மோகன் ஜி/கோலம்

நேற்று என் மருமகளின் மேஜையை அகஸ்மாத்தாகப் பார்த்தேன். ஆன்லைன் அலுவலகப் பணியின்போது, சிக்கலான வர்த்தகக் குறிப்புகள், எண்களினூடே ஒரு எட்டுப்புள்ளிக் கோலத்தையும் தன் குறிப்பேட்டில் கிறுக்கியிருந்தாள்.
ஏதோ சிந்திக்கையிலோ, பிறரின் விளக்கத்தைக் கேட்கையிலோ அனிச்சையாக வரைந்திருக்க வேண்டும்.
கோலமிடும் அவகாசம் இல்லாத போதிலும், எப்போதோ பள்ளிப்பருவத்தில் கோலமிடக் கற்றது வெளிப்பட்டிருக்கலாம்.
நிதமும் வீட்டு வாயிலில் அரிசிமாக் கோலம் துலங்கும் அழகிய பாரம்பரியம் நம்முடையது. காலை ஆறுமணிக்குள் வாசல் தெளித்து கோலம் போடுவதில் ஒரு அழகும் ரசனையும் இருந்தது.
மார்கழி மாதத்தில் பறங்கிப்பூவோடு விசேஷ கோலங்கள், பண்டிகை நாட்களில் செம்மண் கரைகட்டி இழைக்கோலங்கள், சுவாமி உள்ளுக்கான ஶ்ரீசக்ரம், ஸ்வஸ்திகம் என எவ்வளவு வகைகள்?
சுவாமி புறப்பாடு, வீதியுலா வருகையில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் போடப்பட்டிருக்கும் கோலத்தை பார்த்து ரசித்த பால்ய நினைவுகள்.
பரமாச்சாரியார் வருகையின் போது, கல்லு அக்கா போட்டிருந்த பெரிய தேர்க்கோலத்தை, அவர் சுற்றிக் கடந்ததும் கண்களுக்குள் இன்னமும்….
‘பகவத் சேவை’க்காக இடப்படும் வண்ணக் கோலங்கள் அம்பாளின் வருகைக்குக் கட்டியம்!


கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இன்றும் வாயிற்கோலங்களைப் பார்க்கிறேன்.
நகரங்களில் தான் இவை மெல்ல அருகி வருகின்றன.
கோலப் புத்தகங்கள் கண்ணில் பட்டபடி இருந்த மேஜைகள் இப்போதெல்லாம் அதிகம் தென்படுவதில்லை. தற்காலக் குழந்தைகளுக்கு சொல்லித் தருவாருமில்லை. சுவாமி மாடத்துக்கு ஸ்டிக்கர் கோலம் வந்து பலகாலம் ஆகிவிட்டது. இயலும்போதெல்லாம் சிறியதாகவேனும் கோலமிடுவது வீட்டிற்கு லக்ஷ்மீகரம் அல்லவா?
நேர்த்தியான கோலம் இடுவதற்குப் பொறுமையும் மனம் ஒருமைப்படுதலும், கலையுணர்வும் தேவை. சொல்லப்போனால், நம் அனைத்து செயல்களிலும் இந்தத் தன்மைகள் இருக்குமானால் வாழ்க்கைப் பொலிவுடன் இருக்கும் தான்.
காலப்போக்கில், நிதமும் கோலமிடும் வழக்கம் குறைந்து விட்டாலும், இந்தக் கலையை நம் குழந்தைகளிடமாவது கொண்டு சேர்ப்பது அவசியம் .
இப்போது சிலர் ஆர்வம் காட்டும் ‘மண்டலா’ ஆர்ட் அழகிய ஓவிய வகைமையாகப் படுகிறது.
வண்ணங்கள் மிளிரும் ரங்கோலிகளுக்கு சற்றும் சளைத்தவையல்ல நம் அன்னையர் போடும் இழைக்கோலங்கள்.
கோலமிடுதல் ஒரு தியானம் போல தெளிவை உண்டாக்கும் பயிற்சி. அடுத்த தலைமுறைக்கு கோலக்கலை சென்றடைவது கட்டாயத் தேவை.
பெரியவர்களுக்கே சொல்லித்தர பொறுமையில்லை. சொன்னாலும் குழந்தைகளுக்கு ஆர்வமில்லை. என்ன செய்யலாம்?!
இப்போது குழந்தைகளுக்கு பலவற்றுக்கும் பணம்கட்டி வகுப்புகளில் சேர்க்கிறோம்.
கதை சொல்ல வகுப்பு, நடிக்க வகுப்பு, பேச்சுக்கு வகுப்பு என குழந்தைகளைக் கூர்படுத்துகிறோம் அல்லவா?
அதே போல் ‘கோலமாட்டிக்ஸ்’ என்றோ, ‘கோல்கோலா’ என்றோ, ‘வாசக்கோலா-தி ஆர்ட்’ என்றோ வகுப்புகள் தொடங்கி விஷயம் தெரிந்த மாமிகளை வகுப்பெடுக்க வைக்கலாம்.
காசுக்குக் காசு! கலைக்குக் கலை!!