிப்பவர்கள் வசனம் எதுவென்றும் வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம். அவருக்குப் பின்னால் அவரைப் பின்பற்றி எழுதி வருபவர்கள் ஒரு வேளை அவ்வளவு வெற்றி பெறாமல் இருக்கலாம். இன்னும் பரீஷை நிலையிலேயே இருக்கலாம். அதனால் வசன கவிதை செய்யுளின் முன் நிற்க முடியாதென்றோ, அது கவிதையாகாதென்றோ யாரும் சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை எந்தக் கற்பனை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
நாணல் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனாலும் காளிதாஸன் சொல்வதுபோல,
(புராணமித்யேவே நசாது ஸர்வம்.
நசாபி காவ்யம் நவமித்யவத்யம்)
பழையது என்பதாலேயே எல்லாம் குற்றமற்றவையல்ல. ‘புதிது என்பதால் மட்டும் எல்லாம் பேசத்தகாதவை அல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.’
இவ்வாறு பதில் அளித்த ‘கவிதைத் தொண்டன்’ கு.ப.ராஜகோபாலன் தான். அவர் இதே கருத்தைப் பின்னர் தன் பெயரில் மேலும் சிறிது விரிவாக ‘கலாமோகினி’யில் எழுதியிருக்கிறார்.
இந்த விவாதம் பூராவும், ‘ஆசிரியருக்குக் கடிதம்’ என்ற உருவத்தில், ‘சொல்லுங்கோ’ எனும் தலைப்பில்தான் அச்சாகி வந்தது. பதினோராவது இதழில் விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதது போன்ற கடிதம் ஒன்று பிரசுரமாயிற்று.
“ஐயா, தற்போது தங்கள் பத்திரிகை வாயிலாக ஒரு விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது, அந்த விவாதத்தின் முடிவைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பாரதி ஒரு இடத்தில் ‘ஸரஸ்வதியும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சில வரிகள் எழுதியிருக்கிறார். அது தற்கால இலக்கியத்திற்கு (இலக்கியமென்று கருதிச் செய்யப்படும் கவிகளுக்கு)
பொருத்தமா?
அந்த வரிகள் வருமாறு:
‘உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றவித்து நமது வேள்வியைக் காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோவென்றால் இத்தெய்வமே குலதெய்வம், அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை மோனைகளுக்காக சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாஷத்தை இழந்து விடுவான். யமகம். திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறுப் பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கின்றான். அவசியமில்லாத அடைமொழிகள் கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே மூடுகின்றான். வெள்ளைக் கலையுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரங்ககாரனும், பாட்டுக் காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே அருள்வாக்கு என்று சொல்லப்படும், ‘இலக்கிய ரஸிகன்’
மீண்டும் ‘எஸ்’ தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். பதிமூன்றாவது இதழில்.
‘மகராஜுக்குப் பக்க பலமாக நான் வந்தது போல, ‘நாண’லுக்குப் பக்கபலமாக (வசன) ‘கவிதைத் தொண்டன்’ வந்தார். அவர் முதல் பாராவில் சீர், தளை, எதுகை, மோனைகளை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய கட்சிபோல் இருக்கிறது’ என்று சொல்லுகிறார். ஆனால், மூன்றாவது பாராவில் ‘ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி, அலங்காரம் உண்டு, அதற்கும் தளையுண்டு, மோனையுண்டு’ என்று சொல்லிக் கொண்டே போகிறார். இந்த வாக்கியங்களில் எதை ஆதாரமாகக் கொள்வது என்று தெரியாமல் தயங்குகிறேன்.
‘செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளுக்கும் ஒரு இசை இன்பத்தை ஊட்டி விடும்’ என்று சொல்லுகிறாரே அப்படி ஒரு இசையானது வெறும் வார்த்தைக்கு இன்பத்தை ஊட்டுவதும் ஒரு தூஷணையா என்ன? வார்த்தைக்கு வார்த்தை இசை பொங்குவதில் தானே இன்பம் இருக்கிறது யாப்பின் பெருமையே அதுதானே?
பாரதி ‘காட்சிகள்’ மூலமாக வசன கவிதைக்கு வெற்றிமாலை சூட்டி விட்டாராம்! கண்ணன் பாட்டுக்களையும், தேசியகீதங்களையும் ஸ்தோத்திர பாக்களையும், வேதாந்தக் கவிகளையும், பாஞ்சாலி சபதத்தையும் பாடிய பாரதியார், ‘காட்சிகள்’ எழுதியதன் மூலமாகத் தமது பெருமையைக் குறைத்துக் கொண்டார் என்பது தான் எனது அபிப்பிராயம். இந்தக் ‘காட்சி’களில் அடங்கிய வசன கவிதைகளை கவிதைத்தொகுதியில் சேர்த்ததே எனக்குப் பிடிக்கவில்லை.
‘மாதமோர் நான்காய் நீர் – அன்பு வறுமையிலே என்னை ஆழ்த்தி விட்டீர்’ என்று பாரதியார் வாணியைக் குறித்துப் பாடுகிறார் அல்லவா? அப்படி வாணியின் அன்பு தோன்றாத காலத்தில். அதாவது தூண்டுதலும் ஆர்வமும் ஆற்றலும் இல்லாத காலத்தில்தான் பாரதியார் இந்த வசன கவிதைகளை எழுத நேர்ந்தது என்று நினைக்கிறேன்.
ஆங்கிலத்தில் எட்வர்ட் கார்பெண்டரும், வால்ட்விட்மனும் ஹென்லியும், ஆமிலோவல்லும், இவரும் அவரும், கவிதை எழுதுகிறார்களே என்பதற்காக நாமும் எழுத வேண்டுமா என்ன? தமிழில் வெண்பா என்ன, விருத்தம் என்ன, மெட்டுப் பாட்டுகள் என்ன, இவைகள் ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் என்ன, இவைகளையெல்லாம் ஒரு நல்ல கவி, சிறந்த கவி எவ்வளவு அற்புதமாகக் கையாளுகிறான் என்பதை ஏன் நாம் மறக்க வேண்டும்? இவைகள் மூலமாகக் காட்ட முடியாத எந்த ரசபாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?
‘எஸ்’ஸின் கடிதத்துக்கு, ‘கவிதைத் தொண்டன்’ பதில் கூறவில்லை. அவருக்குப் பதிலாக ‘ரஞ்சன்’ என்று கையெழுத்திட்டு பின்வரும் கடிதம் பதினான்காவது இதழில் வெளியாயிற்று.
‘கவிதைத் தொண்டனுக்கு’ ‘எஸ்’ பதிலளித்திருக்கிறார். சிறிய விஷயங்கள் எவ்வளவு அனாயாசமாகத் தட்டுக் கெட்டுப்போய் விடுகின்றன என்பதற்கு அவருடைய பதில் ஒரு அத்தாட்சியாக விளங்குகிறது. முதல் பாராவையும் மூன்றாவது பாராவையும் வைத்துப் பொருத்திப் பார்க்க முயன்ற ‘எஸ்’ கடைசி வரியை மறந்து விட்டார். அதையும் சேர்த்து யோசித்திருந்தால்தான் விஷயம் விளங்கிப் போயிருக்கும்!
‘இனிமேல் என் நடையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் கவிதையும்கூட வடிகட்டி எடுத்து விடுகிறேன்’ என்று ‘கவிதைத் தொண்டன்’ கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்! ஏனெனில் அவர் அப்படி எழுதாமல் ‘வசன கவிதைக்கும் இலக்கணம் உண்டு; ஆனால் அது பழைய இலக்கணம் அல்ல’ என்று மட்டும் சொல்லியிருந்தால், அது ‘எஸ்’ஸுக்குத் தெரிந்திருக்கும்!
பாரதியாரின் காட்சிகளைப் பற்றி ‘எஸ்’ அபிப்பிராயம் கூறும் இடத்துக்கு வந்த உடனே எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ‘எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதற்குப் பிறகு வாதமே இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தைக்கு ‘அல்வா’வே பிடிக்காது! பாகற்காய்தான் பிடிக்கும். உண்மைத் தமிழ்க் கவிதைக்கு (வசன கவிதை அல்ல) இவ்வளவு பாடுபடும் நண்பர்கூட கடைசியில் ‘எஸ்’ என்று போட்டுக் கொண்டிருப்பது ‘எனக்குப் பிடிக்கவில்லை’.
ஆங்கிலத்தில் ‘அவரும் இவரும்’ எழுதியதற்காக நாமும் வசன கவிதை எழுதவேண்டாம். ‘வேண்டும் என்று கவிதைத் தொண்டனும் பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆங்கிலத்திற்கும் அதனுடைய வெண்பா, விருத்தங்கள், எல்லாம் இருக்கின்றன. அவைகள் ஒரு உன்னத முறையில் கையாளப்பட்டும் இருக்கின்றன. அவர்களுக்குப் பிறகும் வால்ட் விட்மன் முதலியோர் வேறுவிதத்தில் வெற்றி யடைந்திருக்கிறார்கள் என்பதே அவ்வாதத்தின் சாரம். ‘யாப்புத் தளைகளை சற்றுத் தளரவிட்டு, மனத்தில் பொங்கிவரும் கவிதா உணர்ச்சிகளுக்கு கொஞ்சம் அதிக இடம் கொடுப்போம்’ என்கிறார் கவிதைத் தொண்டன். உணர்ச்சிகள் வசனத்தை மீறி வரும் போதும், யாப்பின் சங்கிலிகள் அதைக் கட்டியணைத்து விட முயற்சிக்கும் போதும் தான் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வசன கவிதை பிறக்கிறது. இதில் ‘கவிதைத் தொண்டனை’ விட நான் ஒருபடி அதிகமாகவே போக விரும்புகிறேன். வசன கவிதை, கவிதா உணர்ச்சிகளைக் கொட்டுவதில் கவிதைக்கும் மேல் போய் விடுகிறது என்பதே என் எண்ணம்.
‘கவிதை மூலமாகக் காட்ட முடியாத எந்த பாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?’ என்று ‘எஸ்’ கேட்கிறார். அவர் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். ஏன் காட்டக் கூடாது என்றுதான் கேட்கிறேன்?
இத்துடன் இந்த விவாதம் நின்று விட்டது.
ந. பிச்சமூர்த்தி ‘சூறாவளி’யில் கதை, கட்டுரை, கவிதை எழுதவுமில்லை, வசன கவிதை பற்றிய விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கவுமில்லை. அவர் அவ்வப்போது கவிதைகள் எழுதிக் கொண்டுதானிருந்தார். எப்போதாவது அவருடைய கவிதை ‘சக்தி’ போன்ற பத்திரிகையில் இடம் பெற்று வந்தது.1940 களில் ‘கலா மோகினி’ தோன்றிய பின்னரே புதுக்கவிதை புது வேகத்தோடு வளர இடம் கிடைத்தது. 1942ல் தான் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றிய தமது எண்ணத்தை ஓரளவு வெளியிட்டார்.

One Comment on ““புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன்”
Comments are closed.