
- சிலம்பொலிக்கு எதிரொலி!
சென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், சிற்றூர்கள் தோறும் சிலப்பதிகார மாநாடுகள் தொடர்ந்து நடைபெறும். ஏனெனில், சென்னையில் மாநாடு கூட்டியவர்ககள் செந்தமிழின் பெயரால் சிந்துபாடி வயிறு வளர்ப்பவர்கள் அல்லர்.செந்தமிழின் வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும், தங்கள் வாழ்வையும் வளர்ச்சியையும் இழக்கத் துணிந்தவர்கள்.ஆகவே, துவக்கி வைத்த இந்த நற்பணியை இனியும் தொடர்ந்து நடத்த அவர்களிடம் திட்டம் உண்டு. அதை நிறைவேற்றும் திறமை படைத்த தீரர்களும் உண்டு. ஆம்; இனி செந்தமிழ் நாட்டில் சிலம்பு தொடர்ந்து ஒலிக்கும் என்பது மட்டுமல்ல; ஒளியும் வீசும் என்று கூறலாம். அந்த ஒளியிலே தமிழுக்காக-தமிழ் நாட்டுக்காக உண்மையாகப் பாடுபடுவோர் யார்;தமிழின் பெயரால் வருமானத்தைப் பெருக்கி வயிறு வளர்ப்போர் யார்? என்பதை மக்கள் நன்கு தெரிந்து கொள்வார்கள்.
சென்னையில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்கள் பெரும்பாலும் தேசீயவாதிகளாவர். ஆயினும், சிலப்பதிகார மாநாடு தேசீய விரோதிகளின் வட்டாரத்திலும் எதிரொலி செய்திருக்கிறது. இது எதிர்பார்த்ததுதான்!
‘சிலம்பு ஒலித்தது’ என்ற தலைப்பில், சிலப்பதிகார மாநாடு பற்றி நையாண்டி செய்யும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறது திராவிடநாடு. நேருக்கு நேர் வாதாடுவது வீரர்களின் வழக்கம். ஒளிந்தும் நெளிந்தும் குறும்புத்தனம் செய்வது கோமாளிகளின் வேலை. ஆனால், “முன்னேற்றம்” என்ற முத்திரை தாங்கிய கட்சித் தலைவரின் ஏடு, வீரர்களுக்குரிய முறையில் வெளிப்படையாக வாதாடாமல், கோமாளிகளுக்குரிய குறும்புத்தனத்தில் இறங்கியிருக்கிறது.
“சென்னை மாநாட்டில் சிலம்பு ஒலித்தது.
ஆனால்,அதன் ஒளியை மறைத்து விட்டார்கள்.“
என்று ஒலமிடுகிறது ‘திராவிடநாடு’. மாரிக் காலத்தில் இடியொலி கேட்கும்போது, அதனோடு சேர்ந்து வருகிற மின்னல் ஒளியையும் காணத்தான் செய்கிறோம். ஆனால், அந்த ஒளியைக் காண முடியாத குருடர்களுக்கு இடியோசை மட்டுந்தான் கேட்கும். மின்னலின் ஒளி தெரியாது. அது போன்று, கண்ணிருந்தும் குருட்டுப் போக்கில் செல்லும் ‘திராவிட நாடு’ வின் கட்டுரையாளருக்கு கண்ணகி பந்தலில் வீசிய பேரொளியைக் காண முடியாதுதான்!
டாக்டர் மு.வ., அறிஞர் சேதுப் பிள்ளை ஆகியோரின் பேச்சுக்களிலே, இங்குமங்குமாக இரண்டொரு வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு, தம்முடைய குறும்புத் தனத்திற்கேற்ப ஆராய்ச்சி செய்கிறார், ‘திராவிடநாடு’ கட்டுரையாளர்.
ஏனைய காவியங்களைப்போல் அல்லாமல், சிலப்பதிகாரத்தில், கற்பனை குறைந்த அளவில் இடம் பெற்றுள்ளது” என்றார் டாக்டர் மு.வ. இதை வைத்துக்கொண்டு, கண்ணகி கொங்கையைப் பிய்த்தெறிந்த காட்சியைக் கற்பனை எனக் கூறுவதோடு நையாண்டியும் செய்கிறார் கட்டுரையாளர்.
பிறந்திடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்.
என, காமவெறி படைத்த உள்ளத்தைக் கடிந்து கொண்டார் பட்டினத்தார். எங்கும் எதிலும் பிறந்திடத்தையும், கறந்திடத்தையும் காணுவதிலேயே களிப்படைந்த கூட்டத்தார் ‘கடந்த காலத்தில் மட்டுமல்ல’ இக்காலத்திலும் உண்டு என்பதைத் தம்மைக் கொண்டே மெய்ப்பிக்கிறார் கட்டுரையாளர்.
கண்ணகியின் ஆற்றலுக்கு அத்தாட்சியாக எத்தனை எத்தனையோ செய்திகள் உண்டு சிலப்பதிகாரத்தில். அதையெல்லாம் விட்டு விட்டு கறந்திடத்தையே நாடுகிறது கட்டுரையாளரின் கண். ‘அரசியல் பிழைத்தோரை அறக்கடவுள் கூற்றுவன் வடிவில் வந்து கொல்லும்’ என்ற சிலப்பதிகார வரிகளை எடுத்துக் காட்டி இன்றைய அரசினரை எச்சரித்தார் அறிஞர் சேதுப்பிள்ளை. இதை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார், கூற்றுவனிடம் நம்பிக்கையில்லாத கட்டுரையாளர். இந்தச் சான்றை சேதுப்பிள்ளை மட்டுமல்ல; இன்றைய ஆட்சியை ஆதரிக்கும் தேசியவாதிகளே ஆயிரமாயிரம் மேடைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். அரசினர் மீது பழி கூற அல்ல; அவர்களைப் பண்படுத்த! அரசு நெறிபிறழ்ந்த ஆங்கிலக் கொடுங்கோலைக் கூற்றுவன் வடிவில் வந்து கொன்றார்கள் தேசீயவாதிகள். ஆனால், அந்தக் கொடுங்கோலுக்குக் குற்றவேல் புரிந்தார்கள் திராவிடத்தார்கள். ஆகவே, சிலப்பதிகாரத்தில் வரும் அந்தப் பகுதியை இன்றைய அரசினருக்கு எதிராக எடுத்துக் காட்டத் திராவிடத்தார்களுக்கு உரிமை கிடையாது.
சிலப்பதிகார மாநாடு கூட்டிய தேசிய வாதிகளின் தமிழ்பற்றை நையாண்டி செய்கிறார் கட்டுரையாளர். “மொத்தத்தில் சிலம்பு ஒலித்தது; அதுவரை லாபந்தான். சிலம்பையாவது ஒலிக்க நினைத்தார்களே!” என்கிறார்.
ஏதோ இத்தனை நாளும் தாங்கள்தான் சிலம்பை ஒலிப்பித்துக் கொண்டிருந்தது போலவும், இப்போதுதான் தேசீயவாதிகள் சிலம்பைப்பற்றிச் சிந்தித்திருப்பது போலவும், நாட்டு மக்களை நம்ப வைக்கப் பார்க்கிறார் ‘திராவிட நாடு’ கட்டுரையாளர். பன்னிரண்டு பக்கங்களுள்ள ‘திராவிட நாடு’ இதழில், ஏழு பக்கங்களுக்குக் கட்டுரை எழுதியிருக்கிறார், காஞ்சீபுரத்தாரின் திருத்தொண்டர். அந்த ஏழு பக்கங்களில் கண்ணகியின் கற்பைப் பற்றிப் பாராட்டும் வகையில் ஒரு வரிகூட-ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் இவர்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு செய்யும் வகை போலும்!
சிலம்பின் சிறப்பை, கட்சிக் காழ்ப்பின்றி-சாதிப்பகையின்றி- காமவெறியின்றிச் சித்தரித்துக் காட்டினார்கள் மாநாட்டின் பேச்சாளர்கள்.அப்படிப் பட்டவர்களைப் ‘போலிகள்’ என்று கூறுகின்றார், போலித்தனமின்றி வேறொன்றறியாதவர். உண்மையிலேயே திராவிடத்தார்கள் சிலப்பதிகாரத்திற்குச் சிறப்புத்தேட விரும்பியிருந்தால், அதை எத்தனையோ வகைகளில் செய்திருக்க முடியும். எம்.ஏ. பட்டம் பெற்ற ‘திராவிடநாடு’ ஆசிரியர், கண்ணகியின் சிறப்பை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகத்திலும் பரப்பி இருக்கலாம். செய்ததுண்டா? கிடையாதே! ரோமாபுரி ராணிகளின் அங்க அழகை அந்தரங்க லீலைகளைக் காமத்தேன் நனி சொட்டச் சொட்ட எழுதுவதற்கு நேரமிருந்தது. அதை அச்சிட்டு மாணவர்களிடையே விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் மனமிருந்தது. ஆனல், சிலம்பால் புரட்சி விளைவித்த வீரக் கண்ணகியின் செய்தியை ஆங்கிலத்தில் எழுத ஆற்றலிருந்தும், அவகாசமில்லை!
வலது கொங்கையைத் திறந்த கோலத்தோடு, ஒரு மங்கையைப் படம் போட்டு புத்தகம் தயாரிப்பது- அதை மாணவர்களீடையே விற்றுப் பணம் சம்பாதிப்பது அறிவுத் தொண்டாம்! கொடுங்கோலன் மீது கொண்ட கோபத்தால் ஒரு கற்பரசி, இடது கொங்கையைப் பிய்த்தெறிந்தாள் என்று கூறுவது அறியாமையாம். தாயினத்தின் பெருமையை- தமிழினத்தின் சிறப்பை நையாண்டி செய்வதையே தொழிலாகச் கொண்ட இந்தக் கூட்டத்திற்கும் தமிழகத்தில் வாழமனை இருக்கிறது; வயிறு வளர்க்க வசதியுமிருக்கிறது! தமிழகமே, நீ சீர்படும் நாள் எந்நாளே?
அறிஞர் சேதுப்பிள்ளை, “ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப்படக் கூடாது” என்று தமது திறப்புரையில் கூறினார். நாவறட்சி கொண்டவன் கானலை நீர் என்று எண்ணிக் களிப்படைவது போல, சேதுப்பிள்ளையின் கூற்றைத் திரித்துக் கூறிக் களிப்படைகிறார், உண்மைக்கும் பொய்க்கும் வேற்றுமை காணாத கட்டுரையாளர். சேதுப்பிள்ளை, ‘ தமிழகம் வடநாட்டாரோடு தொடர்பு கொள்ளக் கூடாது’ என்ற பொருளில் அப்படிக் கூறவில்லை. “தமிழகம் தனி ராஜ்ய உறுப்பாக விளங்க வேண்டும்” என்று ஐயத்திற்கிடமின்றி அறிவித்தார். இது தினசரிப் பத்திரிக்கைகளிலேயே வெளிவந்த செய்தி. குடியரசுச் சட்டப்படி,”தனிராஜ்ய உறுப்பு” என்பது இந்திய யூனியனில் இணைந்துள்ள மாகாணங்களுக்குப் பெயர். ஆங்கிலத்திலுள்ள குடியரசுச் சட்டத்தை தமிழில் பெயர்க்கும் பணியை ஏற்றுள்ளார் சேதுப்பிள்ளை. ஆகவே, தாம் கோரும் தமிழகத்தின் அரசியல் அந்தஸ்து எத்தகையது என்பதை சந்தேகத்துக்கு இடமற்ற வகையில்-சட்ட ரீதியான வார்த்தையில் கூறிவிட்டார்.
ஆனால், சத்தியத்திலும் நம்பிக்கையின்றி, சட்டத்திலும் ஞானமின்றி கட்சி வளர்ப்பதையே வாழ்க்கைத் தொண்டாகக் கொண்டுவிட்ட கட்டுரையாளருக்கு இது புரியாததில் வியப்பில்லை. தமிழகம் வேறு எவருக்கும் அடிமைப் பட்டிருக்கக்கூடாது என்று அவர் கூறியதன் பொருள் என்ன? தமிழகம் தனியரசு பெறாமல் ஆந்திர- கேரள கன்னடப் பகுதிகளோடு கட்டுப்பட்டிருக்கக் கூடாது என்பதேயாகும். கட்டுரையாளர் இந்த உண்மையை இனியேனும் உணர்வாரா?
“இருபது ஆண்டுகளாக நாம் ஆற்றும் பகுத்தறிவுப் பணியின் பரிசு, குறளும் சிலம்பும் கொண்டாடப் படும் முயற்சி”
என்கிறார் கட்டுரையாளர். இரவலுக்குப் பிள்ளை வாங்கி, அதைத் தம் பிள்ளையெனக் காட்டிப் பிச்சை எடுக்கும் சங்கை கெட்ட மங்கையர் சிலரைப் பார்த்திருக்கிறோம். இந்தப் போலித் தாயார் போன்று தமிழுக்கு-தமிழக வளர்ச்சிக்கு-தமிழகத்தின் வாழ்வுக்கு, எங்கு யார் பாடுபட்டாலும் அதெல்லாம் தங்கள் கிளர்ச்சியின் எதிரொலியின் என்று பிரச்சாரம் செய்வது-நன்றி, நாணயம் என்ற பண்பு கொஞ்சங்கூட இல்லாத திராவிடத்தாரின் தொழில். சிலப்பதிகாரம் பரவியதற்கு தங்கள் உழைப்பே காரணம் என்று கூறும் கட்டுரையாளர் எங்கே-எப்போது- எப்படி உழைத்தார்கள் என்பதை விளக்கவில்லை. பார்ப்பனரான உ.வே. சாமிநாதய்யர், செல்லரித்துக் கிடந்த சிலப்பதிகார ஏடுகளைச் சீராக்கி அச்சடித்துக் கொடுத்ததும், சிலப்பதிகாரத்தைப் பண்டிதரேயன்றி பாமரரும் படிக்கும் வகையில் புலவர் வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியதும் திராவிடத்தார்கள் செய்த முயற்சியின் எதிரொலிதானோ? இப்படியும் படுபொய் பேசி தமிழ் மக்களை ஏய்த்துப் பிழைப்பதைவிட, வேறொரு நல்ல தொழிலை நாடுவது நலம்.
சிலப்பதிகார மாநாட்டன்று இரவு. “ஒளவையார்” நாடகம் நடை பெற்றதல்லவா? அது பிடிக்கவில்லை ‘பகுத்தறி’வாளருக்கு! மாநாட்டைக் கூட்டியதன் கருத்து கண்ணகியைப் போற்றுவதன் மூலம் அவ்வீராங்கனையைப் பெற்றெடுத்த பெண்ணினத்தைப் போற்றுவதாகும். இதை டாக்டர் மு.வ.,
“இது சிலப்பதிகார ஆராய்ச்சி மாநாடன்று காவியத் தலைவியைப் பாராட்டும் மாநாடு”
எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனாற்றான், தமிழகத்தின் வீரப் பெண்ணைப் பாராட்டும் திருநாளில் தமிழ்ப் பெண்ணினத்தின் அறிவுக் களஞ்சியமான ‘ஒளவையார்’ நாடகம் நடத்தப்பட்டது.
போகட்டும்; கட்டுரையாளரின் பொய் வாதங்களால் சிலப்பதிகார மாநாட்டின் சிறப்பைக் குறைத்து விடமுடியாது. பாவம்!தமிழறிஞர்களை என்றென்றும் தேசீய முகாமுக்கு எதிர் முகாமிலேயே நிறுத்தி விடலாம் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையை நாசமாக்கிக் காட்டிவிட்டது சிலப்பதிகார மாநாடு. தேசீயத்தோடு தமிழ் இரண்டறக் கலந்து விட்டது. இனி, அது தேசீய விரோதிகளின் முகாமுக்குப் பயன்படாது. ஒருவேளை,அந்த முகாமை முறியடிப்பதற்குப் பயன் படலாம். ஆனால் சிலப்பதிகார மாநாட்டைக் கூட்டியவர்கள் சிந்தனை அதுவன்று.
‘வித்தகம் பேச வேண்டாம்
பணி செய்தல் வேண்டும்’
