
(ஸ்ரீனிவாசன் கணேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து)
90களின் ஆரம்பத்தில் புதுயுகம் என்றொரு இதழில், தமிழ் நாவல்கள் குறித்த கட்டுரையொன்றில்,தமிழில் மிகச் சிறந்த நாவல்கள் இல்லை என்றும்,சிறந்த நாவல்கள் என்று மோகமுள்,புயலிலே ஒரு தோனி,ஜே ஜே சில குறிப்புகள் நாவல்களை குறிப்பிட்டு, குறிப்பிடத்தக்க நாவல்கள் என்று ஒரு பத்துப் பனிரெண்டு நாவல்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அவற்றில் காசியபனின் அசடும் ஒன்று.
1978ல் எழுதப்பட்ட நாவல்,இத்தனை ஆண்டுகள் கழித்து மதுரை புத்தகக் கண்காட்சியில், விருட்சம் வெளியீடாக கிடைத்தது.
கதை சொல்லியின் வாய் மொழியாக,அவரது உறவினரான கணேசனின் வாழ்க்கை சொல்லப்படுகிறது.
ஓரிடந்தனிலே நிலை இல்லா மனிதனான கணேசன்,எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்யத் துப்பில்லாதவன்.நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து,அம்மாவை இழந்து அப்பாவால் வளர்க்கப்படாமல் பாட்டியால் செல்லமாக வளர்க்கப்பட்டவன்.சித்தி கொடுமையெல்லாம் இல்லை.அவர்களோடு கணேசனால் ஒட்ட முடியவில்லை.கால் போன போக்கில்,மனம் போன போக்கில் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்கிறவனுக்கு திருமணமும் நடக்கிறது.முறை தவறிய மனைவியையும் அனுசரித்து சில காலம் வாழத்தான் செய்கிறான்.ஒரு கட்டத்தில் அதிலிருந்தும் விடுபடுகிறான்.அத்தனை அலைச்சல்களிலிருந்தும், அவமானங்களிலிருந்தும் கடைசியாக விடுதலையடைகிறான்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல,மற்றவர்களிடம் சாதுவாக இருக்கும் சங்கரி என்ற பசு மாட்டுக்குக் கூட கணேசனைக் கண்டால் இளப்பம்.முட்ட வரும்.
நம்மைப் போல் லௌகீக வாழ்க்கை வாழ்ந்து மரணமடைகிறவர்களை ஒப்பிட்டால்,கணேசன் ஒன்றுக்கும் ஆகாதவன்தான்.ஆனாலும்,இத்தனை சுமைகளை சுமந்து திரிகிற அவனை அசடு என்று எப்படிச் சொல்ல முடியும்?
கதை சொல்லியின் வாழ்வும்,அந்தக் கால கிராமங்களும்,மனிதர்களும் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். கணேசனின் மனைவி முன் கதை சொல்லியின் பலவீனமும் சொல்லப்படுகிறது.ஓரிரவில்,கதை சொல்லிக்கும் கணேசனின் மனைவிக்குமான நெருக்கம்,அதன் உச்சத்தை எட்டியதா?என்பது விடிந்ததும் புறப்படுகிற சாவித்திரியின் முகத்தில் ஒரு இகழ்ச்சிச் சிரிப்பு என்று பூடகமாகவே சொல்லப்படுகிறது.
கணேசன் இறுதியாகப் படிக்கும் ஞானப் பனையின் முன்னோட்டமாக, காயங்குளத்தின் வாயிலாக, காகங்களால் குதறப்படும் இறந்த எலியை வைத்து தத்துவங்களும் சொல்லப்படுகின்றன.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் புதுயுகம் சொன்னதை,இப்போது நானும் வழி மொழிகிறேன்.
அசடு,தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்தான்.
–
