எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதைகள்

  1. பைரவி

நீர்த்தட்டானின் கண்ணாடிச் சிறகென
விரிந்த ஆகாயம் விரிசல்
கண்டிருக்கிறது

ராகம் பைரவி
மட்டும் அதையும் மீறி
மேலெழுவதன் தடுமாற்றம்தான் எல்லாம்

எல்லாவற்றின் இருப்பும் என்னை மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றன, சின்னஞ்சிறிய பூச்சி முதல் தெய்வீகத்தின் புதிர்கள் வரை; எல்லாமே எனக்கு விளக்கமளிக்கமுடியாதவையாக இருக்கின்றன. எல்லாமே தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன்.

ஒற்றை ஈச்சம்பனைமரம்
புழுதி அடர்ந்து நிலவொளியில்
குளித்து கைபரப்பி நீயே என
நிர்வாணமாய் நிற்கிறது
என் விழி நரம்பில் உன்மத்தம் கொள்ளும்
பைரவி அதை வெறித்துப் பார்த்து
ஸ்தம்பித்து நிற்கிறது

உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குச் சண்டைகள்? யாருக்கு புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யார…

  1. நீர்மை

நீரோவியம் போல
என் புகைப்படம் இருக்குமானால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
என அவ்வபோது நினைக்கிறேன்.
திட்டு திட்டாக அடர்தல்,
இலக்கற்று படர்தல்,
முன் தீர்மானங்களற்ற
அர்த்த சேர்க்கை
என நீரோவியத்தின்
அத்தனை குணாம்சங்களும்
என்னுடைய புகைப்படத்திற்கு
பரிமாணங்கள் சேர்க்குமானால்
என்னுடைய புகைப்படத்திலேயே கூட
ஒரு இலக்கற்ற நிறத்துளியில்
என் அகத்தை
என்னால் அடையாளம் காணமுடியும்.
ஆனால் சாதாரண புகைப்படமோ
எனக்கான முறையற்ற
அஞ்சலி குறிப்பு போல இருக்கிறது;
அது என்னுடைய
நனவற்ற தருணம் ஒன்றை
என் வாழ்க்கையின் மொத்த
சரிதமாக்க செவ்வனே முயற்சிக்கிறது;
பலர் பார்வையில்
அது வெற்றியடையவும் கூடும்.
என் புகைப்படங்களை நான்
இறந்தவன் ஆவியாகித்
தன் வீட்டை வானிலிருந்து
பார்ப்பது போல பார்க்கிறேன்.
அதில் வண்ணங்களின் நீர்மையை
சேர்க்கும்போது மட்டுமே
எனக்கு இருந்த மாற்று வழிகளும்
தெரிவுகளும் நான் தவறவிட்ட
பாதைகளும் தெரிகின்றன.
என் புகைப்படம் அப்போது
ஒரு குழந்தையின் கோட்டோவியம்
போல குறைந்த பட்ச புனைவு
வெளியை காட்டுகிறது;
அது ஒரு சாத்தியப்பாடு, கனவு,
ஊன் கண்களுக்கு புலப்படாத உண்மை.
என் புகைப்படங்களைப்
பார்க்கும்போது
இவ்வாறான இலக்கற்று படரும்
நிறத்துளிகளால் ஆன
இன்னொரு சித்திரத்தை
கற்பனை செய்துகொள்கிறேன்.
அது எனக்கு ஒரு உபநிடதத்தை
நல்குகிறது.