பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் / அரசியல் அறம்

வாய்ச்சொல் வீரர்

மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா-எம்
மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்
வந்ததுவரட்டும் போடா-சில ( மனு )

உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா-ராஜா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா-இது
உல்லாச புரிதாண்டா… ( மனு )

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் ( வசதி )

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு)

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா-நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா ( மனு )

ஒரு சிறுவன்: அங்கே நானும் வாரேண்டா…
வௌியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா-சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா…. ( மனு )

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்-இவன்
சோறு போடுகிறான்-அவன்
கூறு போடுறான்.

[கண் திறந்தது,1959]