வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

  1. புத்தபக்தி

‘பிக்ஷு’வின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு, நானும் கவிதைகள் எழுதலானேன்-1942 முதல், 1943ல் நான் ‘சினிமா உலகம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணை ஆசிரியர் ஆனதும், எனது கவிதைகள் அதில் அவ்வப்போது அச்சாயின. அந்த சமயத்தில் நாட்டியக்காரி, ஆடும் அழகி, கலை, சினிமா போன்றவையே என் கவிதைப் பொருள்கள் ஆயின.
அவ்வருடத்தின் இறுதியில் நான் சென்னை சேர்ந்து, ‘நவசக்தி’ மாசிகையில் பணிசெய்ய முற்பட்டேன். திரு.வி.க. வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த ‘நவசக்தி’யை சக்திதாசன் சுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டார். சக்திதாசன் அதை இலக்கிய மாத இதழாக நடத்திக் கொண்டிருந்தார். கே. ராமநாதன் அதன் துணை ஆசிரியர். அவர் கம்யூனிஸ்ட். ‘முற்போக்கு இலக்கியவாதி’. ‘நவசக்தி’யை ‘முற்போக்கு இலக்கிய இதழ்’ ஆகக்கொண்டு வருவதில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் நானும் போய்ச் சேர்ந்தேன்.
அது யுத்த காலம், ஜப்பானியரையும், பாசிஸ வெறியையும் எதிர்த்து கவிதைகள், கதைகள், கட்டுரைகள் உருவாகிக் கொண்டிருந்த காலம். கவி ரவீந்தநாத் தாகூர் ஜப்பானியரின் பலாத்காரத்தை வெறுத்தும், கண்டித்தும், எழுதிக் கொண்டிருந்தார். ஜப்பானியர்கள் யுத்தம் மூலம் ஆசிய நாடுகளில் நாசத்தை விதைத்து வந்தபோதே, தங்கள் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று புத்தர் ஆலயத்தில் பூஜைகள் நடத்தினார்கள் என்றொரு செய்தி வந்தது, அதைக்கண்ட தாகூர், ‘மிருக வெறியைப் பரப்புகிற ஜப்பானியர் புத்தருக்கு பக்தி செலுத்துகிறார்களாம்’ என்று குத்தலாகச் சுட்டிக்காட்டி ‘புத்த பக்தி’ என்ற கவிதையை எழுதினார். அதையும் ஆஸ்திரேலியத் தொழிலாளி வர்க்கக் கவிதை ஒன்றையும் தமிழாக்கி ‘நவசக்தி’ யில் வெளியிட விரும்பினார் கே.ராமநாதன். அவ்வாறே செய்தேன்.

உறுமின முரசுகள்
வெறி கொண்ட மக்கள்
கோர உரு ஏற்று
பற்களைக் கடித்தனர்;
சாவுக் கோட்டையில்
மனித ஊன் சேர்க்கும்
துடிப்புடன் ஓடும் முன்
கூடி நிற்கின்றார்
புத்தன் முன்னிலே,
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டியே:
வெளியே-
அண்டங்கள் அதிர
பேரிகை முழங்குது!

என்று ஆரம்பித்து, வளரும் ‘புத்த பக்தி’ யின் கடைசிப் பகுதி இது:

காயம் பட்டவர்
செத்து வீழ்ந்தவர்
கணக்கைக் காட்டிட
அடிக்கடி விம்மி
ஒலிக்கும் வீர எக்காளம்;
பெண்கள் பிள்ளைகள்
அங்கங்கள் இழக்கும்
வார்த்தையைக் கண்டே
பேய்கள் பிசாசுகள்
கைகொட்டி நகைக்கும்;
மனித மனத்திலே
பொய்மைப் புகை பரப்பவும்,
தெய்விகக் காற்றிலே
நச்சு மணம் கலக்கவும்
பக்தி செய்கின்றார்
புத்தன் முன்னிலே,
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டி!
வெளியே-
அண்டங்கள் அதிர

பேரிகை முழங்குது.

‘பாசிச பூதம்’ பற்றிய வர்ணனை பின் வருமாறு:

காலம் எனும் இருள் வெளியின் ஊடே
வாலில்லாக் கருங்குரங்கு போலே
ஊர்ந்து வந்தது இப்பூதம்
இருள் மனமும் பெருவாயும் திறந்து
வியந்து நின்றது அறியாமை
முன்னைப் பொறாமை
திடுக்கிடும் பயத்துடன்
பண ஆசை உந்திட
துரோகத்தைத் தழுவிய வேளையில்
ஓர் வாணிபமாய்
பிறந்தது இதுவே.
வறண்ட வருடத்தில் பிறந்த பின்னர்
பொன்னுக்குத் தலைவணங்கி
பாபப் பால் பருகி,
கொடூரச் சேற்றிலும்
பயங்கர கதியிலும்
சிக்கி, நெடிதாய், குளிருருவாய்
வளர்ந்தது பாசிச பூதம்,
கண்ணீரும் துயர இருளும்
கவிந்த குகைகளில் வளர்ந்தது.
அழுகையும் அரற்றலும் அதற்கு
இன்னிசை ஆயின,
கனவும் மக்கி மடிந்தது.

கஞ்சக் குழுவினர், மிருக வெறியினர்
அஞ்சா நெஞ்சொடு கொலைத் தொழில் புரிவோர்,
பிறவிக் குறையினர், ரத்தம் செத்தவர்,
மூளை திரித்தோர், தற்கொலைப் பித்தர்,
காமவெறியர், இன்னோரன்ன
தன்னிலை தவறிய தறுதலைகளுடனே,
பருத்த தொந்தி, கதுப்புக் கன்னம்
பித்தப் பேச்சுடன் பணமும் படைத்தவர்
அதிகார வெறிபற்றி மனிதம் இழந்தோர்
பிணக் கழுகின் பெருமூக்கும் பேழ்வயிறும்
நடையில் ஓர் நடிப்பும் பிணக்களை மூஞ்சியும்
பெற்ற பேதலித்த மனசினர்,
நொண்டும் குள்ளர்கள்,
ராப்பகலாய் துயரால் துடித்து
அலறிடும் அபலையர் தம் ஓலத்தில்
மகிழ்வு காண்போர்
இவரே பாசிசப் பணியாளர்கள்!

இப்படி மேலும் வளர்வது அந்தக் கவிதை.

சென்னை நகரத்தில் ரேஸ் புத்தகங்கள் விற்பனை செய்யும் சிறுவர்கள்; சுட்டெரிக்கும் வெயிலிலும் சோற்றுக் கூடைகளைச் சுமந்து பலப்பல ஆபீசுகளுக்கும் போய் உரியவர்களிடம் அவற்றைச் சேர்ப்பிக்கும் கூலிக்காரிகள்; வறுமையில் வாடும் பலதர மக்களின் உடமைகளைப் பெற்று வளமாய் வளரும் வட்டிக்கடை; யுத்தத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் ஏழைத் தாயின் அன்பையும்; அன்பனின் வருகையை எதிர்நோக்கி ஏங்கும் காதலியின் மனத்துடிப்பையும் எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சி-இவற்றை எல்லாம் நடைச் சித்திரங்களாக எழுதியிருந்தார் கே.ராமநாதன். அவற்றையும் கவிதைகளாக்க விரும்பினார். அவ்வாறே ஆக்கினேன்.

இந்தியா ரேஸ்!

மவுண்ட்ரோடு மூலை
கோட்டையின் பக்கம்
பஸ் ஸ்டாண்ட் ஓரங்கள்
அங்கெழும் கூச்சல்
“இந்தியா ரேஸ்…
புல் ரிசல்ட், வேணுமா?”

மோட்டார் அலறல்
டிராமின் ஓலம்
ரேடியோக் கூச்சல்
பற்பல நாதங்கள்
குழம்பினும் என்!
மேலோங்கி ஒலிக்கும்
மனிதக் குரல்
“இந்தியா ரேஸ்
புல் ரிசல்ட், வேணுமா?”

கை சைகை கண்டால்
குதித்தே வருவான்
ஓடும் டிராமிலே
தொத்திப் பாய்வான்:
டிக்கெட் டில்லாமலே
டிமிக்கி கொடுப்பான்!
‘சில்லரை, சில்லரை’ என்றே
ஓசிப் பயணம்
ஒன்றிரண்டு செய்வான்
அவன் வாய்ப் பல்லவி
இந்தியா ரேஸ்!

இவ்வாறு வர்ணித்து, பந்தயப் புத்தகங்கள் விற்பனை செய்யும் பையன்களின் பரிதாப நிலைமையை விளக்குவது இந்தக் கவிதை. ஏனைய கவிதைகளும், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் அவலத்தைச் சித்திரிப்பனவே. நான்’நவசக்தி’யில் நான்கு மாதங்கள்தான் வேலை பார்த்தேன். 1944 ஏப்ரலில், திருச்சி ஜில்லா துறையூரில் வளர்ந்து கொண்டிருந்த ‘கிராம ஊழியன்’ சேவைக்காகப் போய்விட்டேன். அதன் பிறகு, கே.ராமநாதன், 1944 மே மாதம் ‘புத்த பக்தி முதலிய வசன கவிதை’களைத் தொகுத்து சிறு புத்தகமாக வெளியிட்டார். தமிழில் வெளிவந்த முதல் வசனகவிதைப் புத்தகம் இதுவே ஆகும். ஏழுவசன கவிதைகள் கொண்டது. 31 பக்கங்கள்.

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” / வல்லிக்கண்ணன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

Comments are closed.