கொனஷ்டை/மௌனி


எனக்குத் தனுஷ்கோடியில் ஓர் அலுவல் இருந் தது. அதன் பொருட்டு எழும்பூர் ஸ்டேஷனில் போட்மெயிலில் ஏறினேன். நல்ல வேளையாகக் கூட்டமில்லை. என்னுடைய வண்டியில் பிரயாணி வேறு ஒருவர் மாத்திரம் இருந்தார். அவ ருடைய தாடியைப் பார்த்தால் ஒரு மகரிஷி மாதிரி இருந்தது. ஆனால் அவருக்குச் சுமார் நாற்பது வயது தான் இருக்கலாமென்று எண்ணினேன். என்னு டைய சுபாவம், முன்பின் அறியாதவருடன் நான் பேசுவதில்லை. அவரும் அவ்விதக் குணமே உள்ளவர் போலக் காணப்பட்டார். நான் ஏறின பின், வண்டி காத்திருந்த கால்மணி நேரத்தில் எங்களிடமிருந்து ஒரு வார்த்தைகூடக் கிளம்பவில்லை. ஒரு வண்டி யில் இருவர் மட்டுமே பிரயாணம் செய்வது திருப்திகரமானதுதான். ஆனால் மற்றவர் வம்பளக்கா மல் இருந்தால் இன்னும் விசேஷ மல்லவா? நான் அந்தமட்டில் திருப்தி அடைந்திருந்தேன். ஆனால் அந்தச் சந்தோஷம் நீடித்திருக்கவில்லை.


மணி அடித்தது. கார்டின் பிகிலும் ஊதிற்று. வண்டி நகரப்போகும் தருணத்தில் ஒருவர் ஓடி வந்து வண்டிக்குள் ஏறினார். அவருக்குப் பின்னால் ஒரு போலீஸ் ஜவான் ஒரு பெரிய மரப்பெட்டியை வண்டி யில் ஏற்றி விட்டு முறுக்காக ஸலாம் செய்தான். வண்டி புறப்பட்டு விட்டது.
“உஸ்ஸ! அப்பாடா!” என்று சொல்லிக்கொண்டு இம் மூன்றாவது மனிதர் கைக் குட்டை யினால் நெற்றியைத் துடைத்துக் கொண்டார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. இவர் இன்னும் பத்து விநாடி பிந்தி வந்திருந்தால் வண்டி அகப் படாமல் இப்போதும் பிளாட் பாரத்தில்தானே நின்று கொண்டு ‘உஸ்’ஸும் ‘அப்பாடா’ வும் சொல்லிக்கொண்டிருப்பார்
என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தேன்.
தாடிக்காரரோஇவருடைய பக்கங்கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. தாடியில் விரல்களை
விட்டு உருவியபடியே ஜன்னலுக்கு வெளியே நோக்கிக்கொண்டிருந்தார்.
மூன்றாவது ஆசாமி பேசத் தொடங்கினார்; “நான் இன்னும் பத்து விநாடி பிந்தி வந்திருந்தேனானால், இப்பவுங்கூடப் பிளாட்பாரத்தில்தான் நின்று கொண்டு,’உஸ்’ஸும்
‘அப்பாடா’வும் சொல்லிக் கொண்டிருப்பேன்!” என்றார்.
நான் எண்ணினதையே அவர் வெளிப்படை யாகச் சொன்னதில் எனக்கு உண்டான ஆச்சரியத்தில் நான் என்னை அறியாமல் “உம்!” என்று கொஞ்சம் உறுமினேன். தாடிவாலா அது கூடச் செய்யவில்லை நான் செய்தது பெருந் தவறு என்று எனக்கு விரைவில் தோன்றிவிட்டது. ஏனென்றால், அந்த ஒரு சப்தத்திலிருந்தே அவர் பரிசயம் பாராட்டி, நீளமாகப் பேசத் தொடங்கி விட்டார்.
“இந்தப் பெட்டியினால்தான் நான் இவ்விதம் தாமதம் ஆகி வர நேரிட்டது” என்றார்; “இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்பீர்க்ளோ?” என்று தயங்கினார்.
நாங்கள் ஒருவரும் கேட்கிற விதமாக இல்லை.
ஆகையால், நாங்கள் கேட்டதாகவே வைத்துக் கொண்டு பதிலும் சொல்லலானார்.
“இதுதான் ஸினிமோடகிராப் என்பது. நீங்கள் இதுவரையில் அந்தப் பெயரையே கேட்டிருக்க மாட்டீர்கள்.
ஆகையால் அப்படியென்றால் என்னவென்று சொல்லுகிறேன்
நீங்கள் அடிக்கடி ஸினிமாக்களுக்குச் சென்றிருக்கிறீர்களல்லவா?” என்று என்னைக் குறிப்பிட்டுக்கேட்டார்.
முன்பின் அறியாதவர்களோடு சம்பாஷிப்பதற்கு அடுத்தபடி ஸினிமாக்களைக் காணுவதில்தான் எனக்கு அதிக வெறுப்பு. என்னைக் குறிப்பிட்டுக் கேட்டதற்கு விடையே சொல்லாமல் முரட்டுத்தனமாக இருக்க முடியவில்லை. ஆகையால் என்னுடைய
வெறுப்பெல்லாம் புலப்படும்படியாக மற்றொரு தரம் “உம்!” என்று உறுமினேன். அவருக்கு அது போது மானதாயிருந்தது.
“அப்படி ஸினிமாக்களை அடிக்கடி பார்க்கிறீர் களே ஒழிய அங்கே காண்பிக்கும் படங்களை எவ் விதம் பிடிக்கிறார்கள் என்று நீங்கள் சற்றுக்கூட ஆலோசித்ததில்லையே ? எனக்கோ, இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் ரொம்ப ஆவலுண்டு. நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பதனால்தான் இப்படி என் தொழிலுக்குச் சிறிதும் சம்பந்தப்படாத விஷயத்திலுங் கூட நான் தலையிட்டுக் கொள்ளுகிறே னென்று என்னுடைய சம்சாரம் என்னை அடிக்கடி பரிகாசம் செய்கிறது வழக்கம். ஆகாகா! அவளுக்கே யாரையும் பரிகாசம் செய்கிற சுபாவம். ஆகாகா!” என்று நகைத்தார். அவர் வாய் ஓயவில்லை. ஈச்வரா! தனுஷ் கோடிக்கு இன்னும் நானூற்றுப் பதினைந்து மைல் கள் போகவேணுமே!’ என்று எண்ணிக் கலங்கினேன்.
இதுதான் அம்மாதிரிப் படங்கள் எடுக்கிற கருவி. இதிலேயே மற்றொரு பாகத்தில் அந்தப் படங்களைச் செருகி விட்டால், ஒரு சுவரிலோ திரையிலோ படங்களைக் காண்பிக்கவும் முடியும். இதெல்லாம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்குஎதற்காக என்று கேட்பீர்களோ? (இந்தத் தடவை அவர் தயங்கக் கூட இல்லை.) ரொம்ப ரொம்ப உபயோகம். கேளுங் கள்: இதனாலேயே ஐயாயிரம் ரூபாய் பெறுமான ஒரு கமல அட்டிகை திருட்டுப் போனதை இன்றைத் தினம் கண்டு பிடித்து விட்டேன்!” என்று சொல்லி மார்பைத் தட்டிக்கொண்டார்.
நான் கவனித்துக் கேட்க ஆரம்பித்தேன். துப்பறியும் கதை என்றால் எல்லாருக்கும் சுவாரஸ்யம் அல்லவா? ‘இவர், தம் பெருமையைச் சொல்லிக் கொள்ளப் போவது அநேகமாய்ப் பொய்யாகத்தான் இருக்கும். இருந்தாலும், புஸ்தகங்களில் வாசிக்கும்
துப்பறியும் கதைகளும் பொய்தாமே? அதே மாதிரி, இவர் சொல்வதையும், அது பொய்யாயிருந்தாலும் கேட்டுவைப்போம்’ என்று சற்றுத் திரும்பி உட்கார்ந்துகொண்டேன். தாடிவாலாவும் தமது தாடியை உருவும் தொழிலை நிறுத்தி, கவனிக்கும் பாவனையைக் காண்பித்தார். இதைக் காணவும், இன்ஸ்பெக்டர் இரு மடங்கு உத்ஸாகத்துடன் பேச ஆரம்பித்தார்:-
“மவுண்ட் ரோட்டில் இருக்கும் -ஷாப்பு உங் களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்குமே. முந்தா நாள் தினம் மத்தியான்னம் போலீஸ் கமிஷனர் ஆபீ ஸிற்கு அந்த ஷாப்பிலிருந்து ஒரு டெலிபோன் செய்தி கிடைத்ததன் பேரில், கமிஷனர் என்னை அங்கே அனுப்பினார். ஷாப்பின் சொந்தக்காரரில் ஒருவரும், வேலைக்காரர் ஒருவரும், பெரிய கனவான்மாதிரி உடுப்பு ஆபரணங்கள் தரித்திருந்தவர் ஒருவரும், ஆக மூன்றே பேர் ஷாப்பில் இருந்தார்கள். அந்தக் கனவான், ஒரு கமல அட்டிகை தமக்குத் தேவை என்று சொன்னாராம். வேலைக்காரர் பீரோவி லிருந்து ஒன்றை எடுத்து அவர் கையில் கொடுத்தா ராம். அவ்வளவுதான். பிறகு அந்த அட்டிகையைக் காணவில்லை. வேலைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாக அந்தக் கனவான் சொன்னார். தம் கையில் கொடுக்கவில்லை என்று வேலைக்காரர் சொன்னார். ‘இந்த வேலைக்காரர் இருபது வருஷமாக இங்கே வேலையில் இருந்து வருகிறார். என்னைப் பற்றியே எனக்குச் சந்தேகம் தோன்றினாலும் தோன்றலாமே ஒழிய இவருடைய யோக்கியதையைப் பற்றி எனக்குச் சந்தேகமே கிடையாது’ என்று ஷாப்பின் சொந்தக்காரர் சொன்னார். அதற்கு, ‘நான் மாத்திரம் அல்ப மனிதனா? நான் ஒரு ஜமீந்தார். அத்துடன் இருபத்தைந்து வருஷமாகத் தாலூகா போர்ட் அங்கத் தினர், ஜில்லா போர்ட் அங்கத்தினராகவும் இருந்து வருகிறேன். என்னை அழைக்காமல் கலெக்டர் ஒரு விருந்தும் கொடுப்பதில்லை. என்பேரில் சந்தேகப்பட்டு என்னை அவமானப் படுத்துகிறீர்களா? நல்லது. நான் இங்கே வந்ததுமுதல் இந்த இடத்தை விட்டு நகரவே இல்லை என்பதை உங்கள் வேலைக்காரர் சொல்லுவார். இங்கேயே வைத்து என்னைச் சோதித்துப் பாருங்கள்.
பிற்பாடு அந்த அவமானத்திற்காக உங்கள்பேரில் மானநஷ்ட வியாஜ்யம் போடுகிறேன்!’ என்று கோபித்துக் கடிந்தார்.
“ஷாப்புக்காரருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஐயாயிரம் ரூபாய் சாமானையும் விட முடியவில்லை; அவருடைய தேகத்தைப் பரிசோதித் துப் பார்த்து ஒன்றும் அகப்படாமலிருந்தால், மான நஷ்டம் கொடுக்கவும் இஷ்டமில்லை. ‘இப்பேர்ப்பட்ட கனவான் நகையைத் திருடியிருக்கமாட்டார்’ என்று ஷாப்புக்காரரை நான் சமாதானப்படுத்திய பிறகும், அந்தக் கனவான் சமாதானமாய் வெளியில் போக மாட்டேனென்றார். கடைசியில் அவருக்கு அநேக மன்னிப்பு வார்த்தைகள் சொல்லி அவரையும் ஒரு விதமாகக் கையைப் பிடித்து இழுத்ததும் இழுக்கா ததுமாக எவ்விதமோ வெளியில் கடத்தி, பிறகு கதவுகளை அடைத்தோம்.
“மறுநாள் முழுவதும் என்னுடைய ஏற்பாடுகளைச் செய்தேன். திங்கட் கிழமையாகிய இன்று காலையில் ஷாப்புத் திறக்கும்போது நான் ஒரு திரைக்குப் பின் நின்றபடியே தயாராக இருந்தேன். எதற்குத் தயார் என்று கேட்கிறீர்களோ? (இந்தத் தடவை, “சொல் லுங்கள்” என்று நானே கேட்டேன்.) இந்த ஸினிமோ டகிராப்பின் கண் மாத்திரம் திரைக்கு வெளிப் பாகத் தில் நீட்டிக்கொண்டு நிற்க, அன்றைத் தினம் ஷாப் புக்குள் வருபவர் ஒவ்வொருவரையும், அவர் திரும்பி வெளியே போகும்வரை ஸினிமாப் படம் எடுக்கும் படி ஏற்பாடு செய்தேன். அந்தக் கனவான் தம் முடைய தேகத்தைப் பரிசோதிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்த விதத்திலிருந்தே, அவரே அதை எடுத் திருக்கிறாரென்றும் ஆனால் அவர் தேகத்தில் அதை ஒளித்து வைத்துக்கொண்டிருக்கவில்லை என்றும் எனக்குச் சந்தேகம் தோன்றிற்று. ஆகையினால், ‘அது ஷாப்புக்குள்ளேதான் எங்கேயோ ரகசியமான இடத் தில் இருக்கவேண்டும். அந்தத் திருடனுடைய கூட் டாளி யாராவது ஒருவன், தன்னை ஷாப்புக்காரர் பார்த்ததில்லை என்கிற தைர்யத்தின் பேரில், அதை அங்கிருந்து எடுத்துப் போவதற்காகச் சீக்கிரத் தில் வந்து சேருவான்’ என்பது நாம் ஊகிக்கக் கூடியதே. ஆகையால் நான் அவனுடைய வருகைக் காகத் தயாராயிருந்தேன். இன்றைத் தினம் நான் எடுத்த படங்களில் மூன்றாவது படமே காரியத்தை முடித்துவிட்டது. அதை உங்களுக்குக் காட்டுகிறேன். பாருங்கள்!” என்று பெருமையுடன் பேசி முடித்தார்.
பெட்டியைத் திறந்ததும், அதிலிருந்த அநேக கருவிகளை வெகு விரைவில் ஒன்றுடன் ஒன்றாக முடுக்கி, பிறகு ஒரு பித்தானை அமுக்கவே இரண்டாம் வகுப்பு வண்டியின் விசாலமான பலகையின் பேரில் ஒரு ஸினிமாத் திரையில் விழுவதுபோல் வட்டமான வெளிச்சம் பிரகாசித்தது. பிறகு, கைப்பிடி ஒன்றை அவர் சுற்றத் தொடங்கினார். ஸினிமாப்பட மொன்றை நாங்கள் பார்க்கலானோம்
அந்தப் படத்தில் ஒருவர் ஷாப்புக்குள் நுழைந்தார். அங்கும் இங்கும் பார்த்துவிட்டு, வரிசையாக இருக்கும் கண்ணாடி மூடியிட்ட நகைவைக்கும் மேஜைகளை எண்ணினாற் போல் தோன்றிற்று. பிறகு அவற்றில் ஒன்றின் அருகில் சென்று, அதன்மேல் சாய்ந்துகொண்டு அதற்குள் இருக்கும் நகைகளில் ஒன்றைப் பார்க்கவேணுமென்று சொன்னார். வேலைக்காரர் கொத்துச் சாவியை எடுத்து வந்து மேஜையின் எதிர்ப்பக்கத்தில் நின்றபடி அதன் கண்ணாடி மூடியைத் திறக்கத் தொடங்கினார். இவருடைய கை அதிவேகமாக மேஜையின் அடியில் தட விற்று. ஏதோ பளிச்சென்று மின்னின வஸ்து இவர் கையிலிருந்து உடனே ஜேப்பியினுள் நுழைந்தது. அதே சமயத்தில் மேஜையினடியில் ஒட்டவைத் திருந்த ஒரு பெரிய தேன்மெழுகு கட்டி கீழே விழுந் தது. பிறகு இவர், தாம் கேட்ட நகை தமக்குப்பிடிக்கவில்லை என்று சொல்லித் திரும்பினார்.இப்பொழுது இவருடைய முகம், படத்தில் சரிமத்தி யில், எங்களை நேராகப் பார்க்கிற பாவனையில் காணப் பட்டது. அச்சமயம் ஸினிமா யந்திரத்தின் கைப்பிடி யைச் சுற்றுவதை இன்ஸ்பெக்டர் நிறுத்தி விட்டார். நகையையும் திருடனையும் இங்ஙனம் புதுமாதிரியாகக் கண்டுபிடித்ததற்காக நான் கைகொட்டினேன். தாடிவாலாவும் தாம்மாத்திரம் சும்மா இருக்கக்கூடா தென்று எண்ணி, “சபாஷ்!” என்று முணுமுணுத் தார்.
“ஆனால் இந்தத் திருடனை நான் எங்கேயோ பார்த்திருக்கிற ஞாபகம் இருக்கிறதே” என்று அசை யாமலிருக்கும் படத்தை உற்றுப் பார்த்துச் சொன் னேன்.
‘ஆகா! என்ன ஞாபக சக்தி!” என்றார் இன்ஸ் பெக்டர். “இதோ பாருங்கள்” என்று சொல்லி, சென்று, அவருடைய இரண்டு தாடிவாலாவிடம்
காதுகளுக்குப் பின் பாகத்தில் கையை வைத்து, அப்படியே, வாழைப் பழத்தின் தோலை உரிப்பது போல் அவருடைய தாடியைக் காதில் மாட்டும் கொக்கிகளு டன் உரித்துவிட்டார். அப்போது, அந்தத் தாடியிழந்தவன்தான் ஸினிமாப் படத்திலும் எங்களுக்கு நேரே நின்றான்.
“சபாஷ்!” என்று அவன் சொன்னபடியே நானும் சொன்னேன்.
“எனக்கும் அப்படித்தான்
தோன்றுகிறது. சபாஷ்!” என்றார் இன்ஸ்பெக்டர்.
“நீ ரொம்பக் கெட்டிக்காரன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயோ?” என்று அத் திருடன் சீறினான்; “இதோ பார்! ஐயாயிரம் ரூபாயும் போச்சு; உனக்கு வரப்போகிற பட்டமும் போச்சு!” என்று சொல்லி, ஜிவ்வென்று தன் பையிலிருந்த அட்டி.கையை எடுத்து இருப்புப் பாதையின் அருகிலிருக்கும் செங்கல்பட்டு ஏரியில் வெகு தூரத்திற்கப்பால் விட்டெறிந்தான்.
வாயாடி இன்ஸ்பெக்டரிடம் எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. ஜயம் கையில் கிடைக்கும் சமயத்திலல்லவா தோல்வி அடைந்தார்! ஆனால் அவரோ நகைத்தார்.
“ஐயோ திருடனே! நான் என்ன குழந்தையென்று நினைத்துக் கொண்டாயோ!
ஐயாயிரம் பைசாக்கூடப் போகவில்லை. நான் மேஜைகளுக்கு அடியில் தேடி நகையைக் கண்டுபிடித்த பிறகுதான் திருடர்களைப் பிடிக்க முயற்சி செய்தேன். ஞாயிற்றுக் கிழமை முழுவதும் அந்த ஷாப்பிலுள்ள தட்டான்க ளெல்லாம் வேலை செய்து அந்தக் கமல அட்டிகை மாதிரியே கில்ட் பூசிய இமிடேஷன் வைர அட்டிகை ஒன்று செய்து முடித்தார்கள். உம்முடைய ஜமீந்தார் அசல் நகையை ஒட்டிவைத்திருந்த மெழுகிலேயே அதை நான் ஒட்டி வைத்திருந்தேன். தெரிகிறதா? காலைமுதல் உம்மையே பின் தொடர்ந்து வந்து இந்த வண்டியில் ஏறினேன்” என்றார்.
அந்தத் திருடனுக்கு வந்த கோபத்தில் அவர் பேரில் பாய்ந்து மென்னியை முறித்து விடுபவன் போல் தோன்றிற்று. ஆனால் இன்ஸ்பெக்டர் அதைக் கவனித்ததாகக் காண்பிக்கவில்லை. அவர் கையில் மாத்திரம் முன்னே இருந்த விசையின் கைப்பிடிக் குப் பதிலாக ஒரு சிறிய துப்பாக்கி இருந்தது. அதை வைத்து விளையாடிக் கொண்டே, அவர் மறுபடியும் கூறலானார்:
“உம்முடைய ஜமீந்தார் சிநேகிதர் மாத்திரம் சனிக் கிழமை மத்தியான்னமே என்னுடைய ஆட்களின் பார்வையிலிருந்து நழுவிப்போய்விட்டார். அதனால்
பாதகம் இல்லை. உம்முடைய வசத்தில் அட்டிகை இருக்கிறதாக எண்ணுகிறவரையில் அவர், உம்மை நம்பி அதிக நேரம் பிரிந்திருக்கமாட்டாரல்லவா? ‘எதற்கும் பத்திரத்திற்காக உம்முடைய கைகளுக்கு இந்தச் சர்க்கார் காப்பை இடுகிறேன். செங்கல்பட்டு ஸ்டேஷன் வந்துவிட்டது. உமக்கு அடுத்தாற் போல் உட்கார்ந்து கொள்ளுகிறேன். வருகிறவனுக்கு நீர் எச்சரிக்கை கொடுக்காமல் இருக்கவேணுமென் கிற ஞாபகத்திற்காக இந்தத் துப்பாக்கியின் வாய் உம்முடைய முதுகைத் தடவிக்கொண்டேயிருக்கும்” என்றார்.
ஸ்டேஷனில் வண்டி நின்ற நிமிஷத்திலேயே ஒருவன் எங்கள் அறைக்குள் ஏறி, “பழத்தைப் பத்திரமாகக் கொண்டுவந்தாயா?” என்று கைதியை கேட்டான். அந்த ஆவலில் அவன் ஆவலுடன் இன்ஸ்பெக்டர் இருப்பதைக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் அவரே அவனுக்குப் பதில் சொன்னார். “கேட்டதில்லையோ, பழமொழியை? பழம் நழுவி ஏரியில் விழுந்தது. அதற்குப் பதிலாக நீர்தான் எங்கள் கையில் கிடைத்தீர். நல்ல பழம்! நல்ல பழம்!” என்று சொல்லிக்கொண்டு இன்ஸ்பெக்டர் அவனுக் கும் அதே கை உபசாரம் செய்தார்.
அவர்களிருவரையும் அன்புடன் அணைத்துக் கொண்டு அவர் வண்டியை விட்டு இறங்கினார்.
“எனக்கு விடை கொடுக்கவேணும்” என்று என்னிட்ம் சொன்னார்; “ஒருவேளை சாக்ஷி சொல்ல வேண்டியிருந்தாலும்-“
விலாசம்,
“என்னுடைய பெயர் கொனஷ்டை. ….தங்களுடைய பெயரை எனக்குத் தெரிவிக்க
லாமோ?” என்று கேட்டேன்.
“எனக்குச் சந்திர மௌளீச்வரன் என்று பெயர்” என்றார்.
“வெகு அழகான பெயர்தான். ஆனால் அவசரத் தில் கூப்பிடுவதாயிருந்தால் சிநேகிதர்கள் எப்படி
அழைப்பார்களோ?”
“என் பள்ளிக்கூடத்தில் ஒரு குறும்புக்கார உபாத்தியாயர், என் பெயரில் ஓர் எழுத்தை மாற்றி, என்னை மௌனி என்று சொல்லுவார். பிற்பாடு எனக்கு வயதுவந்த பிறகும் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. என்னை மௌனி என்றே அழைப்பார்கள். எதற்காகக் கேட்கிறீர்கள்?”
“வேறொன்றும் இல்லை. உங்களைப் பார்த்தவுடனே பெயர் எனக்கும் அப்படித்தான் இருக்கவேணு மென்று தோன்றிற்று. ஆகையால்தான் கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டேன்.
நல்ல பெயர்! நல்ல பெயர்!” என்றேன்.