மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை

1.

கோயில் சங்கிலியின் கட்டறுத்து
ஓடிய யானை
வனத்தின் நுழைவாயிலில் நின்று
திரும்பிப் பார்த்தது.
ஒரு கவள உருண்டையைப் போல
நகரத்தின் வாயில்
நுழைந்து கொண்டிருந்தது வனம்.

2.

கழுத்துமணி ஒலிக்க
மீள வனம் புகுந்த கோயில் யானை
ஆற்றில் இறங்கி அலசியது மேனியை.
மூக்கைத் துளைத்த சூட வாசனை
தாங்க மாட்டாமல்
ஓலமிட்டுக் கரைந்தன காட்டு மூலிகைகள்.

3.
ஒரு புதிய பிளிறல் கேட்டுத்
தன் குட்டியாகத் தான் இருக்குமென
நெருங்கியது தாய் யானை.
கல் யானை தான்
உயிர் பெற்று வந்ததோவென
வனம் அதிர ஓடியது
கோயில் யானை.

4.

அத்தனை தளைகள்
அத்தனை கனிகள்
மீண்டும் உண்ணக் கிடைத்தென்ன?
கவளஞ்சோறும் வாளி நீரும்
கண்முன் வைத்த பாகன்
ஒருநாளில் ஒருகணமேனும்
வந்துதான் போகிறான் கண்ணில்.

5.

ஊருக்குள் நுழைந்ததென
வெடி வைத்து விரட்டுகிறீர்கள்.
தூக்கிப் போட மனமில்லாது அங்குசத்தோடே உறங்கும்
தன் பாகனைப்
பார்த்துவிட்டுத் தான் போகட்டுமே

பழைய கோயில் யானை.

One Comment on “மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை”

  1. “நம் வனங்களை, கவள உருண்டைகளாக ஆக்கி தின்ற அசுரர்கள் நாம் தான் “என,
    யானை வழியாக, கவிஞர் மா.கா.
    எச்சரிக்கை செய்கின்றார்.
    -ஜெயானந்தன்

Comments are closed.