திரு.வி.க/பெண்ணின்‌ முதன்மை

(பெண்ணும் பெண்மையும் – பெண்மை இன்ப நிலை – பெண், இன்பத்தின் பருமை – பெண், இன்பம் அழகுக் கடவுள் – கவிவாணரும் பெண்ணும் – பெண்பிறவி நோக்கம் – தாய்மையும் தொண்டும் – வாழ்க்கைப் பெண் – பெண்ணின் தியாகம் – பெண்மை ஆண்மைக்குணம் – ஆணில் பெண்மை – அகமே புறம் – அன்பர் அருளாளர் வீரர் பாவலர் முதலியோரின் தன்மை – பெண்மையின் இறைமை – நமது நாடும் பெண்மையும் – கலைமகள், திருமகள், பரை – பெண் தோற்றம் – பெண்ணின் முதன்மை மறந்த இடம் – நமது நாட்டுத் தொன்மை வழக்கு)

பெண்‌ கொடியாக நட ந்த துலகே – திருமூலர்‌

பெண்ணுலகு ஆணுலகு என்னும்‌ இரண்டனுள்‌ உயர்வு தாழ்வு கருதலாகாதென்பது மேலே சொல்லப்பட்டது. இரண்டுலகினுள்‌ உயர்வு தாழ்வு இல்லையேனும்‌, பெண்ணுலகிற்கு முதன்மை வழங்கவேண்டுமென்பது அறிவும்‌ அன்பும்‌ வாய்ந்தோர்‌ கருத்து. பெண்ணுலகிற்கு இயல்பாயமைந்துள்ள குணம்‌, தொண்டு, கடமை முதலியவற்றை நோக்குழிப்‌ பெண்ணுலகு முதன்மை பெற்று விளங்குவது நன்கு புலனாகும்‌. ஆணுலகின்‌ பேற்றிற்கும்‌, வளத்துக்கும்‌, நலத்துக்கும்‌, பிற ஆக்கத்துக்கும்‌ நிலைக்களனாயிருப்பது பெண்ணுலகென்பது எவரும்‌ அறிந்த தொன்று. இப்பெற்றியுடைய பெண்ணுலகிற்கு முதன்மை வழங்கினால்‌ நேரும்‌ இழுக்கென்னை?

பெண்‌ எது?

முதலாவது, பெண்ணின்‌ இயல்புகள்‌ மீது சிறிது கருத்துச்‌ செலுத்துவோம்‌. பெண்‌ எது? இதற்குப்‌ பலர்‌ பலவாறு விடை கூறுப. பெண்ணுறுப்புடையது பெண்‌ என்று சொல்வது சாதாரண உலக வழக்கு. பெண்ணுறுப்புடைய சிலரிடத்திலும்‌, சிலவற்றிலும்‌ பெண்மை இல்லாதிருத்தல்‌ கண்கூடு. ஆதலால்‌, உறுப்புக்குறி ஒன்றையே கருதிப்‌ பெண்‌ இஃது என்று கொள்ளல்‌ முறைமையாகாது. உறுப்போடு வேறு பல இயல்புகளையும்‌ கொண்ட ஓன்றே பெண்ணென்பது. அவ்வியல்புகளின்‌ திரட்சி பெண்மை எனப்படும்‌. இப்பெண்மையுடையது பெண்ணென்க.

பெண்மை என்னுஞ்‌ சொல்‌, கடை குறைந்து, பெண்ணென நின்று, பின்னைப்‌ பெண்ணெனும்‌ ஓர்‌ இனத்தைக்‌ குறிப்பதா யிற்று. பெண்‌ ஆகுபெயர்‌. இது, தமிழ்‌ இலக்கண வழக்கு. ஈண்டுப்‌ பெண்ணை எவள்‌ என்னாது, எது என்றது முதற்பொருளை ஒட்டி என்க.

பெண்மை

பெண்மையாவது யாது? அடக்கம்‌, பொறுமை, தியாகம்‌, பரநலம்‌, இரக்கம்‌, அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும்‌. மண்‌ நீர்‌ காற்று ஒளி முதலியன சேர்ந்து மரமாதல்போல, அடக்கம்‌ முதலிய குணங்கள்‌ சேர்ந்து பெண்மையாகின்றன. சிறுசிறு நீர்த்துளிகள்‌ கலந்து பரந்த நீர்‌ நிலை என்னும்‌ பெயர்‌ பெறுதல்போலவும்‌, சிறுசிறு பரல்கள்‌ கலந்து மலை என்னும்‌ பெயர்‌ பெறுதல்‌ போலவும்‌, அடக்கம்‌ முதலிய குணங்கள்‌ ஒன்றி, அவை பெண்மை என்னும்‌ பெயா்‌ பெற்றன. பெண்மை என்பதைக்‌ கூறிட்டுப்‌ பார்ப்பின்‌, அஃது அடக்கம்‌ முதலிய நீர்மைகளாகப்‌ பிரிந்து நிற்கும்‌. ஆகவே, அடக்கம்‌ முதலிய இயல்புகளின்‌ திரட்சி பெண்மையாகிற தென்க.

இன்ப துன்ப நிகழ்ச்சி

உலகில்‌ இன்பம்‌ துன்பம்‌ என்னும்‌ இரண்டும்‌ உண்டு. இன்பம்‌ எப்பொழுது விளைகிறது? துன்பம்‌ எப்பொழுது நிகழ்‌கிறது? அடக்கம்‌, பொறுமை, தியாகம்‌, இரக்கம்‌ முதலியவாற்றான்‌ இன்ப மெழுதலும்‌, அடங்காமை, பொறாமை, தன்னலம்‌, அவா, வன்கண்‌ முதலியவற்றான்‌ துன்பமுறுதலும்‌ இயற்கை. மாயை- அவித்தை – முதலியவாற்றைக்‌ கடந்து விளங்குவது இன்பம்‌ என்றும்‌, அம்‌ மாயையாதியன பொறாமை வெகுளி அவா முதலிய பேய்க்குணங்களாகி, உயிர்களைப்‌ பீடித்து, இன்ப ஊளற்றைத்‌ தகைந்து நிற்கின்றன என்றும்‌ ஞான நூல்கள்‌ நவில்‌ கின்றன. பேய்க்‌ குணங்களல்லாத அடக்கம்‌ பொறுமை முதலிய தெய்வ குணங்களால்‌ விளைவது இன்பமென்பது அன்றாட அநுபவத்தில்‌ அறியக்‌ கிடப்பது.

பெண்மை இன்ப நிலை

அடக்கம்‌ முதலியவற்றின்‌ திரட்சி பெண்மையாய்ப்‌ பொலிவதையும்‌, அடக்கம்‌ முதலியவற்றான்‌ இன்பம்‌ விளைவதையும்‌ கூர்ந்து நோக்கின்‌, பெண்மை இன்பமாக விளங்காமற் போகாது. ஆதலின்‌ பெண்மையை இன்பநிலை யெனக்‌ கோடல்‌ எவ்வாற்றானும்‌ பொருந்தும்‌. மின்னல்‌ யாண்டும்‌ இயங்கினும்‌, அது யாண்டும்‌ தானே விளங்கித்‌ தோன்றுவதில்லை. அது விளங்கித்‌ தோன்றுமாறு அதனைத் தொழிற்படுத்து மிடத்தில்‌ மட்டும்‌ அஃது ஒளிரும்‌ அதேபோல, இன்பம்‌ யாண்டும்‌ பரந்து நிற்பினும்‌, அது பெண்மையில்‌ விளங்கி, நிகழ்ச்சியில்‌ தன்னை உணர்த்துவதாகும்‌.

பெண்‌ இன்பத்தின்‌ பருமை

இனிப்‌ பெண்மையாவது யாது? பெண்மையை இன்ப நிலை என்று சொல்லலா-மன்றோ? அடக்கம்‌, பொறுமை, தியாகம்‌ முதலியன பெண்மையின்‌ உறுப்புக்கள்‌. இவ்வுறுப்புக்கள்‌ சேர்ந்த இன்பம்‌ பெண்மையின்‌ உடல்‌. இன்ப உடல்‌ நுண்ணிய-தாகலின்‌ (Abstract) அதற்கு என்பு தோல்‌ போர்த்த ஒரு வடிவம்‌ – பருவுடல்‌ – இறைவனால்‌ அமைக்கப்பட்டி ருக்கிறது. அவ்வடிவம்‌, “பெண்‌” “பெண்‌: என்னும்‌ பெயரால்‌ உலகில்‌ வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது பெண்‌ எது? இன்பத்தின்‌ பருமை பெண்‌ என்க.

பெண்‌ தெய்வம்‌

இன்பமோ நுண்ணியது; காணக்கூடாதது. காணக்கூடாத இன்பம்‌ பெண்ணாகி நமக்குக்‌ காட்சி அளிக்கிறது. பெண்மை என்னும்‌ இன்பத்‌ தெய்வத்தை ஏந்தி நிற்கும்‌ பெண்ணை, வெறும்‌ பெண்ணெனக்‌ கொள்ளாது, பெண்‌ தெய்வமென்றும்‌ போற்றலாம்‌. இத்தகைய பெண்மையுடைய பெண்ணை முதன்மையுடை யாள்‌ எனில்‌, என்ன முழுகிப்‌ போகும்‌?

இன்பமும்‌ அழகும்‌

பெண்மை இன்பமாயின்‌, பெண்மை அழகுமாகும்‌. இன்பமுள்ள இடத்தில்‌ அழகுமுண்டு. அழகுள்ள இடத்தில்‌ இன்பமுண்டு. அழகு புலனாகுமிடத்தில்‌ இன்ப நுகர்ச்சியு மிருத்தல்‌ அநுபவம்‌. அதலால்‌, பெண்மை அழகுமாதல்‌ உன்னத்தக்கது.

பெண்ணும்‌ அழகும்‌

அழகு நுட்பம்‌ உணர்ந்த மக்களுள்‌, பண்டைத்‌ தமிழ்‌ மக்கள்‌ தலைசிறந்து விளங்கினவர்கள்‌. அவர்கள்‌ பெண்ணை அழகென்றே கொண்டார்கள்‌. பெண்‌ என்னுந்‌ தமிழ்ச்சொற்கு அழகு என்பது பொருள்‌. பெண்ணை உணர்த்தும்‌ மாதர்‌ முதலிய சொற்கட்கும்‌ அழகுப்‌ பொருளிருத்தல்‌ காண்க. பெண்‌, மாதர்‌ இவைகள்‌ அகுபெயர்கள்‌. பல இடங்களில்‌ ஒரோவழி விளங்கும்‌ அழகெல்லாந்‌ திரண்டு, பெண்ணாகி நிற்றலால்‌, அழகுப்‌ பொருள்‌ அளிக்கும்‌ பெண்‌ என்னுஞ்‌ சொல்‌ பெண்ணுலகிற்குச்‌ சூட்டப்பட்டது. நீலவானத்தில்‌ திங்கள்‌ போலவும்‌, மலையில்‌ பொழில்‌ போலவும்‌, பசுங்கொடியில்‌ மலர்‌ போலவும்‌, மலரில்‌ நிறம்‌ போலவும்‌, பறவைகளில்‌ மயில்‌ போலவும்‌, விலங்குகளில்‌ மான்போலவும்‌ பெண்‌ என்னும்‌ அழகு இவ்வழகிய உலகை அழகு செய்கிறது. பெண்‌ இல்லையேல்‌ உலகில்‌ அழகு ஏது?

அழகுக்‌ கடவுள்‌

அழகு எது? இதுபற்றி, “முருகன்‌ அல்லது அழகு” என்னும்‌ நூலில்‌ விரித்துக்‌ கூறியுள்ளேன்‌. அழகுக்‌ கடவுளைக்‌ கண்டு இன்புற எவரும்‌ வானத்தை நோக்க வேண்டுவதில்லை; மலைக்கு ஏகவேண்டுவதில்லை; காடுகளில்‌ புகவேண்டுவதில்லை; கடலை நாட வேண்டுவதில்லை; காவியங்களைப்‌ புரட்ட வேண்டுவ தில்லை. அழகுக்‌ கடவுள்‌ பெண்ணாகி யாண்டுங்‌ காட்சி அளிக்‌கிறது. அதைக்‌ கண்ணுள்ளோர்‌ காண்பாராக.

கவிவாணர்‌

பெண்ணழகிலுள்ள கடவுட்‌ டன்மையை உணர்ந்து அவ்வழகை எத்துணைக்‌ கவிவாணர்‌ எழுத்தால்‌ எழுதி எழுதி இன்பம்‌ நுகர்ந்தார்‌! அன்னார்‌ எழுதி எழுதி எழுத்துக்கு முடிவு கண்டாரன்றி, அவ்வழகுக்கு முடிவு கண்டாரில்லை. அழகுக்‌ கடவுளுக்கு முடிவு ஏது? அழிவு ஏது? பெண்ணின்‌ பாலுள்ள அழகுக்‌ கடவுளைக்‌ காணாது, அவளது என்புதோல்மீது கருத்துச்‌ செலுத்தி வெந்தொழியுங்‌ காமுகர்நிலை குறித்து இரங்குகிறேன்‌. எல்லாவற்றிலும்‌ முதன்மை பெற்றுள்ள அழகாகிய பெண்ணிற்கு முதன்மை வழங்கல்‌ தவறாகுமோ?

பெண்‌ பிறவி நோக்கம்‌ – தாய்மை

பெண்ணின்‌ வாழ்க்கையை ஊன்றி உன்னுவோமாயின்‌, பெண்‌ பிறவியின்‌ விழுமிய நோக்கம்‌ இனிது புலனாகும்‌. பெண்‌ பிறவி, காம வேட்கைக்கும்‌, அடுப்பூதல்‌ முதலிய வேலைகட்கும்‌ பயன்படுவது என்று கருதல்‌ அறியாமை. பெண்‌ எத்தகையினள்‌? இவ்வுலக ஆக்கமும்‌ அழிவும்‌ அவளிடத்‌ திருக்கின்றன! பெண்‌, தன்‌ வயிற்றிற்‌ பிறக்கும்‌ பிள்ளைகளைத்‌ தீய வழியில்‌ வளர்த்து உலகில்‌ விடின்‌, உலகநிலை என்னாகும்‌? உலகம்‌ அரக்க வாழ்வுக்‌ கன்றோ இரையாகும்‌? உலகில்‌ தெய்வ அன்பு வாழ்வு சுருங்கி அழிந்தேபடும்‌. பெண்ணினல்லாள்‌ தெய்வமாதலின்‌, அவள்‌ எப்‌பொழுதும்‌ அழிவு நினையாள்‌- அவள்‌ உள்ளத்துள்‌ எப்பொழுதும்‌ அக்கமே நிலவும்‌. தன்‌ வயிற்றிற்‌ பிறக்கும்‌ பிள்ளை, பெருங்கல்வி யாளனாய்‌ – வீரனாய்‌ – அன்பனாய்‌ – நல்லவனாய்‌ – தொண்டனாய்‌ – உலகில்‌ வாழ்தல்‌ வேண்டும்‌ என்னும்‌ எண்ணத்தையே தாய்‌ கொள்வது வழக்கம்‌. பிள்ளை கெட்டொழிய வேண்டுமென்று தாய்‌ ஒரு போதும்‌ நினையாள்‌. தாய்‌ வயிற்றிற்‌ பிறந்து, அவளால்‌ வளர்க்கப்‌ பெறும்‌ பிள்ளைகளல்லவோ பின்னைய உலகம்‌? உலகாக்குந்‌ தாய்மையுடைய பெண்ணின்‌ பெருமையை என்னென்று கூறுவது? பெண்‌ பிறவியின்‌ விழுப்பத்தைக்‌ கூர்ந்து நோக்குங்கள்‌. பெண்ணின்‌ பெருமையை உணர்ந்தன்றோ திரு வள்ளுவனார்‌, பெண்ணிற்‌ பெருந்தக்க யாவுள” என்று உலகிற்கு அறிவுறுத்தினார்‌.

தொண்டின்‌ கூறுபாடு

உலக ஆக்கத்துக்குரிய தாய்மை பெண்ணின்பால்‌ உண்டெனில்‌, அவளது தொண்டின்‌ சிறப்பை என்னென்று கூறுவேன்‌? உலக நலத்துக்குரிய தொண்டை (service)ப்‌ பெண்‌ தெய்வம்‌ ஏந்தி நிற்கிறது. தொண்டு எது? பயன்‌ கருதிச்‌ செய்யப்‌படும்‌ வேலை தொண்டாகாது. பயன்‌ கருதாது செய்யப்படும்‌ பணியே தொண்டாகும்‌. பிள்ளைகளை நல்வழியில்‌ வளர்க்குந்‌ தொண்டினுஞ்‌ சிறந்தது வேறொன்றுண்டோ? பிள்ளைகளுக்குத்‌ தொண்டு செய்யும்போது தாய்‌ ஏதாவது பயன்‌ கருதுகிறாளா? இல்லையே! உலகநலன்‌ ஒன்றே கருதித்‌ தாய்‌ தொண்டு செய்‌கிறாள்‌. பயன்‌ கருதாத்‌ தொண்டன்றோ கடவுள்‌ தொண்டு! அத்தொண்ட ருளத்தன்றோ கடவுள்‌ வீற்றிருப்பர்‌! தாயுள்ளத்‌ திலில்லாத கடவுள்‌ வேறெங்கே இருக்கப்‌ போகிறார்‌? இது பற்றியே, ஈன்றாளின்‌ என்ன கடவுளுமில்‌’ என்றது நான்‌மணிக்‌ கடிகை. பெண்‌, தாயாய்ப்‌ புரியுந்தொண்டு பெரிதுங்‌ கருதற்‌ பாலது. பெண்‌ பிறவியின்‌ விழுமிய நோக்கம்‌ தாயாகித்‌ தொண்டு புரிதல்‌ என்று சொல்லல்‌ மிகையாகாது. எனவே, பெண்மை என்னும்‌ நினைவு தோன்றும்‌ போது, தாய்மை – தொண்டு – என்னும்‌ இரண்டும்‌ பக்கத்தில்‌ தோற்றமுறல்‌ வேண்டும்‌. தாய்மையும்‌ தொண்டும்‌ வாய்ந்த பெண்ணல்லளோ முதன்மையுடையாள்‌?

தாய்மைத்‌ தொண்டு

தாய்மைத்‌ தொண்டு என்பது எளியதன்று. தாய்மைத்‌ தொண்டு என்று எளிதில்‌ பேசலாம்‌; எழுதலாம்‌. நடைமுறையில்‌ அத்தொண்டாற்றுவோர்க்கே அதின்‌ அருமை தெரியும்‌. அரிய தொண்டு பெண்ணிற்கு வாழ்வாயிருக்கிறது. தொண்டிற் கென்றே பெண்‌ பிறந்தாள்‌, வளர்ந்தாள்‌, படித்தாள்‌; மணங் கொண்டாள்‌, வாழ்கிறாள்‌ என்றுங்‌ கூறலாம்‌. தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப்‌ பணி. பயன்கருதாத்‌ தொண்டு தெய்விகம்‌ நிரம்பியது. “என்‌ கடன்‌ பணிசெய்து கிடப்பதே” என்னுந்‌ திருவாக்கை ஓர்க. இப்பெயரான்‌ யான்‌ ஒரு நூல்‌ எழுதியிருக்கிறேன்‌. விரிவு அதிற்‌ காண்க.

வாழ்க்கைப்‌ பெண்‌

வாழ்க்கையில்‌ தலைப்பட்டுள்ள ஒரு பெண்ணின்‌ வாழ்வை நோக்கின்‌, அவளது தொண்டின்‌ சிறப்பு இனிது புலப்படும்‌. அப்‌பெண்‌ எத்துணை எத்துணைச்‌ தொண்டாற்றுகிறாள்‌! மாமன்‌ முதலியோர்க்‌ கேற்ற தொண்டு – கணவனுக்குரிய தொண்டு – பிள்ளைகளுக்குகந்த தொண்டு- மற்றவரா்கட்குத்‌ தக்க தொண்டு – எத்தனை எத்தனை வகைத்‌ தொண்டு! வன்கண்ணர்‌ சேர்ந்த குடும்பமாயின்‌, அக்‌ குடும்ப நெருப்பிடை நின்று, துன்பம்‌ பொறுத்து, மகிழ்ச்சியோடு பெண்‌ பணியாற்றுகிறாள்‌. வருவா யில்லாக்‌ குடும்பமாயின்‌, பொருளீட்டுந்‌ துறையிலும்‌ உழைத்து மற்றக்‌ கடன்களைப்‌ பெண்‌ உஞற்றுகிறாள்‌. பொது வினைகளில்‌ தலைப்பட நேரின்‌, அவ்வினைகளையும்‌ பெண்‌ மகள்‌ நிகழ்த்து கிறாள்‌. பெண்மகள்‌ துன்பம்‌ பொறுத்து, மகிழ்ச்சியோடு பணி செய்வதுபோல்‌, அண்மகன்‌ செய்யமாட்டான்‌.

பெண்ணின்‌ தியாகம்‌

பெறுமைப்‌ பொருளாகிய பெண்ணைக்‌ கிறிஸ்து என்றும்‌, காந்தி என்றும்‌ யான்‌ போற்றுகிறேன்‌. துன்பப்‌ பொறையில்‌ விளைவது இன்பம்‌ என்று அஸ்கார்‌ ஓயில்ட்‌ என்னும்‌ அறிஞர்‌ கூறிப்போந்தார்‌. இவ்வின்பநிலை பெற்ற வரல்லரோ என்பையும்‌ அன்பால்‌ பிறர்க்கு அளிப்பவராவர்‌? இந்நிலை பெண்‌ மக்களிடம்‌ இயல்பாய்‌ அமைந்துள்ளது. பெண்‌ எப்பொழுதும்‌ தனக்கென ஒன்றும்‌ கொள்வதில்லை. பிள்ளைகளை வஞ்சிக்கும்‌ தாய்‌, உலகிலிருப்பளோ? தன்னுயிர்க்கென ஓன்றிருப்பினும்‌ அதைப்‌ பிள்ளைகட்குக்‌ கொடுக்கத்‌ தாய்‌ சிறிதும்‌ பின்னடை யாள்‌. பிள்ளைகட்காகத்‌ தாய்‌ செய்யும்‌ தியாகத்தை இத்தகைத்‌ தென்று எழுத்தால்‌ எழுதல்‌ முடியாது. சுருங்கக்‌ கூறின்‌, பெண்‌ தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவள்‌ என்று கூறலாம்‌. குடும்பக்‌ கொடுமைகளைப்‌ பொறுத்தல்‌, உள்ளதை மற்றவர்கட்‌ கந்து மகிழ்தல்‌, தனக்கென வாழாது பின்னுலகாக்கும்‌ உயிர்கட்கென வாழ்தல்‌, விருந்தோம்பல்‌, ஏழைகட்‌ குதவல்‌ முதலிய அருங்குணங்கள்‌ பெண்ணினிடத்துப்‌ பொலிதல்‌ வெள்ளிடைமலை.

குணம்‌

இப்‌ பெருங்குணங்கள்‌ பெண்ணின்‌ தொண்டாகப்‌ பரிணமிக்கின்றன. குணமிலாதக்‌ தொண்டு தொண்டாகுங்கொல்‌! தொண்டிற்கு வேண்டற்பாலது குணம்‌ குணமே. பெண்ணின்‌ பாலுள்ள தாய்மையில்‌ எக்குணம்‌ அடங்காது? உள்ள குணமெல்லாம்‌ அதன்கண்‌ அடங்கும்‌. எனவே, பெண்‌ குணமலை யாகிறாள்‌ – பெண்ணைச்‌ குணமலை எனப்‌ போற்றல்‌ எவ்வாற்‌ றானும்‌ பொருந்தும்‌. குணம்‌ முதன்மை பெறல்‌ இயல்பன்றோ?

குணமிலாப்‌ பெண்‌

பெண்‌ பிறவி தாங்கினோருள்‌ குணமில்லார்‌ இல்லையோ என்று சிலர்‌ வினவலாம்‌. உலகில்‌ எதற்கும்‌ புறனடை உண்டு. புறனடையைப்‌ பொதுமையில்‌ புகுத்திப்‌ பேசுவது உலக வழக்‌கன்று. ஈண்டுப்‌ பொதுஅறம்‌ பற்றியே பெண்ணுலகின்‌ இயல்பை யான்‌ மொழிந்து வருகிறேன்‌. பெண்‌ வடிவந்‌ தாங்கினோருள்ளும்‌, பொறுமை தியாகம்‌ முதலிய குணங்களில்லாப்‌ பேய்களிருக்கலாம்‌. இவர்கள்‌ வடிவத்தால்‌ பெண்மக்களே யன்றித்‌ தாய்மைக்‌குரிய பெண்மை வாய்க்கப்‌ பெற்ற பெண்‌ மக்களல்ல. இவர்கள்‌ புறனடைப்‌ பெண்‌ மக்கள்‌. புறனடை ஒவ்வொன்றிலும்‌ உண்டு.

ஒரு மாந்தோப்பை எடுத்துக்‌ கொள்வோம்‌. அத்தோப்பிலுள்ள மாமரங்களில்‌ இரண்டொன்று கனி கொடாமல்‌ இருக்கலாம்‌. அவ்விரண்டொன்றில்‌ மனஞ்செலுத்தி, “மாமரம்‌ கனியளிக்கும்‌ இயல்பின தன்று’ என்று பொதுப்படக்‌ கூறல்‌ அறமாகுமோ? பெண்ணுலகினும்‌ யாண்டாயினும்‌ ஒரு மூலையில்‌ பழுது நேரலாம்‌. அதுகொண்டு, “பழுது பெண்ணு லகின்‌ இயல்பு” என்று கூறல்‌ அறமாகுமோ? பொதுப்‌ படப்‌ பெண்ணு லகின்‌ இயல்பையே நாம்‌ நோக்கல்‌ வேண்டும்‌.

பெண்ணுமைக்குணம்‌; ஆண்மைக்குணம்‌

குணங்களை இரண்டு கூறாகப்‌ பிரிக்கலாம்‌. ஓன்று பெண்மைக்‌ குணத்தொகுதி; மற்றொன்று ஆண்மைக்‌ குணத்‌ தொகுதி. பெண்மைக்‌ குணங்களாவன: அழகு, அடக்கம்‌, பொறுமை, தியாகம்‌, பரநலம்‌, இரக்கம்‌, வீரம்‌ முதலியன. அண்மைக்‌ குணங்களாவன: கரடு, முரடு, அவா, பொறாமை, தன்னலம்‌, சீற்றம்‌ முதலியன. ஆண்மகன்‌, கரடும்‌ முரடும்‌ சுருளும்‌ திரிவும்‌ பிளவும்‌ நிரம்பிய பட்டைகள்‌ போர்த்த வலிய மரம்‌ போன்றவன்‌. பெண்மகள்‌, அக்கரடு முரடு முதலிய கொடுமை களை ஒடுக்க, அம்மரத்தைச்‌ சுற்றி, மனத்துக்கினிய பசுமை வழங்கும்‌ மெல்லிய பூங்கொடி போன்றவள்‌. இக்‌ குணமிலாப்‌ பெண்‌ பெண்ணாகாள்‌. இக்குணமுள்ள அண்மகனும்‌ பெண்மை பெற்றவனாவன்‌.

ஆணில்‌ பெண்மை

ஆண்‌ வடிவில்‌ பெண்மைக்‌ குணம்‌ பெற்ற மக்களே இது காறும்‌ உலகில்‌ அன்பர்களென்றும்‌, அடியார்களென்றும்‌, அறிஞர்களென்றும்‌, வீரர்களென்றும்‌, பாவலர்களென்றும்‌ போற்றப்பட்டு வருகிறார்கள்‌. ‘ஆண்வடிவில்‌ பெண்மைக்‌ குணம்‌” என்பது கொண்டு அக்குணமுடைய ஓருவனை அலி என்று எவருங்‌ கருதலாகாது. அலிகள்‌ ஆண்‌ பெண்‌ என்னும்‌ இரு பாலாரிலுமுண்டு. அவர்களைப்‌ பற்றிய பேச்சே ஈண்டு வேண்டா. அவர்கள்‌ சபிக்கப்பட்டவர்கள்‌. அக்கூட்டம்‌ வேறு; ஈண்டு யான்‌ குறிப்பிடும்‌ ஆண்‌ வடிவில்‌ பெண்மைக்‌ குணம்‌ படைத்த கூட்டம்‌ வேறு. ஆண்‌ பிறவி தாங்கினோர்‌ நல்வழியில்‌ முயன்று பெண்மைக்குணம்‌ பெற விரைவாராக.

“அகமே புறம்‌” என்றபடி குணத்துக்கேற்ற முகம்‌ மலரும்‌. அன்பர்‌, அருளாளர்‌, வீரர்‌, பாவலர் முதலியோர்‌ முகங்களில்‌ பெண்மை ஓழுகல்‌ காணலாம்‌. பண்டைக்கால அன்பர்‌, அருளாளர்‌ முதலியோர்‌ படங்கள்‌ நமக்குக்‌ கிடைக்கவில்லை. கிடைக்குமேல்‌ அவர்தம்‌ முகத்தில்‌ பெண்மையைப்‌ பார்க்கலாம்‌. அருகர்‌, புத்தகர்‌, கிறிஸ்து, திருவள்ளுவர்‌, அப்பர்‌, நம்மாழ்வார்‌ முதலியோர்‌ முகங்களில்‌ பெண்மையே பொலிந்திருத்தல்‌ வேண்டும்‌. பாட்டிற்‌ சிறந்த ஷெல்லி, வீரத்திற்‌ சிறந்த நெப்‌போலியன்‌, பொறுமையிற்‌ சிறந்த காந்தியடிகள்‌ – இவர்கள்‌ திருவுருவப்‌ படங்களை உற்று நோக்குவோம்‌. இவர்கள்‌ முகத்தில்‌ மனத்தைக்‌ கவரும்‌ பெண்மை என்ன அழகாகப்‌ பொழிகிறது! பெண்மைக்குணம்‌ ஊறும்‌ அகம்‌, பெண்மை முகமாக மலர்தல்‌ இயல்பு.

பெண்மையின்‌ இறைமை

பெண்‌ நீர்மைகளே இறைமை நீர்மைகள்‌ என்பன; ஏனைய அரக்க நீர்மைகள்‌. அரக்கத்‌ தன்மையை ஓழிக்கப்‌ பெண்‌ தன்மை தேவையே. பெண்ணியல்பு பெறாது கடவுள்நிலை பெறல்‌ இயலாது என்று சுருங்கச்‌ சொல்லிவிடலாம்‌. ஞானநிலையில்‌ எவரும்‌ பெண்மையாகும்‌ ஒருநிலையுண்டு; அதாவது அழுக்காறு – அவா – வெகுளி – முதலியன கழிந்து, பொறுமை – அருள்‌ – முதலியன படியும்‌ ஒருநிலை என்க. “ஒளியாம்‌ பரமும்‌ உளதாம்‌ பரமும்‌- அளியார்‌ சிவகாமியாகுஞ்‌ சமயம்‌ ‘ என்றார்‌ திருமூலனார்‌. “மெய்யருனாந்‌ தாயுடன்‌ சென்று பின்‌ தாதையைக்‌ கூடி ‘ என்றார்‌ பட்டினத்தடிகள்‌. கடவுள்நிலை அடைதற்கும்‌ பெண்ணியல்பு இன்றியமையாததா யிருக்கிறது.

நமது நாடும்‌ பெண்மையும்‌

பெண்மையின்‌ சிறப்பை உன்னியே நம்‌ முன்னோர்‌ வாழ்‌விற்கு இன்றியமையாத கல்வி, திரு, ஞானம்‌ முதலியவற்றையும்‌ பெண்ணெனக்‌ கொண்டனர்‌ போலும்‌. கல்வியைக்‌ கலைமகள்‌ என்றும்‌, திருவைத்‌ திருமகள்‌ என்றும்‌, ஞானத்தைப்‌ பரை என்றும்‌ நம்‌ நாட்டார்‌ கொண்டது அராயத்தக்கது. நாட்டைப்‌ பலவழியிலும்‌ ஓம்பும்‌ காட்டை, காட்டுக்கன்னி- வனதேவதை என்று வாழ்த்துவதும்‌, பல்லுயிர்களைத்‌ தாங்கும்‌ நாட்டைத்‌ தாய்‌ (வந்தேமாதரம்‌) என்று வழுத்துவதும்‌ உன்னற்பாலன. எல்லாவற்றிற்கும்‌ மேலாக விளங்கும்‌ கடவுளையும்‌ நம்மவர்‌ பெண்ணாகவே பெரிதும்‌ போற்றுகின்றனர்‌. இந்திய நாட்டில்‌ கடவுளைப்‌ பெண்ணாகப்‌ போற்றுவோர்‌ தொகையே பெருகி நிற்கிறது. முழுமுதற்‌ பொருள்‌ பெண்‌ ஆண்‌ வடிவாயிருப்பினும்‌, அதனிடத்து அருளுக்குரிய பெண்‌ தன்மையே சிறந்து விளங்கு தலை, அருள்நிலை எய்திய பெரியோர்‌ நமக்கு அறிவுறுத்திப்‌ போந்தனர்‌. “மூவே முலகுக்குந்‌ தாயே” என்றும்‌, “அம்மையெனக்‌ கருளியாவா றார்பெறுவார்‌ அச்சோவே ” என்றும்‌ மாணிக்க வாசகனார்‌ அருளியிருத்தல்‌ காண்க. உலகில்‌ உயரிய அன்புப்‌ பொருளெல்லாம்‌ பெண்ணாகவே பேசப்படல்‌ எவரும்‌ அறிந்த தொன்று. இத்துணைச்‌ சிறப்பு வாய்ந்த பெண்மையின்‌ பருமை யாம்‌ பெண்ணின்‌ முதன்மையை விளக்கலு வேண்டுமோ?

பெண்‌ தோற்றம்‌

பெண்ணின்‌ முதன்மையை நிறுவப்‌ பலப்பல காரணங்‌களுண்டு. அவற்றை ஈண்டு விரிக்கில்‌ அவை பெருகும்‌. எதையும்‌ ஆய்ந்து உண்மை கண்ட பின்னரே, அவ்வுண்மையை உலகிற்கு அறிவுறுத்தும்‌ மேல்‌ நாட்டுப்‌ பூதபெளதிக ஞானிகளிற்‌ பலர்‌, பெண்‌ தோற்றத்தையே முதலாவதாகக்‌ கருதுகின்றனர்‌. இழிந்த பிராணிகளிற்‌ சில சின்னாள்‌ பெண்ணாகவும்‌, சின்னாள்‌ ஆணாகவும்‌ மாறுதல்‌ உண்டு. பையாலஜி என்னும்‌ இயற்கை நூலைப்‌ பார்க்க. உலகில்‌ – தொன்மையில்‌- பெண்‌ ஆண்‌ வேற்றுமை அரும்புதற்கு முன்னர்‌, முதன்‌ முதல்‌ இயற்கையில்‌ பெண்ணுறுப்பே அரும்பியிருத்தல்‌ வேண்டுமென்பது இயற்கை ஞானிகளின்‌ அராய்ச்சியிற்‌ போந்த உண்மை. இவ்வுண்மைக்கு நமது நாட்டவருட்‌ சிலர்‌ கண்ட உண்மை அரண்‌ செய்கிறது.

தமிழ்‌ நாட்டிற்‌ பிறந்த மணிகளுள்‌ திருமூலர்‌ என்னுங்‌ குருமணி, பெண்ணின்‌ முதன்மையைப்‌ பல இடங்களில்‌ விரித்துக்‌ கூறியிருத்தல்‌ எனது உள்ளத்தைக்‌ கவர்கிறது. அவர்‌ அருளிய மொழிகளுள்‌ சில வருமாறு:

பெண்ணொரு பெண்ணைப்‌ புணர்ந்திடும்‌ பேதைமை
பெண்ணிடை ஆணும்‌ பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆணென்‌ பிறப்பரிந்‌ தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப்‌ பேச்சற்ற வாற.

காணும்‌ பலபல தெய்வங்கள்‌ வெவ்வேறு
பூணும்‌ பலபல பொன்போலத்‌ தோற்றிடும்‌
பேணுஞ்‌ சிவனும்‌ பிரமனும்‌ மாயனும்‌
காணுந்‌ தலைவிநற்‌ காரணி காணே.

பைங்கொடி யாளும்‌ பரம னிருந்திடத்‌
திண்கொடி யாகத்‌ திகழ்தரு சோதியாம்‌
விண்கொடி யாகி விளங்கி வருதலால்‌.
பெண்கொடி யாக நடந்த துலக.

இயற்கையில்‌ முதல்‌ முதல்‌ அரும்பியது பெண்ணுறுப்‌ பென்பது பூதபெளதிக ஞானிகளின்‌ கொள்கை. அவ்வியற்‌கைக்குக்‌ காரணமாக உள்ளது சக்தி என்ற உண்மை கண்டு நம்‌ நாட்டவர்‌ சத்திக்கு முதன்மை கூறுகிறார்‌. முன்னையது சடத்தைப்‌ பற்றிய ஆராய்ச்சியினின்றும்‌ எழுந்த உண்மை. பின்னையது சித்தைப்‌ பற்றிய ஆராய்ச்சியினின்றும்‌ பிறந்த உண்மை. சித்‌ எவ்வழி, அவ்வழிச்‌ சடமுமியங்குமாகவின்‌, அவ்வுண்மைக்கு இவ்வுண்மை துணை போதல்‌ காண்க. இயற்கையிலும்‌ இறைமையிலும்‌ முதன்மை பெற்றுள்ள பெண்ணிற்கு முதன்மை எவரும்‌ வழங்க வேண்டுவதில்லை. அம்முதன்மை, இயல்பாகவே அமைந்து கிடக்கிறது. அனால்‌ அம்முதன்மை, உலகில்‌ பொதுவாகச்‌ சில விடங்களிலும்‌, சிறப்பாக நமது நாட்டிலும்‌ மறக்கப்பட்டி ருக்கிறது.

பெண்ணின்‌ முதன்மை மறந்தவிடம்‌

பெண்ணின்‌ முதன்மை மறந்த இடங்களில்‌ கல்வி, திரு, பொலிவு, அன்பு, உரிமை, வாய்மை, தொண்டு, தெய்வ மணம்‌ முதலியன அருகி நிற்கும்‌. இயற்கை அவ்விடங்களைப்‌ பற்பல வழிகளில்‌ ஒறுத்தேதீரும்‌. பெண்ணின்‌ முதன்மை மறக்கப்பட்ட இடம்‌, நரகக்குழமியை யொத்தது என்று சுருங்கக்‌ கூறுவேன்‌. அழகு, அடக்கம்‌, இரக்கம்‌, இன்பம்‌, முதலியன முதன்மை பெறாத இடம்‌, நரகமாகாது பின்னை என்னவாகும்‌? மனத்தைக்‌ கவரும்‌ அழகரும்‌்.பி, நல்வாழ்விற்கு அடிகோலும்‌ அடக்கம்‌ மலர்ந்து, பொறுமை தியாகம்‌ தன்னல மறுப்பு இரக்கம்‌ முதலிய செவ்விய நீர்மைகட்கு அடிப்படையாயுள்ள அன்பு காய்த்து, பின்னுலகாக்கும்‌ தாய்மைத்‌ தொண்டு கனிந்து, இன்ப வாழ்‌ வெனும்‌ தேன்‌ பிலிற்றும்‌ பெண்‌ கொடியின்‌ முதன்மையையா மறப்பது? மறுப்பது?

நமது நாட்டுத்‌ தொன்மை வழக்கு

நம்‌ முன்னோர்‌ கடவுளின்‌ பெண்‌ கூற்றை முன்னர்க்‌ குறித்தே, பின்னர்‌ ஆண்‌ கூற்றுக்‌ குறிப்பது வழக்கம்‌. பார்வதி பாகன்‌, இலட்சுமி நாராயணன்‌, வள்ளி மணாளன்‌ முதலிய வழக்குகளை உன்னுக. உலகம்‌ ஒருபாதி பெண்ணும்‌ மற்றொரு பாதி ஆணுமாக ஆக்கப்பட்டிருப்பினும்‌, பெண்ணுலகின்‌ பெருமையை உணர்ந்து, தொன்மை யுலகம்‌ பெண்ணுக்கே முதன்மை வழங்கிற்று. பெண்ணையே தேவி என்று நம்மவர்‌ அமைக்கின்றனர்‌. ஆணைக்‌ தேவன்‌ என்று சொல்லும்‌ வழக்கம்‌ பெரிதும்‌ நாட்டில்‌ இல்லை. இவ்வாறு பெண்ணிற்கு முதன்மை வழங்கிய நாடு, இதுபோழ்து அம்‌ முதன்மை மறுக்கும்‌ நிலை எய்தியிருக்கிறது! கொடுமை! கொடுமை! தாய்மையுடைய பெண்ணிற்கு முதன்மை வழங்க மறுப்பது அநாகரிகம்‌. “ஈன்றாளுமாய்‌ எனக்கு எந்தையுமாய்‌” என்றும்‌, “அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌” என்றும்‌, “சத்தியாய்ச்‌ சிவமாகி” என்றும்‌ பெரியோர்‌ பெண்ணுக்கு முதன்மை வழங்கியிருத்தல்‌ காண்க. பெண்‌ வயிற்றிற்‌ பிறந்த நாம்‌ பெண்ணை முதலாகக்‌ கொள்வோமாக.

யான்‌ பெண்ணின்‌ வயிற்றில்‌ தோன்றினேன்‌; பெண்ணுடன்‌ பிறந்தேன்‌; பெண்ணுடன்‌ வாழ்ந்தேன்‌. என்‌ வாழ்விற்கு நாடோறுந்‌ துணைபுரியும்‌ இயற்கை, பெண்ணாகவே காட்சி யளிக்கிறாள்‌. யான்‌ தொமும்‌ அன்புத்‌ தெய்வமும்‌, பெண்ணாகவே யிருக்கிறது. எனது உள்ளத்துள்ள பெண்மை, அருளைச்‌ சொரிகிறது. யான்‌ பேசும்‌ மொழி, எனக்குப்‌ பெண்ணின்பம்‌ நல்குகிறது. எல்லாம்‌ பெண்‌ மயமாக என்னைச்‌ சூழ்ந்து, என்னுட லுக்கும்‌ உயிருக்கும்‌ நலஞ்‌ செய்கின்றன. இத்தகைய பெண்‌ தெய்வத்தை முதன்மைப்‌ பொருளாகப்‌ போற்றுகிறேன்‌. பெண்ணே முதன்மையுடையாள்‌; அத்‌ தாயை வணங்குகிறேன்‌; வாழ்த்துகிறேன்‌. வந்தேமாதரம்‌.

”சர்வம்‌ சக்தி மயம்‌ ஜகத்‌ *