
4. சில விளக்கங்கள்
திருச்சியில் 1942 ஜுனில் தோன்றிய ‘கலாமோகினி’ (மாதம் இருமுறை) மரபுவழிக் கவிதைகளுக்கு இடம் அளித்ததோடு, வசன கவிதைக்கும் ஆதரவு காட்டியது. பிஷுவும், கு.ப.ரா. வும் அதில் தங்கள் படைப்புக்களை வெளியிட்டார்கள். பிச்சமூர்த்தியின் காற்றாடி மழைக் கூத்து ஆகிய கவிதைகள் கவனிப்பையும், பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றன. அதே வேளையில் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்றுக் கொண்டன.
மழைக்கூத்து
1
பார்த்தீரோ அதிசயம்.
கேட்டீரோ அதிசயம்,
நேற்று நள்ளிரவினில்
நடைபெற்ற நடிப்பினை…
மந்தை மந்தையாக மேகங்கள் சரிய
மலைகள் போல் இலைகள் போல
மேகங்கள் விரிய,
விந்தை நிமிஷத்தில் விரிந்த மேகங்கள் போய்.
யானையாய், மசிதோய்ந்த குட்டையாய்
கடைசியில்,
ஊமை இருள் தேவின் சோகம் சொட்டிடுமோர்
சோனையாய், தாரையாய்,
அமைந்த மழைக்கூத்தை.
2
காற்று முழங்கிட
உயிரொலி மறைந்திட,
பொங்கிப் பேசிடுமோர்
சீற்றம் பிறந்திட,
ஆற்றலா வேகத்தோடரக்கி
வெம் கைநீட்டி,
வெகுநாளாய் விளங்கிய
அல்லியை வேரோடு ஆட்டி
தண்ணீரில் வெள்ளியால்
மின்னல்செய் அதிசயம்
பார்த்தீரோ?
நேற்று கேட்டீரோ?
3
யானை இடிகள்
அதிர்ந்து நடந்திட,
எட்டுத்திசைகளும் இடிந்து விழுந்திட,
பானைக்கருப்பைப்
பழிக்கும் பேய் வானக
மார்பினில் மின்னல்
சரங்கள் ஒளிர்ந்திட,
காற்றதன் கைகளைக்
குலுக்கி வாதாடியும்
பேய்போல் மழையைப்
படுத்திவைத்த பாட்டைக்
கேட்டீரோ?
நேற்று பார்த்தீரோ?
இதற்குப் பின்னர் ந.பி. வசன கவிதை பற்றி ஒரு கட்டுரை எழுதினார்:
“கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே ஏற்படுவதென்பது பலருடைய கருத்து. அக்கருத்து சரியல்ல என்பது எதிர்க்கட்சி. தத்துவ ரீதியாகப் பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண், உறக்கம், புணர்ச்சி இவை ஒரு படியைச் சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர். இவைகளைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது உள்ளம். அது ஒரு படி.
இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக ரகசியத்தை அறியத் துடித்து நிற்கும் அறிவு வழி ஒன்றுண்டு. உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு. வசனத்தின் வழி அறிவுநிலையைச் சார்ந்தது. கவிதையின் தர்க்கபாதை உணர்விலேயே ஓடும். அறிவின் வரம்பை மீறி வசனம் போகுமானால் அந்த நிமிஷத்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்கலாம்.
‘தீ இனிது’ என்று பாரதியார் சொல்லுகிறார். இனிது என்ற சொல் ருசியைச் சார்ந்தது. ‘தீ சுடும்’ என்றால் வசனம் ‘தீ இனிது’ என்றால் கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும் விஷயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப் போல் உணர்வினிடம் பேசுமானால் கவிதை பிறந்துவிடும். ‘தீ சுடும்’ என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. ‘தீ இனிது’ என்று சொல்லும் பொழுது அறிவு அதை மறுக்கும்; தீயாவது இனிமையாவது என்று கலவரப்படும். ஆனால் உணர்ச்சி என்பது ஏது? அதனால் தான் தீ இனிது என்பதை உணர்ச்சி ஒப்புக்கொள்ளுகிறது.
இப்பொழுது கம்பரைக் கேட்போம்.
‘அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடைவந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்’
என்கிறார் கம்பர். வசனம் என்று இதை வைத்துப் பேசினால் அமுதம் என்பது உண்டோ? பொற்கலசம் கடலில் மிதப்பானேன்? திருடர்கள் தொழில் மறந்து விட்டார்களா? பொற்கலசம் என்ன நீர்மூழ்கிக் கப்பலா – வேண்டும் பொழுது மேலே எழுந்துவர? – என்றெல்லாம் அறிவு கேட்கக் கூடும். அதனால்தான் உணர்ச்சி சொல்லுகிறது; ‘இந்த வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகுக்குச் சமர்ப்பிக்கப்பட்டவை, உனக்கல்ல, ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதன் கம்பர் பாடியதைக் கடுகளவும் மறுக்க மாட்டான்’.
ஆகவே சம்பிரதாயமான உருவம் கவிதையாக்குவதற்கு உதவியாக இருந்த போதிலும் அடிப்படைகளைப் பற்றிப் பேசும் பொழுது கவிதைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம், எதனுடன் அது உறவாடுகிறது – அறிவுடனா உணர்ச்சியுடனா என்பதைப் பொறுத்தே நிற்கும். எவ்வளவுக்கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிறானோ அவ்வளவுக்கவ்வளவு வசனமாய்விடும். உருவத்தில் கவிதையாக இருந்த போதிலும், இப்பொழுதெல்லாம் வசனகவிதை என்று பேசுகிறார்கள். உண்மையில் வசனமாக இருந்தால் கவிதையாக இருக்க முடியாது. கவிதையாக இருந்தால் வசனமாக இருக்க முடியாது. ஆனால் புதுமையையும் பழமைக்குள் புகுத்தி சமரசம் செய்வதே மனித இயல்பாதலால் நடைமுறையில் அவ்வாறு சொல்லுகிறார்கள் என்று சொல்லலாம். ஆகையால் கவிதையின் குறியும் வசனத்தின் உருவும் கலந்த இப்புதுப் பிறவிக்கு இந்தப் புதிய பெயர் கொடுத்திருப்பதை ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம்.
இந்த மாதிரியான வசன கவிதையை பாரதியார் கையாண்டிருக்கிறார்.
‘ஞாயிறு வையமாகிய கழனியில் வைர ஒளியாக நீர் பாய்ச்சுகிறது.
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுருவிச் செல்கிறது,
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது
மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.
இதில் கவிதையின் லட்சணத்தைக் காணாவிட்டால் வேறு எங்குதான் காணப்போகிறோம்? இம்மாதிரி கவிதை அடங்கிய தொகுதி ஒன்றை பாரதியார் ‘காட்சி’ என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருக்கிறார். வழி என்னவோ புதியது. அழகு மட்டும் உலகு தோன்றிய நாளாகக் காண்பது.
‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடையது.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது., ஞாயிறு நன்று. திங்களூம் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது.
கடல் இனிது. மழை இனிது. காடு நன்று.
இது வசனமா? கவிதைக்கும் வசனத்திற்கும் வார்த்தைகள் என்னவோ பொதுவானாலும், கவிதையின் சுருதி வேறு. வசனத்தின் சுருதி வேறு. வாய் விட்டோ விடாமலோ இதைப் படித்தாலும், நாம் வசன உலகில் காலால் நடக்கவில்லை என்றும் கவிதை உலகில் இறகு கட்டிக் கொண்டு பறக்கிறோம் என்றும் உணர்ச்சி சொல்லும். வசனத்திற்கும் கவிதைக்கும் மற்றொரு பெரிய வித்தியாசம் உண்டு. ‘வியஷ்டி’ என்கிறார்களே, அந்தப் பன்மையையே வசனம் வற்புறுத்தும். கவிதை ஒருமையை வற்புறுத்தும். உடலுக்கு எலும்புக்கூடு எப்படியோ அதைப் போலவே, இந்த ஒருமை என்னும் குணம் கவிதையின் அஸ்திவாரமும் அழகும் ஆகும். சிருஷ்டியின் பன்மையை ஒருமையாக்காத கவிதையில் பெருஞ்சிறப்பு இருக்க முடியாது.
‘இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள்.
அது குழலின் தொளையிலே கேட்கிறது.
தொம்பைப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன்
குழலையும் தொம்பைக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி
சேர்த்து விட்டது? சக்தி.
ஜரிகை வேணும் ஜரிகை என்றொருவன்
கத்திக்கொண்டு போகிறான்.
அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும் தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைகாரன் உயிரிலும் ஒரே சக்தி லீலையாடுகின்றது.
அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
வடமேருவிலே, பலவாகத் தொடர்ந்து வருவாள்.
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புகள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள்: அன்பு மிகுதியால்,
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று; அதனை வாழ்த்துகின்றோம்,
ஒன்று பலவினும் இனியதன்றோ என்கிறார் கவி. ஆமாம் அதனால்தான் கவிதைக்கு மதிப்பு.
கவிதையின் முக்கிய லட்சணம் இந்த ஒருமையில் இருப்பதினால் தான், யாப்பலங்காரங்களில் பல உண்டாகியிருக்கின்றன. ஒரு புலனால் உணர்ப்படுவதை மற்றொரு புலனால் அறிவதுபோல் காட்டும் பொழுது ஒரு புதுமையும் கவர்ச்சியும் தோன்றும்.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே,
தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவதென்றால் அது கவிதை உலகில்தான் நடக்கும், இரவியின் ஒளியிடைக் குளிப்பதும், ஒளி இன்னமுதினை உண்டு களிப்பதும் வசனத்திற்குப் பொருந்துமா?
“பாரதியின் ‘காட்சி’ கவிதையின் மாற்றுக்கு எந்த விதத்திலும் குறையாதது. தமிழ் நாட்டு வசன கவிதையில் அதுதான் முதல் முயற்சி”.
(கலாமோகினி, இதழ் 9)
வசன கவிதை, மறுமலர்ச்சி என்பதெல்லாம் அர்த்தமற்றவை என்று கூறி, அம்முயற்சிகளில் ஈடுபட்டோரைக் குறை கூறியும் கோபித்தும் பொழுது போக்கிய பண்டிதர்களை ‘கலாமோகினி’ தாக்க முன் வந்தது. காரசாரமான ஒரு கவிதை எழுதி அதன் ஆசிரியர் (சாலிவாஹனன்) வி.ரா. ராஜகோபாலன் எழுதியது இது:-
பழமையின் பாதை, கற்ற
பண்டிதர் நடை. முன்னோர்கள்
வழமைஈ தெல்லாம் எங்கள்
வசனமொத் ததுவே யென்று
கிழமை கொண்டாடி ஏதோ
கிறுக்கிவைப் பார்கள் இந்த
இழவினைச் சகியாதேதும்
எம்மனோர் சொன்னால் வைவார்
குப்பையைக் கூட்டி வைத்துக்
கொண்டிதோர் கவிதை என்பார்
எப்படி யேனும் அஃதை
ஏற்றமாம் கவிதை என்று
ஒப்பிட வேண்டும் என்பார்
உணர்ந்தவர் தவறென்றாலோ
எப்படிச் சொல்வீரென்று
இழிமொழி பலவும் சொல்வார்.
உணர்ச்சியும் சொல்லும் கூடில்
உண்மையில் கவிதையாமிப்
புணர்ச்சியில் லாததெல்லாம்
புலவர்வாய்ச் சொல்லென்றாலும்
மணமிலா மலர்தானென்போம்
மானிடர் மாண்டுபோனால்
பிணமெனவே நாம் சொல்வோம்
பிறர்சொல்லும் வசவுக்கஞ்சோம்
ஆவியே யில்லாமேனி
அதனையோர் மனிதன் என்று
கூவிடல் போலச் சொல்லைக்
கூட்டிவைத் திதுவும் ஓர்மா
காவியம் என்பார் அஃதைக்
கற்றவர் பிழையென்றாலோ
‘பாவிகள் தமிழைக் கொல்லப்
படைதிரண் டனரே’ என்பார்.
கோப்பில்லா இனிமையில்லா
கொள்ளவோர் சுவையு மில்லா
வேப்பிலைக் கவிதை தன்னைக்
காட்டிலும் உணர்ச்சிமிக்க
யாப்பில்லாக் கவிதை மட்டும்
யாதினால் தாழ்ந்ததையா
மூப்புடைப் பெரியீர் என்றால்
முனிந்தெமை ஏசு கின்றார்
மதுமலர்க்கொடி தான் என்றும்
மறுமுறை மலராதானால்
அதுவல எங்கள் நாட்டு
ஆன்ற செந்தமிழ் என்றென்றும்
புதுமலர் நித்த நித்தம்
பூத்திடும் புதிய இன்ப
மதுவினைச் சிந்தும் இந்த
மகிமைநீர் அறியமாட்டீர்.
விலைமகள் கற்பை ஒத்த
விதமல எங்கள் நாட்டம்
கலைகளை வாழ்த்த நாங்கள்
கண்டதோர் வழியில் வந்தோம்
மலைவுறோம் மூண்ட ஓரோர்
மனிதர்கள் வசவுக் கஞ்சோம்
நிலைகுலை வடையோம் எங்கள்
நேரிய வழியே செல்வோம்
(கலாமோகினி – 10)
வசனகவிதை பற்றி கு.ப. ராஜகோபாலன் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. அது பின்வருமாறு:
‘வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே பாஷன்’.
‘அதென்ன வசனகவிதையா? இப்பொழுது யாப்பிலக்கணம் தெரியாதவர்களெல்லாம் இப்படி ஆரம்பித்து விட்டார்கள். வாய்க்கு வந்ததை எழுதி வசனகவிதை என்கிறார்கள்’ என்று ஒரு சிலர் கேலி.
‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல் வசனகவிதைதானே? இவர்கள் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று மற்றும் சிலர் தாக்குதல். வேடிக்கை என்னவென்றால் எதிர்ப்பவர்கள் இருதரப்பினர்களாக இருக்கிறார்கள். ஒருவர் ஆட்சேபணை மற்றொருவரது போல் அல்ல. ஒருவர் வசன கவிதையே கூடாது என்கிறார். மற்றவர் அது புதிது இல்லை என்கிறார். விசித்திரம்தானே இது?
யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை எழுதுகிறவர்கள் என்ற வாதம் சுத்த அசட்டுத் தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. எழுதுகிறவர்களுக்குத் தேவையானால் யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொள்ள எத்தனை நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப் பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வராமல் போய்விடுமா என்ன? அப்படிப்பட்ட பிரம்ம வித்தை ஒன்றுமில்லை. அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப் படிக்காமல்கூட கண்களை மூடிக்கொண்டு செய்யுள் பாடலாம்.
அது கிடக்கட்டும். வால்ட்விட்மனும், எட்வர்டு கார்பெண்டரும் ஆங்கில யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல்தான் கவிதை எழுதினார்களோ? புது யாப்பிலக்கணமே ஏற்படும்படி வங்காளியில் பாக்கள் பாடிய ரவீந்திரர் கடைசி காலத்தில் வங்காளியில் வசன காவியத்தில் எழுதித் தொலைத்தார். அதுதான் போகட்டும் என்றால் சுப்பிரமணிய பாரதி, யாப்பிலக்கண முறையில் ஏராளமாக எழுதினவர் ‘காட்சிகள்’ என்ற வசன கவிதையையும் ஏன் எழுதினார்? காட்சிகளையும் யாப்பிலக்கண முறையில் எழுதியிருக்கக் கூடாதோ?
மேற்சொன்ன ரசிகர்களுக்குப் பயந்து பாரதி காட்சிகளை யாப்பிலக்கண முறையில் எழுதியிருந்தால் கவைக்குதவாமல் போயிருக்கும். காட்சிகள் யாப்பிலக்கண முறையில் அமையாததால்தான் அவ்வளவு சிறப்பும் அழகும் வேகமும் கொண்டிருக்கின்றன.
யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு அதற்குக் கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்ற வஸ்து நேரசை நிரையசையிலில்லை. அவை ஒழுங்காக இருந்தால் மட்டும் கவிதை வந்துவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல, கருத்தும் இருக்க வேண்டும். செவிநுகர் கவிதை என்று கம்பன் சொன்னதைத் திரித்து செவிநுகர்வதுதான் கவிதை என்று கொள்வது தப்பு. கவிதை செவி நுகர்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருள். செவி நுகர்வதெல்லாம் எங்காவது கவிதையாக முடியுமா? கவிதையெல்லாம் செவி நுகர்வதாக இருக்கும்.
வசன கவிதையைச் செவி நுகருமா என்றால் நுகரும். ஏனென்றால் வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும். வரும்வகை மட்டும் வேறாக இருக்கும். அவ்வளவுதான்.
வசன கவிதைக்கும் எதுகை, மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உண்டாக்கினது கவிதை. இலக்கணமல்ல. அது அவற்றை இஷ்டம் போல, சமயத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்க வேண்டும் என்றால் இருக்காது. இலக்கியம் கூறுவதுதான் இலக்கணம். இலக்கணம் கூறுவது இலக்கியமாகவே முடியாது. எல்லாம் நன்னூல் யாப்பிலக்கணத்தை ஒட்டியே இருக்க வேண்டுமென்று இலக்கணம் பிடிவாதம் செய்தால் நடக்காது. நன்னூலுக்கும் மேலான ஒரு புது நூலை இலக்கியத்தின் போக்கிற்கொப்ப (இலக்கணம்) தயாரித்துக் கொள்ள வேண்டும்.
காம்போதி ராகம் போட்டுப் பாட வருவதுதான் கவிதை என்று யாராவது வாதித்தால் அவர்களுக்குக் கவிதை இன்னதென்றே தெரியாது என்றுதான் நாம் பதில் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிதையை நாம் ராகம் போட்டுப் பாடியா அனுபவிக்கிறோம்? அவர்களுடைய ராகத்தைப் போட்டுப் பாடினால்தான் அது நன்றாக விளங்கும் என்று சொல்ல யாராவது முன் வருவார்களா?
பொதுவாகக் கவிதைக்கு, எந்த பாஷையிலிருந்தாலும் சரி, ஒரு தனி ராகமும் தாளமும் இருக்கின்றன. அதை அனுபவிக்க கர்நாடக சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஐரோப்பிய சங்கீதத்தின் ஒத்தாசையோ வேண்டியதே இல்லை. கவிதையின் ராகம் உள்ளத்தில் கிளம்புகிறது. ஹிருதயம் தாளம் போடுகிறது. ‘வீ ஸீ ஹெவன் இன்தி ஒயில்ட் ஃபிளவர் அண்ட் எட்டர்னிட்டி இன் எ கிரைன் ஆப் ஸாண்ட்’ (We see Heaven in a Wild Flower and Eternity in a Grain of Sand) என்ற சித்த வாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தைக் கற்க வேண்டியதில்லை.
‘புல்லினில் வைரப்படை தோற்றுங்கால்’ என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா
வேண்டும்?
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக!’
என்ற மகாவாக்கு கவிதையாக எந்த சங்கீதத்தின் உதவி வேண்டும், கேட்கிறேன். (கலாமோகினி-13)
இலக்கணத்துக்கு ஏற்ப இனிய கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி வெற்றிகள் கண்டவர் கவிஞர் கலைவாணன். (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்) ஆயினும் அவர் வசன கவிதைகளை வெறுக்கவில்லை. இப்புது முயற்சி பற்றிய தன் கருத்துக்களை அவர் ‘கலாமோகினி’யில் கட்டுரையாக்கினார். அதுவும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றே:
“தமிழில் இலக்கிய அமைப்பு. வசனம் அதாவது உரைநடை; கவிதை அல்லது செய்யுள் நடை என இரண்டே பிரிவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது சிலர் இவைகள் இரண்டிலுமுள்ள சிற்சில அம்சங்களைக் கூட்டி ஒரு அவியலாகச் செய்து அதனை ‘வசன கவிதை’ என்று சொல்லுகிறார்கள். இவ்வழி தமிழ் பாஷைக்கே புதுமையானது- புரட்சிகரமானதுங்கூட.
வால்ட் விட்மன்னும், எட்வர்ட் கார்ப்பென்டரும் ஆங்கிலத்தில் ‘வசன கவிதை’ புனைந்திருக்கலாம். நான்கு வேதங்களும் வடமொழியில் வசன ரூபத்தில் இருக்கலாம். கவினொழுகும் காதம்பரி சமஸ்கிருத வசன காவியமாக இருக்கலாம். தாகூர் வங்காளியில் வசன கவிதை எழுதிக் குவித்துமிருக்கலாம். ஆனால் தமிழுக்கு வசன கவிதை புதிது என்பது மட்டும் நிச்சயம். பல்லாயிர வருஷங்களாக பனம்பாரனார் காலத்திலிருந்து பாரதியார் காலம் வரையில் கையாளப் படாத ஒரு நவீன முயற்சி இது.
அகவலை வசன கவிதை என அறியாதோர் கூறலாம். அது தவறு. அகவலுக்கு யாப்புக்குரிய எல்லா லட்சணங்களும் உண்டு. வசன கவிதைக்கு இந்தச் செய்யுள் லட்சணங்களில் ஒன்றிரண்டு குறையும். இதுதான் தாங்கள் எழுதுவது ‘கவிதை’ யல்ல, ‘வசன கவிதை’ என்று அதை எழுதுபவர்களே கூறுவதன் காரணமும்கூட.
தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே நான் அறிந்த மட்டில் இதுவரை கவிதைகள் யாப்பிலக்கணத்துக்கு அடங்கியே வந்திருக்கின்றன. மாங்குடி மருதனார் முதல் மகாமகோ பாத்தியாய சுவாமிநாத ஐயர் வரை செய்யுள் பாடிய எவரும் இதே முறையைத்தான் அனுசரித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இளங்கோவும், சாத்தனாரும், கம்பரும், சேக்கிழாரும் இப்பழவழி சென்றே பெரும்புகழ் கண்டனர். இந்த முது முறையைத் தகர்க்க அவர்கள் முயன்றதாகத் தெரியவில்லை.
அசையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. கவிதை என்பது நடைமட்டுமல்ல. ஆனால் அது கருத்து மாத்திரமும் அல்ல. உதாரணமாக, வ.ரா. வின் நடைச் சித்திரங்களில், நல்ல செய்யுள்களில்கூட இல்லாத அழகான கவிதைக் கருத்துகள் இருக்கின்றன. அதனால் அதைக் கவிதை என்று விடலாமா? குமாரசம்பவம் போலவும், சிலப்பதிகாரம் போலவும், கு.ப.ரா. வின் சிறுகதைகள் இனிக்கின்றன. ஆனால் அதைக் கொண்டே அக்கதைகளைக் காவியங்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான் மறுப்பாளர்களின் வாதம். அவர்களுக்கு துணையாக பழஞ்சுவடிகளான தொல்காப்பியச் செய்யுளியலும், யாப்பருங்கலவிருத்தியும், தண்டியலங்காரமும் இலக்கணம் பேசுகின்றன.
அழகான புதுமைகளை ஆக்குவதில் அறிவு முனைகிறது. அதன் பயன்தான் இலக்கணக் கட்டுகளை உடைத்து விட்டு வெளிவந்த இப்புது முயற்சியும்.
இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இல்லாத அழகான அருமையான எண்ணங்கள் வசன கவிதைகளிலே காணக்கிடைக்கின்றன. ‘சீர்பூத்த’ என்று தொடங்கி செய்யுள் இலக்கண முறைப்படி பணங்கொடுத்த எவனையோ ஒரு பாவலர் பாடிய பாட்டுக்களைவிட தளை தட்டும் ‘பூக்காரி’ ஆயிரம் மடங்கு அழகாகத்தான் இருக்கிறது. இலக்கண வழூஉ ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு இவைகளை ஒதுக்குவது வடிகட்டின மடமை. இலக்கியப்பேழையில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய புது இரத்தினங்கள் இவ்வசன கவிதைகள்.
பழுத்த மாம்பழம் தித்திக்கிறது. பழுக்காத காய் புளிக்கிறது. இவைகள் இரண்டையும் நீங்களும் நானும் உண்டு சுவைத்திருக்கிறோம். ஆனால் பழுத்தும் பழுக்காமலுமாய் செங்காயாக இருக்கும்பொழுது நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா; இல்லையென்றால் சாப்பிட்டுப் பாருங்கள். காயின் புளிப்பும், கனியின் இனிப்பும் கலந்த ஒரு புதுச்சுவை. இனிய ருசி-அதில் இருக்கக் காண்பீர்கள்.
கனிந்த கனி போன்றது கவிதை. காயொத்தது உரைநடை இவைகள் இரண்டையும் தான் நாம் நன்றாய் அனுபவித்திருக்கிறோம். காயும் கனியும் இல்லாத செங்காய்பதம் வசன கவிதை. ‘கவிதையின் இனிமையும் உரை நடையின் விறுவிறுப்பும் இதில் இருக்கிறது. செங்காயைச் சுவைப்பதிலும் ஒரு புது இனிமை உண்டு.” (கலாமோகினி-30)
இக்கட்டுரைக்கு எதிரொலி இலங்கையில் தோன்றியது. ‘ஈழ கேசரி’யில் வழக்கமாக எழுதிவந்த ‘இரட்டையர்’, வசன கவிதை புதிய தோற்றம் அல்ல; முன்னரும் அது வெவ்வேறு வடிவங்களில் தமிழில் வழங்கி வந்தது என்று வாதாடியிருந்தார்கள். சுவாரஸ்யமான அக்கட்டுரை ‘கலா மோகினி’யில் மறு பிரசுரம் செய்யப்பட்டது. இரட்டையரின் சுவையான கருத்துக்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காக அந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன்;
“பிஞ்சுமாகாது பழமுமாகாது” ‘செங்காய்’ என்று சொல்வார்களே, அந்த நிலைதான் வசனகவிதைக்குரியது. யாப்பிலக்கண வரம்பை வசனகவிதை எனப் பெயரிட்டழைக்கிறோம்.
பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றிலுள்ள பாடல்களையே பார்த்து, ‘இவை எல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை? என்று ஒச்சம் சொல்லும் பழைய மரபினர் எவ்வித இலக்கணமும் அமையாத இந்த வசன கவிதைக்கு இடம் கொடுப்பார்களா? அவர்கள் இதை எதிர்க்கிறார்கள்.’
‘நல்லது! அந்தப் பண்டித சிகாமணிகள் வெறும் புளி மாங்காயையும், கருவிளங்காயையும், கருவிள நறு நிழலில் சுவைத்துக் கொண்டிருக்கட்டும்’ என்று அவர்கள் எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டு, வசன கவிதைக்குரிய ஆக்க வேலைகளும் நடந்து கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.
இப்புதிய முயற்சியின் பயனாயெழுந்த, சுவை நிறைந்த சில வசன கவிதைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பண்டிதர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில தண்டடி மிண்டர் செய்யும் சொற் பிரபஞ்ச அடுக்குகளை வசன கவிதை என்று ஒப்புக் கொள்வதற்கில்லை.
நடை சிறிது இறுக்கமாக இருப்பினும், வசனகவிதை வடிவமென்று சொல்லத்தகும் சில பகுதிகள்- வசன கவிதையைப் பற்றிய பேச்செழுவதற்கு-முன்னரும் இருந்தன எனக் காட்டுவது இங்கு பொருத்தமாகும்.
- ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து
அரசிளங் குமரன்,
துஞ்சிலன், பள்ளி கொள்ளாது
துள்ளியெழுந்து மெல்ல, நடந்து,
கள்ள மறியா, உள்ள நெறியால்
கவலை கதுவாத் தூய சேக்கையில்
கண்வளரும்அறைவந் துற்றான். - அச்சமும் விதுப்புந் தூண்டி,
அவலமுந் துணிவு மூட்ட
அமலரும் வஞ்ச நெஞ்சன்
அறைக்கத வகற்றப் புக்கான். - நள்ளிருளில், கண்வளரும்
தன்னருகே தனிவந்துற்ற
அவன் தறுகண்மை தனக்கஞ்சி
மெய் விதிர்த்து மறுகலானாள். - புரைவீரப் பொய் நண்பன்.
தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான்
முறையற்ற துறை சொல்ல,
குறையர் நிறையுடையாள் முனிவுற்றாள்.
இத்தொடர், உரை நடையிற் செல்வதாயினும், கவிதைப் பண்பு நிறைந்ததாகவே காணப்படுகிறது. வசன கவிதை என்ற பெயரில் இல்லாவிடினும் அதன் உருவமிருத்தல் கண்டின் புறத்தக்கது. தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின் கட்டுரையொன்றில் இது மிளிர்கின்றது.
‘சந்தனமும் சண்பகமும்
தேமாவும் தீம்பலாவும்
ஆசினியும் அசோகமும்
கோங்கமும் வேங்கையும் குரவும்விரிந்து
நாகமும் திலகமும்நறவமும் மாந்தியும்
மரவமும் மல்லிகையும் மௌவலோடு மணங்கமழ்ந்து
பாதிரியும் பராரை ஞாழலும்
பைங் கொன்றையொடு பிணியவிழ்ந்து
பொரிப்புன்கும் புன்னாகமும்
முருக்கொடு முகை சிறந்து
வண்டறைந்து தேனார்ந்து
வரிக்குயில்கள் வரிபாடத்
தண்டென்றல் இடைவிராய்த்
தனியவரை முனிவு செய்யும்
பொழிலது நடுவண் மாணிக்கச்
செய்குன்றின் மேல்
விசும்பு துடைத்துப் பசும்பொன்பூத்து,
வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர்
வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.’
களவியலுரையாசிரியர், இதனை வெறுமனே சொல்லடுக்குச் செய்திருக்கிறார் என்று கொள்வது ஆகாது, பொருள் பொலிவும் ஓசை நயமும் செறிந்த, தமது இனிய சொற்சாதுரியத்தினாலேயே படிப்பவர் மனதைப் பரவசப்படுத்தி இயற்கையாயமைந்த ஒரு சோலையின் உருவத்தை அங்கு தீட்டி விடுகிறார் ஆசிரியர். விந்தையிதே!
கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வனப்பும் நிறைந்ததாகவே இத்தொடர் பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் வசன கவிதைக்குப் புறம்பானதன்று.
‘குருவியோப்பியும் கிளிகடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி
அருவி யாடியும் சுனைகுடைந்தும்
அலர்வுற்று வருவேமுன்
மலை வேங்கை நறுநிழலின்
வள்ளி போல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்து நின்றீர்;
யாவிரோ வென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுகற
வல்வினைவந் துருத்த காலை
கணவனையங் கிழந்து போந்த
கடுவினையேன் யானென்றாள்.’
சிலப்பதிகாரக் ‘குன்றக் குரவை’யில் வரும் ‘உரைப் பாட்டு மடை’ இது. உரைப்பாட்டை ‘நடுவே மடுத்தல்’ என அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிறார். அரும்பதவுரையாசிரியரும் அதனை, ‘உரைச் செய்யுளை இடையிலே மடுத்தல்’ என்பர். (வேட்டுவ வரி, 7-ம் அடியின் பின்வரும் ‘உரைப் பாட்டை’ப் பார்க்க)
இன்னும் இவ்வாறே ‘ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை’ முதலியவற்றிலும் இவ்வுரைப் பாட்டு இடம் பெறுகின்றது. இவ்விதம் வரும் உரைப்பாட்டு எல்லாம் வசன கவிதை உணர்ச்சியையே உண்டாக்குவன. உரை-கட்டுரை என்பன வசனத்தையும், பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால், உரைப்பாட்டு-கட்டுரை செய்யுளென்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவனவெல்லாம் வசன கவிதையே என்று தெளிய இடமுண்டு.
சிலப்பதிகாரப் பதிகத்தில் ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வரும் பகுதிக்கு ‘உரையிடை இட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுளை’ என்று கருத்துரைக்கும் அடியார்க்கு நல்லார், பின்னரும் ‘உரைபெறு கட்டுரை’ இவை முற்கூறிய கட்டுரை-இவை முற்கூறிய ‘கட்டுரைச் செய்யுள்’ எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.’
1-10-43-ல் வெளியான கலாமோகினி இதழில் ‘வசன கவிதை’ பற்றி கலைவாணன் எழுதிய கட்டுரையின் எதிரொலி இது. ‘வசன கவிதை தமிழுக்குப் புதிது’ எனும் கொள்கையை மறுத்து, அது முன்னரும்- வெவ்வேறு பெயர் வடிவில்-இலை மறை காய் போல-வழங்கியதெனக் காட்டுவதே எமது நோக்கம்.” (கலாமோகினி-33)
“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “வல்லிக்கண்ணன்/ “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””
Comments are closed.