
- பாரதி அடிச்சுவட்டில்
பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதியின் ‘காட்சிகள்’ போல் அவை அமையவில்லை என்று கவிஞர் திருலோக சீதாராம் கருதினார். எனவே, ‘பாரதியின் அடிச்சுவட்டில், ‘காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; நாம் இருவரும் அத்தகைய படைப்புக்களை உருவாக்குவோம்’ என்று அவர் என்னிடம் சொன்னார். ‘இரட்டையர்’ என்று நாங்கள் இருவரும் எழுதத் தீர்மானித்தோம்.
‘பாரதி அடிச்சுவட்டிலே’ என்பதுதான் அதற்குத் தலைப்பு. அதற்கு ஒரு முன்னுரை ‘கிராம ஊழியன்’ 16-6-1944 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதில் சில முக்கியமான பகுதிகள்:
‘பாரதியின் ரசிகர்கள் நாங்கள். கலைஞனின் சிருஷ்டிகளைப் படித்து ரசிப்பது மட்டுமே எங்கள் தொழில் அல்ல. அவைகளைப் போற்றுவதுடன் நிற்பது எங்களுக்கு திருப்தி தராது. ஒரு கலைஞனின் ஆசைகளும், கனவுகளும் அவனுடன் முடிந்து விடாமல், அவன் சிந்தனைச் சரம் தொடர்பற்று விடாமல் அவனது புதுமைப்பாதை வெறும் பாலை நடுவே கலந்து, இருந்த இடம் தெரியாது மங்கிவிடாமல் காப்பதும் ரசிகர்கள் கடமை.
இலக்கியக் குலத்திலே பாரதி பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். எங்கள் சகோதரர்கள் செய்துவரும் முயற்சிகளை நாங்கள் கவனித்து வந்தோம். கவனிக்கிறோம். எங்களுக்கு முந்திய தலைமுறையினரும், பிறரும் செய்யாத காரியங்கள் பல பாரதி இலக்கிய சரித்திரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்.
இதுவரை எல்லோரும் பாரதியின் கவிதைகளைப் பின்பற்றியுள்ளனர். வசனத்தையும் பின்பற்றியிருக்கிறார்கள். ஆனால் பாரதி கையாண்ட புது முயற்சியை யாரும் தொடர்ந்து செய்யவில்லை. நன்கு ஆராயக் கூட இல்லை. அதுதான் பாரதியாரின் ‘காட்சிகள்’.
மகுடி நாகத்து இசை போன்றதுதான் பாரதியின் புது முயற்சியான ‘காட்சிகள், பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது, மகுடி நாதத்திலே ஒலிக்கும் வாது போலவே பாரதியின் எழுத்துக்களிலும் ஒரு வேகம் துள்ளுகிறது, கவிதை யாவும் தனக்கெனக்கேட்ட பராசக்தியின் புகழ் பாட பாரதி எனும் பாணன் கையாண்ட சொல் கருவியிலே பற்பல தோற்றம் சிருஷ்டிக்க முயன்றதன் விளைவுதான் ‘காட்சிகள்’. ‘பாட்டினிலின்பமும் கற்பனை விந்தையும் ஊட்டியெங்கும் உவகை பெருகிட ஓங்குமின்’ கவி ஓதிய பாரதியார், “பொருந்தாத பொருள்களைப் பொருத்தி இசைத்த ஜாலம் தான் ‘காட்சிகள்’ ஜகத்சித்திரம் முதலியன என்பதும் எங்கள் கருத்து. பாரதி சென்ற சுவட்டிலே நாங்களும் துணிந்து அடியெடுத்து வைக்க முன்வந்து விட்டோம்.
நாங்கள் செய்யப்போவது மாரீசம் அல்ல. பாரதி இலக்கியத்தின் புது அத்தியாயத்தை வளர்க்கப் போகிறோம். எங்கள் உள்ளத்து மூச்சை சொல்லெனும் மகுடியிலே ஒட்டி சக்தியின் லீலையைப் பரப்புவோம். பாரதி பெருமையைப் பாடுவோம். பாரதியின் பக்தர்கள் நாங்கள்.
எங்கள் முயற்சிக்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும் சரி; நாங்கள் கவலைப்படப் போவதில்லை. ஒரு எழுத்தாளன் சொன்னதைப் போல, “எமது எழுத்துக்களை கவிதை, கட்டுரை, வசன கவிதை என்று எப்பெயரிட்டு வேண்டுமானாலும் அழையுங்கள்; நாம் கையாள விரும்புவது சொற்கள்தான்; சொற்களுக்கு உயிரூட்டுவதே எமது நோக்கம்”.
முதலாவதாக, ‘அழகு’ பற்றி நான் எழுதினேன்-
உமையின் கவிதை
உலகின் உயிர்ப்பு, உயிரின் சக்தி,
சக்தியின் சிரிப்பு, சிவத்தின் மலர்ச்சி,
மலரின் சிறப்பு, ஜீவனின் ஒளி, ஆத்மாவின் சுடர்.
அழகு எங்கும் நிறைந்தது. கண்ணுக்கு தெரிவது.
தெரியாமல் ஒளிர்வது
கலையின் கலை, காவியநயம்,
அழகே அனைத்தும், அது வாழ்க,
வியன் வானத்திலே மோன நகை புரிகிறது அழகு,
விரிகடலில் தவழ்கிறது. புரள்கிறது. குதிக்கிறது.
துள்ளுகிறது அழகு,
பூங்காவில் புன்னகை பூத்து ஒளிர்கிறது,
பகலின் ஒளியில், இரவின் இருளில், நிலவின் கதிரில்,
வெள்ளியின் சிமிட்டில், மின்னலின் பாய்ச்சலில்
ஆட்சிபுரிகிறது அழகு.
மங்கையின் மேனியில், அவள் அங்கங்களில், கண்களில்
கன்னத்தில், குமிண் சிரிப்பில் அழகு நெளிகிறது,
மனிதனின் உள்ளத்தில் உறையும் அழகு,
பார்வையில் பிறக்கிறது எழிலுறு காட்சியாக
நரம்பில் புரளும் அழகு
கைவிரல் அசைவில் மலர்கிறது கலையாக
காலில் ஜதி பேசுகிறது நடனத்தில்,
உடலின் துவள்தலில் மின் எழில் பிரகாசிக்கிறது.
இதயக் குரல் முனகும் அழகு,
கவிதையில், காவியத்தில், இலக்கியத்தில் கனவாய் சிரிக்கிறது,
அழகு இல்லாத இடம் எது?
அழகின் சிரிப்பு பொலிவுறுத்தாதது எது?
அழகு அடியற்றது, முடிவற்றது,
அழகு ஆனந்தமானது, அகண்டமானது ஆழமானது,
அழகை உணரலாம், ஸ்பரிசிக்க முடியாது.
அழகை வியக்கலாம், வர்ணிக்கலாம், விளக்க முடியாது.
அழகு ஒரு கலை, அதுவே தத்துவம்,
அழகே சக்தி, அதுவே சிவம்,
அழகைப் போற்றுகிறேன், துதிக்கிறேன், வணங்குகிறேன்,
அது வாழ்க.
அழகு அழிவற்றது என்று மனம் பேசியது
குபுக்கென்று சிரித்தது மலர்,
அழகாய் அரும்பி, எழில் மிக்க போதாகி,
வனப்பாய் மிளிர்கிறது மலர்.
அழகின் களஞ்சியம்,
காலையில் மலர்ந்தது, மாலையில் சோர்ந்தது, மறுநாள் வாடி
விழுந்தது.
செடி ‘பாரடா அழகின் தன்மை!” என்றது.
அழகு மாறுதலற்றது என்றேன்.
களுக்கெனச் சிரித்தாள் மங்கை. கண்களில் கவிதை பேசியது.
முறுவலில் காந்தம் சுடரிட்டது கதுப்பிலே கதை சுவை
காட்டியது. கரும் பட்டுக் கூந்தலில், சங்குக்கழுத்தில்
மார்புமொட்டுகளில், ஏன்-அவள் மேனி முழுவதும்-அழகு
சிரித்தது முன்பு.
இன்றோ?
மலரின் வாட்டம் அவள் உடலில் உறக்கம் காட்டியது.
‘விழித்து உணராத மூடனே, அழகின் வாழ்வை நேரில் பார்’ என்றது
அவள் உருவம், தலை குனிந்தேன்.
அழகு மூப்பற்றது. வளர வளர வனப்புறுவது என்று உள்ளம்
பேசியது.
குழந்தை சிரித்தது, கிழவனைச் சுட்டியது,
குழந்தையின் சிரிப்பில் மின்மினிக் கண்களில், தளிர் நடையில்,
மழலை மொழியில், எழில் விளையாடியது. குழந்தை வளர்ந்தால்,
பெரியவன் ஆனால், கிழவனாகிடில்…?
எங்கே அழகின் சக்தி?
நரை, திரை பிணி மூப்பு, சாவு
போதும், போதும்!
அழகு அழிவுறுவது, சோர்வது, வாடுவது, வதங்குவது, திரிவது,
பிரிந்து மாறுவது, மண்ணாவது.
‘நிறுத்தடா பித்தனே! என்றது வானம், என்னைப்பார். என்
எழிலைப் பார் என்றது கடல்.
விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை என்றது அந்தி.
தூக்கக் கண்களை துடைத்துப் பாரடா என்றது உதயம்.
என்னைப் பார்க்க வெள்ளெழுத்தா என்றது மலை.
இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது,
வெள்ளிகள் மின்னின.
பிறை அழகு புதுப்பெண்ணின் இளமுறுவல் போல் மிளிர்ந்தது.
அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல் கணமோர் வியப்புக்
காட்டும்.
வான் உடையில் அவள் கர்வமுடன் தலை நிமிர்ந்தாள்.
அருவி அவள் புகழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது.
‘பேதையே, இவை மாறுமா? அழகு இவற்றின் ஒளி, உயிர்.
சக்தி, அது மயங்குகிறதா, மறைகிறதா? தேய்கிறதா? பாராடா!
பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.
சக்தி காவியம் இயற்றுகிறாள். அது அழியாதது, நிலைத்திருப்பது
இனியது; மரணத்தைப் போல,
உண்மைதானோ?
ஆனாலும்…
அழகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலையைப்
போக்குகிறது.களிதுள்ளச் செய்கிறது. அது வாழ்க.
வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
