
கிராம ஊழியனில்
‘பாரதி அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘காட்சிகள்’ போன்ற வசன கவிதைகள் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத வேண்டும்; அடுத்து அதை வெட்டியும் ஒட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை கூறினார். ஆயினும், அழகு பற்றி நான் எழுதிய பின்னர், அதைத் தொடர்ந்து வெட்டியோ அல்லது ஒட்டியோ, எழுதுவதில் அவர் ஆர்வம் கொள்ளவில்லை. என்னையே தொடர்ந்து எழுதும்படி சொல்லி விட்டார்.
ஆகவே, பாரதி அடிச்சுவட்டில் நான் மட்டுமே முன்னேற நேர்ந்தது. ‘இளவல்’ என்ற பெயரில், அழகு, திங்கள், அந்தி, வானம், மழை பற்றி எழுதினேன். அடுத்து, ‘ஜகத்சித்திரம்’ மூன்று இதழ்களில் வந்தன.
அவை ரசிகர்களின் பாராட்டுக்களை மிகுதியும் பெற்றுத் தந்தன. அதே சமயம் குறை கூறல்களையும், கண்டனங்களையும் எழுப்பின. சாந்தி, ஒலி, காலம், கனவு, மனம், இன்பம், சிந்தனை ஆகியன பற்றியும் ‘காட்சிகள்’ முறையில் வசன கவிதைகள் எழுதினேன்.
அவை பிரசுரமாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே வேறு பலரகமான வசனகவிதைகளையும் நான் கிராம ஊழியனில் எழுதி வந்தேன். தமிழின்-தமிழ் இலக்கியத்தின் பாதுகாவலர்கள் தாங்களேதான் என்று சொல்லிக் கொண்டிருந்த பலரும் என்னையும், ‘கிராம ஊழியன்’ போக்கையும் ஏசுவதில் உற்சாகம் கண்டார்கள். இலக்கியத்துடனும், கவிதையோடும் தொடர்பே இல்லாத-என்றாலும் தமிழை வளர்ப்பதே தங்கள் கட்சிதான் என்று பெருமை பேசிக் கொண்ட–அரசியல் கட்சியின் பிரசங்கிகள், மேடைகளிலும், அவர்கள் நடத்திய பத்திரிகைகளிலும் என்னைக் குறை கூறியும் தாக்கியும் மகிழ்ந்து போனார்கள் நான் தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கிறேன் என்று குற்றம் சாட்டி.
பிச்சமூர்த்தி அடிக்கடி கவிதைகள் எழுதி உதவினார். திருலோக சீதாராமும், கு.ப. ராஜகோபாலனும் தயாரித்த ‘கிராம ஊழியன்’ பொங்கல் மலரில் (ஜனவரி 1944) பிக்ஷுவின் ‘மழை அரசி’ எனும் புதுமையான, அருமையான, காவியம் பிரசுரமாயிற்று. அந்த மலரில் தான் புதுமைப்பித்தன், வேளூர் வெ.கந்தசாமிபிள்ளை என்ற பெயரில் தனது முதல் கவிதையை வெளியிட்டார்.
“கடவுளுக்குக் கண்ணுண்டு
கண்ணோ, நெருப்பு வைக்க;
தலையில் பிறையுண்டு-
தணல் கையில் உண்டுண்டு”
என்று ஆரம்பிக்கும் கவிதை அது. ‘கடவுளுக்குக் கண்ணுண்டு’ என்பது அதன் பெயர்.
1944 அக்டோபரில் வெளிவந்த ‘கிராம ஊழியன்’ ஆண்டு மலரில் வேளூர் வெ. கந்தசாமி பிள்ளையின் இரண்டாவது கவிதை ‘ஓடாதீர்!’ பிரசுரமாயிற்று. அது அச்சில் வருவதற்கு முன்னரே எழுத்தாளர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது. கோவையில் நடைபெற்ற ‘முதலாவது தமிழ் எழுத்தாளர் மகா நாடு’ மேடையிலும், நண்பர்கள் நடுவிலும் திருலோக சீதாராம் அதை உணர்ச்சிகரமாகப் பாடி ஒலி பரப்பியதே காரணமாகும்.
வேகமும், உணர்ச்சியும், கருத்தாழமும் கொண்ட ‘ஓடாதீர்’ புதுமையானது; புரட்சிகரமானதும்கூட.
I
ஓகோ, உலகத்தீர், ஓடாதீர்,
சாகா வரம் பெற்ற,
சரஸ்வதியார் அருள் பெற்ற,
வன்னக் கவிராயன்
நானல்ல;
II
உன்னிப்பாய் கேளுங்கள்;
ஓடாதீர்;
வானக் கனவுகளை
வக்கணையாச் சொல்லும்
உண்மைக் கவிராயன்
நானல்ல
III
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்
சரஸ்வதியார் நாவினிலே
வந்து நடம் புரியும்
வளமை கிடையாது.
IV
உம்மைப் போல் நானும்
ஒருவன் காண்;
உம்மைப் போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்
புளுகுகளைக் கொண்டும்மை
கட்டி வைத்துக் காசை-
ஏமாந்தால்,
கறந்திடுவேன்.
V
ஊருக்கு மேற்கே
ஊருணியில் கண்டவளை
ஆருக்கும் வாய்க்கா
அரம்பை என்று கனவென்று
சொல்லில் வளைந்திடுவேன்.
சோற்றுக்கு அலைக்காதீர்
VI
கன்னி எழில் வேண்டாம்;
காதல் கதை வேண்டாம்;
சொன்னபடி
தேச
பக்தி எழுப்பிடுவாய்
என்றக்கால்,
அப்படியே, ‘ஆஹா
அடியேன் இதோ’ என்று
கல்லும் உயிர் பெற்று,
காலன் போல், நடமாட,
‘வெல்லு’, ‘வெல்லு’
என்று குத்தும்
வீறாப்புத் தார்க்குச்சி
எத்தனை வேணும், செய்து
இணையடியில் வைத்திடுவேன்.
VII
சற்று பொறும் ஐயா
சங்கதியை சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது;
இனிமேலே
என்றைக்கோ, எப்போதோ
எதிரில் எனைக் கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை
VIII
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
‘வானத்து அமரன்
வந்தான் காண்!
வந்தது போல்
போனான் காண்’ என்று
புலம்பாதீர்;
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டு விடும்.
‘சித்தெ’ பசியாற
செல்லரிக்கும் நெஞ்சாற
மெத்தப் பழங்கதைக்கு
மெத்தப் பழங்கதையை
புத்தி தடுமாறிப்
புகன்றாலும்
அத்தனையும், ஐயோ
அவை யாவும் லட்சியங்கள்!
வானத்துக் கற்பனைகள்!
வையம் வளர்க்க வந்த
மோகன மந்திரங்கள்!
மோட்ச வழி காட்டிகள் ஓய்!
அத்தனையும் உங்கள்
அறிவை வளர்க்க வந்த
சொத்துக்கள் ஓய்!…
சொல்லுக்குச் சோர்வேது
சோகக் கதை என்றால்
சோடி இரண்டு ரூபா!
காதல் கதை என்றால்
கை நிறையத் தரவேணும்!
ஆசாரக் கதை என்றால்
ஆளுக்கு ஏற்றது போல்.
பேரம் குறையாது
பேச்சுக்கு மாறில்லை
ஆசை வைத்துப் பேசி எமை
ஆட்டிவைக்க முடியாது!
காசை வையும் கீழே. பின்
கனவு தமை வாங்கும்;
இந்தா!
காலத்தால் சாகாது,
காலத்தின்
ஏலத்தால் மலியாது!
ஏங்காணும்
ஓடுகிறீர்
ஓடாதீர்!
உமைப்போல நானும்
ஒருவன் காண்!
ஓடாதீர்!
திருலோக சீதாராம், 1944 டிசம்பரில் கிராம ஊழியனை விட்டு விலகி, திருச்சி சேர்ந்து ‘சிவாஜி’ வாரப்பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிச்சமூர்த்தி எப்பவாவது அவ்வார இதழிலும், ‘சிவாஜி’ ஆண்டு மலரிலும் கவிதைகள் எழுதி வந்தார்.
யாப்பில்லாக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த ந.பி. இலக்கணத்துக்கு உட்பட்ட கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தலானார். அதன்படி அவர் எழுதிய சில கவிதைகளும் ஊழியனில் பிரசுரமாயின.
1945–ல் அவர் அகலிகை கவிதைக்குப் புது அர்த்தம் கற்பித்து அகலிகையை உயிர் என்றும், கோதமனை மனம் என்றும், இந்திரனை இன்பஉணர்வுகள் என்றும் உருவகித்து, ஒரு காவியம் படைத்தார். கட்டிலடங்காக் கவிதைகளில் அமைந்த ‘உயிர் மகள்’ என்ற அந்தப் படைப்பும் ஊழியன் இதழில் வெளிவந்தது.
எம்.வி. வெங்கட்ராமும் புதுக்கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டினார். அவர் கவிதைகளை ‘விக்ரஹவிநாசன்’ என்ற புனை பெயரில் எழுதினார். ‘அன்னபூரணி சந்நிதியில், அவரது கவிதைகளில் குறிப்பிடப்பெற வேண்டிய படைப்பு ஆகும்.
சிலா சுந்தரி, தேவி, அன்னபூரணி!
எனது நகைமுகமும் நிறை கலசமும்
கலைக்கு ஓர் இலக்கு ஆயின;
காவியரும் ஓவியரும் எழுத முயன்று
எழுதுகோல் தேய்ந்தது!
என்று மமதையுடன் நிமிர்ந்து நிற்கிறாயல்லவா? நில்!
மண்ணையும்
எங்கோ உள்ள விண்ணையும்
ஒன்றாகப் பிணைப்பேன் என்று
அன்று சிற்பி கண்ட கனவைத்தான்
மண்ணும் எங்கோ கிடந்த கல்லும்
கரமும் கொண்டு,
சிலையாக்கி-உன்னைக்
கடவுளாக்கினான் எனில்-
காரணம்?
கலையன்றி வேறன்று என்றறி!
கலையை இகழ்வாரும்
கலையை அறியாரும்
கல்லே! உன்னைப் பணிகிறார் எனில்-
காரணம்?
கலையன்றி வேறன்று என்றறி!
கலையும் அழகும் மனமுவந்து
கலவி கொண்டதால்
விளைவான தேவி!
அன்று சிரித்தாய்,
நாளை சிரிப்பாய்,
இன்றும் சிரிக்கின்றாய் எனில்-
காரணம்?
கலையின்றி நீ இல்லை என்றறி!
தி.க. சிவசங்கரனும் ஊழியனில் புதுக் கவிதைகள் எழுதி வந்தார். அன்று அவர் வெறும் இலக்கியவாதி. கால வேகத்தில், கம்யூனிஸ தத்துவம் அவர் கருத்தைக் கவர்ந்தது. அதன் பாதிப்பு படிப்படியாக எழுத்துக்களில் படியலாயிற்று. சமூக நோக்குடன், ‘எதார்த்த இலக்கியம்’ படைப்பதில் அவரது கவனம் திரும்பியது. வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டோர், முதலாளி வர்க்கத்தினரால் சுரண்டப்படுவோர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியோர் பற்றி எல்லாம் அவர் கவிதைகள் எழுத ஆசைப்பட்டார். அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அவரது வசனகவிதைகள் ஒன்றிரண்டு ஊழியனில் இடம் பெற்றன. என்றாலும், அந்நோக்கில் அன்று அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கவில்லை. மின்னல், அழகுப் பெண் போன்ற விஷயங்களும் அவருடைய ரசனைக்கும் எழுத்துக்கும் உரிய பொருள்களாகத்தான் இருந்தன. அக்காலத்திய அவரது கவிதைக்கு இதோ ஒரு உதாரணம்
உலவும் கவிதை
பில்லுக் கட்டைத் தலை சுமக்க
பில்லரிவாள் இடையிருக்க
அந்தி ஒளி சாய்கையிலே
அவள் அசைந்து போறாளே!
புதுக் கள்ளின் நுரைபோலே
பொங்கி வரும் புத்தழகு
மங்கி வரும் கதிரொளியில்
மயக்கந்தரு குதையோ!
அணில் கடித்த மாம்பழம் போல்
அழகு சொட்டும் செவ்விதழ்கள்
சருகான வெற்றிலையில்
அமுதினிமை கண்டனவோ!
காதிற் சுருளோலை
கண்டத்தில் பாசிமணி
அரையிற் கிழிந்த உடை
அமைவான குலுக்கு நடை
அத்தான் வந்திடுவான்
அந்திவரை உழுது விட்டு;
சித்தெ முந்திப் போகவேணும்
செம்மறியைக் கட்டவேணும்
என்றெண்ணம் ஓடி வந்து
இங்கு முகம் திருப்பி நிற்க…
சலங்கை ஒலி சிந்தி விட்டு
சாடி வரும் இளமறியும்;
அப்போது பார்த்து விட்டேன்
அவளழகு முழுவதையும்
என் நெஞ்சைக் கிளறிவிட்ட
எழுதவொண்ணாக் காவியத்தை!

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””
Comments are closed.