கலாரசிகன் தினமணியில்..

அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன விருட்சம்’. அதில் நான் எழுதியதில்லை. ஆனால், அதில் வெளிவரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.

1988-ஆம் ஆண்டிலிருந்து “நவீன விருட்சம்’ இலக்கியச் சிற்றேட்டில் அழகியசிங்கர் எழுதிய சில கட்டுரைகளைத் தொகுத்து “நேர் பக்கம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார், ஒரு தேசிய வங்கியில் 36 ஆண்டுகளாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கும் அழகியசிங்கர். ஏற்கெனவே இவரது “அழகியசிங்கர் கவிதைகள்’, “வினோதமான பறவை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. சில கதைகள், 406 சதுர அடிகள், ராம் காலனி, ரோஜா நிறச் சட்டை என்று இவருடைய சிறுகதை,

குறுநாவல் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.

“நேர் பக்கம்’ தொகுப்பின் சிறப்பம்சம், பல்வேறு இலக்கிய ஆளுமைகள் குறித்த அழகியசிங்கரின் தனிப்பட்ட அனுபவங்களும் பதிவுகளும். எந்தவொரு மனிதரைக் குறித்தும் ஒவ்வொருவரின் பார்வையும் வெவ்வேறாகத்தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும், அந்த ஆளுமையைக் குறித்துச் சொல்ல, பதிவு செய்ய புதிதாக ஏதாவது செய்தி இருக்கும். அதனால், நான் மிகவும் ஆர்வத்துடன் இந்தப் புத்தகத்தைப் படித்ததில் வியப்பில்லை.

சி.சு.செல்லப்பா, க.நா.சு., நகுலன், அசோகமித்திரன், நீல பத்மநாபன், வைத்தீஸ்வரன், பிரமிள், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லா புரூஸ் இவர்களுடைய எழுத்தைத்தான் எனக்குத் தெரியுமே தவிர, அவர்களைத் தெரியாது. அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அவர்களுடனான அழகியசிங்கரின் அனுபவங்களும், பதிவுகளும் எனக்குப் புதிய பல செய்திகளை, அவர்கள் குறித்த முன்பு அறியாத பார்வையை அறிமுகப்படுத்தின.

தொடர்ந்து “நவீன விருட்சம்’ இதழையும், இப்போது “நேர் பக்கம்’ புத்தகத்தையும் படிப்பதனால், அழகியசிங்கர் குறித்த எனது கருத்தையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இவர் வங்கி வேலையில் தொடராமல், பத்திரிகை உலகில் நுழைந்திருந்தால் எட்டியிருக்கக்கூடிய உயரம் மிகமிக அதிகமாக இருக்கும். ஆழமான கருத்துகளும், இயல்பான எளிய நடையும் கவிஞர் அழகியசிங்கரை இனம் பிரித்துக் காட்டுகின்றன.

“நேர் பக்கம்’ புத்தகத்தை இன்னொரு முறை படிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.


நன்றி: தினமணி.

One Comment on “கலாரசிகன் தினமணியில்..”

Comments are closed.