அமரன்…/கதிரவன்  ஆர்

காதலும், கருணையும், வீரமும் நிறைந்த ஒரு ராணுவ மேஜரின் வாழ்க்கையை திரையில் பார்த்த பிரமிப்பை அப்படியே தருகிறது அமரன்.

கொஞ்சம் தவறினால் கிரிஞ்சாகவோ, சற்று கவனம் பிசகினால் டாக்குமென்ட்ரியாகவோ மாறிவிடக்கூடிய ஆபத்தான ஒரு கதை. அதுவும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் கதை. அடுத்து இதுதான் நடக்கும் என்பதெல்லாம் தெரிந்த பின்பும் கூட இத்தனை நுட்பமாக காட்சிப்படுத்திய விதம் அழகு.

உண்மையில் சிவகார்த்திகேயன் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார். வழக்கமான நக்கல் நையாண்டிகளுக்கெல்லாம் இங்கு இடம் இல்லை… வளவனவென நீட்டி முழக்கிய வசனங்களும் இல்லை. ஆனாலும் திரையில் மேஜர் முகுந்தாக கம்பீரமாக நிற்கிறார்.

சிகா கல்லூரி மாணவர், ராணுவ பயிற்சி மாணவர், ராணுவ மேஜர் என முப்பரிமானங்களுக்கும் உடலை ஏற்றி இறக்கி வித்தியாசம் காட்டி இருக்கிறார் அதிலேயே அவருடைய உழைப்பு தெரிகிறது.

நாயகனை காட்டிலும் நாயகி நடிப்பில் அசத்துகிறார். கண்டிப்பாக சாய் பல்லவி வீட்டில் இன்னொரு அலமாரியை துடைத்து சுத்தப்படுத்தி தயாராக வைக்கலாம். அத்தனை விருதுகளை வாங்குவார் என நினைக்கிறேன்.

அன்பு, காதல், குடும்பம், பாசம், சோகம், வலி , கண்ணீர் என நவரசமும் கலந்த நல்லதொரு வாய்ப்பு இந்த படத்தில் வாய்த்திருக்கிறது மலர் டீச்சருக்கு. எந்த இடத்திலும் சோடை போகாமல் தனது நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

காஷ்மீரின் பிரச்சனைகளை இப்படிப் பேசி இருக்கக் கூடாது, அப்படி பேசி இருக்கக் கூடாது என்றெல்லாம் கூட சிலர் வியாக்கானம் பேசுவதை பார்க்க முடிகிறது. முதலில் ஒரு உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த படம் “காஷ்மீர் பைல்ஸ்” போல நேரடியாக காஷ்மீர் பிரச்சனைகளை பேசக்கூடிய படம் அல்ல.

ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை, குடும்பம், காதல், தியாகம், வீர மரணம் சார்ந்த வாழ்வியலையே இங்கு மையப்படுத்தி இருக்கிறார்கள் என்பதால் அங்கு போய் உலக அரசியலை பேசி நம் மேதாவித் தனத்தை காட்டுவது தேவையில்லை என நினைக்கிறேன்.

என்னுடைய சகலையும் ஒரு ராணுவ வீரர் என்பதால் இந்த படம் எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதலை கொடுத்தது.

ஐந்து மாதம் பணி ஒரு மாதம் விடுமுறை. அங்கிருந்து வந்து போவதற்கு 10 நாட்கள் ஆகிவிடும் வீட்டில் 20 நாட்கள் இருக்கலாம். ஆண்டுக்கு இரண்டு 20 நாட்கள் மட்டும்தான் அவர்கள் வாழ்கிறார்கள். அதற்குள் குடும்பம், குழந்தை, கடமை என அத்தனையும் ஆற்றி விட்டு காதலும் காதல் சார்ந்த வாழ்வியலையும் வாழ்ந்துவிட வேண்டிய வாழ்வு வாய்க்கப்பட்டவர்கள்.

சம்பளத்துக்காக தானே கஷ்டப்படுறாங்க என சாமானிய புத்தியை கொண்டு வந்து இங்கே புதைக்காதீர்கள். நாம் கூட சம்பளத்துக்காகத்தான் வேலை செய்கிறோம் ஆனால் நம்முடைய பணியும் அவர்களுடைய பணியும் வேறு என புரிந்து கொள்வதில்தான் அவர்களுக்கு செலுத்தும் நன்றி இருக்கிறது.

தேசம், தேசப்பற்று என்பதெல்லாம் கூட கெட்ட வார்த்தையாக மாறிப்போன சமகால சமூகத்தில் நல்லதைச் சொல்லக்கூட இத்தனை விளக்கம் தர வேண்டி இருக்கிறது.

ஆக, அமரன் பேரன்பும் பெருந்தியாகமும்.

வாய்ப்பிருந்தால் படத்தை திரையரங்கில் பாருங்கள்.