ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 126

புத்தக அறிமுகம் 12

நவீன விருட்சம் 126 வது இதழ். (ஆசிரியர், வெளியீட்டாளர் அழகியசிங்கர்).

36 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ‘நவீன விருட்சம்’ காலாண்டிதழின் 126 வது இதழ் பற்றிய ஒரு பார்வை.

சிறுபத்திரிகையின் அடையாளங்களில் ஒன்றான அட்டைப் பட ஓவியம் (கார்ட்டூன்) முழுமையாகவோ, பகுதிகளாகவோ பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் கீழும் திருப்பியோ, பக்கவாட்டில் அசைத்தோ பார்த்தால், வித்தியாசமான கண், குட்டையான விரல்கள், இரண்டு இதழ்களாக வாய், பெரிய மூக்கு, மீன் போன்ற வடிவில் நத்தைக் கண்ணோடு ஒரு கை, பெயரிடமுடியாத இன்னும் சில உறுப்புகளுடன் ஒரு உருவம் அமர்ந்திருப்பதாகத் தோன்றுகிறது! ஓவியம் நடேஷ் அவர்கள் வரைந்தது.

சந்தா மற்றும் இதழ் குறித்த விபரங்கள், முன் அட்டையின் உள்பக்கத்தில் உள்ளன.

ஐந்து சிறுகதைகள் (ஸிந்துஜா, அதங்கோடு அனிஷ்குமார், ஹெச் என் ஹரிஹரன், அழகியசிங்கர், ஜெ.பாஸ்கரன்), ஒரு மலையாள மொழிபெயர்ப்புக் கதை (தி.இரா.மீனா) மற்றும் மூன்று கட்டுரைகள் (தமிழவன், இந்திரா பார்த்தசாரதி, கோவை அ.அய்யாமுத்து) உள்ளன.

ஜப்பான் மொழி கவிதை (ஜென்ஜீ மியாஜாவோ)- இந்தியிலிருந்து தமிழில் க்ருஷாங்கினி மொழிபெயர்த்துள்ளார். ‘சந்திரதேவ்’ என்ற பெயருக்கேற்ப சந்திரனைப் பற்றிய ஒரு கவிதை – அறிவியலுக்கும், நம் புரிதலுக்கும் உள்ள இடைவெளியைச் சுட்டுகிறது (என்று நான் நினைக்கிறேன்!).

தமிழவனின் கட்டுரை இன்றைய தமிழ் இலக்கிய, சினிமா படைப்புகளின் பிற்போக்குத் தன்மையை சாடுகிறது. மலையாளம் பரவாயில்லை என்பதான தொனியில் சில வரிகள் வருகின்றன. “நாவல் படிக்கத் தெரியாது. படிப்பதற்கு சுஜாதா. பூஜை செய்வதற்கு விருது நாவல்” என்கிறார். சுஜாதா மேலும், தமிழ் வாசகர்கள் மீதும் இவருக்கென்ன காழ்ப்போ நமக்குத் தெரியாது. சினிமா தமிழில் வளரவில்லை. உலக சினிமா வரலாற்றைப் படித்தால் இது தெரியும் என்று சொல்கிறார். கூலிக்கு மாரடிக்கும் வசனம் எழுதவோ, சினிமாப் பாட்டு எழுதவோ போகிறவர்கள் இலக்கியவாதிகள் இல்லை என்கிறார்.

இ.பா.வின் ‘தில்லி சலோ’ அன்றைய தில்லிப் பயணத்தையும், ஆசிரியப் பணிக்குச் சேர்ந்த முதல் நாளையும் நகைச்சுவையாகச் சொல்கிறார். இ.பா. வின் நகைச்சுவையில் எள்ளலும் உண்டு!

கோவை அ.அய்யாமுத்து (எனது நினைவுகள்) வின் தீர்த்த யாத்திரை மிகவும் சிறப்பான கட்டுரை. ‘பிளேக்’ நோய் பரவிக்கொண்டிருந்த நாளில், அதைத் தடுக்கவும், எலிகளை அழிக்கவும் அன்று அரசு எடுத்த நடவடிக்கைகள் வியக்க வைக்கின்றன. சில நிகழ்வுகள், இன்றைய கொரோனா காலத்தை ஒத்திருக்கின்றன. கோவையைத் தவிர்ப்பதற்காக, குதிரை வண்டியில் பொள்ளாச்சி வழியாக திண்டிக்கல் செல்வதை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். நகைச்சுவைக்கும், வியப்பிற்கும் பஞ்சமில்லாத கட்டுரை.

சிறுகதைகள் பற்றித் தனியாக எழுதலாம். ‘சிறுபத்திரிகைக் கதை, வெகுஜனப் பத்திரிகைக் கதை என்ற பிரிவினைகள் காட்ட முடியாத சிறுகதைகள்’ என்ற அளவில், வாசிக்கத் தகுந்தவையாக உள்ளன.

அழகியசிங்கர், எஸ் வைத்தியநாதன், சுரேஷ் ராஜகோபால், நாகேந்திர பாரதி, ஷண்முக சுப்பையா, தி.சோ.வேணுகோபாலன், போர்ஹெஸ் (தமிழில் எம்.டி.முத்துக்குமாரசாமி) ஆகியோர் கவிதைகள் இதழெங்கும் வாசிக்கக் கிடைக்கின்றன.

ஆசிரியரின் கற்பனை உரையாடல் மூலம் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.