
- தெய்வங்கள் : பிள்ளையார்
பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார். மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில், பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்பு படுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும், இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறி விட்டார்.
வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம். வங்காள ராஜ்யத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும், அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார். விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக, விநாயகரை வேண்டி பெண்கள் விரதம் இருக்கிறார்கள்.
பொதுவாக, செழிப்பைக் குறிக்கும் தெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே, செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலும், மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்.
இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.
பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.
பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,
ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
வட்டார வழக்கு: முச்சாணி புழுதி = சாணம் + புழுதி, ஒடு
முத்தும் – ஒடு முற்றிய: கொடுக்கறமாம் – கொடுக்கிறோம்.
குறிப்பு:- பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். இது நாட்டார் நம்பிக்கை. முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்:
இடம் சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
பிள்ளையார் பூசை
உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும், பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலத்தில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும் போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.
காளையே ஏறு…
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணிப் பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு- (காளையே)
வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு
வட்டார வழக்கு: மேற்காண்டே-மேற்கில்; வெப்பாலை-வேம்பு; நிமித்தியம்-நைவேத்தியம்; மொகராத-முகராத; ஒரைச்சி-உரைத்து.
பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை. தீ வளர்த்து ‘ஓமம்’ வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால், தமிழ் உழவர் பெரு மக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: கொங்க வேம்பு, அரூர் வட்டம், தர்மபுரி மாவட்டம்.
ஆண்டிற்கொரு விழா
நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
வட்டார வழக்கு: கொளப்படை – கொட்டகை; பண்ணி-பன்றி; கண்ணுக் கொளப்படை – கன்று கட்டும் கொட்டகை; கடலுருண்டை-கடலை உருண்டை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
