வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. மற்றும் சில

‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது, ‘சினிமா உலகம்’ இதழ்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்…
ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ்.சிதம்பரம் (வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்றை தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. 1947-ல் இரண்டாவது மலர் வெளியிட்டார். இரண்டு மலர்களிலும், மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் மிகுதியாகவே இடம் பெற்றன.
தி.க. சிவசங்கரனின் ‘சமுதாயப் பார்வைக் கவிதைகள், அம்மலர்களில் பிரசுரமாயின. அவரது பரிணாமத்தைக் காட்ட ‘அங்கே’ என்ற கவிதை உதவும்…’

1
சாக்கடைச் சோற்றை
யாம் உண்கிறோம்;
அங்கு
சர்க்கரைப் பொங்கலை
ஜமாய்க்கிறார்!

2

கந்தையால் மானத்தைக்
காக்கிறோம்; வாடைக்
காற்றிலே நடுங்கித்
துடிக்கிறோம்.
சிந்தையில்அருளிலாப்
பாதகர்-அங்கே
சீமைத்துணிக்கு
அலைகிறார்.

3

மெத்தைக்குப் பூந்துகில்
வேண்டுமாம்!
மேனியைப் பஞ்சனை
உறுத்துமாம்!
செத்தையில் குப்பையில்
படுக்கிறோம்!
தேள்களும், ஈக்களும்,
மூட்டையும்
கொத்திப் பிடுங்கினும்
துங்குறோம்;
கோடையில், வாடையில்
சாகிறோம்.

4

கூழுக்கு விதியின்றி
அலைகையில்–அங்கே
கோப்பையில் சாராயம்
ஓடுது!
அம்மையின் மார்பில்
ரத்தத்தை-எங்கள்
அருமைக் குழந்தை
குடிக்கையில்
‘ஆர்லிச்சு’ மாவுக்கு
அலைகிறார்; அதற்கு
ஆயிரம் பேரு
சிபாரி

5

கொண்டவன் சீக்கிலே
சாய்ந்திட,
கூடவே யிருந்து
குமைகிறோம்.
அங்கே–
அண்டை வீட்டுக்காரன்
குட்டியை
அடித்துக் கொண்டுபோக
யோசனை.

6

எங்கள் குறைகளை
இயம்பினேன்.
அதற்கென்றே பரிகாரம்
தேடுவீர்!
‘இல்லாத சாதி’ யென்
றிகழ்ந்திடில்-இனி
நில்லாது எங்கள்
கைச் சுத்தியல்!

புதுமைப்பித்தனின் ‘மாகாவியம்’-காளான் குடை நிழலில் கரப்பான் அரசிருக்க என்று ஆரம்பித்து வளரும் கவிதை-கவிக்குயில் இரண்டாவது மலரில் வெளிவந்தது.
‘தமிழ்க்குமரி’, ‘அகல்யா’ முதலிய அற்புதமான கவிதைகளை இயற்றிய கவிஞர் ச.து.சு. யோகியாரும் சோதனை ரீதியாக ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசன கவிதைகள் எழுதி வைத்திருந்தார். அச்சில் வந்திராத அவற்றை ‘சினிமா உலகம்’ இதழ்களில் நாங்கள் பிரசுரிக்க முற்பட்டபோது, அவர் தடுத்து விட்டார்.
அவரது படைப்புக்கு உதாரணமாக ஒரு காட்சியைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இது ‘சினிமா உலகம்’ இதழில் பிரசுரமானது.

1

அவள் யார்?
வான் கடல் மீது மதியத் தோணி
மிதக்கும் போது விரிகடல் மீதோர்
புது மதி மிதந்து புன்னகை பூத்தது
அவள் யார்?
அழகுக் கடலை அமுதக் கோலால்
கடையத் திரண்ட காதலின் வெண்ணெய்

2

கூந்தல்
காதற் பறவையின் கவினுறுஞ் சிறகுகள்
வகிடு
கருமுகில் திரளிடைக் கதிர்விடும் மின்வரி

3

மதிமுகம் என்பார்;
மதியை யம்முகத்திற் கொப்பிடல் மடமை
ஓண் மதி யவள் முகம் ஓரளவொக்கும்

4

கண்கள்,
வான் போல் விரிந்தவை, வாரி போல் ஆழ்ந்தவை
கால் போற் கலங்கும், பனி போல் மயங்கும்,
வசந்தமாய்ச் சிரிக்கும், வேனிலா யெரிக்கும்,
காதலிற் களிக்கும், கடை நுனி சுளிக்கும்;
கண்ணூடாடும் கருவிழிப் பாவைகள்
வெள்ளை மதுவில் மிதக்கும்
நாகப் பழம்;
வைர வெள்ளத்தே மரகதத் தோணிகள்,
நிலவுக் கடலில் நீந்தும் வண்டுகள்
அக்கண்ணுக் கிணை இக்கண்.

5

பூவிற் கனியுண்டாம், கனியிற் பூ மலரா;
ஆயினும் அவளது
கன்னம் என்னும் கனிந்த மாங்கனியில்
காதலாம் ரோஜாக் கவின் மலர் சிரிக்கும்

6

காதல் மதுக் கடல் கனிவாய், அதன் கரை
கன்னம் என்னும் கண்ணாடி மலர் வனம்
அவ்வன மலர்கள் யாவினும் பெருமையாய்
வாசனை வீசும் நாசிப் பொன் மலர்.

7

உள்ளவான் பூத்த உவகை மதியம்
பற்கத வூடு பகல் நிலாப் பொழியும்
அந் நிலாக் கள்ளை யருந்திய உதடுகள்
செவ்விதழ் மலர்ந்து சிரித்துச் சிவப்பதேன்?
அழகுக் கரசன் மன்மதன் அவளது
பேச்சுக் கிள்ளையைப் பிடிப்பதற்காகக்
கொவ்வைக் கனிகளைக் கண்ணி வைத்தானெனச்
சிவந்தன உதடுகள், சிரித்தன மலர்ந்தே.

8

மகர யாழ் வினையும் தோண் மிசை மன்மதன்
நாளமாம் வலம்புரி நாடிய கழுத்தாம்
தண்டிலே முகமெனும் தாமரை பூக்கும்.

9

மார்பகம், அழகுக் கடல் வெடித்த அமுதக் குமிழிகள்,
ஆசை விதை வளர்த்த நேசக் கனிகள்:
புத்தின்பப் புதுமைத் தேன் பூரித்த கலசங்கள்

10

புலர்ந்தும் புலராப் பொழுதிற் சிறிதே
அலர்ந்தும் அலரா அரும்புச் சிறுமி
கலந்தும் கலவாக் கனவுக் காலையில்
மலர்ந்தும் மலரா வசந்த வாயிலில்
நின்றாள், நெஞ்சில் நிச்சயம் பிறந்தது.
கூடாக் கூந்தலைக் கூட்டி முடித்தாள்
கூசா மெல்லிடை கூசக் குழைந்தாள்
நாடாச் சொல்லாள் நயமொழி பகர்ந்தாள்.
மன்மதன் அவளொளி மலரும் கிண்ணியில்
யௌவனம் என்னும் அமுதை வார்த்தான்.

11

வெள்ளை நிலவின் வியப்புக் கிண்ணியில்
வான வில்லின் வர்ணக் கலவையைச்
சூரியன் சுடர்க் கதிர் தூரியம் தொட்டு
வார்த்த பொற்சித்திரம் வசந்தக் காற்றில்
உயிர் பெற்றுலாவும், உலகம் மயங்கும்.

12

நீ என்ன?
கனவா, நினைவா, கற்பனையா?
அழகு வயலின் ஆசை மலரே-உன்
காம்பெது வேரெது விதையெது? மணியாய்
வியப்புறு விளைவே வெறியன் கண்ட

13

காற்றவளுடலைத் தழுவக் காதலாய்
வருவதைக் கண்டவன் வனை துகிற்பட்டு
காற்றொடு பொறாமையாய்க் கடும்போர் புரியும்,
தங்கச் சரிகை வான் பொங்கிக் குதிக்கும்
அல்ல, அல்ல; அவளிப்போது தான்
வானத் திருந்து வையத் திறங்கினாள்
இன்னும்
பட்டுச்சிறகு பட படக்கின்றது.

14

முதல் முதலாய்க் காதலியைச் சந்தித்த மோகனத்தில்
கண்களவன் கண்ணுக்குக் களவா யொளித்தமையால்
கண்ணைப் பிடிக்கக் கருத்தோடிப் போனதுவே.
கருத்தைப் பிடிக்கக் கவினுள்ளம் தானேகும்.
உள்ளம்தனைப் பிடிக்க உயிரோடிப் போயிற்றால்
ஓடமுடியாத உடல் மட்டும் ஓய்ந்ததுவே.

15

கண்ணும் கண்ணும் கவ்வின, எண்ணம்
எண்ணம் ஒன்றாயிணைந்தன; இருவர்
பார்வையும் ஒரு கண நெடுமைப் பார்வையாய்ப்
பளிச்செனச் சுளித்தது; ஒளிச்சது ஒருவரை
ஒருவர் காண வெட்கினோம்; உடலம்
நடுங்கக் கவிழ்ந்தோம். ஆயினென் நாட்டம்
வேறொன்றும் காண்கில; விம்மிதமுற்றோம்.

ச.து.சு. யோகியார், வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கினார். அவ்வசன கவிதைத் தொகுப்பு ‘மனிதனைப் பாடுவேன்’ என்ற பெயரில் பின்னர் ‘ஜோதி நிலைய வெளியீடு’ ஆகப் பிரசுரமாயிற்று.

இவ்வாறாக 1940கள் வசன கவிதையின் வளமான வளர்ச்சிக்கு ஏற்றகாலகட்டமாக விளங்கியது. அந்த-தசாப்தத்தின் இறுதியில், வசன கவிதைக்கு ஆதரவு தந்த பத்திரிகைகள் நின்று போயின. ந. பிச்சமூர்த்தி ஒருவித விரக்தி மனநிலையில், கதை, கவிதை; கட்டுரை எதுவுமே எழுதாமல் ஓய்ந்து ஒதுங்கிவிட்டார். ஆகவே ‘புதுக்கவிதை’ தேக்க நிலையுற்றது.

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)