திரு வி. க/பெண்ணின் பெருமை

  1. பெண்ணுரிமை

(உரிமை இயல்பு – அஃறிணையுலகில் பெண்ணுரிமை –ஆண் கொடுமை – பெண்ணுரிமையுள்ள நாடு – நாகரிகத்துக்கு அறிகுறி – கீழ் நாட்டுப் பெண்மக்கள் – பெண்ணுரிமையில்லா நாடு – வேதகாலப் பெண் மக்கள் – இதிகாச காலப் பெண்கள் – புத்தர் காலம் – இராசபுத்திரிகள் – பழந்தமிழ்ப் பெண்மக்கள் – அகப்பொருளும் பெண்ணுரிமையும் – நாயன்மார்காலம் – பெண் அடிமைப்பட்ட காலம் – ஸ்மிருதி காலம் – பெண் ஆண் மூளை நிலை – அமைதியில் அறிவு – கலைமகள் நுட்பம் – பேதைமை விளக்கம் – கட்டுப்பாடுகளின் கொடுமை – ஒழுக்கம் இருபாலர்க்க்கும் – திருவள்ளுவர் உள்ளம் – செயற்கைக் கட்டுகள் – உரிமையும் கடமையும் – பெண்ணுரிமைக் கேட்டால் விளையுங் கேடுகள் – உரிமைப் போரால் கொடுமை – பெண் பிறவி நோக்கம் – பெண் ஆணுக்குள்ள தொடர்பும் நாட்டுப் பழைய வாழ்வும்)

மாதர்‌ தம்மை இழிவு செய்யும்‌
மடமயைக்‌ கொளுத்துவோம் – பாரதியார்‌

உரிமை

எல்லாவற்றிலும்‌ முதன்மை பெற்று விளங்கும்‌ பெண்ணிற்கு உரிமை வழங்க-வேண்டுமா வேண்டாவா என்னும்‌ ஆராய்ச்சியும்‌ இவ்வுலகில்‌ சில இடங்களில்‌ நடைபெற்று வருகிறது. உரிமை என்பது ஒருவர்‌ கொடுப்பதுமன்று; மற்றொருவர்‌ வாங்குவது மன்று. அஃது எவரிடத்தும்‌ எல்லா விடத்தும்‌ இயல்பாய்‌ அமைந்து கிடப்பது. சிலர்‌ தமக்குள்ள வன்மையால்‌ பிறர்‌ உரிமையை மறித்தும்‌ பறித்தும்‌ வருகின்றனர்‌. ஒருவார்‌ உரிமைக்கு மற்றொருவர்‌ கேடு சூழ்வதினும்‌ கொடிய பாவம்‌ பிறிதொன் றிருக்கிறதென்று தெரியவில்லை. உரிமையாவது உயிர்கட்குக்‌ கடவுளால்‌ அளிக்கப்பட்ட ஒரு பெரும்‌ இயற்கைக்‌ கொடை. தன்னைப்‌ போலவே உயிர்களும்‌ எவ்விதக்‌ கட்டுப்பாடுமின்றி உலகில்‌ வாழவேண்டுமென்பது கடவுள்‌ நோக்கம்‌. அவ்வருள்‌ நோக்கத்துக்கு மாறுபட்டுப்‌ பிறர்‌ உரிமையைத்‌ தேடுவோர்‌, கடவுள்‌ உண்மையில்‌ உறுதியுடையோராகார்‌. எவ்வுயிர்‌ உரிமைக்கும்‌ எவரும்‌ கேடு நிகழ்த்தலாகாதென்பது பொது அறம்‌. அங்ஙனமாக, மன்பதையின்‌ தோற்ற வளர்ச்சிக்கெனக்‌ கடவுளருளால்‌ தாய்மை பெற்றுள்ள மென்மைப்‌ பெண்மகளின்‌ உரிமையை வன்மை ஆண்மகன்‌ சில இடங்களில்‌ மறித்தும்‌ பறித்தும்‌ இருக்கிறான்‌! இயற்கை நியதிக்கு முரணிநின்று, பெண்ணுரிமையைக்‌ கடிந்து, “பெண்ணுக்கு எவ்வளவில்‌ உரிமை வழங்கலாம்‌; எவ்வளவில்‌ வழங்கல்‌ கூடாது” என்னும்‌ ஆராய்ச்சியில்‌ தலைப்படல்‌ எத்தகை அறியாமை! பெண்ணின்‌ உரிமையைக்‌ கெடுக்கவும்‌ வழங்கவும்‌ இம்மகன்‌ யாவன்‌? அவ்வுரிமையைக்‌ கடிந்த மறத்துக்குக்‌ கழுவாய்‌ தேட வேண்டுவது இவன்‌ கடமை என்று யான்‌ கூறுவேன்‌.

அஃறிணை உலகில்‌ பெண்ணுரிமை

“பெண்ணுரிமைக்குக்‌ கேடு எவ்வுலகில்‌ விளைந்திருக்‌கிறது? அஃறிணையுலகிலா? ஆறறிவுடைய மக்கள்‌ உலகிலா? வெட்கம்‌ வெட்கம்‌! புல்‌ செடி கொடிகளில்‌ ஆணினம்‌, தன்‌ தன்‌ பெண்ணினத்தின்‌ உரிமையைத்‌ தகைந்திருக்கிறதா? ஆண்‌ பறவை, பெண்பறவையின்‌ உரிமையைக்‌ கெடுத்திருக்கிறதா? எவ்விலங்காதல்‌ தனது பெண்ணினத்தின்‌ உரிமையை உடைத்‌திருக்கிறதா? அஃறிணை உலகில்‌ பெண்ணுரிமைக்கும்‌ பழுது நிகழ்ந்ததில்லை. பாழான ஆறறிவுடைய உயர்திணை உலகிலேயே பெண்ணுரிமைக்குப்‌ பழுது நேர்ந்திருக்கிறது.!

ஆண்கொடுமை

பமுது தொன்றுதொட்டு இடையீடின்றி நிலவி வருவதன்று. சில நூற்றாண்டுக்கு முன்னரே பெண்ணுலகில்‌ பழுது நுழைந்தது. இதற்குக்‌ காரணம்‌ ஆணுலகின்‌ தன்னலமேயாகும்‌. ஆண்மகன்‌ பெண்மகளைத்‌ தனக்குரிய காமப்பொருளாகவும்‌, பணியாளாகவும்‌ கொண்ட நாள்‌ தொட்டுப்‌ பெண்மகள்‌ உரிமையை இழக்கலானாள்‌. வலிய ஆணின்‌ கொடுமை, மெலிய பெண்ணின்‌ உரிமையைப்‌ பறிமுதல்‌ செய்தது. வலிய ஆண்‌ முன்‌ மெலிய பெண்‌ என்‌ செய்வாள்‌?

பெண்ணுரிமையுள்ள நாடு

பெண்ணுரிமை பொதுவாக உலகில்‌ பல இடங்களிலும்‌, சிறப்பாகச்‌ சில இடங்களிலும்‌ பின்னை நாளில்‌ கடியப்பட்டது. பெண்ணுரிமையுள்ள நாடுகள்‌ செமுமை-யுற்றிருப்பதும்‌, அவ்வுரிமை இல்லா நாடுகள்‌ செழுமையற்றிருப்பதும்‌ கண்கூடு. பெண்‌, நாட்டின்‌ தாயாகலான்‌, அவள்‌ அடிமைப்படும்‌ இடம்‌ அடிமைப்படல்‌ இயல்பு.

நாகரிகத்துக்கு அறிகுறி

மேல்நாட்டார்‌, தாம்‌ பெண்ணுரிமை கடியாமல்‌ வாழ்‌தலால்‌, தாம்‌ நாகரிக நுட்பம்‌ உணர்ந்தவரென்றும்‌, கழ்நாட்டார்‌ பெண்ணுரிமை கடிந்திருப்பதால்‌ அவர்‌ நாகரிக நுட்பம்‌ உணராத வரெரன்றும்‌ கருதுகின்றனர்‌. ஒரு நாட்டின்‌ நாகரிகம்‌ அந்நாட்டின்‌ பெண்மக்கள்‌ நிலையைப்‌ பொறுத்து நிற்கிற தென்பது எவரும்‌ ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள்‌ எவ்விதக்‌ கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப்‌ பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ, அங்கேயுள்ள அண்‌ மக்கள்‌ நாகரிக நுட்பமுணர்ந்தவர்‌ களாகிறார்கள்‌. அந்நாடே நாகரிகம்‌ பெற்றதாகும்‌.

கீழ்நாடு

கீழ்நாட்டின்‌ பழைய வரலாற்றை நோக்குழிப்‌ பெண்‌ மக்கள்‌ அடிமை வாழ்வு
நடாத்தினார்களென்பது விளங்கவில்லை. கீழ்‌ நாட்டுச்‌ சரித்திரங்களில்‌ இவ்வுண்மையைக்‌ காணலாம்‌.
எகிப்து, பாபிலோன்‌ முதலிய இடங்களில்‌ பண்டை நாளில்‌ பெண்மக்கள்‌ அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்‌ என்று தெரியவில்லை. முதல்முதல்‌ ஓரு பெண்பால்‌ அரசு செலுத்திய இடம்‌ எகிப்து என்று சரித்திரம்‌ கூறுகிறது. சீனத்தில்‌ ஹதாசு, செமிராமிஸ்‌ என்பவர்‌ ஆட்சி நடாத்தி இருக்கின்றனர்‌. அணித்தே ஒரு மஹாராணியே சீனத்தின்‌ சக்கவரத்தினியா யிருந்தாள்‌. இந்தியாவில்‌ ரிஜியா, நூர்‌ ஜஹான்‌ முதலியோர்‌ ஆட்சிகள்‌ நடந்தன. சிரியா நகரங்களை அராபியர்‌ பற்றி வந்த போது காலஸ்‌, ஓபிரா என்ற அராபிப்‌ பெண்மணிகள்‌ நாட்டிய வீரத்தை நூல்களிற்‌ காணலாம்‌.
நபிநாயகத்தின்‌ அருந்தவப்‌ புதல்வியார்‌, பெருமைக்கு ஓர்‌ உறையுளாயிருக்கிறார்‌. விரிவு அவர்தம்‌ வரலாற்றிற்‌ காண்க. பாக்தாத்‌ முதலிய இடங்களிலிருந்த சில கலிபாக்கள்‌, தங்கள்‌ மனைவிமாரின்‌ நினைவுச்‌ குறிகளாகப்‌ பல அழகிய நிலையங்கள்‌ எழுப்பினார்கள்‌. ஷாஜஹான்‌ கட்டிய தாஜ்மஹால்‌, அவர்தம்‌ மனைவியின்‌ அன்பிற்கோர்‌ அறிகுறியாக நிற்கிறது. இவ்வன்புச்‌ செயல்கள்‌ பெண்மக்களிடத்துள்ள மதிப்பைப்‌ புலப்படுத்து கின்றன. முஸ்லிம்‌ பெண்கள்‌, பிறந்த இடத்தில்‌ சொத்துரிமை பெற்றிருப்பதும்‌ ஈண்டுக்‌ கருதத்தக்கது.
கீழ்நாட்டுப்‌ பெண்மணிகளில்‌ கல்வித்‌ துறையில்‌ போர்‌ பெற்று விளங்கினவர்‌ பலர்‌. ஜப்பானிய இலக்கியங்களிற்‌ சிறந்த இரண்டு நூல்களின்‌ ஆசிரியன்மார்‌ பெண்மக்களேயாவர்‌. பாக்தாத்‌, கார்டோவா முதலிய இடங்களில்‌ பெண்மக்கள்‌ கல்லூரிகளில்‌ சென்று பயின்று வந்தார்களென்று சொல்லப்‌ படுகிறது. அப்‌பெண் மக்கள்‌, பற்பல கல்வித்‌ துறைகளிலும்‌ வல்லவர்களாயிருந்தார்கள்‌. மீராபாய்‌, ஜிபன்னிசா, சைஸ்‌, போதோனி முதலிய புகழ்பெற்ற பெண்‌ கவிகளின்‌ சிறப்பை என்னென்று கூறுவது?

கீழ்நாட்டுப்‌ பெண்மக்கள்‌ வாழ்வு

கீழ்நாட்டுப்‌ பெண்மக்கள்‌ பெரிதுந்‌ தாய்மையையும்‌, அறவவொழுக்கத்தையும்‌, சமய வாழ்வையும்‌, தொண்டையுமே தங்களுக்குரிய வாழ்வுச்‌ செல்வங்களாகக்‌ கொண்டிருந்தார்கள்‌. அப்பெண்மணிகள்‌ ஆண்மக்களிடத்தில்‌ போராடுவதும்‌, அவர்களை வழி மறித்துப்‌ புடைப்பதும்‌, அவர்கள்‌ பதவிகளைப்‌ பற்றுவதும்‌ தங்களுக்குரிய வாழ்வென்று கொண்டார்களில்லை. ஆண்மக்களுடன்‌ போராடுவது மட்டும்‌ பெண்ணுரிமையாகாது. பெண்‌ ஆணுடன்‌ கலந்து வாழப்‌ பிறப்பிக்கப்பட்டாளே யன்றி, அவள்‌ ஆணுடன்‌ போர்புரிந்து வாழ்வைக்‌ குலைத்து இடர்ப்படப்‌ பிறப்பிக்கப்-பட்டாளில்லை. இதுபற்றிப்‌ பின்னுங்‌ கூறுவன்‌.

இந்திய நாடு

கீழ்நாடுகளிற்‌ சிறந்த நமது இந்திய நாட்டின்‌ மீது சிறிது கருத்துச்‌ செலுத்துவோம்‌. பண்டை நாளில்‌ இந்திய நாட்டுப்‌ பெண்மக்கள்‌ கல்வியாளர்களாய்‌, வீரத்‌ தாய்மார்களாய்‌, அரசிகளாய்‌, எவ்வினையும்‌ ஆற்ற வல்லவர்களாய்‌ இருந்தார்கள்‌. அந்நாளில்‌ நாடு உற்றிருந்த செழுமைக்கோர்‌ அளவில்லை.
இந்திய நாட்டின்‌ செழுமையும்‌, பெருமையும்‌, பிறவும்‌ நூல்களில்‌ பேசப்படுகின்றன. நாடு அச்செழிய நிலையுற்றிருந்த நாள்‌ எந்நாள்‌? அந்நாள்‌, பெண்ணுரிமை பெற்றிருந்த நாள்‌ என்று தயங்காது சொல்லலாம்‌. பெண்ணுரிமை பறிக்கப்பெற்ற நாள்‌ தொட்டு, நாடும்‌ உரிமை இழந்து, அடிமைக்‌ குழியில்‌ வீழ்ந்து வருந்துகிறது.
நமது நாட்டின்‌ இப்போதைய சிறுமைக்குக்‌ கூறப்படுங்‌ காரணங்களுள்‌ யான்‌ மூன்றைச்‌ சிறப்பாக எடுத்துக்காட் டுவது வழக்கம்‌. அவை (1) பெண்ணுரிமை தடிந்தது. (2) பிறப்பால்‌ வகுப்பு வகுத்தது. (3) மக்களுள்‌ தீண்டாமை கொண்டது. இம்‌ மூன்றனுள்‌ பெண்ணுரிமை தடிந்ததைத்‌ தலையாய காரணமாகவங்‌ கொள்ளலாம்‌. பெண்‌, நாட்டின்‌ ஒரு பாதியாகலின்‌, அவள்‌ உரிமைக்கேட்டால்‌, நாடு எங்ஙனம்‌ நல்வாழ்வு பெறுதல்‌ கூடும்‌? மனிதனது ஒரு பாதி, வாயுவால்‌ இயக்கமின்றி வீழ்ந்தால்‌, அவன்‌ எதற்குப்‌ பயன்படுவன்‌? “பெண்ணுரிமையில்லா நாடு, பக்கவாயு உடையானை ஓத்தது” என்று சொல்லத்‌ தேவையில்லை.
பண்டைக்‌ காலத்தில்‌ நமது நாட்டுப்‌ பெண்மக்கள்‌ எல்லாத்‌ துறைகளிலும்‌ உரிமை பெற்றிருந்தார்கள்‌ என்பதற்குச்‌ சான்றுகள்‌ பல உள்ளன. வேத கால உலகின்‌ மீதும்‌ பழந்தமிழர்‌ கால உலகின்மீதும்‌ நமது கருத்தைச்‌ செலுத்துவமேல்‌ அக்காலப்‌ பெண்மக்கள்‌ நிலை இனிது புலனாகும்‌. இடைக்காலத்திலும்‌ பெண்மக்கள்‌ சிறுமை யுற்றிருந்தார்களென்பது விளங்கவில்லை. பிற்காலத்திலேயே – அதாவது ஸ்மிருதி காலத்தில்‌ – நமது நாட்டில்‌ பெண்ணுரிமை குலைக்கப்பட்டது.

வேதகாலப்‌ பெண்மக்கள்‌

வேதங்களில்‌ மிகத்‌ தொன்மையது ரிக்‌ வேதம்‌. அதன்கண்‌ பெண்மக்களால்‌ யாக்கப்பட்ட பாக்களைக்‌ காணலாம்‌. அத்திரி ரிஷியின்‌ வழித்தோன்றிய விசுவாவரை, அகத்தியரின்‌ காதல்‌ மனைவியார்‌ லோபா முத்திரை, ஆம்ரி முனிவரின்‌ அருமைப்‌ புதல்வியார்‌ வாக்தேவியார்‌ முதலியோர்‌ யாத்த பாடல்கள்‌ அவ்‌ வேதத்தில்‌ பொலிகின்றன. மைத்ரேயி, கார்க்கி, தேவபூதி முதலிய பெண்மணிகளைப்்‌ பற்றி ஈண்டு விரித்துக்‌ கூறவேண்டுவதில்லை.

மைத்தேயி

மைத்ரேயி என்பார்‌, மித்ரர்‌ என்னும்‌ பெரும்புலவரின்‌ அருந்தவப்‌ புதல்வியார்‌. ”தந்‌தை மகற்காற்று நன்றி அவையத்து – முந்தி யிருப்பச்‌ செயல்‌” என்றார்‌ வள்ளுவனார்‌. “மகனுக்கு” என்பதுகொண்டு, “மகட்கு அன்று என்று பொருள்‌ கூறுவது பிற்கால வழக்கு. பொதுவாக உலகிற்கு ஓர்‌ அறம்‌ உரைக்கும்‌ வேளையில்‌, “ஒருவன்‌”, “மனிதன்‌’ என்னும்‌ ஆண்பாற்‌ சொற்‌களை ஆளுதல்‌ தொன்று தொட்ட வழக்கு. இவ்வழக்குப்‌ பற்பல மொழிகளிலும்‌ உண்டு. திருவள்ளுவர்‌ ஈண்டு “மகற்கு” என்றது, பொதுவாக மக்களை உணர்த்துவதென்க. இது நிற்க, தந்தை பிள்ளைக்கு நல்கத்தக்கது கல்விச்‌ செல்வமேயாகும்‌. பண்டிதர்‌ மித்ரரும்‌ தம்‌ புதல்வியாரைப்‌ பெரும்‌ பண்டிதை யாராக்கினர்‌. இப்பண்டிதையார்‌ பொருட்‌ செல்வத்தின்‌ புன்மையையும்‌, அருட்‌ செல்வத்தின்‌ மேன்மையையும்‌ பற்றித்‌ தங்‌ கணவனார்‌ மகரிஷி யாக்ஞவல்கியருடன்‌ வாதித்த பெருமொழிகள்‌ ஒரு சிறந்த உபநிஷத்தில்‌ ஒளிர்கின்றன. அப்பண்டிதையார்‌, ஆசிரியரா யிருந்து ஒரு வேதபாடசாலையை நடாத்தின ரென்றுஞ் சொல்லப்படுகிறது.

கார்க்கி

அப்பெருமாட்டியாரின்‌ நெருங்கிய உறவினராகிய கார்க்கியைப்‌ பற்றித்‌ தெரியாத வடமொழிப்‌ புலவர்‌ இரார்‌. கார்க்கி, ஒருபோது ஜனகன்‌ கழகத்தில்‌, யாக்ஞவல்கி-யருடன்‌ வாதம்‌ புரிந்து, “தர்க்க அரசி என்ற பெயர்‌ பெற்றனர்‌.

தேவபூதி

தேவபூதி என்பார்‌, சாங்கிய மதாச்சாரியராகிய கபிலர்‌ என்ற பெரியாரை ஈன்ற தாயார்‌. தாயார்‌ தேவபூதியினிடத்தில்‌ புதல்வர்‌ கபிலர்‌ கல்வி பயின்று, அப்பயிற்சியின்‌ பயனாகச்‌ சாங்கிய நூல்‌ இயற்றி, ஒரு சமயத்தைக்‌ காணும்‌ திறனும்‌ பெற்றார்‌. இப்பெருமைக்குக்‌ காரணராயிருந்த தேவபூதியின்‌ கல்விச்‌ சிறப்பை என்னென்று பகர்வேன்‌?

பெண்மக்கள்‌ வேதப்‌ பயிற்சி

வேதகாலப்‌ பெண்மக்கள்‌ நிலை குறித்துப்‌ பலபடப்‌ பேச வேண்டுவதில்லை. அக்கால வழக்க மொன்றை ஈண்டுக்‌ குறிப்பிடுவது சாலும்‌. அந்நாளில்‌ தலைவன்‌ வேள்வி செய்யும்‌ போது தலைவியும்‌ உடனிருப்பாள்‌. மந்திரத்திலாதல்‌- சுரத்தி லாதல்‌ – தலைவன்‌ பிழை நிகழ்த்துவனேல்‌, உடனே திருத்தமாகத்‌ தலைவி அதைச்‌ சொல்லி ஒழுங்கு செய்வது வழக்கம்‌. இதனால்‌ அண்‌ மக்களைப்‌ போலவே பெண்மக்களும்‌ கல்வியிலும்‌ வேதப்‌ பயிற்சியிலும்‌ சிறந்து விளங்கினார்கள்‌ என்பது தெற்றெனத்‌ தெரிகிறது.
வேதகாலங்‌ கடந்த பன்னூறு ஆண்டுகளுக்குப்‌ பின்னரும்‌ பெண்மக்கள்‌ கல்வித்துறையிலும்‌, பிற துறைகளிலும்‌ உரிமை பெற்றிருந்தார்கள்‌. சங்கரர்க்கும்‌ மிசிரர்க்கும்‌ நிகழ்ந்த விவாதத்தில்‌ நடுநிலைத்‌ தலைமை வகிக்கும்‌ பேறுபெற்ற பாரதியும்‌, கணிதத்திற்‌ சிறந்த லீலாவதியும்‌, வானசாஸ்திரத்தில்‌ பேர்‌ பெற்ற கானையும்‌, மணஞ்‌ செய்தற்குத்‌ தம்மையொத்த புலமை யுடைய நாயகன்‌ வாய்க்கப்‌ பெறாது கன்னிகையாகவே காலங்‌ கழித்த சுலபையும்‌, ஹு வான்‌ த்ஸாங்‌ என்ற சீனர்‌, நமது நாடு போந்து சுற்றியபோது, எக்கட்டுப்பாடுமின்றிப்‌ புலவர்களோடு பேசிக்கொண்டிருந்தனரென அவர்‌ நூலில்‌ குறிக்கப்‌ பெற்றுள்ள இராஜேசுவரியும்‌, பிறரும்‌ அக்காலப்‌ பண்டிதைமாரில்‌ குறிக்கத்‌ தக்கவார்‌.

இதிகாச காலப்‌ பெண்மக்கள்‌

இதிகாசங்களிற்‌ போந்துள்ள பெண்மக்கள்‌ வரலாறுகளும்‌, அவர்களது நிலையைப்‌ புலப்படுத்தும்‌. சீதையின்‌ நிறையும்‌, பிரபாவதி, சபரி இவர்களின்‌ தவமும்‌, குந்தி தமது புதல்வர்கட்கு ஊக்கமூட்டிச்‌ சோர்வு குலைத்து வீர மெழுப்பிய தும்‌, காந்தாரி அரச அவை ஏறி அரசியல்‌ அறிவுறுத்தியதும்‌, ([1]அருச்சுனன்‌ மனைவியாகிய) திரெளபதியின்‌ அருஞ்செயல்‌ களும்‌ அக்காலத்திய பெண்மணிகளின்‌ உரிமைக்கு எடுத்துக்‌ காட்டுகளாக விளங்குகின்றன.

[1] திரெளபதி ஐவர்க்கு மனைவி என்று வியாச பாரதம்‌ விளம்புகிறது. அவ்வாறு ஜைன பாரதம் ‌விளம்பவில்லை. அருச்சுனன்‌ ஒருவனுக்கே மனைவியாகத்‌ திரெளபதி வாழ்ந்தாள்‌ என்று ஜைன பாரதம்‌ கூறுகிறது.

புத்தர் காலம்‌

புத்தர்‌ காலத்திலும்‌ பெண்ணுரிமைக்குக்‌ கேடு நிகழ வில்லை. அந்தநாளில்‌ ஆண்மக்களைப்‌ போலவே பெண்மக்களும்‌ கல்வி பயின்று அறம்‌ வளர்த்தார்கள்‌. அசோகன்‌ காலத்தில்‌ சில பெண்மணிகள்‌, உலகில்‌ பலநாடு போந்து அறம்‌ வளர்த்தார்‌களென்று சரித்திரம்‌ சாற்றுகிறது.

இராசபுத்திரிகள்‌

இன்னும்‌ சரித்திரத்தில்‌ சில பெண்மக்களின்‌ அருஞ்‌ செயல்கள்‌ பேசப்படுகின்றன. அரசிகளாகச்‌ சிலர்‌ இருந்தனர்‌; வீரத்‌ தாய்மாராகச்‌ சிலர்‌ இருந்தனர்‌. அறுநூறு எழுநூறு ஆண்டுகட்கு முன்னர்‌ நாட்டில்‌ வதிந்த இராசபுத்திரிகள்‌ போர்முகத்தில்‌ காட்டிய வீரச்‌ செயல்கள்‌ சரித்திரத்தில்‌ பதிந்து கிடக்கின்றன. அச்செயல்களின்‌ திறங்களைச்‌ சரித்திரங்களிற்‌ காண்க. அவ்வீரச்‌ செயல்கள்‌, பழைய பெண்மக்கள்‌ வழி வழி வந்து சுருங்கி நின்ற எச்சங்களாகும்‌. எனவே, வேத காலத்திலும்‌, இடைக்‌ காலத்திலும்‌ நமது நாட்டுப்‌ பெண்மக்கள்‌, உரிமை இழந்து நின்றார்கள்‌ என்று சொல்வதற்கு இடமில்லை.

பழந்தமிழ்க்‌ காலப்‌ பெண்மக்கள்‌ – அகப்பொருளும்‌ உரிமையும்‌

பழந்‌ தமிழ்நாட்டுப்‌ பெண்‌ மக்கள்மீது சிறிது கருத்துச்‌ செலுத்துவோம்‌. பழந்‌ தமிழ்நாடு பெண்‌ மக்கள்‌ உரிமைக்கு ஓர்‌ இலக்கியம்‌ என்று கூறல்‌ உயர்வு நவிற்சியாகாது. பழந்தமிழ்‌ நூல்களைத்‌ துருவித்‌ துருவி ஆராய்ந்தால்‌ அவற்றில்‌ யாண்டும்‌ பெண்ணுரிமை காணலாம்‌. “பெண்‌ தாழ்ந்தவள்‌, குறையுடை யாள்‌, அடிமை” என்னும்‌ உணர்வே அற்றை நாளில்‌ இல்லை. தமிழில்‌ தலைசிறந்து விளங்கும்‌ அகப்பொருள்‌ நூல்களின்‌ உள்ளக்கிடக்கை என்னை? இன்பமன்றோ? உரிமை இல்லா இடத்தில்‌ இன்ப நிகழ்ச்சி ஏது? உரிமையின்‌ ஓழுக்கமன்றோ இன்பம்‌? இன்ப நுகர்ச்சிக்கு இருபாலாரிடத்தும்‌ ஒத்த உரிமை இயல்புகள்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஒத்த உரிமை இயல்புகளே பெரிதும்‌ பழந்தமிழ்‌ நாட்டு அண்‌ பெண்‌ வாழ்வாக அமைந்‌ திருந்தன. அவைகளை “ஓத்த நலனும்‌ ஒத்த குணனும்‌ ஒத்த கல்வியுமுடைய ஒருவனும்‌ ஒருத்தியும்” என்றும்‌, தலைவன்‌ தலைவியர்‌ அன்பு நிலையை, “ஓராவிற்கு இருகோடு பூத்தா லென்ன” என்றும்‌ நக்கீரனார்‌ நவின்றிருத்தலை நோக்குக. பழந்‌ தமிழ்நாட்டு மணம்‌, களவாயிருந்ததும்‌ ஈண்டுக்‌ கருதற்‌ பாற்று. பெண்மகள்‌ தனக்கினிய தலைவனைக்‌ தானே தெரிந்‌தெடுத்து வந்த வழக்கமொன்றே, அந்நாளைய பெண்ணுரிமைக்குப்‌ போதிய சான்றாக நிற்கிறது.

பெண்‌ கல்வி

“ஓத்த கல்வி” என்ற குறிப்பு, அக்காலப்‌ பெண்‌ கல்விச்‌ சிறப்பை உணர்த்துகிறது. பழந்‌ தமிழ்நாடு ஆண்‌ புலவரோடு பெண்‌ புலவரையும்‌ அணிந்திருந்தது. வெள்ளி வீதியார்‌, ஓளவையார்‌, பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர்‌, எயினிமார்‌ முதலியோர்‌ அந்நாளில்‌ தமிழ்‌ வளர்த்த பெண்மணிகள்‌. இவர்தம்‌ பாக்களைப்‌ புறநானூறு முதலிய நூல்களிற்‌ காண்க.

அப்பாடல்களிற்‌ சில வருமாறு

களம்புகல்‌ ஓம்புமின்‌ தெவ்விர்‌ போரெதிரந்‌
தெம்முளும்‌ உளனொரு பொருநன்‌ வைகல்‌
எண்டேடோர்‌ செய்யுந்‌ தச்சன்‌
திங்கள்‌ வலித்த காலன்‌ னோனே.

யாழொடுங்‌ கொள்ளா பொழுதொடும்‌ புணரா
பொருளறி வாரா வாயினுத்‌ தந்தையாரக்‌
கருளவற தனவாற்‌ புதல்வாதம்‌ மழலை
என்வாய்ச்‌ சொல்லாம்‌ அன்ன ஒன்னார்‌
கடிமதி லரண்பல கடந்த
நெடுமா னஞ்சிநீ யருளன்‌ மாறே.

ஒருநாட்‌ செல்லலம்‌ இருநாட்‌ செல்லலம்‌
பலநாட்‌ பயின்று பலரொடு செல்லினும்‌
குலைநாட்‌ போன்ற விருப்பினன்‌ மாதோ
அணிபூ ணணிந்த யானை இயல்தோர்‌
அதியாமான்‌ பரிசில்‌ பெறாஉங்‌ காலம்‌
நீட்டினு நீட்டா தாயினும்‌ யானைதன்‌
கோட்டிறை வைத்த கவளம்‌ போலக்‌
கையகத்‌ ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்‌
வருந்த வேண்டா வாழ்கவன்‌ றாளே. — ஒளவையார்‌.

அற்றைத்‌ திங்கள்‌ ௮வ்வெண்‌ ணிலவின்‌
எந்தைய மூடையேம்‌ எங்குன்றும்‌ பிறார்கொள௱ர்‌
இற்றைத்‌ திங்கள்‌ இவ்வெண்‌ அிலவின்‌
வென்றெறி முரசின்‌ வேந்தரெங்‌
குன்றுங்‌ கொண்டார்‌ யாம்‌ எந்தைய மிலமே. – பாரிமகளிர்‌

இப்பாடல்கள்‌ பேச்சுப்‌ போலிருத்தல்‌ கவனிக்கத்தக்கது. பழந்‌தமிழ்ப்‌ பெண்மக்கள்‌ பேச்சே பாடல்‌ என்க.

கோவலன்‌ தன்னை விடுத்துப்‌ பிரிந்த பொழுது மாதவி, மீண்டும்‌ அவனை அடைய வேண்டி, எழுத்தாணியைச்‌ செம்‌பஞ்சின்‌ குழம்பில்‌ தோய்த்துத்‌ தாழையின்‌ வெள்ளிய தோட்டிலே திருமுகந்‌ தீட்டி, அவன்பாற்‌ செலுத்தினளென்று சிலப்பதிகாரஞ்‌ செப்புகிறது.

திருமுகம்‌ போக்குஞ்‌ செவ்விய ளாகி
அலத்தகக்‌ கொழுஞ்சே றளைஇ அயலது
பித்திகைக்‌ கொமுமுகை யாணிகைக்‌ கொண்டு
………. ……………. ……………. …….
எண்ணெண்‌ கலையும்‌ இசைந்துடன்‌ போகப்‌
பண்ணுற திறனும்‌ புறங்கூறு நாவில்‌
தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின்‌ விரித்துரை யெழுதி

எனவரூஉம்‌ இளங்கோவடிகள்‌ இன்னுரையை உன்னுக.

நாலடியார்‌ என்னும்‌ நூலில்‌,

குஞ்சி ௮ழகு.ம்‌ கொடுந்தானைக்‌ கோட்டழகும்‌
மஞ்சள்‌ அழகும்‌ அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னும்‌ நடுவு நிலைமையால்‌
கல்வி அழகே அழகு

எனவரூஉம்‌ செய்யுட்‌ பொருளை உற்று நோக்குக. குஞ்சி, கொடுந்தானைக்‌ கோடு, மஞ்சள்‌ – இவைகள்‌ பெண்‌ மக்களை உணர்த்துவன என்று எவருங் கூறுவர்‌. நாலடியார்‌ காலத்தில்‌ பெண்‌ கல்வி இயல்பாயிருந்தமை அராயற்பாலது. இக்‌ கருத்தைச்‌ சிறுபஞ்சமூலமும்‌.

மயிர்வனப்பும்‌ கண்கவரு மார்பின்‌ வனப்பும்‌
உகிர்வனப்பும்‌ காதின்‌ வனப்பும்‌ – செயிரதீர்ந்த
பல்லின்‌ வனப்பும்‌ வனப்பல்ல நூற்கியை ந்த
சொல்லின்‌ வனப்பப வனப்பு

என்று வெளியிட்டிருத்தலை எண்ணி எண்ணிப்‌ பார்க்க.

“கல்வியிற்‌ பெரியர்‌ கம்பர்‌” என்னும்‌ பெயர்‌ தாங்கிய கவி மன்னரும்‌, தமது இராமாயனத்தில்‌, நாட்டுப்படலத்தில்‌,

பெருந்த டங்கண்‌ பிறைநுத லார்க்கெலாம்‌
பொருந்து செல்வமும்‌ கல்வியும்‌ பூத்தலால்‌
வருந்தி வநதவா்க்‌ கீதலும்‌ வைகலும்‌
விருந்து மன்றி விளைவன யாவையே

என்று பாடியிருத்தலைக்‌ கூர்ந்து ஓர்க. கம்பர்‌ கோசல நாட்டைக்‌ குறித்துப்‌ பாடினும்‌, அவர்‌ அந்நாட்டை நேரிற்‌ கண்ட வரல்லர்‌. அவர்‌ காலத்துக்‌ கோசலமும்‌, இராமன்‌ காலத்துக்‌ கோசலமும்‌ இடையில்‌ எவ்வளவோ வேற்றமையுற்றிருக்கும்‌. கம்பர்‌, தமிழ்நாட்டில்‌ தாங்கண்ட காட்சியைக்‌ கோசலத்தில்‌ அமைத்துப்‌ பாடினரென்க.
நாயன்மார்‌, ஆழ்வார்‌ காலத்திலும்‌ பெண்‌ கல்வி தமிழ்‌ நாட்டில்‌ நிலவியிருந்ததென்று தெரிய வருகிறது. காரைக்கால்‌ அம்மையாரும்‌, ஆண்டாள்‌ அம்மையாரும்‌ பாடிய அருட்‌ பாடல்கள்‌ நம்மெதிரில்‌ நிற்கின்றன. அவர்தம்‌ பாக்களில்‌ இரண்டொன்று வருமாறு:-

இடர்களையா ரேனும்‌ எமக்கிரங்கா ரேனும்‌
படரு நெறிபணியா ரேனும்‌ – சுடருருவில்‌
என் புறாக்‌ கோலத்‌ தெரியாடும்‌ எம்‌மானார்க்‌
கன்பறா தென்னெஞ் சவர்க்கு.

[1]அன்றுந்‌ திருவுருவம்‌ காணாதே ஆட்பட்டேன்‌
இன்றுந்‌ திருவுருவம்‌ காண்கிலேன்‌ – என்றுந்தான்‌
எவ்வருவோ நும்‌பிரான்‌ என்பார்கட் கென்னுரைக்கேள்‌
எவ்வருவோ நின்னுருவம்‌ ஏது – காரைக்காலம்மையார்‌

வெள்ளை விளிசங்கு இடங்கையில்‌ கொண்ட
விமலன்‌ எனக்குருக்‌ காட்டான்‌
உள்ளம்‌ புகுந்து என்னை றைவித்து நாளும்‌
உயிரப்பெய்து கூத்தாட்டுக்‌ காணும்‌
கள்ளவிழ்‌ செண்பகப்‌ பூமலர்‌ கோதிக்‌
களித்திசை பாடுங்‌ குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்‌
வேங்க_வன்‌ வரக்கூவாய்‌. – ஆண்டாள்‌


[1] God is unknown and unknowable.

இப்‌ பெண்மக்கள்‌ பாட்டிற்கு இரங்கி ஆண்டவன்‌ அருள்‌ செய்யா தொழிந்தனனோ? ஆண்டவனுக்குப்‌ பாட்டு ஆணுடையதா யிருந்தாலென்ன? பெண்ணுடையதாயிருந்தாலென்ன? அவனுக்கு வேண்டற்பாலது கல்வியின்‌ பயனாகிய அன்பே. காரைக்காலம்மையாரினதும்‌, ஆண்டாள்‌ அம்மையாரினதும்‌ அன்பு நிலையை அளந்து கூறற்கு யான்‌ அருகனல்லன்‌. அத்தகைய அன்புக்‌ கல்விமணிகளைப்‌ பெற்றது நந்தமிழ்நாடு!

பழந்தமிழ்த்‌ தாயா வீரம்‌

பண்டைத்‌ தமிழ்‌ நாட்டில்‌ பெண்ணுரிமையும்‌, அவ்வுரிமைக்‌ குயிரனைய கல்வியும்‌, பிறவுமிருந்தமையான்‌, அந்நாளைய பெண்மக்கள்‌ வீரத்‌ தாய்மார்களாகவும்‌, வேறு பல அருஞ்‌ செயல்‌ நிகழ்த்தும்‌ அற்றம்‌ வாய்ந்தவர்களாகவும்‌ இருந்தார்கள்‌. பழந்‌ தமிழ்‌ நாட்டுப்‌ பெண்‌ மக்களின்‌ வீரச்‌ செயல்களும்‌ பிறவும்‌ போற்றற்குரியன. அவற்றுள்‌ சிலவற்றை ஈண்டுக்‌ குறிப்பிடுகிறேன்‌.
நரம்பு எழுந்து தோல்‌ வற்றிய முதியோள்‌ ஒருத்தியின்‌ ஒரு புதல்வன்‌ போர்க்கோலந்‌ தாங்கி அமர்க்களஞ்‌ சென்றனன்‌. “அவன்‌ போரிடைப்‌ புறமுதுகிட்டுப்‌ பட்டான்‌’ என்று பலர்‌ போந்து அம்முதியோள்பால்‌ அறைந்தனர்‌. அதுகேட்ட அன்னை, தனது முதுமையைச்‌ சிறிதுங்‌ கருதாது, வாள்‌ தாங்கி, “இவர்‌ கூற்று மெய்யாயின்‌, அவனுக்குப்‌ பாலூட்டிய எனது மார்பை இவ்வாளால்‌ அறுப்பேன்‌’ என்று எழுந்து, போர்க்களம்‌ புகுந்து, மைந்தனைத்தேடி. அண்டுக்‌ குவிந்து கிடந்த பிணங்களை வாளால்‌ பெயர்த்துப்‌ பெயர்த்துப்‌ பார்த்தனள்‌. அங்கே தன்னொரு மகன்‌ மருமத்திடை ஊறுதாங்கி, இறந்துபட்டிருத்‌தலைக்‌ கண்டு, அத்தாய்‌ அவனை ஈன்ற பொழுதினும்‌ பெரிதும்‌ உவந்தனள்‌. இவளல்லளோ வீரத்தாய்‌?

நரம்பெமுந்‌ துலறிய நிரம்‌பா மென்றோள்‌
முளரி மருங்கின்‌ முதியோள்‌ சிறுவன்‌
படையறிந்து மாறினன்‌ என்று பலர்கூற
மண்டமாக்‌ குடைந்தன னாயின்‌ உண்‌டஎன்‌
முலையறுத்‌ திடுவன்‌ யானெனச்‌ சினைஇக்‌
கொண்ட வாளொடு படுபிணம்‌ பெயராச்‌
செங்களற்‌ துழவவோள்‌ சிதைந்துவே றாகிய
படுமகன்‌ கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும்‌ பெரிதுவந் தனளே. – புறநானூறு.

மற்றுமொரு பெண்மணியின்‌ கொழுநன்‌ போர்க்களத்தில்‌ மறப்போர்‌ புரிந்து இன்னுயிர்‌ துறந்தான்‌. அவன்‌ உயிர்துறந்த மறுநாள்‌, மாற்றார்‌ செருப்பறை கேட்டு, அப்பெண்‌ மகள்‌, தன்‌னொரு மகனை அழைத்துத்‌ தலைமயிர்‌ நீவிப்‌ போருடை புனைந்து, வேல்‌ கைத்தந்து, “போர்க்களம்‌ போய்‌ வருக: என்று மகிழ்ச்சி யோடு வழிகூட்டி அனுப்பினாள்‌. இவளது வீரம்‌, கொழுநன்‌ பிரிவையும்‌ மறக்கச்‌ செய்தது!

கெடுக சிந்தை கடிதிவள்‌ துணிவே
மூதின்‌ மகளிர்‌ ஆதல்‌ தகுமே
மோனா ளுற்ற செருவிற்‌ கிவள்தன்னை
யானை எறிந்து களத்தொழிற்‌ தனனே
நெருந லுற்ற செருவிற்‌ கிவள்கொழுநன்‌
பெருநிரை விலங்கி யாண்டுப் பட்‌ டனனே
இன்றும்‌, செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக்‌ கொடுத்து வெளிதுவிரித்‌ துடீஇப்‌
பாறுமயிர்க்‌ குடுமி எண்ணெய்‌ நீவி
ஒருமக னல்ல தில்லோள்‌
செருமுக நோக்கிச்‌ செல்கென விடுமே. – புறநானூறு

கண்ணகி என்னும் கற்புக்‌ கடவுளைப்‌ பற்றிக்‌ கேள்வியுறாத தமிழர்‌ அரியர்‌. அப்பெருமாட்டியின்‌ வீரச்‌ செயலை விளம்பவும்‌ வேண்டுமோ! கண்ணகியும்‌ அவளது ஆருயிர்த்‌ தலைவன்‌ கோவலனும்‌ தாம்‌ பிறந்த சோழநாடு நீத்துப்‌ பாண்டிநாடு போந்து, ஆண்டு வாணிபஞ்‌ செய்ய வேண்டிக்‌ கண்ணகியின்‌ காற்‌ சிலம்பை விற்கக்‌ கோவலன்‌ சென்றபோது, அங்குக்‌ களவு போன பாண்டிமா தேவியின்‌ சிலம்பே அச்சிலம்பென்று, கோவலன்‌ மீது பழிசுமத்தி, மன்னன்‌ ஆணைப்படி, அவனைக்‌ கொலைஞர்‌ கொன்றனர்‌. அக்கொலைச்‌ செய்தி கேட்ட கண்ணகி, “என்னருமை நாயகன்‌ மீது பொல்லாத களவுப்பழி சுமத்தியா இவ்வரசு கொன்றது!” என்று வீரக்கிளர்ச்சியுடன்‌ எழுந்து, பாண்டியன்‌ வாயில்‌ நுழைந்து, அவன்‌ ஆணை பெற்று, அவனருகே சென்று, தன்‌ வரலாறு கூறித்‌, தன்‌ நாயகனைக்‌ கொன்றது கொடுங்‌ கோன்மை என்று வாதம்‌ புரிந்தாள்‌. “கள்வனைக்‌ கோறல்‌ கடுங்‌ கோலன்று” என்று மன்னன்‌ எதிர்வாதம்‌ புரிந்தான்‌. பின்னைக்‌ கண்ணகியின்‌ வலியுறுத்தல்‌ மீது, வேந்தன்‌ தன்‌ மனைவியின்‌ மற்றொரு காற்சிலம்பினையும்‌, கொலைக்குக்‌ காரணமாக நின்ற கண்ணகியின்‌ ஒரு காற்சிலம்பினையும்‌ உடைத்துப்‌ பார்த்ததும்‌ அதனுள்‌ பரலும்‌, இதனுள்‌ மணியும்‌ இருத்தல்‌ கண்டு, அவன்‌ “யானோ அரசன்‌, யானே கள்வன்‌” என்று நடுக்குற்று, அரியா சனத்தினின்றுங்‌ கீழே சாய்ந்து மாய்ந்தான்‌. இத்துணை அருவினை கண்ணகி என்ற பெண்வழி நிகழ்ந்தது! “நாயகன்‌ கொல்லப்பட்டான்‌; நமக்‌கென்ன இங்கு வேலை? தந்தை தாயர்க்கு அறிவித்து வீடு சேரலாம்‌” என்னுங்‌ கோமை எண்ணம்‌ கண்ணகியின்‌ உள்ளத்தில்‌ உறவில்லை. “நாயகனை அநியாயமாகக்‌ கொன்றது பிமை: என்று வேந்தன்முன்னே வாது செய்து, உண்மை கிளத்தி, அவன்‌ மனச்சான்றே அவனைக்‌ கொல்லு மாறு செய்ததன்றோ கண்ணகியின்‌ வீரம்‌! இத்தகைய வீரத்‌ தாய்மார்‌ வாழ்ந்த நாடு இத்தமிழ்‌ நாடு. வீரத்துக்கு அடிப்படை அந்நாளில்‌ பெண்‌ மக்களுக்கிருந்த உரிமையே யாகும்‌. உரிமை யில்லா இடத்தில்‌ வீர எழுச்சி ஏது?

தமிழ்ப்பெண்மணிகளின்‌ அறவொழுக்கம்‌

இத்தகைய வீரச்‌ செயல்கள்‌ மட்டும்‌ பண்டைத்‌ தமிழ்ப்‌ பெண்‌ மக்கள்பால்‌ பொலிந்திருக்கவில்லை, வேறுபல அறவொ முக்கங்களும்‌ அன்னாரிடை நிரம்பியிருந்தன. மாதவி என்ற மாதரசியைக்‌ கோவலன்‌ விடுத்துப்‌ பிரிந்த பின்னை அவள்‌ என்‌ செய்தனள்‌? அவள்‌ வேறுதுறை நண்ணாது, துற வொழுக்கம்‌ பூண்டு, நிறைகாத்து, அறம்‌ வளர்த்தாள்‌. அவள்‌ வயிற்றிற்‌ பிறந்த மணிமேகலை எத்துணை உலகச்‌ சோதனைகளைக்‌ கடந்து நின்றனர்‌! மணிமேகலை அறவெொழுக்கத்துக்கு ஓர்‌ எடுத்துக்‌ காட்டாகவும்‌ நிற்கிறார்‌. அவர்‌, உயிர்கள்‌ நலங்‌ கருதித்‌ தொண்டு செய்ததும்‌, சிறைப்பட நேர்ந்தபோது அச்‌சிறைக்‌ கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதும்‌, சமயக்‌ கணக்கர்‌ உரை கேட்டதும்‌, பிறவும்‌ மணிமேகலை என்னுஞ்‌ சீரிய தமிழ்‌ நூலில்‌ மிளிர்தல்‌ காண்க.
நாயகன்‌ தவறி நடப்பின்‌, அவனை அறிவால்‌ – அன்பால்‌ – திருத்தும்‌ பெருந்தகைமை அந்நாளைய பெண்மக்களுக்கு இருந்தது. சிலப்பதிகாரக்‌ கண்ணகியல்லாத மற்றொரு கண்ணகி, வழுக்கிய தன்‌ கணவனைப்‌ புலவர்‌ வாயிலாகச்‌ செம்மைப்‌ படுத்தியதைப்‌ பழைய நூல்களிற்‌ பார்க்க. இச்செயல்கள்‌ என்ன காட்டுகின்றன? அக்காலப்‌ பெண்மக்களின்‌ கல்வி அறிவு ஒழுக்கம்‌, இவைகட்கெல்லாங்‌ காரணமாக நிற்கும்‌ உரிமை முதலியவற்றைக்‌ காட்டுகின்றன.

நாயன்மார்‌ காலம்‌

நாயன்மார்‌ காலத்தும்‌ பெண்ணுரிமைக்குப்‌ பழுது நேர்ந்த தென்று சொல்வதற்கில்லை. நாயன்மாரின்‌ அருமை மனைவிமார்‌ நிகழ்த்திய பெருஞ்செயல்கள்‌ பல. அவற்றைப்‌ பெரிய புராணம்‌ விரித்துக்‌ கூறுகிறது. அப்பெண்மணிகளின்‌ செயல்களை ஈண்டு விரிக்கில்‌ அவை பெருகும்‌. அன்பிற்‌ சிறந்த திருநீலகண்ட நாயனார்‌ சிற்றின்பத்துறையில்‌ எளியராகியதை உணர்ந்த அவர்தம்‌ இல்லக்கிழத்தியார்‌, அவரை எவ்வழியில்‌ திருத்தினார்‌ என்பது கருதற்பாலது. பிற சமயம்‌ தழுவிய தம்பியாரை மீண்டும்‌ சைவ சமயத்தில்‌ கொணர முயன்றவர்‌ யாவர்‌? ஒரு பெண்மணி யல்லரோ?

தமிழ்நாட்டில்‌ பெண்வழி மற்றுமோர்‌ அருஞ்செயல்‌ நிகழ்ந்திருக்கிறது. பெண்‌ பெருமைபேச அந்நிகழ்ச்சியை ஈண்டுக்‌ குறிக்கின்றேனே யன்றிச்‌ சமய நோக்குடன்‌ அதை ஈண்டுக்‌ குறிக்கின்றேனில்லை.

பாண்டிமாநாட்டில்‌ ஒருபோது சமணசமயம்‌ பெருகிச்‌ சைவசமயம்‌ அருகிற்று. அவ்வேளையில்‌ மன்னனும்‌ அச்சமய நெறி நின்றான்‌. “அரசன்‌ எவ்வழி அவ்வழி குடிகள்‌” என்றபடி, குடிமக்கள்‌ பலரும்‌ அமண்‌ சமயம்‌ புகுந்தனர்‌. சொக்கலிங் கத்தையும்‌, மீனாட்சியையும்‌ தொழுவோர்‌ அரியராயினர்‌. இந்‌ நிலையில்‌ அவ்விடத்தில்‌ மீண்டும்‌ சைவசமயம்‌ தழைக்க உழைத்‌ தவர்‌ யாவர்‌? ஒரு மங்கையர்க்கரசியாரே. அம்மங்கையர்க்கரசியார்‌ எவர்‌? சமணக்‌ கடவுட்டொமுத பாண்டியன்‌ தேவியார்‌. நாயகன்‌ வேறு சமயம்‌ புகுந்தும்‌, நாடும்‌ வேறு சமயம்‌ புகுந்தும்‌, தனதறி விற்குப்‌ பொருத்தமெனத்‌ தோன்றிய ஒரு கொள்கையினின்றும்‌, நாயகன்‌ பொருட்டாதல்‌ – நாட்டின்‌ பொருட்டாதல்‌ – சிறிதும்‌ பிறழாது, உறுதியில்‌ நின்ற அளவோடு நில்லாது, திருஞான சம்பந்த சுவாமிகளைத்‌ தனது நாட்டிற்கு வரவழைத்து, மீண்டும்‌ நாயகனையும்‌, நாட்டையும்‌ தனது கொள்கைவழி, ஒரு பெண்‌ தெய்வந்‌ திருப்பியதெனில்‌, அப்பெண்‌ தெய்வத்தின்‌ உரிமை உணர்வையும்‌ கல்வி அறிவையும்‌ என்னென்று புகழ்வது? மங்கையர்க்கரசியார்‌ என்ற ஒரு பெண்மணி அன்றில்லா திருப்பரேல்‌, சைவசமயம்‌ அன்றே தமிழ்நாட்டில்‌ இறந்துபட்டி ருக்கும்‌. ஒரு சமயத்தை நிலை பெறுத்திய பெண்மணியை நமது தமிழ்நாடு பெற்றிருந்தது!
அந்நாளில்‌ வதிந்த ஆண்மக்களும்‌ பெண்மணிகளின்‌ சிறப்பைக்‌ கூறத்‌ தியங்குவதில்லை. பெண்ணுரிமை கடியப்பட்ட பின்னர்ப்‌ பெண்ணின்‌ சிறப்பை ஆண்மகன்‌, தான்‌ புகழல்‌ பாவமெனக்‌ கருதினன்போலும்‌! “பெண்‌ அடிபடப்‌ பிறந்தாள்‌” என்றன்றோ பின்னே போந்த ஆண்‌ பெரியோர்‌’ எழுதி வைத்தனர்‌! இவர்கள்‌ மக்களா! பண்டைக்கால ஆண்மக்களோ பெண்‌ சிறப்பை மகிழ்ச்சியோடு புகழ்ந்தார்கள்‌. கடவுளைப்‌ பெண்‌ ஆண்‌ வடிவாக்கொண்டு, “பெண்ணுடன்‌ கூடிய கடவுள்‌” என்று அவரை எங்கணும்‌ பாடிய திருஞானசம்பந்தப்‌ பெருந் தகையாரும்‌, பெண்ணுக்குரிய அமைதிநிலை எய்தி, அதில்‌ விளங்கும்‌ அன்பு ததும்பிக்‌ கரைபுரண்டு தமிழ்ப்பாக்களாக ஓடுதற்கு நிலைக்களனாயிருந்த சேக்கிழாரும்‌, மேற்போந்த மங்கையர்க்கரசியாரைச்‌ செவ்விய செவ்விய தீந்தமிழ்‌ மலரால்‌ தூவிப்‌ போற்றியிருக்கின்றனர்‌. பெண்‌ அடிமை என்னும்‌ உணர்‌ வில்லா நாளில்‌, பெண்ணைக்‌ காழ்ப்பின்றி ஆண்மக்கள்‌ புகழ்ந்‌திருக்கிறார்கள்‌.

மங்கையர்க் கரசி வளவர்கோன்‌ பாவை
வரிவளைக்‌ கைம்‌மட மானி
பங்கயச்‌ செல்லி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும்‌ பரவப்‌
பொங்கழ லுருவன்‌ பூதநா யகனால்‌
வேதமும்‌ பொருள்களும்‌ அருளி
அங்கயற்‌ கண்ணி தன்னொடு மமாநத
ஆலவா யாவது மிதுவே. -திருஞானசம்பந்தர்‌

மங்கையா்க்குத்‌ தணியரசி எங்கள்‌ தெய்வம்‌
வளவர்திருக்‌ குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்‌
தென்னா்குலப்‌ பழிதீர்த்த தெய்வப்‌ பாவை
எங்கள்‌பிரான்‌ சண்பையர்கோன்‌ அருளி னாலே
இருத்தமிழ்நா டுற்றஇடர்‌ நீக்கித்‌ தங்கள்‌
பொங்கொளிவெண்‌ திருநீறு பரப்பி னாரைப்‌
போற்றுவார்‌ கழலெம்‌மாற்‌ போற்ற லாமே. – சேக்கிழார்‌

இவர்கள்‌ மங்கையர்க்கரசியாரை எவ்வாறு போற்றியிருக்கிறார்கள்‌ என்பதை அன்பர்கள்‌ உன்னுவார்களாக.

பெண்‌ அடிமைப்பட்ட காலம்‌

வேத காலத்திலும்‌, பழந்தமிழர்‌ காலத்திலும்‌ பெண்மக்கள்‌ தங்கள்‌ உரிமைவழி நின்று கடனாற்றினார்கள்‌. அவ்வுரிமை இடைக்காலம்‌ வரை தொடர்ந்து நின்றது. பின்னை நாளில்‌ அதாவது ஸ்மிருதி காலத்தில்‌ பெண்மக்கள்‌ உரிமை நமது நாட்டில்‌ கடியப்பட்டது. வேறு சில இடங்களிலும்‌ அவ்வுரிமை கடியப்பட்டதெனச்‌ சரித்திரஞ்‌ சாற்றுகிறது. பெண்ணுரிமை கடிந்து கூறும்‌ ஸ்மிருதிகளையும்‌, அவைகளை யொட்டிப்‌ பின்னை எழுந்த நூல்களையும்‌ நோக்குழிப்‌ பெண்ணுரிமையை அரிக்கும்‌ அநியாயக்‌ கட்டுப்பாடுகளை அவைகளிற்‌ காணலாம்‌. அவைகளை எழுதிய ஆண்மக்கள்‌ நெஞ்சம்‌ கல்லோ இரும்போ அறிகிலேன்‌.
முதலாவது பெண்கல்வி வாயிலே பாவிகள்‌ மண்ணிட்டார்‌கள்‌. பலவழியிலும்‌ ஆண்மகனை யொத்தும்‌ – சிலவற்றில்‌ மேம்‌பட்டும்‌ – நிற்கும்‌ பெண்மகள்‌, தன்‌ வாழ்விற்கு இன்றியமையாத கல்வி பெறலாகாதென்னுங்‌ கொடிய கட்டுப்பாட்டினுங்‌ கொடிய தொன்றிருக்குமோ? பண்டை நாளில்‌ வேதவேதாந்தத்‌ துறையில்‌ ஈடுபட்டுப்‌ பலகலைகளையும்‌ எழுதிய பெண்‌ மக்களின்‌ வழிவழி வரும்‌ பெண்மணிகளா படித்தல்‌ கூடாது? இது பெண்‌ மக்களை விலங்காக்கித்‌ தங்கள்‌ வழியில்‌ ஆட்ட வேண்டுமென்று ஆண்மக்கள்‌ கொண்ட தீய எண்ணமன்‌றி வேறு என்ன? “விலங்கொடு மக்களனையர்‌ இலங்கு நூல்‌ – கற்றாரோ டேனை யவர்‌” என்றார்‌ திருவள்ளுவனார்‌.

மக்கள்‌

ஈண்டு “மக்கள்‌” என்றது ஆண்மக்களையும்‌ பெண்மக்‌களையும்‌ குறிப்பதென்க. பெண்மக்களைப்‌ பிரித்து ஆண்மக்க ளென்று பொருள்‌ கொண்டது தற்கால வழக்கு. திருவள்ளுவர்‌ காலத்தில்‌ ஆண்மக்களைப்‌ போலவே பெண்‌ மக்களும்‌ படித்து வந்தார்கள்‌. அதனால்‌ அவர்‌ “மக்கள்‌” என்று பொதுப்படக்‌ கூறினர்‌. அறிவு விளக்கத்துக்கு இன்றியமையாத கல்வியைப்‌ பெண்‌ பெறாதொழிவளேல்‌ அவள்‌ வாழ்வு என்னாம்‌? அவள்‌ பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பாள்‌? அவள்‌ உலகப்‌ பொறுப்பைத்‌ தாங்குந்‌ தாயாக அல்லவோ இருக்கிறாள்‌? இந்நாளில்‌ நமது நாட்டில்‌ வான்மீகுிகள்‌, வியாசர்கள்‌, நக்கரர்கள்‌, திருவள்ளுவர்கள்‌ தோன்றாமைக்குக்‌ காரணம்‌ என்னை? தாயைக்‌ கல்வி இழக்கச்‌ செய்து, அவள்‌ உரிமையை மகன்‌ கடிந்ததன்றி வேறென்னை? பயிரின்‌ நலன்‌ நிலத்தின்‌ பான்மையைப்‌ பொறுத்ததன்றோ? பின்னை நாளில்‌ பெண்‌ மக்களுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடுகள்‌, இந்நாளில்‌ நாட்டின்‌ வளர்ச்சிக்கே கேடு விளைத்திருக்கின்றன.

இடைச்செருகல்‌ – ஸ்மிருதிகாலம்‌

“பழைய நூல்களிலும்‌ பெண்‌ கல்வி மறுப்பு உண்டு” என்று சிலர்‌ சில உரைகளைக்‌ காட்டுவர்‌. அந்நூல்களை முற்றும்‌ ஆய்ந்தால்‌ பல இடங்களில்‌ பெண்கல்வி பேசப் பட்டிருக்கும்‌. ஊன்றி நோக்கினால்‌ பெண்கல்வி மறுப்புக்கள்‌ ஓட்டுப்போல்‌ தோன்றும்‌. பெண்‌ படித்தலாகாதெனுங்‌ கொடிய கட்டுப்பாடு எழுந்த நாளில்‌, அக்கட்டுப்பாட்டை விதித்தவர்‌, தம்‌ கருத்தைப்‌ பழைய நூல்களினுஞ்‌ செருகிவிட்டனர்‌. இந்நஞ்சு பல பழைய நூல்களிலும்‌ இறங்கியிருக்கிறது. இடைச்‌ செருகலில்‌ நமது நாடு பேர்‌ பெற்றது. இப்பொழுதும்‌ பழைய நூல்களை அச்சிடுஞ்‌ சிலர்‌, இடை இடையே தங்கருத்துக்-கேற்பச்‌ சில மாறுதல்‌ செய்கின்றனர்‌. பெண்‌ கல்வி மறுப்பு, பழைய நூல்களில்‌ காணப்‌ படுமேல்‌, அதனை இடைச்செருகல்‌ என்று அறிஞர்‌ ஒதுக்கு வாராக. பெண்கல்வி மறுப்பு ஸ்மிருதி காலத்திலேயே ஏற்பட்டது. வேறு பல கட்டுப்பாடுகளும்‌ ஸ்மிருதிகளில்‌ உண்டு. இந்நாளில்‌ அவை மாற்றப்பெறல்‌ வேண்டும்‌. இல்லையேல்‌ நாட்டுக்கு நலன்‌ விளையாது.

பெண்‌ ஆண்‌ மூளைநிலை

ஆண்மக்களைப்‌ போலப்‌ பெண்மக்கள்‌ படித்தலாகாது என்னுங்‌ கட்டுப்பாடு எற்றுக்கு? கல்விப்‌ பயிற்சிக்குரிய மூளை பெண்மக்களுக்கு இல்லையோ? அவர்கட்கும்‌ ஆண்டவன்‌ மூளையைப்‌ படைத்திருக்கிறான்‌. ஆண்மக்கள்‌ மூளையினும்‌ பெண்‌ மக்கள்‌ மூளை மென்மையுடையது என்பதைச்‌ சோதனையிற் காணலாம்‌. நுட்பங்களை விரைவில்‌ ஈர்க்கத்தக்க ஆற்றல்‌ மெல்லிய மூளைக்கு உண்டு. ஆண்மக்களினும்‌ பெண்‌ மக்கள்‌ நுண்ணிய பொருளை விரைவில்‌ உணரும்‌ ஆற்றல்‌ பெற்றிருத்தல்‌ அறிஞரால்‌ ஒப்பப்பட்ட உண்மை. ஆண்மக்கள்‌ பள்ளிக்கூடங்களிலும்‌, பெண்மக்கள்‌ பள்ளிக்கூடங்களிலும்‌ அடியேன்‌ ஆசிரியனாயிருந்தபோது, இவ்வுண்மையை அநுபவத்தில்‌ கண்டிருக்‌கிறேன்‌. இத்தன்மை சில ஆண்மக்களிடத்திலும்‌ உண்டு. அவர்கள்‌ பெண்ணியல்பு வாய்ந்தவர்கள்‌. பெண்ணியல்பு இன்னதென்‌பதைப்‌ “பெண்ணின்‌ முதன்மை” என்னுந்‌ தலைப்பின்கீழ்‌ விளக்கியிருக்கிறேன்‌.

அமைதியில்‌ அறிவு விளக்கம்‌

இன்னும்‌ ஒருவழிபற்றிப்‌ பெண்ணறிவின்‌ நுட்பம்‌ கூறலாம்‌. அமைதியில்‌ அறிவு விளக்கம்‌ உண்டு என்பது எவரும்‌ ஒப்பத்‌ தக்கது. நெஞ்சில்‌ அமைதி நிலவா வேளையில்‌ எந்நூலையும்‌ வாசிக்க மனமெழுவதில்லை. நூலை எடுத்து வாசிப்பினும்‌ பொருள்‌ பதிவதில்லை. இஃது அநுபவம்‌. இரவு உறங்கி, வைகறையில்‌ எழும்போது, நெஞ்சில்‌ அமைதி நிலவுகிறது. அவ்வேளையில்‌ அறிவு, தாண்டவம்‌ புரிகிறது. அந்நேரத்தில்‌ அரிய பொருளெல்லாம்‌ எளிதில்‌ விளங்குகின்றன. பின்னர்‌ உலகியலில்‌ நுழைந்ததும்‌ அமைதி குலைகிறது; அறிவு விளக்கமும்‌ குன்றுகிறது; நுண்ணிய பொருளைச்‌ சிந்திக்கவும்‌ இயல்வதில்லை. அமைதிக்கும்‌ அறிவு விளக்கத்துக்கும்‌ உள்ள தொடர்பு ஈண்டுக்‌ கருதற்பாற்று.

அமைதியும்‌ பெண்மையும்‌

அமைதி ஆண்மக்கட்கு அதிகமுண்டா? பெண்மக்கட்கு அதிகமுண்டா? அமைதி பெண்மக்கட்கு அதிகமிருத்தல்‌ கண்கூடு. பெண்மையைக்‌ “கட்புலனாயதோர்‌ அமைதித்‌ தன்மை” என்றார்‌ ஆசிரியர்‌ நச்சினார்க்கினியர்‌. கண்ணுக்குப்‌ புலனாகாத அமைதி, பெண்‌ வடிவாகிக்‌ கண்ணுக்குக்‌ காட்சியளிக்கிறது என்பது அதன்‌ கருத்து. அமைதியே பெண்ணெனத்‌ திரண்டு விளங்குகிறதெனில்‌, பெண்மக்களின்‌ அறிவு விளக்கத்தைப்‌ பற்றித்‌ தெளிவு செய்ய வேண்டுவதில்லை. அதற்கேற்ற மூளையும்‌ படைப்பில்‌ அவர்கட்கு அமைந்திருக்கிறது.

கலைமகள்‌ நுட்பம்‌

அறிவு, அமைதியில்‌ உறைதலான்‌, அறிவிற்குரிய கல்வியை அமைதி குறிக்கும்‌ ஒரு பெண்‌ கடவுளாக நாம்‌ போற்றுவதும்‌ உன்னத்தக்கது. கலைமகள்‌ நுட்பம்‌, அமைதியுடைய பெண்மையில்‌ அறிவு உறைதலை விளக்குவதாகும்‌. கல்விக்‌ கடவுளைப்‌ பெண்ணெனக்‌ கொண்ட நமது நாடு, பின்னைப்‌ பெண்‌ கல்வியை மறுப்பது பொருளற்ற தொன்றாகும்‌. பின்னை நாளில்‌ ஆண்‌ மக்கள்‌ வகுத்த கொடுஞ்‌ சட்டங்கள்‌ நாட்டையுங்‌ குறை கூறச்‌ செய்கின்றன.

பெண்மக்கள்‌ படித்தலாகாதென்பது இயற்கை நோக்க மாயின்‌, பெண்மக்கட்குப்‌ படிப்பு வருதல்‌ கூடாது. பெண்மக்கள்‌, ஆண்மக்களைப்‌ போலவே கல்வி பயின்று, தேர்தலில்‌ வெற்றி பெறுவதையும்‌, பட்டம்‌ பெறுவதையும்‌, நூல்கள்‌ எழுதுவதையும்‌, மேடைகளில்‌ பேசுவதையும்‌, கல்லூரிகளிலும்‌ மற்றக்‌ கழகங்களிலும்‌ தலைமை தாங்கி வினைகள்‌ முடிப்பதையும்‌, பிறவற்றையும்‌ கண்ணாரக்‌ காண்கிறோம்‌. கல்வித்துறை, பெண்‌ மக்கட்கு இயற்கையில்‌ அரண்‌ செய்வதன்றி முரண்‌ செய்வதில்லை. பெண்கல்வியை மறுப்பது, இறைவன்‌ படைப்பு நோக்கை இடர்ப்படுத்துவதாகும்‌.

பேதைமை விளக்கம்‌

“பேதைமை என்பது மாதர்க்கு இயற்கையாய்‌ அமைந்‌திருப்பது” என்று சிலர்‌ கூறிப்‌ பெண்கல்வியை மறுக்கின்றனர்‌. அன்னார்‌, “பேதைமை என்பது மாதர்க்கணிகலம்” என்னும்‌ ஒளவையார்‌ திருவாக்கையும்‌ காட்டுகின்றனர்‌. “பேதைமை” என்பது பல பொருள்‌ ஒரு சொல்‌. அஃது அறியாமை என்னும்‌ பொருளைப்‌ பெரிதும்‌ வழக்கில்‌ பெற்றிருக்கிறது. “பேதைமை” என்னுஞ்‌ சொற்கு, நக்கீரனார்‌, “கொளுத்தக்‌ கொண்டு கொண்டது விடாமை’ என்று பொருள்‌ விரித்திருத்தல்‌ காண்க. இப்பொருள்‌ அறிவின்மை- மடமை முதலிய கருத்துக்களைத்‌ தெரிவிப்பதா என்று வினவுகிறேன்‌. பெண்‌ கல்வி மறுக்கப்பட்ட நாள்‌ தொட்டுப்‌ பேதைமை, பெண்ணின்‌ அறியாமை குறிக்குஞ்‌ சிறப்புச்‌ சொல்லாகக்‌ கொள்ளப்பட்டது. இப்பொருள்படப்‌ பின்னாளில்‌ ”“****பெண்ணறிவென்பது பெரும்‌ பேதைமைத்தே” என்பது போன்ற மொழிகளும்‌ பிறக்கலாயின. அறிவின்மைப்‌ பொருள்‌ அளிக்கும்‌ பேதைமை எல்லார்க்கும்‌ பொதுவா யிருப்பது. அஃது ஒருபாலார்க்கே உரித்து என்று சொல்வது தவறு.

“பேதைமை” என்றோர்‌ அதிகாரம்‌ திருக்குறளில்‌ இருக்கிறது. அது பெண்ணுலகை மட்டுமா குறித்து நிற்கிறது? சில சொற்கள்‌ காலத்துக்கேற்ற பொருள்‌ பெறுவதுண்டு. அச்சொற்களுள்‌ “பேதைமை” என்பதும்‌ ஓன்று. “பேதைமை” என்னுஞ்‌ சொற்குப்‌ பழந்தமிழர்‌ கொண்ட பொருளை ஊன்றிப்‌ பார்க்க.

சீரிய பொருளுடைய ’பேதைமை’ மாதர்க்கணிகலனா யிருத்தலை ஒளவையார்‌ மொழிந்தனர்‌. இஃதென்ன குற்றம்‌? இனிப்‌ “பேதைமை” என்னுஞ்‌ சொல்லைப்‌ பழம்‌ பொருள்பட ஆட்சியிற்‌ கொணருமாநு புலவர்களை வேண்டுகிறேன்‌. பெண்‌ கல்வியை மறுத்துக்‌ கூறும்‌ பிற்காலப்‌ பழமொழிகளும்‌, பிற இஹழிவுகளும்‌ ஆட்சியற்று ஓழிவனவாக.

பெண்களுக்கு விதிக்கப்பெற்ற கட்டுப்பாடுகள்‌

பின்னை நாளில்‌ ஆண்மக்கள்‌, பெண்மக்களின்‌ கல்வி யுரிமையை மட்டுமா கெடுத்தார்கள்‌? வேறு பல பிறப்புரிமைகளையும்‌ அவர்கள்‌ பறித்திருக்கிறார்கள்‌. அந்நாளில்‌ பெண்‌ மக்களுக்கு விதிக்கப்‌ பெற்ற கட்டுப்பாடுகளை எண்ண எண்ண உள்ளம்‌ உருகுகிறது; கண்ணீர்‌ பெருகுகிறது. அக்கால அறிஞர்களின்‌ வன்கண்‌ இருந்தவாறென்னே! என்னே! பெண்‌ உற்ற வயதடைந்து பகுத்தறிவு பெறாமுன்னம்‌ ஓருவனை மணத்தல்‌, கைம்மை எய்தினால்‌ மொட்டையடித்து அவளை மானபங்கஞ்‌ செய்தல்‌, அவளைப்‌ பசியால்‌ மெலிவித்தல்‌, பல பெண்கள்‌ ஒருவனை மணத்தல்‌, பெண்விபசாரத்துக்கு மட்டுந்‌ தண்டனை விதித்தல்‌, ஆடவன்‌ எச்சிலைத்‌ தின்னுமாறு மகளிரை வலியுறுத்தல்‌, இன்னோரன்ன பிற கட்டுப்பாடுகள்‌ பெண்ணுலகின்‌ உயிர்நாடியைப்‌ போக்கிவிட்டன. இக்கட்டுப்‌ பாடுகள்‌ அணுலகிற்கு உண்டோ? இல்லை! அந்தோ! என்ன கொடுமை!

ஆண்மகன்‌ மனைவியை இழந்தால்‌, அவன்‌ எவ்வளவு வயதான கிழவனாயிருப்பினும்‌, ஒரிளங்‌ கட்டழகியை மணந்து இனிது வாழலாம்‌! இளம்‌ பெண்ணொருத்தி கணவனை இழந்தாலோ, அவள்‌ மொட்டையடித்து, உண்டி கெடுத்து, உலகைத்‌ துறத்தல்‌ வேண்டும்‌! என்ன அநியாயம்‌! விதி என்றால்‌ இருபாலார்க்கு மன்றோ இருத்தல்‌ வேண்டும்‌? ஒருவன்‌ பல பெண்களை மணந்து கொள்ளும்‌ உரிமை பெற்றிருக்கிறான்‌.! அநியாயம்‌! அநியாயம்‌! ஒருத்தி ஒருவனோடு வாழ்தலே அறவெொழுக்கம்‌. அவ்வாறே ஒருவனும்‌ ஒருத்தியுடன்‌ வாழ்தல்‌ வேண்டும்‌. “ஒருவன்‌ பல பெண்களை மணக்கலாம்‌” என்னும்‌ விதி, பெண்ணுலகை இழிவுபடுத்துவதாகும்‌. பெண்‌, தவறி நடந்தால்‌ தண்டனை! ஆண்‌, தவறி நடந்தாலோ தண்டனை யில்லை! இஃது அநீதி! தண்டனை இருபாலார்க்கும்‌ விதிப்பது நீதியாகும்‌.

பிறப்பில்‌ ஆணாகப்‌ பிறந்தால்‌ எல்லாஞ்‌ செய்யலாம்‌! பெண்ணாகப்‌ பிறந்தார்க்கு மட்டும்‌ விதிகள்‌ – கட்டுப்பாடுகள்‌ – தண்டனைகள்‌! ஆண்டவனே! கொடுமை பொறுக்க முடியவில்லை. உன்னை நோக்கி முறையிடுகிறேன்‌.

அடியேன்‌, பெண்மக்கள்‌ கூடா ஒழுக்கத்தைப்‌ போற்றிக்‌ கூறுவதாகவாதல்‌, துணை நிற்பதாகவாதல்‌ எவருங்‌ கருதலாகாது. பெண்‌ தவறுதலுக்கு விதிக்கப்‌ பெற்றுள்ள தண்டனைகள்‌, ஏன்‌ ஆண்‌ தவறுதலுக்கும்‌ விதிக்கப்படவில்லை என்பதே எனது கேள்வி. பெண்ணுலகிற்கு இடைநாளில்‌ நேர்ந்த சிறுமையை ஈண்டு எடுத்துக்-காட்டவேண்டும்‌ என்னும்‌ அவாவால்‌ இவ்வுரைகள்‌ பகரலானேன்‌. ஒரு பாதியாயுள்ள பெண்ணின்‌ சிறுமை, மற்றொரு பாதியாயுள்ள ஆணையுந்தாக்கி, முடிவில்‌ வாழ்வையும்‌ நாட்டையும்‌ குலைக்குமென்பதை ஆணுலகம்‌ இனியாதல்‌ உணர்ந்து நடப்பதாக.

ஒழுக்கம்‌ இருபாலார்க்கும்‌

“உலகை ஈன்று வளர்க்கும்‌ தாய்‌ பெண்ணாகலின்‌, அவளது ஓழுக்கங்காக்க வேண்டிச்‌ சில கட்டுப்பாடுகள்‌ கோலப்‌ பட்டனவேயன்றி, பெண்ணைச்‌ சிறுமைப்படுத்தல்‌ வேண்டும்‌ என்னும்‌ நோக்கோடு கட்டுப்பாடுகள்‌ கோலப்படவில்லை” என்று சில அறிஞர்‌ திறம்பட வாதிக்கின்றனர்‌. இது போலி வாதமன்றி நியாயவாதமாகாது. பெண்‌ ஓழுக்கம்‌ காத்தல்‌ வேண்டும்‌ என்பதை ஒரு முறைக்குப்‌ பன்முறை யான்‌ வலியுறுத்துகிறேன்‌/ அவ்வொழுக்கம்‌ ஆணுலகிற்கும்‌ வேண்டற்‌ பாலதென்று அவ்வளவில்‌ வலியுறுத்துகிறேன்‌. ஆணுலகில்‌ தூய்மை இல்லை எனில்‌, பெண்ணுலகில்‌ தூய்மை எங்ஙனம்‌ ஏற்படும்‌? தயொமுக்கமுடைய ஒருவன்‌, நல்லொழுக்கமுடைய ஒருத்தியின்‌ உடல்‌ நலத்தைக்‌ கெடுத்து, அவள்வழித்‌ தோன்றும்‌ பிள்ளையையும்‌ நோய்வாய்ப்‌ படுத்துகிறானல்லனோ? அதலால்‌, ஒழுக்கத்‌ தூய்மை இரு பாலார்க்குந்‌ தேவை. ஓழுக்கத்‌ தவறுதலுக்குத்‌ தண்டனை விதிக்கப்படின்‌, அத்தண்டனை இரு பாலார்க்கும்‌ விதிக்கப்படல்‌ வேண்டும்‌.

ஒருத்திக்கு ஒருவன்‌

ஆண்‌, தன்‌ விருப்பப்படி திரிதற்குக்‌ கொடிய அடக்கு முறைகளைப்‌ பெண்ணிற்கு விதித்தனனோ என்னவோ தெரியவில்லை. ஆண்மக்கள்‌, தாங்கள்‌ களியாட்டில்‌ வரம்புமீறி இறங்குதற்‌ பொருட்டுப்‌ பெண்மக்கள்‌ உரிமை தடிந்து, அவர்‌களைப்‌ பொம்மைகளாக்கி விட்டார்கள்‌ போலும்‌! ஒவ்வோர்‌ ஆண்‌ மகனும்‌ ஒவ்வொரு பெண்மகளோடு வாழும்‌ அற ஒழுக்கத்தில்‌ நிற்பனேல்‌, உலகிடை வரைவின்‌ மகளிர்‌ கூட்டம்‌ தோன்றுதற்கே இடமிராது. ஆண்மகன்‌ பல மகளிரை மணத்தலும்‌, பரத்தையருடன்‌ அடலும்‌ வரம்பு கடந்த நடத்தைகளாகும்‌. ஒரு பெண்ணை வீட்டிற்‌ சிறைப்படுத்தி, மற்றப்‌ பெண்களோடு கூடி வாழும்‌ உரிமை ஆண்மகனுக்கு எங்கிருந்து வந்தது? ஆண்மகன்‌ கொடுங்கோன்மையால்‌ பெண்ணுரிமை தடிந்து தன்‌ விருப்பப்‌படி. ஆட்சி புரிகிறான்‌!
ஒருவன்‌ ஒருத்தியுடனும்‌, ஒருத்தி ஒருவனுடனும்‌ வாழ்தல்‌ இயற்கை. இது குறித்துப்‌ பின்னே விரித்துக்‌ கூறுவேன்‌. இரு பாலாரிடத்தும்‌ தீயொழுக்கம்‌ கூடாதென்பது எனது உள்ளங்‌ கிடக்கை. கட்டுப்பாடு எனில்‌, அஃது இருசாரார்க்கும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. ஒருவர்‌ உரிமையை மற்றொருவர்‌ கட்டுப்படுத்தல்‌ கூடாதென்பதை மீண்டும்‌ வலியுறுத்தி மேற்செல்கிறேன்‌.

திருவள்ளுவர்‌ உள்ளம்‌

இல்வாழ்க்கையை வலியுறுத்திச்‌ சென்ற திருவள்ளுவனாரும்‌, பெண்ணுலகிற்கு மட்டும்‌ கற்பை வலியுறுத்தியுள்ளாரென்றும்‌, அணுலகிற்கு அதை வலியுறுத்தா தொழிந்தா-ரென்றும்‌ சிலர்‌ கூற யான்‌ கேட்டிருக்கிறேன்‌. அவர்தங்‌ கூற்று, திருவள்ளுவர்‌ கருத்துக்கு முற்றும்‌ மாறுபட்டது. இதைத்‌ திருக்குறளுக்கு யான்‌ கண்ட விரிவுரையில்‌ ஒல்லும்‌ வகை விளக்கியுள்ளேன்‌. “ஆண்‌ மகனும்‌ நிறைகாத்து வாழ்தல்‌ வேண்டும்‌” என்பதே திருவள்ளுவர்‌ உட்கிடக்கை. அவ்வக்கால நிலைமைக்கேற்றவாறு உரை கண்டு போகும்‌ உரையாசிரியர்‌ கூற்றை முதல்‌ பொருளாகக்‌ கோடலா காது. ஸ்மிருதிகளை ஆராய்ந்து, அவற்றில்‌ மூழ்கிக்கிடப்பவர்‌, திருக்குறளுக்கு உரை காணப்புகுந்தால்‌, அவரது ஸ்மிருதி மனத்‌ துக்கு, ஸ்மிருதிப்‌ பொருளே புலனாகும்‌. அம்மனங்‌ கொண்டு சிலரால்‌ வரையப்‌ பெற்ற உரைகளை முற்றுங்‌ கோடல்‌ தவறு.

திருவள்ளுவர்‌ ஆண்மக்களையும்‌ நிறைகாக்குமாறு வற்‌ புறுத்தியுள்ளார்‌. அக்கருத்தொளிருஞ்‌ சில குறள்‌ வருமாறு:

பாறியஞ்சிப்‌ பாத்தூ ணுடைத்தாயின்‌ வாழ்க்கை
வழியெனஞ்ச லெஞ்ஞான்று மில்‌.

அன்பு மறனு முடைத்காயி னில்வாழ்க்கை
பண்பும்‌ பயனு மது.

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாறிறிற்‌ புறததாற்றிற்‌
போஒய்ப்‌ பெறுவ தெவன்‌.

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்‌
முயல்வாரு ளெல்லாந்‌ தலை.

அறனெனப பட்டதே யில்வாழ்க்கை யஃதும்‌
பறன்பழிப்ப தில்லாயி னன்று.

நலக்குரியார்‌ யாரெனில்‌ நாமநீர்‌ வைப்பில்‌
பிறர்க்குரியாள்‌ தோள்தோயா தார்‌.

இக்குறள்களின்‌ பொருள்களை, இடைக்கால உரைகட்கு அடிமையாகாது, நடுநிலைக்‌ கண்கொண்டு நோக்குமாறு அன்பர்‌களை வேண்டுகிறேன்‌. இடைக்கால உரைகளைக்‌ கொண்டு திருவள்ளுவனாரையும்‌ சிலர்‌ குறை கூறுகின்றனர்‌.

செயற்கைக்‌ கட்டுகள்‌

சில இடங்களில்‌ பெண்ணுக்கு ஆன்மா இல்லை என்றும்‌, பெண்‌ ஆணிடத்திருந்து படைக்கப்பட்டாள்‌ என்றும்‌, பெண்‌ பிறவிக்கு வீடுபேறில்லை என்றும்‌ நூல்களில்‌ எழுதப்பட்டிருக்‌கின்றன. சில இடங்களில்‌ பெண்‌ மக்களுக்கு என்றுஞ்‌ சிறைக்கூடு அமைக்கப்பட்டிருக்கிறது. சிறை இருளில்‌ போதிய காற்றின்றி – ஒளியின்றி – அன்புக்‌ கொடிகள்‌ வாடி வதங்குகின்றன. அவர்கள்‌ அப்புறம்‌ இப்புறம்‌ பார்த்தல்‌ கூடாது! பேசுதல்‌ கூடாது! என்ன கொடுமை! கண்ணையும்‌ வாயையும்‌ கடவுள்‌ அவர்கட்கு எற்றுக்கோ ஈந்தான்‌? இயற்கை வாழ்வு எல்லார்க்கும்‌ உரியது. அவ்வாழ்வினின்றும்‌ பெண்ணைப்‌ பிரிக்கவும்‌ ஆண்மக்கள்‌ மனம்‌ ஒருப்பட்டதன்றோ? இன்னோரன்ன கட்டுப்பாடுகளுள்ள இடங்களில்‌ பெண்ணுலகிற்குப்‌ பேரிழிவு நேர்ந்திருக்கிறது.
அவ்விடங்களில்‌ பெண்மகள்‌ நாய்‌ பேயாகக்‌ கருதப்படுகிறாள்‌; மாயையாகச்‌ கருதப்படுகிறாள்‌. ஞானத்துக்கும்‌, வீடு பேற்றிற்கும்‌ பெண்‌ இடையூறாக இருக்கிறாளாம்‌! மூவாசையுள்‌ பெண்ணும்‌ ஓர்‌ ஆசைப்‌ பொருளாம்‌! இன்ப அன்புத்‌ தெய்வமாக அடியேன்‌ போற்றும்‌ பெண்ணிற்கு உற்றுள்ள இழிவை, இன்னும்‌ எழுத்தால்‌ எழுதக்‌ கையோடவில்லை. அந்நாளில்‌ பெண்ணுலகிற்கு ஏற்பட்ட துன்பம்‌, “பெண்ணாய்ப்‌ பிறப்பதினும்‌ மண்ணாய்ப்‌ பிறக்கலாம்‌” என்னும்‌ பழமொழியை எழுவித்த தெனில்‌, பெண்ணுலகத்‌ துன்பத்தை என்னென்று விளக்குவது? பெண்‌ ஆசைப்‌ பொருளல்லள்‌ என்பதையும்‌, அவளை அங்ஙனங்‌ கருதி வெறுத்தலும்‌ துறத்தலும்‌ அன்புக்‌ கடவுளைக்‌ காணும்‌ வழிகளல்ல என்பதையும்‌ வேறோரிடத்தில்‌ விரித்து விளம்புவன்‌.

உரிமையும்‌ கடமையும்‌

சில இடங்களில்‌ உரிமையையும்‌, கடமையையும்‌ ஒன்று படுத்தி மக்கள்‌ இடர்ப்படு-கிறார்கள்‌. உரிமை வேறு; கடமை வேறு. பெண்‌ மெல்லியலாள்‌,; ஆண்‌ வல்லியலான்‌. மென்மை வன்மைக்கேற்ப இருபாலார்க்குமுரிய கடமைகள்‌ வேறு படலாம்‌. உரிமையில்‌ கட்டுப்பாடி ருத்தல்‌ கூடாதென்பதொன்றே ஈண்டுக்‌ கருதற்பாற்று. கடமை வேறுபாடுகளைக்‌ குறிப்பிட்டுப்‌ பெண்ணுரிமையில்‌ கைவைப்பது கொடுமை.

பெண்மைக்‌ கேட்டால்‌ விளையுங்‌ கேடுகள்‌

உரிமை எல்லார்க்கும்‌ பொதுவானது. வானத்தில்‌ மேகம்‌ தவழ்வது போலவும்‌, கடலில்‌ அலை எழுவது போலவும்‌, பறவை அழகிய சிறகை வீசிப்‌ பறப்பது போலவும்‌, பெண்‌ தனது உள்ளத்தெழும்‌ விருப்பவழி நடக்கும்‌ உரிமையுடையவளாதல்‌ வேண்டும்‌. அவ்வுரிமையைச்‌ சிறைப்படுத்தல்‌ பெறும்‌ பாவம்‌. பெண்‌, அடிமை வாழ்வு நடாத்த நேரின்‌, அவள்‌ வயிற்றிற்‌ பிறக்கும்‌ பிள்ளையும்‌ அடிமையுணர்வுடன்‌ பிறக்கும்‌. பெண்‌ தாயாகலின்‌, அவள்‌ உரிமையைத்‌ தடிதல்‌, அவள்‌ வயிற்றிற்‌ பிறக்கும்‌ பிள்ளைகளின்‌ உரிமையைத்‌ தடிவதாகும்‌. பெண்ணுரிமை பிடுங்கப்பட்ட நாடும்‌ உரிமையிழந்த நாடாதல்‌ இயல்பு. பெண்ணுரிமை பறிப்பதன்‌ பயன்‌ இஃதாகும்‌. நமது நாடு இனி யாதல்‌ எச்சரிக்கையுடன்‌ நடக்குமென்று நம்புகிறேன்‌. பெண்ணுரி மையைக்‌ குலைப்பதைப்‌ போன்ற அறியாமை பிறிதொன்‌ றில்லை. பெண்ணுரிமையைக்‌ கெடுத்தல்‌ பின்சந்ததியின்‌ உயா்‌நிலையைக்‌ கெடுப்பதாகும்‌. எக்காரணம்‌ பற்றியும்‌ பெண்ணுரிமைக்குக்‌ கேடு சூழ்தல்‌ கூடாது; கூடாது.

உரிமைப்‌ பெயரால்‌ கொடுமை

மேல்‌ நாட்டில்‌ சின்னாளாகப்‌ பெண்ணுலகில்‌ ஓர்‌ இயக்கம்‌ தோன்றி இருக்கிறது. பெண்மக்கள்‌, “உரிமை” என்னும்‌ பெயரால்‌ சில கொடுமைகள்‌ நிகழ்த்தி வருகிறார்கள்‌. அவர்கள்‌ ஆண்‌மக்களைப்‌ போல எல்லா வழியிலும்‌ வாழ்வு பெறக்‌ கிளர்ச்சி செய்கிறார்கள்‌. அவர்கள்‌ தங்கள்‌ நோக்கத்தை நிறை வேற்றிக்‌ கொள்ள ஆண்மக்கள்‌ மீது கல்லெறிதல்‌, அவர்களைக்‌ கருவியால்‌ தாக்கல்‌, வழிமறித்தல்‌ முதலிய வன்-செயல்கள்‌ புரிகிறார்கள்‌. இச்செயல்கள்‌ உரிமைப்‌ போராட்டமென்று சொல்லப் படுகின்றன. இவை நமது நாட்டில்‌ ஆண்மக்கள்‌ பெண்மக்களை அடக்கக்‌ கொண்ட மூடச்‌ செயல்களுக்‌ கடுத்து நிற்பன. பெண்ணுரிமை என்பது, ஆண்‌ மக்களைப்‌ பகைத்து, அவர்கள்‌ பதவிகளைப்‌ பெற, மூர்க்க நெறியில்‌ நின்று, அவர்‌களைத்‌ தாக்குவதன்று. மேல்நாட்டுப்‌ பெண்மக்கள்‌, உரிமை என்னும்‌ பெயரால்‌ வாழ்வையே குலைத்து வருகிறார்கள்‌.

இக்கால மேல்நாட்டு நாகரிகத்தால்‌ விழுங்கப்‌ பெற்றுள்ள கழ்நாட்டுப்‌ பெண்மக்களும்‌, மேல்நாட்டுப்‌ பெண்மக்கள்‌ அடிச்‌சுவட்டைப்‌ பற்றி நடக்க முயலுகிறார்கள்‌. இது தவறு.

பெண்‌ பிறவி நோக்கம்‌

பெண்பிறவியின்‌ நோக்கம்‌, ஆண்பிறவி தாங்கினோரிடத்தில்‌ போர்புரிந்து, அவரைக்‌ துன்புறுத்த வேண்டுமென்பதன்று. பிறரைத்‌ துன்புறுத்தல்‌ வேண்டும்‌ என்னும்‌ எண்ணமே பெண்ணீர்மையை அழிப்பதாகும்‌. ஒரு பாதியாகிய பெண்‌, மற்றொரு பாதியுடன்‌ கூடி, இன்ப வாழ்வை உலகில்‌ பெருக்கி, உலகை வளர்க்கும்‌ நெறியில்‌ நிற்றல்‌ அறம்‌. பெண்மக்கள்‌, ஆண்மக்கட்கு அடிமைப்பட்டு வாழ வேண்டுவதில்லை; அவர்‌களுடன்‌ உரிமைகொண்டு வாழலாம்‌.
பெண்ணுரிமை என்பது ஆணுடன்‌ போர்‌ புரிவதன்று. ஆணுடன்‌ வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின்‌ உரிமைக்‌ கடன்‌. சமயம்‌ நேருமேல்‌, அன்புவழியில்‌ ஆண்பதவிகளையும்‌ பெண்மக்கள்‌ ஏற்று உலகை நடாத்தலாம்‌. ஐரோப்பாவில்‌ (1914 – 1218, 1939 – 1945) நடைபெற்ற பெரும்போர்கள்‌, ஆண்மக்கள்‌ கடமைகள்‌ பலவற்றைப்‌ பெண்மக்கள்‌ ஏற்று நிகழ்த்துமாறு செய்தன. “உரிமை’ என்று, பெண்ணுலகு ஆணுலகோடு போர்‌ புரிவதால்‌, பெண்ணுக்குரிய அமைதி கெடும்‌; உலகு அழியும்‌.
மேல்நாட்டில்‌ இக்கால நாகரிகத்தால்‌, அன்பு – பொறுமை – இன்பம்‌ முதலியன அறவே தொலைந்து, வன்கண்‌ – பொறாமை – துன்பம்‌ முதலியன பெருகுகின்றன. இக்கால நாகரிகம்‌ தொலைய வேண்டுமேல்‌, பெண்தெய்வங்கள்‌, தங்கள்‌ தாய்மைத்‌ தொண்டைச்‌ செவ்வனே ஆற்றிவருவார்களாக.
“பெண்ணுலகுக்கு உரிமை வழங்கினால்‌, அவ்வுலகம்‌ ஆணுலகிற்கு இடர்‌ விளைத்து, வாழ்வையே குலைத்துக்‌ கொள்ளுமாதலின்‌, அதை அடக்கி அளுமாறு நிறுவப்‌ பெற்ற கட்டுப்பாடுகள்‌ போற்றற்குரியன’ என்று சிலர்‌ சொல்வதுண்டு. இஃது அறியாமை. பெண்‌, ஆணை அடக்கப்புகுவதும்‌ தவறு; ஆண்‌, பெண்ணை அடக்கி ஆள்வதும்‌ தவறு. இருவரும்‌ ஒத்து நடத்தலே இன்பம்‌.

நாட்டுப்‌ பழைய வாழ்வு

இதற்கு நமது நாட்டுப்‌ பழைய வாழ்வை இலக்கியமாகக்‌ கொள்ளலாம்‌. பெண்மையும்‌ ஆண்மையும்‌ இறையிடத்திலும்‌, இயற்கையிடத்திலும்‌, ஓத்து விளங்கலைக்‌ கண்டு, ஓர்‌ உயிர்‌ ஈருடலென அன்புநிறைந்த இன்பவாழ்வை நம்‌ நாட்டார்‌ நடாத்தினர்‌. உயர்வு, தாழ்வு, போராட்டம்‌ முதலிய எண்ணங்‌களின்றி, ஒருயிர்‌ ஈருடல்‌ எனப்‌ பெண்‌, ஆணுடன்‌ ஒன்றி, வாழ்வு நடாத்தி, உலகை வளர்ப்பாளாக. இது பெண்ணின்‌ பெருமை.

பெண்ணொளியால்‌ நலம்பெற்றும்‌
பேசுவதோ சிறுமைமொழி
கண்ணொளியை இழித்துரைத்தல்‌
கயைமையன்றிப்‌ பிறிதென்னே
பெண்பெருமை உலகமெலாம்‌
பிறங்கிநின்றால்‌ உளங்குளிரும்‌
மண்முதலாம்‌ வடிவாகி

மகிறியற்கைப்‌ பெருமானே. – பொதுமை வேட்டல்‌