ராஜாமணி/எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதை

விருச்சம் நடத்தும் 106 வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வில் எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதையை பற்றிய எனது உரையின் பதிவு.

பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தில் மருமகளாக இருக்கும் படித்து வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சூழலை பற்றிய கதை .
கமலவள்ளி எம் எஸ் சி ,எம் எட் படித்து கேஜிபி கேர்ள்ஸ் மேல்நிலை மெட்ரிகுலேஷன் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுபவர். .பிறந்து ஆறு மாதம் கூட ஆகாத தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது , அப்பொழுது அங்கு வந்த தன் கணவனிடம் “குழந்தை உங்கள் ஜாடையாகவே இருக்கிறான்” என்று கூறி மகிழ , கணவனிடமோ எந்த சலனமும் இல்லை .மாறாக நாளை முதல் ஸ்கூலுக்கு வேலைக்கு போகலாம் இல்லையா? என்று கேட்கிறேன் .அதிர்ச்சியுற்ற கனகவல்லியோ,” என்னது! எப்படிங்க குழந்தைக்கு ஆறு மாதம் கூட ஆகவில்லையே! குழந்தையை விட்டுட்டு எப்படி போக முடியும், குழந்தைக்கு யார் பால் கொடுப்பது? குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை என்றால், தன் மார்பகத்தை காட்டி ,பால் கட்டிக்கும், உயிர் போற மாதிரி வலிக்கும். கழிப்பறையில் தான் பாலை பீச்சி அடிக்க வேண்டும் .”என்கிறாள். கணவனும் ” வழியில் உன் பிரின்சிபாலில் பார்த்தேன். அவர் தான் பப்ளிக் எக்ஸாம் நாலு மாசத்துல வருது அதனால கனகம் ஸ்கூலுக்கு வர முடியுமான்னு கேட்டாரு” என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விடுகிறான். குழந்தைக்குத் துணி மாற்றுவதற்காக மேஜைக்குச் சென்ற கனகவல்லி ,அங்கே தனது பள்ளியின் ஐடி கார்டு எடுத்து வைக்கப்பட்டிருக்குப்பதை பார்த்து வருத்தப் படுகிறாள். புகுந்த வீட்டில் பணமே பிரதானம் . பைனான்ஸ் கம்பெனி நடத்தும் கணவனும், அவனது அப்பா அம்மாவும் வீட்டை கூட ஒரு பைனான்ஸ் கம்பெனி போல தான் வைத்திருக்கிறார்கள். அது வீடா அல்லது பைனான்ஸ் கம்பெனியா என்று கனகவல்லிக்கு தோன்றும். அதாவது ஒரு வீட்டில் இருக்க வேண்டிய பாசமும் அக்கறையும் எதுவும் இல்லை. பணமே பிரதானம். கஞ்சத்தனத்திற்கு பேர் போனவர்கள். பிறந்த வீட்டில் ” சம்பளத்திற்காகத்தான் என்னைத் திருமணம் செய்து கொண்டார்கள்” என்று சொன்னால் ,அதை நினைத்து பெற்றோர்கள் பெருமைப்படுகிறார்கள். திருமணமாகாத இரண்டு தங்கைகளை வைத்துக்கொண்டு அவர்களது அப்பா அம்மாவும் இவளுடைய நிலைமைக்காக வருத்தப்படுபவர்களாகவோ, ஆறுதல் சொல்லுபவர்களாகவோ இல்லை .என்ன செய்வது குழந்தையோடு பேசத் தொடங்குகிறாள். பால்குடிப்பதற்காக மார்பில் முகத்தை வைத்து தேடும் குழந்தையிடம்,” நல்ல குடிச்சுக்கோ! நாளைக்கு நீ இந்த பாலுக்கு என்ன பண்ணுவ. அம்மாதான் ஸ்கூலுக்கு போய் விடுவேனே, என்று சொல்வதாக கதை முடிகிறது .

முதுநிலை பட்டம் படித்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆசிரியர் பணியில் இருந்தும் ஒரு பெண்ணால் சுயசார்புடன் இந்த சமூகச் சூழலில் இருக்க முடிகிறதா? குடும்பம் என்பதும் பழமைவாத மற்றும் ஆணாதிக்க அமைப்பாகவே இருக்கிறது . பள்ளியில் கூட குழந்தைகள் காப்பகமும், பணிபுரியும் பெண் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கான சூழலும் இல்லை என்பதும் கதையில் தெரிய வருகிறது. இது போன்ற கதைகள் மூலம் பிரச்சனைகள் பொதுவெளிக்கு தெரியப்படுத்தப்படுவதால் எதிர்காலத்தில் இதற்கான தீர்வுகள் நிச்சயம் காணப்படும். சமூக அக்கறையோடு எழுதப்பட்ட அருமையான கதை . ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

சென்னை