
5. கு.ப.ரா. கவிதைகள்
புதுக்கவிதை வரலாற்றில் கு.ப.ராஜகோபாலனின் கவிதைகளுக்குத் தனியான-முக்கியமான-ஒரு இடம் உண்டு. அவர் வசன கவிதைகள் தான் எழுதினார். அதிகமாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள், ‘கலா மோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை.
‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று கொள்கை அறிவிப்பு செய்து கொண்டு, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறையாகப் புது வடிவம் பெற்ற ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில், 1943 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1 முடிய, கௌரவ ஆசிரியர் என்றும், டிசம்பர் 15 முதல் 1944 ஏப்ரல் இறுதிவரை ஆசிரியர் ஆகவும், கு.ப.ரா பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியராகவும், நிர்வாக ஆசிரியராகவும் செயலாற்றினார். இந்த ஒன்பது மாதங்களில் கு.ப.ரா ‘கிராம ஊழிய’னில் கதை, கட்டுரை, வரலாறு என்று பல படைப்புகள் எழுதியிருப்பினும், ஒரு கவிதைகூட எழுதவில்லை. இது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு (அதிசயச்) செய்தியாகவே எனக்குப் படுகிறது.
ந. பிச்சமூர்த்தி கூட இரண்டே இரண்டு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார். கதைகள், ‘மனநிழல்’ கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவ்விரு கவிதைகளில் மிக அருமையானது.
ஏனோ?
சந்த்ரன் நல்லாக் காயுரண்டா
சின்ன ராயப்பா-அந்த
மந்த்ரத்துலே மயங்கி நிக்கிது
மட்டை குட்டை எல்லாம்,
பாம்பெறிந்த சட்டைபோல
சின்ன ராயப்பா-இந்த
ஆம்பல் வர்ணரோட்டு ரொம்ப
அழகு பொங்குது,
வெளிச்சத்தாலே ஆகாசத்தை
சின்ன ராயப்பா-யாரோ
பளிங்கைப்போல் பண்ணிவிட்டா
சின்ன ராயப்பா.
அழகும் சொகமும் சொக்குதடா
சின்ன ராயப்பா-எங்கும்
மழலை பேசும் காத்தெக்கேளு
சின்ன ராயப்பா.
நிலவும் நீயும் எனக்கிருந்தும்
சின்ன ராயப்பா-நல்ல
நெல்லும் நெழலும் நெறஞ்சிருந்தும்
சின்ன ராயப்பா அந்த
பனங்கொளத்து வீட்டுக்காரி
நடை குலுக்கிலே-தொலை
உலவிச் செல்லுதாவியேனோ
சின்ன ராயப்பா.
கு.ப.ரா. தனது கவிதைகளை ‘கருவளையும் கையும்’ என்ற தலைப்பில் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய ஆசை அவர் காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரியே; நிறைவேற வழி ஏற்படவில்லை. அந்தத் தொகுப்பு வெளிவந்திருந்தால் அது தமிழ்க்கவிதை உலகில் குறிப்பிடத் தகுந்த ஒரு அருமையானப் படைப்பு நூலாகத் திகழ்ந்திருக்கும்.
‘கருவளை யொலியில் கொள்ளை கொண்டென்னை
ஆழ்த்தின காதலில், கருத்திழந்துருகினேன்;
பருவமப்போது பெண் எழிற் குவியலில்
சூழ்ந்திருந்த சோர்வில் சுவை கண்ட கோலம்’
அந்தச் சுவையில் அவர் ‘உள்ளப் பூவை உதிர்த்தெடுத்து, மாலை தொடுத்தவுடனே மங்கை கை கொடுத்த’ அன்பு அஞ்சலிகளே கு.ப.ரா. வின் பெரும்பாலான கவிதைகள்.
கருவளையும் கையும், தலைவியின் தேர்தல், கவிதைப் பெண்ணுக்கு, பெண்ணின் பிறவி ரகசியம், ஏன்? சதையை மீறியது, எப்பொழுது புத்துயிர், நிச்சயம், இடைவேளை உருவம், நீயும் நானும், சோர்வும் குழைவும், என்னதான் பின்?, விடுதலை, விரதம், உரம், உயிர், தரிசனம், மாங்கனிச் சுவைப்பு ஆகியவை மென்மையான உணர்வுகளை இனிமை எழிலாய், கற்பனை நயத்தோடும் கவிதை வளத்தோடும் சித்திரிப்பனவாகும்.
இவற்றிலே பல கவிதைகள் பின்னர் ‘எழுத்து’ இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. அவற்றில் அநேகம் ‘வாசகர் வட்டம்’ பிரசுரமான ‘சிறிது வெளிச்சம்’ என்பதில் இடம் பெற்றுள்ளன என்று நினைக்கிறேன்.
பெண்மையை வியந்து போற்றும் இவ் அகத்துறைக் கவிதைகள் தவிர, வேறு பொருள்களைப் பாடும் சில கவிதைகளையும் கு.ப.ரா. எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கை’ பற்றிய அவரது சிந்தனை விசேஷமானது-
வாழ்க்கை ஒரு வெற்றி. ஒரு துடிப்பு
ஓரு காதற்பா, ஒரு இசை,
மண்ணின் மாயமோனையில் பிறந்தது.
அரைத் தூக்கத்திலும் அதிசயத்திலும் அது உதிக்கிறது
விடியற்காலை விடுதலையில் வளர்கிறது-
செயல் செய்யும் தேவையில்,
கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு,
பாதையெல்லாம் பூரிக்கிறது பேரவா-
யௌவனம் மாறுகிறவரை
பிறகு வருகிறது யோசனை,
கரும வெற்றிகளில் பிறந்த களிப்பு,
உற்பத்தி செய்வதிலிருக்கும் உள்ள நெகிழ்ச்சி,
அரை குறையற்றதின் அழகு,
நிறைவின் நிம்மதி,
மண்ணின் மற்றெல்லா மகிழ்ச்சிகள்-
மாலை வரை!
இருண்டதும்,
மனிதன் மறுபடியும் பிரயாணமாகிறான் தன் வழியே-
அமைதியாக.
வாழ்வின் இனிமைகளை ரசித்து மகிழ வேண்டும் என்று கருதி இன்பங்களை வியந்து போற்றுவதில் கு.ப.ரா. ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்கள் கூறும். அவரது வாழ்க்கைத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது போல் அமைந்துள்ளது ‘நண்பனுக்கு’ என்ற கவிதை.
ஓயாமல் எண்ணியும் பேசியும்,
சளைத்துப்போய் விட்டோம், அல்லவா?
வார்த்தையை வைத்து வாதாடி
வீண் வித்தியாசம் கொண்டோம். போதும்!
மாயையும் தத்துவமும் என்ன
என்று தெரியவே வேண்டாம்;
கண்கண்ட சுகத்தைக் கடைந்து
உண்போம், இனிமேல், வா!
இவ் வாழ்க்கை நதி வரண்டு
மணலாகும் மரணம் வரை
அதன் கரைபுரளும் வெற்றியை
ஒப்புக்கொள்வோம், அதனாலென்ன?
உயிரின் இன்ப ஊழியத்தில்
அடிமைகளாவோம். பாதகமில்லை!
ஆத்மா, பரமாத்மா-இந்தப் பேச்சு-
யுகம் யுகமாக, காது துளைத்துப் போச்சு!
அது வேண்டாம் நமக்கு!
மதுக்கிண்ணத்தைப் பற்றிப் பேசினானே
அவன் யார்?-உமர்கயாம் –
அவனைத் தொடர்வோம். அப்பா!
கு.ப.ரா. இறந்த பின், அவரது கவிதைகள் அனைத்தும் ‘கிராம ஊழியன்’ இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. (1944 ஏப்ரல் கடைசியில் கு.ப. ராஜகோபாலன் மரணம் அடைந்தார். ஏப்ரல் முதல் வாரத்தில் நான் ‘கிராம ஊழிய’னில் பணிபுரியச் சேர்ந்திருந்தேன்.)
எந்தப் பிரச்சனையையும் புதிய பார்வையில் நோக்கும் ஆற்றலை கு.ப.ரா. வின் அறிவு பெற்றிருந்தது. இதை அவருடைய ‘எதற்காக?’ என்ற கவிதை விளக்கும்.
1
பாம்பே, படமெடுத்து நீ ஏன் இப்படி
மகுடி முன் மெய் மறந்து ஆடுகிறாய்?
பாம்பாட்டிக்கு பிழைப்பளிக்கவா?
இல்லை, இல்லை!
ஆடியாடியுன் ஆவலைத் தீர்த்துக்கொள்ள!
2
ராதே, குழலோசை கேட்டேன் நீ
காதல் கொண்டு கானகமெல்லாம் ஓடுகிறாய்!
கண்ணனுக்குன் கண்ணோக்கின்ப மளிக்கவா?
இல்லை. இல்லை!
ஓடியோடியுன் உள்ளப் பூரிப்பைக் கொட்ட!
3
பெண்ணே, புருஷனுக்கேன் இப்படிப் பணிந்து
அடிமைபோல இட்டதெல்லாம் செய்கிறாய்?
‘பண்ணு’ என்று சொல்லும் புருஷனுக்கஞ்சியோ?
இல்லை, இல்லை!
இட்டதைச் செய்து செய்து உணர்ச்சியை அடக்க
இது ‘கலாமோகினி’ யில் வந்தது. அதே பத்திரிகையில் பிரசுரமான கவிதைகளில் ‘யோகம் கலைதல்’ என்பது தனிச்சுவையும் நயமும் கருத்தாழமும் கொண்டது. கவிதை அன்பர்களின் ரசனைக்காக அதையும் இங்கே தருகிறேன்.
1
கரிச்சான் ஒன்று கூரை மேலிருந்து
மருட்சியுடன் மெல்ல மெல்லத் தயங்கி
வாய் திறந்து வேதம் பாடக் கேட்டு நான்
அவ்வின்பம் அலையெடுத்த இடத்தைப் பார்க்க
பரிந்து வந்தேன்; பாட்டை நிறுத்திப் பறவை
என்னைக் கண்டு எழுந்தோடி விட்டது!
2
கோதை யொருத்தி குளத்துநீரில் தனிமையில்
அழகு பார்த்து ஆனந்தம் கொண்டு நின்றாள்;
பாதையில் ஒளிந்து பார்த்துப் பரவசமெய்திய நான்
நிலைதடுமாறி நெட்டுயிர்ப்பு விட்டுவிட்டேன்;
மாததைக் கேட்டு மிரண்டுபோய் மேலாக்கிழுத்து
குடமெடுத்துக் கொண்டு கடுகியே போய்விட்டாள்!
3
கவியொருவன் கனவில் ஆழ்ந்து
கற்பனை கண்டு கருத்தை வெளியிட
செவிமூடிச் செய்யுள் செய்ய விருந்தான்;
தெரியாமல் அங்கே திட்டென்று போய்நான்
கவி அழித்தேன்; சொல் இழந்து அவன்
கடுந்துயருடன் கீழே சாய்ந்தான்!
இக்காலகட்டத்தில் ந. பிச்சமூர்த்தி சிறுசிறு கவிதைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு நீண்ட கவிதைகளும், சிறு காவியங்களும் எழுதலானார். அவை ‘கலாமோகினி’யில் வந்தன. பின்னர் ‘கிராம ஊழிய’னில் அவர் பலரகமான கவிதைகளும் எழுதித் தனது சோதனைகளைத் தொடர்ந்தார். அவை குறித்து உரிய இடத்தில் விரிவாக எழுதுவேன்.
வல்லிக்கண்ணன்/ “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on ““புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” / வல்லிக்கண்ணன்”
Comments are closed.