
சித்திரை மாதத்து உச்சிவெயில் தலையைப் பிளந்து கொண்டிருந்தது. ஜேகே சூப்பர் மார்க்கெட்டில் அம்முவை இறக்கிவிட்ட கையோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்கெட்பாக் கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் ஏகதேசமாக அள்ளி டிராலி கூடையில் போட்டுக்கொண்டேதானிருந்தேன். அவளே என்னருகில் வந்து “ நீங்க கொஞ்சம் வெளில போய் உட்காருங்க நானே பொருளையெல்லாம் எடுத்திட்டு உங்களை கூப்பிடுறேன் “ என்று கொஞ்சம் தேவைக்கு அதிகமான மரியாதையாகவே சொல்லிவிட்டாள் .
அந்த மாதிரி முளைக்கும் திடீர் மரியாதைக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தபடியால் சட்டென்று வெளியில் வந்து வெயிட்டிங் ஹாலில் சமர்த்தாக அமர்ந்து கொண்டு கைபேசியில் உலகை ஒரு சுற்று வலம்வர ஆரம்பித்தேன் .
எதிரே இளநீர்கடையில் வியாபாரம் களைகட்டிக் கொண்டிருந்தது அங்கிருந்து வந்த கலவையான சப்தத்திலிருந்தே எனக்கு தெரியவந்தது. சாலையை வேடிக்கைபார்த்தபடி பொழுதை போக்கிகொண்டிருப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை.
ஆயிரம் தான் சொல்லுங்கள் ஆண்களுக்கு ஒருநாளும் தேர்ந்தெடுக்கும் ஐக்கூ போதாது. தேவையில்லாத பொருளை தள்ளி விட்டு தேவையான பொருளை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு சாமர்த்தியம் எல்லாம் பெண்களுக்கானது தான் போல. தேவையானது தேவையில்லாதது எது அப்டின்னு பேசினா வடிவேலு சொன்ன மாதிரி தாம் நாம பிடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.
இப்படித்தான் ஒருமுறை பசுமை சூப்பர் மார்கெட்டில் மூன்று கூடைகள் நிறைய வீட்டுப்பொருட்களை நிரப்பி எடுத்துக்கொண்டு வந்து பில்கவுண்டரில் அருகே வைத்து விட்டு என்னவோ பெரிய சாதனையாளன் போல நின்று கொண்டிருந்தேன். பில் போடும் யுவதி
உள்ளிருந்து பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து பார் கோடை வாசிக்கும் கணினிக்கு முன்னால் அலட்சியமாக காட்டிக் கொண்டிருந்தாள். பீப் பீப் என்ற சத்தம் வெகு ஜோராக வந்து கொண்டருந்தது. அப்நார்மலாக பில் தொகை ஈசிஜி மாதிரி ஏறிக்கொண்டே சென்று கொண்டிருந்தது . மூன்று நான்கு பொருட்களை கூட கூடையிலிருந்து எடுத்திருக்கமாட்டான் அதற்குள் கூடைக்குள்ளிருந்து அழகாக பேக்செய்யப்பட்டிருந்த இரண்டு மூன்று சிலேடுகள் , டப்பாவில் அடைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண பல்பங்கள் நாலுகோடு போட்ட நோட்டுகள் , பூசு மஞ்சள் டப்பா என்று வந்து விழுந்தன.
இதை எல்லாம் எப்பொழுது எடுத்தோம் என்று யோசித்தபடியே நான் கை விரல்களுக்கு கொஞ்சம் பிசியோதெரபி கொடுத்து முடிக்கும் முன்பாகவே மவுத்வாஸில் இரண்டு வகைகள் பெண்கள் பிரத்யேகமாய் பயன்படுத்தும் இரண்டு மூன்று லிப்ஸ்டிக் அயிட்டங்கள் என அடுத்தடுத்து நான் சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான அயிட்டங்கள் ஒவ்வொன்றாக வந்து விழுந்தபடியே இருந்தன . அம்மு அமைதியின் சொரூபம் பவ்யமாக நடந்து வந்து எனக்கு மட்டும் புரிகிற மாதிரி ஒரு முறை முறைத்தாலே பார்க்கவேண்டும் அந்த நொடியிலேயே என் ஷாப்பிங் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல மிகத் தெளிவாக தெரிந்தது விட்டது.
நல்ல உச்சிவெய்யிலுக்கு தாகம் அதிகரித்தபடியே இருந்தது எப்படியும் இன்னும் அரைமணி நேரம் ரோட்டில் போகும் பேருந்துகளை வெட்டியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது எழுதி வைக்கப்பட்ட விதி.
ஒரு இளநீராவது குடித்துவிட்டு வரலாமென்று எதிரிலிருந்த இளநீர் கடையைப்பார்த்தேன் கூட்டம் அதிகமில்லை. அப்போது தான் ஒரு கேரளா குடும்பம் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என ஒரு ஸ்விப்ட் காரிலிருந்து இருந்து இறங்கி இளநீர் குடித்துக்
கொண்டிருந்தார்கள் .அருகே இரண்டு பைக் ஒரு ஆட்டோ என நிறுத்தி விட்டு அவர்களும் இளநீரும் கையுமாக நின்று கொண்டிருந்தார்கள் .
சொர்ணாக்காள் கைகளில் பம்பரம் சுற்றி சுற்றி கோஸ் எடுப்பது போல் ஒரு கையில் அரிவாளை பிடித்தபடி மறுகையால் இளநீரை வைத்துக் கொண்டு சுழற்றி சுழற்றி சீவிக்கொண்டிருந்தாள். அவளது உள்ளங்கைகளுக்குள் செவ்விளநீர் மஞ்சள் பந்து மாதிரி அவ்வளவு லாவகமாக சுழன்று சுழன்று வந்தது.
மொத்தமே மூன்று நான்கு சீவல்கள் தான் இளநீரின் முன்தோல் அலேக்காக அப்டியே துள்ளிப்போய் முன்னால் வைத்திருந்த பிரம்புக் கூடையில் விழுந்தது. கூட்டுக்குள்ளிருந்து பீய்ச்சி அடித்த இளநீர் தூறல் முன்னால் நிற்பவரின் முகத்தில் குற்றாலச்சாரல் மாதிரி அடித்த உடன் ஒரு நொடியில் வயதை மறந்து குழந்தைமைக்கு சென்ற அந்த மனிதர் மீண்டும் தன் நினைவு பெற்று சின்ன சிலிர்ப்போடு முகத்தை துடைத்துக்கொண்டார்.
இப்பொழுது காயின் உச்சி மண்டையில் அரிவாளின் கூர்மையான மூக்கால் ஒரு சின்னப் பொத்தலிட்டாள். மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண உறிஞ்சு குழல்களிலிருந்து ஒன்றை எடுத்து இளநீருக்குள் திணித்தபடி அவர் கையில் கொடுத்தாள். அதற்குள் ஒரு சுடிதார் பெண் காலி செய்த இளநீர் காயை அவள் கையில் கொடுத்தாள். அதை வாங்கிய நொடி சொர்ணாக்காவின் கை காயில் பம்பரமாய் சுழன்றது. நேராக அதன் மேற்புறத்தில் ஒரு வெட்டு. அப்படியே உள்ளங்கையில் வைத்து ஒரு சுழற்று சுழற்றி அடுத்த பக்கம் திருப்பி இன்னொரு வெட்டு. பெரிய பச்சை நிற இளநீர் நகைப்பெட்டி போல இரண்டாக திறந்து கொண்டது.
ஒரு ஒரத்தில் பச்சை மட்டையை ஒரு ஓரத்தில் கத்திபோல் சீவி காய்க்குள் கொழ கொழவென்று தளும்பிக்கொண்டிருந்த பாலாடைகட்டியை ஒருசுற்று சுற்றி எடுத்தாள். உடனே காற்றில் குப்பென்று இளநீர் பாலாடையின் நறுமணம் பரவ அருகே நின்றிருந்தவர்களின் நாவுகளில் எச்சில் ஊறியது. இதை சொல்லி முடிக்கும் நேரத்திற்குள்ளெல்லாம் பாலாடையை ஸ்பூன் போல அள்ளி எடுக்க ஒரு சிறிய பச்சை மட்டையை அந்த சுடிதார் பெண்ணின் கைகளில் கொடுத்தாள்.
சுற்றிலும் நின்று கொண்டிருந்த கேராளக்காரர்கள் சொர்ணாக்களின் கரங்கள் மின்னல் வேகத்தில் சுழல்வதை வேடிக்கை பார்த்தபடியே பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.. மாராப்பு சேலையை பற்றி அவள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை . அவளின் பரந்த உடலில் அது எந்த மூலையில் இருக்குமென்று அவளுக்கே தெரியாது. அரிவாளும் கையுமாக அதிரி புதிரியாக அவள் ஓங்கி நிற்கும் போது அருகிலிருப்பவர்களுக்கும் அவளை வேறு கோணத்தில் பார்க்க மனது வராது. புதிதாக பார்ப்பவர்களுக்கு இப்படித்தான் பிரமிப்பாக இருக்கும். கனத்த மார்புகள் அதிர அதிர அவள் இளநீரோடு செய்கிற சாகசம் கூட்டம் அதிகமென்று வேறுகடைக்கு அவர்கள் செல்ல நினைத்தாலும் அவர்களை அங்கேயே கட்டிப்போட்டுவிடும்.
நான் அருகே சென்று ஒரு இளநீர் வாங்கலாமா என நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். புளியமரத்தில் இளநீர் கொத்து கொத்தாக காய்த்து தொங்குவது போல மேலே கிளைகளில் இருந்தது மஞ்சள் கொச்சக்கயிற்றை நேராக கட்டி இறக்கி நான்கு வகை இளநீர்காய்களை கட்டி தொங்க விட்டிருந்தாள். தாவி தாவிப்போகும் என் பார்வையை புரிந்து கொண்டபடி செவ்வௌனி ஐம்பது பச்சை நாற்பது அடுத்தது முப்பது என்று அடுக்கி கொண்டிருந்தாள்சொர்ணாக்காள்.
நான் செவ்விளினியை வாங்கி விடலாமா என்று கூர்ந்து நோக்கி கொண்டிருந்தபோது என் இடுப்பில் நகத்தோடு ஒருகை சுரண்டியது. அதிர்ந்தபடி பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். நன்கு பரிச்சையமானவன் போல சிரித்தபடியே ஒருவன் நின்று கொண்டிருந்தான். நான் சற்று அதிர்ந்து அடங்குவதற்குள் “”வாத்தியாரே ஒரு இளநீ வாங்கிக் கொடு “ என்று உரிமையாக கேட்டான்.
கொஞ்சம் அழுக்கான பழைய காலத்து பேகி பேண்ட் பட்டன் இல்லாத முழுக்கை சட்டை தோளில் ஒரு ஜோல்னா பேக் சகிதம் நெடுநாள் பழகினவன் மாதிரி சிநேகமாய் சிரித்துக்கொண்டிருந்தான். இரவல் கேட்பவனுக்குரிய எந்த இலக்கணமும் அவனிடம் இல்லை. சொல்லப்போனால் ஏதோ பாட்டை முணு முணுத்தபடி கால்களில் தாளமிட்டபடி தான் அவன் தோளுக்கு பின்னால் ஒண்டி நின்று கொண்டிருந்த பெண் அப்பொழுது முழுவதுமாக என் பார்வையில் படவேயில்லை. ஒரு நொடி ஆனது அவன் யாசகம் கேட்பவன் என்று நான் கண்டு கொள்வதற்கு . என்ன தைரியம் இருந்தால் பிச்சை கேட்பவன் இடுப்பை சுரண்டி இளநீர் வாங்கிக் கொடு என்று கேட்பான் ?
எனக்கு சுள்ளென்று வந்த கோபத்தில் உடனே எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தலையை வலமும் இடமுமாக பலமாக ஆட்டியபடி இல்லையென்று மறுத்தேன். அவன் உடனே சிரித்த படி “சரி வாத்தியாரே ” என்று சொல்லிவிட்டு அந்த சொர்ணா அக்காளிடம் சென்று அக்கா ஒரு இளநீர் கொடு என்று உரிமையாக கேட்டான் . அரிவளிலிருந்து கண்ணை அகற்றாமல் “காசு வச்சிருக்கியா ” ? என்று அவள் பதிலுக்கு கேட்டாள்.இவன் இல்லையென்பதாய் தலையாட்டி சிரித்தான்
பிறகு எப்படி இளநீர் வரும் ? என்றாள் நிமிர்ந்து பார்த்து
‘’இவளுக்கு வயித்து வலி மட்டை வெய்யில்ல நாலஞ்சு தெரு சுத்தி வந்துட்டோம் ஒரு இளநி குடிச்சா சரியாப்போயிடும்னு சொன்னா ‘’ என்றான்.
அப்பொழுதுதான் நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.கண்களில் கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக்கை தரையில் ஊன்றி நின்று கொண்டிருந்தாள். வயிறு முன்புறம் உப்பி அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. எப்படி எதிர்வினையாற்றுவது என்பது தெரியாமல் அவளும் வெள்ளந்தியாக சிரித்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
கடவுளே வந்தாலும் சொர்ணாக்கா வியாபாரத்தில் மசிய மாட்டாள் என்பது அவளுக்கு எப்படி தெரிந்திருக்கப்போகிறது ?
”இளநீர் காரி இது யேவார டைம் போயிட்டு பிறகு வா ” என்று ஒரே வார்த்தையாக முடித்து விட்டாள். அவ்வளவு தான் அந்த ஆள் அதற்கும் சிரித்தபடியே அந்த பெண்ணின் வாக்கிங் ஸ்டிக்கைப்பிடித்து அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளநீர் தானே வாங்கிக்கொடுக்கலாம் என்று கூட எனக்குத் தோன்றியது. ஆனால் கூப்பிட மனது வரவில்லை. ஒரு வேளை கூப்பிட்டாலும் அவன் திரும்ப வருவானா என்ற யோசனை வேறு பதற்றமாக இருந்தது. அவன் அவளை அழைத்துக்கொண்டு லாவகமா பஸ் ஆட்டோ பைக்கை எல்லாம் கடந்து அடுத்த தெரு போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்ச்சே ஒரு நிமிடம் யோசித்து முடிவு சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.
“ பிச்சையெடுக்கிறது பொழைப்பு இதுல யாரு இவன பிள்ளை பெத்துக்கிற சொன்னது ? ”
அம்மு இரண்டு பெரிய பிக் ஷாப்பர்களை நிரம்ப பொருளை கையில் வைத்துக் கொண்டு வாசலில் நின்று என்னை அழைத்தாள். நான் இளநீர் ஆர்டர் கொடுக்காமல் அவசரமாக அவளிடம் சென்றேன். வீட்டிற்கு வரும் வரையில் அவள் எதுவும் பேசவில்லை.வெய்யிலின் கடுமை அப்படி .
வீட்டிற்குள் நுழைந்ததும் பொருட்களை எடுத்து டைனிங்டேபிள் முன்பு பரப்பி வைத்துக் கொண்டிருக்கும் போது நல்ல வெய்யில் இல்ல ? என்றேன்
அதுதான் இளநீர் குடிச்சீங்கல்ல ? என்றாள்
இல்ல உன்னைப்பார்த்ததும் ஆர்டரை கேன்சல் பண்ணீட்டேன்
அதுக்குத்தான் இப்ப அப்செட் ஆகிப்போயிட்டீங்களா?
அதுக்கில்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இளநீக் கடையில ஆளை சரியாப்பார்க்காமலே ஒரு கண்ணு தெரியாத பொண்ண காயப்படுத்திட்டேன் அது தான் மனசு கேக்க மாட்டேங்குது என்றேன்.
என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தாள். நான் இளநீர் கடையில் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தேன் .
வயிற்றுப்புள்ளைகாரிக்கு ஒரு இளநீர் வாங்கி கொடுத்தா கொறைஞ்சா போயிருப்பீங்க ? .எத்தனை பேருக்கு எவ்வளவு செலவு பண்றோம் ?
“இல்ல அவ அப்படி இருக்கிறத நான் சரியா கவனிக்கல்ல ” என்றேன்
என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அவங்க எந்தப்பக்கம் போனாங்க ? என்று கேட்டாள்
ஏன் அங்க தான் எங்கேயாச்சும் சுத்திகிட்டு இருப்பாங்க என்றேன்.
என்ன நினைத்தாலோ தெரியவில்லை போங்க போய் தேடிப்பிடிச்சு ஒரு இளநீர் வாங்கி குடுத்துட்டு வாங்க என்றாள்.
எங்கே போய் தேடுவது என்று யோசித்தபடியே சரி என்றேன்.
உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திடவா ? என்றேன்.
என்ன நினைத்தாளோ வாங்க நானும் வர்றேன் போய் பார்த்துட்டு வந்துடலாம் என்று பைக்கிள் பின்சீட்டில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள்.
சொர்ணாக்கா இளநீக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கே அவர்கள் தென்படவில்லை.
எந்த பக்கம் போனாங்க ?
போலீஸ் குவாட்ரஸ் பக்கம் தான் போனத பார்த்தேன்
போலிஸ் குவாட்ரஸ் தெருவில் அரசமரத்துப் பிள்ளையார் கோவிலுக்கு கீழே குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அடையாளம் சொல்லி விசாரித்துப் பார்த்தபோது “ அப்பவே அந்த கிறுக்கன் அவளை கூப்பிட்டு போய்ட்டானே ” என்றார்கள்.
எல்லாம் உங்களை சொல்லனும் என்றாள்.
அடுத்ததாக வேளாங்கண்ணி பெட்ரோல் பங்க் வி..கே.என் நாடார் திருமண மண்டபம் பசுமை மார்க்கெட் எங்கு தேடியும் ஆளைப்பிடிக்க முடியவில்லை.
எங்கயாவது கோயில் பக்கம் போயிருப்பாங்களோ ? பெரிய கோவிலுக்கு போய் பார்ப்பமா ?
கொரானா டைம்ல கோயிலை யார் திறக்கிறது ? நல்ல மூளை தான் என்றாள்.
கரியா குடும்பன் கோவில் தெருவில் வண்டியை திருப்பி விடலாமா என்ற யோசித்துக்கொண்டிருக்கும் போதே
ஏங்க இங்க வேற எங்க இளநீ கடை இருக்குது பக்கத்துல ? என்றாள்
ஏன் போலிஸ் ஸ்டேசனுக்கு முன்னால நம்ம நூறன் மாமா கடை இருக்குது. ஆனா அங்கயெல்லாம் அவன் போய் கேட்கமாட்டான்.அந்தாளு கெட்ட கெட்ட வார்த்தையில தான் திட்டுவாரு என்றேன்.
பரவாயில்லை இப்ப வண்டியை அங்க விடுங்க என்றாள்.
பைக்கை ஒரே மூச்சில் கிளப்பிக் கொண்டு அங்கே போனேன். கொஞ்ச தூரத்திலிருந்தே கூட்டத்தில் அவன் இருப்பதை கண்டு பிடித்து விட்டேன். பழைய மாடல் பேசி பேண்ட் சாயம் போன நீலக்கலர் முழுக்கை சட்டை .கடையைப்பார்த்தபடி எனக்கு நின்று கொண்டிருந்தான்.
அம்முவிடம் அதோ அங்க தான் இருக்கறாங்க என்று கைகாட்டினேன்.
நாங்கள் கடைக்கு முன்னால் இறங்கி வண்டியை ஸ்டேன்ட் போட்டு அருகில் சென்றோம்.
அவனும் அவளும் முகம் கொள்ளா சிரிப்போடு ஆளுக்கு ஒரு இளநீரை கையில் வைத்துக்கொண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
நான் அருகில் சென்று அவனைப் பார்த்தேன். அவன் என்னை அடையாளம் கண்டு கொண்ட அதே புன்னகையோடு நூறனைப்பார்த்து சொன்னான்.
“ வாத்தியாருக்கு ஒரு இளநீ வெட்டுங்க ”
அம்முவை கவனித்து விட்டு மறுபடியும் அதே மாறாத புன்னகையுடன் நூறனிடம் திரும்பி
“அம்மாவுக்கு இன்னோன்னு சேர்த்து வெட்டுங்க என்றான் ”

One Comment on “தங்கேஸ்/இளநீர்”
Comments are closed.