
பூங்காவை போர்களமாக்குவதா?
“இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். ஆனால் பண்பாட்டிற்குப் புது இலக்கணங் கண்டுவிட்ட தி.க.-தி.மு.க வட்டாரத்தினர் தங்களுக்கே உரிய திராவிட பாஷை’யில் என்னை ஏசி எழுதி வருகின்றனர். அவர்களிடம் இதைத்தவிர வேறு கண்ணியமான விவாதத்தையோ, கருத்தையோ எதிர்பார்க்கமுடியாதுதான்.
நவீன ‘கலாச்சாரம்!’
அறிவு இருப்பவர்களிடையே அபிப்பிராய பேதம் ஏற்படுவது இயற்கை. அவர்களுக்கு அறிவு இருக்கிறது என்பதற்கே அதுதான் அடையாளம். ஆனால் அறிவோடு பண்பாடும் உடையவர்களானால் அபிப்பிராய பேதத்தைப் பரிமாறிக்கொள்ளுகிறபோது ஆத்திரத்துக்கு இடங்கொடுக்க மாட்டார்கள். அரசியல் விவாதங்களில் ஆத்திர உணர்ச்சி கலப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் ஆத்திர உணர்ச்சி கலப்பதற்குக் காரணமேயில்லை. ஆனால் இன்றைய தமிழ் நாட்டில்; அதுவும் தி.க.-தி.மு.க. வட்டாரத்தில்-பண்பாடு என்பது அபிப்பிராய பேதத்திற்குரிய விஷயமாகி விட்டது. ஆகவே, இலக்கியத்தைப் பற்றிய விவாதத்தில் கூட பண்பாட்டை எதிர்பார்க்க முடியவில்லை.
தி.க-தி.மு.க வட்டாரத்தினரின் வசை மொழிகளுக்காக நான் வருந்தவில்லை. ஏனென்றால், அது அவர்களுக்கு வழக்கமாகி விட்ட தொழில். எப்பொழுதும் யாரையும் ஏசிக் கொண்டிருப்பதையே அவர்கள் நவீன ‘கலாச்சாரம்’ ஆக்கிவிட்டார்கள். ஆகவே, அவர்களுடைய போக்கை, ஜனநாயகத்தின் விளைவாக நேர்ந்த விபத்து என்று எண்ணிப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
திரு ஈ.வே.ரா.வுக்கோ அவரைப்பின்பற்றும் தோழர்களுக்கோ ‘தெய்வம்’ என்பது தேவை இல்லாதபொருள்; ‘ஒழுக்கம்’ என்பது மூடநம்பிக்கையின் சின்னம்; பழக்க வழக்கம்-பண்பாடு என்பனவெல்லாம் பத்தாம் பசலிக் கொள்ககள்!
ஆனால் கம்பராமாயணமும் அதற்கு முன்னும் பின்னும் தோன்றிய தமிழ் இலக்கியங்களும் கடவுள் உண்மையை வற்புறுத்துகின்றன; ஒழுக்கத்தை உபதேசிக்கின்றன; பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் பின்பற்றத் தூண்டுகின்றன.
ஆகவே தி.க.-தி.மு.க. வட்டாரத்தினர் தங்களுடைய நம்பிக்கைகளுக்கும், நடத்தைகளுக்கும் எதிராக இருக்கும் தமிழ் இலக்கியங்களை எரிக்க விரும்புவதும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும் இயற்கைதான்.அதைக்கண்டு வியப்பதற்கு என்ன இருக்கிறது! ஒழுக்கம் என்னும் ஒளி புகாத இருட்டில் வாழ விரும்பும் எல்லொருமே தமிழ் இலக்கியங்களின் எதிரிகள்தான். ஆனால், ஈ.வெ.ரா.வுக்கும், அவரது தோழர்களுக்கும் நேரிடையாக கம்பன் மீது கல்லெறியத் துணிவில்லை.
முன்னொரு சமயம் அவர்கள் கம்பன் மீது கல்லெறிந்தார்கள். ஆனால், எறிந்த கல் திரும்பி வந்து அவர்கள் தலையையே தாக்கித் தழும்பு வைத்து விட்டது. அதனாற்றான், அவலை நினைத்து உரலை இடிப்பது போல, வால்மீகி ராமாயணத்தை எதிர்ப்பதின் மூலம் கம்ப ராமாயணத்தின் மதிப்பைக் குறைக்கும் தந்திரத்தைக் கையாளுகிறார்கள். ஆனால், கன்னித் தமிழ் உள்ளவரை கம்பனுடைய காப்பியத்தின் மதிப்பைக் குறைக்க எவராலும் முடியாது. ஆகவே, ஈ.வெ.ரா. கூட்டத்தாரின் இலக்கிய எதிர்ப்பைக் கண்டு நான் கலக்கமடையவில்லை. இலக்கியப்பூஞ் சோலையைப் போர்க்களம் ஆக்க நினைப்போர் எந்நாளும் தமிழ் மக்களின் மதிப்பைப் பெறமுடியாது. ஆகவே, தி.க,-தி.மு.க. வட்டாரத்தினரின் வசைமாரிகளுக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. ஆயினும், கம்ப ராமாயணத்தைப் பற்றி தமிழரசுக் கழகத்தாரின் கருத்தைக் பொதுமக்களுக்குத் தெளிவாக்க விரும்புகின்றேன்.
கழகத்தின் கண்ணோட்டம்
தமிழரசுக் கழகம், தமிழ் இனத்தின் அரசியல்- பொருளாதார நலன்களுக்காகப் பாடுபடுவதோடல்லாமல், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் கொள்கை உடையதாகும். அந்தக் கொள்கை வழிதான் கம்ப ராமாயணத்தையும் ஆரய்ந்து அதிலுள்ள சுவை மிக்க கருத்துக்களைச் சேகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விருந்து வைக்க கழகம் விரும்புகிறது.
தமிழரசு இயக்கத்தாருக்கு இலக்கியம் என்பது பொழுதுபோக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி: இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்க பயன்படும் உரைகல்; எதிர்காலத் தமிழகத்துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம். இந்தக் கண்ணோட்டத்துடன் தான் தமிழரசு இயக்கத்தார் கம்ப ராமாயணத்தைக் காணுகின்றனர்.
ம.பொ. சிவஞானம்./”இலக்கியத்தின் எதிரிகள்” – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்””
Comments are closed.