தொ.மு.சி.ரகுநாதன்/புதுமைப்பித்தன் கதைகள் சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்

  1. இந்நூலின் நோக்கம்
    1987 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘புதுமைப்பித்தன் படைப்புக்கள் – தொகுதி 1’ (புதுமைப்பித்தன் கதைகளின் மொத்தத் தொகுப்பு) என்ற பெருநூலுக்கு, ‘புதுமையும் பித்தமும்’ என்ற தலைப்பில் 62 பக்கங்களில் நீண்டதொரு முன்னுரை எழுதிய க.நா. சுப்பிரமணியம் அதில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
    “தமிழில் சிறுகதை என்ற இலக்கியத்துறை வளர்வதற்குப் புதுமைப்பித்தன் தெரிந்து, அதிசயமாகவே செயல் பட்டிருக்கிறார். மணிக்கொடி காலத்தில் அந்தத்துறை வளம் பெற்று, தரம்பெற்று, உரம்பெற்று, உருவம் பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்…அவர்களில் பலரையும்விட அதிகமான விஷயங்களை நேருக்குநேர் பார்த்து எழுதும் தெம்பு அவருக்கு இருந்தது.பரப்பினாலும் ஆழத்தினாலும் அவர் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் இன்றும் வாசகர்களின் கவனத்தைக் கவருவதாக இருக்கின்றன; புதுமை நிறைந்தவையாக இருக்கின்றன. பிரச்சாரகராக அல்லாமல், ‘கலையை உய்விக்க வந்தவன் அல்ல நான்’ என்று அவரே சொன்னாலும், கலை உய்ய, இலக்கியம் ஓங்க வந்தவர்தான் அவர் என்பது நமக்கு நிதர்சனமாகத் தெரிகிறது
    ‘புதுமைப்பித்தன் படைப்புகளில் புதுமை ஐம்பதாண்டு களுக்குப் பிறகும் நிறைந்துதான் இருக்கிறது. பித்தமும் நிறைந்தேதான் இருக்கிறது. இரண்டுக்கும் அப்பால் இன்று தெரிந்து கொள்ளக்கூடிய, படித்த மாத்திரத்தில் ஏற்றுக் கொள்ள கூடிய இலக்கியத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த இலக்கியத் தன்மை பேராசிரியர்களோ, இலக்கண ஆசிரியர்களோ சொல்லுகிற அளவில் வரிந்து கட்டிக் கொண்டு செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. இது இயற்கையாகவே புதுமைப்பித்தன் என்கிற சொ. விருத்தாசலத்தின் தனித்துவமாக அமைந்து இன்றும் அவரைப் படிக்க நம்மைத் தூண்டுகிறது. அவர் எழுத்துக்களை மற்றவர் எழுத்துக் களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில் பலரும் எழுதினார்கள். சிலர் மிகவும் சிறப்பாகவும் எழுதினார்கள். அப்படிச் சிறப்பாக எழுதிய வர்களில் முன்னணியில் நின்றவர் என்று புதுமைப்பித்தனைக் காலமும் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை.”
    மேற்கண்ட வரிகள் புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டையே, அவருக்கு உரிய அங்கீகாரத்தையே வழங்கியுள்ளன என்று கூறத் தோன்றுகிறது. இல்லையா? ஆனால், ‘காலமும் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை’ என்ற அந்தக் கடைசி வார்த்தைகளில் கரந்து மறைந்து இருக்கின்ற உண்மை என்ன? நாம் எத்தனையோ முறைகளில் எவ்வளவோ பாடுபட்டும், இவ்வாறு கணிக்கப்படுவதை இறுதியில் தவிர்க்க முடியாமல் போய்விட்டதே என்ற அங்கலாய்ப்போடு, க.நா.சு. தமது தோல்வியைத் தாமே ஒப்புக்கொள்ள நேர்ந்துவிட்ட பரிதாபத்தையே இந்தக் கடைசி வார்த்தைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன என்பதே அந்த உண்மை.
    புதுமைப்பித்தன் தமக்கே உரிய வைரம் பாய்ந்த சொல்லாட்சித்திறன், எழுதும் கதைகளின் காலம், களம் பாத்திரங்கள் ஆகியவற்றுக்கேற்பக் கையாளுகின்ற மொழிநடை, கதைக்கருக்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தனித்தன்மை, சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளக்கும் எதிராகச் சாட்டையடிபோல் எழுப்பும் கலகக் குரல், அங்கதத்திறன், வாழ்க்கையை எதார்த்த பூர்வமாகவும், விமர்சனப் பார்வை யோடும் சித்தரிக்கும் பாங்கு, கதையின் வடிவ அமைப்பில் பலப்பல புதுமைகள் முதலிய பல்வேறு சிறப்புக்களால், தமது காலத்தைச் சேர்ந்த ஏனைய சிறுகதை ஆசிரியர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்ட, மாறுபட்ட; ஈடிணையில்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்கினார் என்பதை விருப்பு வெறுப்பற்ற பாரபட்சமற்ற கதாசிரியர்களும், விமர்சகர்களும், வாசகர்களும் ஒப்புக் கொள்ளவே செய்வர்.
    ஆனால் க.நா.சு.வும், அவரது சகபாடிகள் சிலரும், புதுமைப்பித்தனின் இந்தத் தனிச்சிறப்பைப் புரிந்து கொள்ளவும் ஏற்கவும் முன்வராமல், முப்பதுகளில் எழுதிவந்த சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தனைக் காட்டிலும் திறமை மிகுந்த, அதிகமான சாதனைகள் புரிந்த சிறந்த கதாசிரியர்கள் சிலர் இருக்கவே செய்தனர் என்று வலியுறுத்தி, விமர்சனம் என்ற பெயரால் விஷமத்தனங்கள் புரிந்து, புதுமைப்பித்தனைப் பற்றிய சரியான மதிப்பீட்டையும், அவருக்கு உரிய அங்கீகாரத்தையும் வழங்குவதைத் தவிர்க்க முயன்றே வந்துள்ளனர் என்பதை அவர்களது எழுத்துக்களே நமக்குப் புலப்படுத்துகின்றன.
    அது மட்டும் அல்ல. புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்று முத்திரை குத்தும் முயற்சியையும் இவர்களில் சிலர் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இந்த முயற்சிகள் புதுமைப்பித்தனின் மறைவுக்குப் பின்னரே அதிகமாயின. 1934 இல் காரைக்குடி இராய. சொக்கலிங்கம் நடத்திவந்த ‘ஊழியன்’ வாரப் பத்திரிகையில் உதவியாசிரி யராகப் புதுமைப்பித்தன் பணியாற்றி வந்த காலத்தில், அதில் தமது சொந்தக் கதைகள் சிலவற்றை எழுதியதோடு, வாராவாரம் பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ‘புதுமைப்பித்தன்’ என்ற பெயரில் எழுதாமல், நந்தன், சொ.வி.முதலிய வேறு பெயர்களில் பிரபலமான பிரஞ்சுக் கதாசிரியர் மாப்பஸானின் சிறுகதைகள் சிலவற்றை, அவற்றின் தலைப்புக்களைக்கூட அவர் மாற்றாமல், அப்படியே தழுவி எழுதி அவற்றை ஊழியனில் வெளியிட்டிருந்தார். புதுமைப்பித்தன் உயிரோடு இருந்த காலத்தில் அவர் தேர்வு செய்து கொடுத்திருந்த அவரது எந்தவொரு சிறுகதைத் தொகுதியிலும் இந்தக் கதைகள் இடம் பெறவேயில்லை. புதுமைப்பித்தனின் மறைவுக்கு ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் அவரது படைப்புக்களைத் தொகுத்து முறையாக வெளியிடத் தொடங்கிய சென்னை ஸ்டார் பிரசுரம் 1953 இறுதியில் ‘புதிய ஒளி’ என்ற கதைத் தொகுதியில் இத்தகைய க்தைகளையும் சேர்த்து அவர் பெயரால் தவறுதலாக வெளியிட்டுவிட்டது. இவ்வாறு அத்தொகுதியில் இடம் பெற்றுவிட்ட மாப்பஸான் கதைகளின் தழுவல்கள் சிலவற்றை, கால் நூறாண்டுக் காலத்துக்குப் பின்னர் 1979 இல் இனம் கண்டறிந்த காரைக்கால் கிருஷ்ணமூர்த்தி என்பவர், இதனைக் கொண்டே புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கிய கர்த்தா என்று முத்திரை குத்த முயன்றார். (இந்தத் தழுவல் கதைகள் பற்றிய விவரங்களையும், உண்மை நிலைகளையும் இந்நூலில் பின்னர் பார்ப்போம்.) இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி எழுதியதை ஆதாரமாகக் கொண்டு, புதுமைப்பித்தனோடு சேர்ந்து மணிக்கொடிப் பத்திரிகையில் எழுதி வந்தவர்களில் ஒருவரான ‘சிட்டி’ என்ற பெ.கோப. சுந்தரராஜனும் புதுமைப்பித்தன் மீது இதே முத்திரையைக் குத்த அரும்பாடு பட்டார். இவ்வாறு புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கிய கர்த்தா என்ற முத்திரையைக் குத்தும் முயற்சியை நியாயப்படுத்துவதற்காக, புதுமைப்பித்தன் சுயமாக எழுதிய சொந்தக் கதைகள் சிலவற்றின்மீதும், விமர்சனம், ஆராய்ச்சி என்ற பெயரால் விஷமத்தனங்கள் புரிந்து, இதே முத்திரையைக் குத்தச் சிலர் முயன்று வந்தனர்; இத்தகைய விஷமத்தனங்களில் சிட்டிக்கு மட்டுமல்லாமல், க.நா.சு. உள்ளிட்ட வேறு சிலருக்கும் பங்குண்டு.
    இவ்வாறு புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பை ஏற்றுக் கொள்ளாமலும், முப்பதுகளில் எழுதிவந்த சிறுகதை ஆசிரியர்களில் அவரது சாதனைகளை ஏனையோரின் சாதனைகளைக் காட்டிலும் குறைவானதே என மதிப்பிட்டும், அவர் சுயமாக எழுதிய கதைகள்