எஸ்.ராமகிருஷ்ணன்/விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம்…..

விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை ஒருசேர வாங்கி எனது புத்தகச் சேமிப்பில் வைத்திருக்கிறேன். அபூர்வமான கட்டுரைகளும் கதைகளும் கொண்ட தொகுப்பு.
அழகியசிங்கர் இலக்கியக்கூட்டங்களை நடத்துவதில் குறையாத ஆர்வம் கொண்டவர். நான்கைந்து பேர் மட்டுமே வந்தாலும் கூட சலித்துப் போய்விடமாட்டார். முழுஈடுபாட்டுடன் கூட்டத்தை நடத்துவார். ரயில்நிலையத்தில், பூங்காவில், கல்யாணமண்டபத்தில் என அவர் கூட்டம் நடத்த தேர்வு செய்யும் இடங்களும் வித்தியாசமானவை. வாசகர்கள் அதிகம் வருவதில்லை என்ற தனது ஏமாற்றத்தை அவர் ஒரு போதும் வருத்தமாக உணர்வதேயில்லை. அவருக்கென்றே அபூர்வமான சிரிப்பு இருக்கிறது. அது தான் மௌலியின் அடையாளம்.
இணையத்தில் நவீன விருட்சம் வெளியிடத்துவங்கிய பிறகு பல புதிய கவிஞர்கள் எழுத்தாளர்கள் எழுதத் துவங்கினார்கள். புதிய படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவருக்குத் தெரியாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை. மூத்த எழுத்தாளர்கள் பலருடனும் குடும்ப நண்பராகப் பழகி வருபவர்.
எது அவரை இப்படி இலக்கியத்திற்காக ஒடிக்கொண்டேயிருக்க வைக்கிறது என யோசிக்கும் போது வியப்பாகயிருக்கிறது . பெயரோ, புகழோ, பணமோ எதுவும் கிடையாது.
அவர் சந்தித்த எழுத்தாளர்களும் படித்த புத்தகங்களும் மட்டுமே இந்த உந்துதலுக்கான காரணம். வாசிப்பின் வழியே அவர் இலக்கியத்தின் மீது தீராத ஈடுபாடும் விடாப்பிடியான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்கிறார். இவரைப் போன்றவர்களைத் தான் உண்மையான இலக்கிய வாசகர் என்பேன். இப்படி ஒருவரை இன்றைய தலைமுறையில் காண்பது அரிது.
அழகியசிங்கரைப் பொறுத்தவரை இலக்கியத்தை நேசிப்பது என்பது வெறுமனே புத்தகம் வாசிப்பது, விரும்பியதை எழுதுவது மட்டுமில்லை. நல்ல இலக்கியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது, முக்கியப் படைப்பாளிகளுக்காகக் கூட்டம் நடத்துவது, சிற்றிதழ் வெளியிடுவது,, தேடித்தேடி இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வது என இடைவிடாமல் செயல்படுவதாகும். அந்த ஆர்வம் இன்றும் குறையாமல் தொடர்கிறது.
கவிஞர் நகுலன் அழகியசிங்கர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சென்னை வரும் நாட்களில் அவருக்குத் துணையாக அழகியசிங்கர் எப்போதுமிருப்பார். நகுலனின் கவிதைகள் விருட்சத்தில் தொடர்ந்து வெளியாகியுள்ளன. அசோகமித்ரனும் ஞானக்கூத்தனும் ஆனந்தும் விருட்சத்தில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள்.
விருட்சம் வெளியிட்டுள்ள சம்பத் கதைகள். க.நா.சு கவிதைகள். ஞானக்கூத்தன் கட்டுரைகள், யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி அறிமுகநூல் போன்றவை மிக முக்கியமான புத்தகங்கள். குறைந்த விலையில் விற்கபட்ட போதும் அதற்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. இன்றும் அவரிடம் பிரதிகள் உள்ளன.
அசோகமித்ரனின் எழுத்தில் காணப்படும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அழகியசிங்கரிடமும் உண்டு. அவரது கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கக்கூடியவன். எளிய அன்றாட விஷயங்களில் இருந்து முக்கியமான தத்துவக் கட்டுரைகள் வரை எதைப்பற்றி எழுதினாலும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். தன்னைக் கேலி செய்து கொள்ளும் குணம் கொண்ட எழுத்து எப்போதுமே அசலானது. அதற்குத் தைரியமும் வெளிப்படையான மனதும் வேண்டும்.

One Comment on “எஸ்.ராமகிருஷ்ணன்/விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம்…..”

Comments are closed.