
நா.பா. பிறந்த தினம்: 1932 டிசம்பர் 18,
நினைவு தினம் 1987 டிசம்பர் 13:.
………………..
*தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று இன்றளவும் பேசப்படுகிறார்கள்.
தி. ஜானகிராமன் என்றால் அழகியல், ராஜம் கிருஷ்ணன் என்றால் கள ஆய்வு, ஆர். சூடாமணி என்றால் உளவியல், ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம், லா.ச.ரா. என்றால் தத்துவப் பார்வை, கி. ராஜநாராயணன் என்றால் வட்டார வழக்கு…என்றிப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப் பார்த்தால் மாபெரும் சாதனையாளராக விளங்கிய தீபம் நா.பார்த்தசாரதி படைத்த இலக்கியத்தின் தனித்தன்மை என்ன?
அவரது தனித்தன்மை மொழியின் சொல்நயங்கள் அனைத்தும் துலங்கும் வகையில் அமைந்த அவரது நடைதான்.
காலில் சலங்கை கட்டிக்கொண்டு தமிழ்ச் சொற்கள் ஜல்ஜல் எனக் கொஞ்சுகிற அழகை நா.பா. நடையில் நாம் மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கலாம்.அவள் பார்வையே ஒரு பேச்சாய் இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது என்றெல்லாம் சொற்களை மடக்கிப் போட்டு எழுதும் ஆற்றல் அவருக்கே உரியது.
கையெழுத்தைப் பற்றிச் சொல்லும்போது தேர்ந்து பழகிய கை பூத்தொடுத்த மாதிரி இருந்த கையெழுத்து என எழுதுவார். (அவர் கையெழுத்தே அப்படித்தான்.)சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!
நா.பா.வின் எழில் நிறைந்த வரிகள் நம்மைக் கவரும். படித்து நெடுநாள் ஆனாலும் நம் மனத்தில் அந்த வரிகள் மின்னிக் கொண்டே இருக்கும். சில வரிகள் மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கும். சில வரிகள் நம் வாழ்க்கைக்கே வழிகாட்டும்.
இந்த வரிகள் பலதரப்பட்டவை. இன்றைய அரசியல், இன்றைய சினிமா, இன்றைய வாழ்வியல், இன்றைய கலை எனப் பற்பல துறைசார்ந்து அவர் தம் சிந்தனைகளை அழகழகான தமிழ்ச் சொற்களில் பொதிந்து வைத்திருக்கிறார்.
நா.பா.வின் படைப்புகளில் இருக்கும் இத்தகைய வரிகளில் பல, படைப்பிலிருந்து தனியே எடுத்தாலும் உயிரோட்டத்துடன் இருப்பவை. அவற்றைப் படைப்போடு சேர்க்காமல் தனி வரிகளாகக் கூட நம்மால் படித்து வியந்து ரசிக்க முடியும்.
உண்மையில் அவரது படைப்புகளைச் சிறப்பாக்குவதே இத்தகைய முத்து முத்தான வரிகள் தான்.
நாவலின் அத்தியாயங்களின் முகப்பிலும் சிறுகதைகளின் முகப்பிலும் உள்ளிருக்கும் அத்தகைய வரிகளைத் தனியே எடுத்துக் கட்டம்கட்டி வெளியிடும் வழக்கத்தை நா.பா. கையாண்டார்.
தொடராக வரும்போது மட்டுமல்லாமல் புத்தகமாக உருவாகும்போதும் அந்த வரிகள் படைப்பின் உள்ளே வருவதோடு கூட, தனியே படைப்பின் முகப்பிலும் வரவேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.
அவருடைய சிந்திக்க வைக்கும் கருத்தோட்டங்களில் மாதிரிக்கு ஒன்று. ஜாதிகள் இன்றிருக்கும் நிலைமை பற்றிய அவரது சிந்தனை இது…பெயர்களுடன் ஜாதிகளைச் சேர்த்துப் போட்டுக் கொண்டு கள்ளம் கபடமில்லாமல் அவற்றை வெளிப்படுத்திய பழைய தலைமுறை மனிதர்களே ஒருவகையில் யோக்கியமானவர்களாகத் தோன்றுகிறது. அவர்களிடம் ஜாதி மட்டும்தான் இருந்தது. ஜாதிப் பித்து இல்லை. நம்மிடம் ஜாதிப் பித்து இருக்கிறது. ஜாதிப் பெயர்கள் தான் இல்லை. பெயின்ட் அடிப்பவர்கள், கைகளில் ரத்தக் கறை பட்டவர்கள் தங்கள் கைகளிலிருந்து அவற்றை அகற்றும் முயற்சியில் வேறு சுத்தமான இடங்கள் துணிகளில் அவற்றை அப்பி அழுக்காக்கி விடுவதுபோல் தான் நமது ஜாதி வேறுபாடுகளை நீக்கும் முயற்சியும் இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் ஜாதியைத் தவிர மற்ற ஜாதிகளை ஒழித்துவிட முயல்கிறோம்!..... அரசியலில் வேட்பாளர் எந்த ஜாதியைச் சேர்ந்தவரோ அந்த ஜாதிக்காரர்கள் அதிகமிருக்கும் பகுதியில்தான் அவர் அபேட்சை மனுப் போடவேண்டும் என்பது உன்னிப்பாகக் கவனித்து மேற்கொள்ளப் படுகிறது. சுதந்திரம் அடைந்து முப்பது வருஷத்துக்குப் பின்னும் இங்கே இந்த நிலைமை இன்னும் போகவில்லை...
நா.பா. கையாண்ட உவமைகள் அழகியவை. புதியவை. காலத்திற்கு ஏற்றவை. உதாரணத்திற்கு ஒன்று. அவரது செய்திகள் என்ற நாவலில், கதாநாயகன் காதலித்த பெண் இன்னொருவனை மணக்கிறாள். பின்னர் திருமணம் முடிந்த சில நாள்களில் மருதோன்றி இட்ட பாதங்களோடு தன் பழைய காதலனைச் சந்திக்க வருகிறாள்.
காதலன் அவள் பாதங்களைப் பார்க்கிறான். அதில் தென்பட்ட சிவப்பு மருதோன்றிப் பதிவைப் பார்த்து அவன், இவள் சில நாட்களுக்கு முன்பிருந்து, தான் இன்னொருவனுக்குச் சொந்தம் என்பதைச் சிவப்பு மையால் அடிக்கோடிட்டுக் காட்டுகிறாளோ! என நினைத்துக் கொள்வதாக நா.பா. எழுதுகிறார்.
*நா.பா. தரத்தில் மட்டுமல்லாமல் எண்ணிக்கையிலும் நிறைய எழுதிக் குவித்த படைப்பாளி.
ஐம்பத்து நான்கு வயதே வாழ்ந்த அவர், தன் குறுகிய வாழ்நாளில் எப்படி எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான படைப்புகளை எழுதினார் என்பது பெரும் ஆச்சரியம். படைப்புகள் அவரிடமிருந்து பொங்கிப் பிரவகித்தன என்பதே உண்மை. நாள்தோறும் எழுதியவர் நா.பா.
அவரை முழுமையான எழுத்தாளர் என்று சொல்ல வேண்டும். சரித்திர நாவல், சமூக நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, தலையங்கம், கேள்வி பதில் என தற்கால இலக்கியத்தின் எல்லா வகைகளையும் அவர் எழுதிப் பார்த்தார்.பூமியில் வல்லவர் நடுவினிலே நான் பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன். மாமிசம் விற்பவர் நடுவினிலே நான் மல்லிகைப் பூவைத் தேடுகிறேன்!
என்பன போன்ற அவரது கவிதை வரிகள் புகழ்பெற்றவை.
எனினும் எண்ணிக்கையில் அவர் அதிகக் கவிதைகளை எழுதவில்லை. செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்ற பெயரிலும் அவர் தம் நாவல்களின் இடையே இடம்பெற்ற சில கவிதைகளை எழுதினார்.
சரித்திர நாவல், சமூக நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் உச்சத்தைத் தொட்டார். அவரின் மணிபல்லவம், ராணி மங்கம்மாள், நித்திலவல்லி போன்ற சரித்திர நாவல்கள் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்தன.
அவர் எழுதிய குறிஞ்சிமலர் கதாநாயகன் அரவிந்தன் பெயரையும் கதாநாயகி பூரணி பெயரையும் வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
அவர் படைப்புகளில் நடையால் பெரும் உயரத்தைத் தொட்ட நாவல் என்று பொன்விலங்கு நாவலைக் குறிப்பிட வேண்டும்.
பொன்விலங்கு நாவலால் கவரப்பட்ட ஓர் எழுத்தாளர் தம் பெயரை பொன்விலங்கு பூ. சுப்பிரமணியன் என வைத்துக் கொண்டிருக்கிறார்.
தன்னை விமர்சித்தவர்கள்மேல் நா.பா. வருத்தப்பட்டதோ கோபப்பட்டதோ கிடையாது. காரணம் தம் எழுத்துப் பாணியில் அவருக்கு நல்ல நம்பிக்கை இருந்தது.
வணிக ரீதியாக சமரசம் செய்துகொண்டு எழுதக் கூடாது என்ற தம் கொள்கையை அவர் கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை.
வல்லிக்கண்ணன், தி.க.சி., சி.சு.செல்லப்பா மூவரும் இறுதிவரை அவரது உற்ற நண்பர்களாக இருந்தனர். தவிர தி.ஜானகிராமன், சிட்டி சிவபாதசுந்தரம், அகிலன் போன்ற எழுத்தாளர்களும் நா.பா. மேல் மிகுந்த மரியாதையும் நேசமும் கொண்டிருந்தார்கள்.
*நா.பா.வின் பாத்திரங்கள் எல்லாம் தரைக்கு அரையடி மேலே நிற்கின்றனவே என நா.பா.விடம் வானொலிப் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நா.பா. சொன்ன பதில் இதுதான்.பல எழுத்தாளர்கள் யதார்த்தவாதப் போக்கைப் பின்பற்றி இலக்கியம் படைக்கிறார்கள். அது அவர்கள் பாணி. நான் லட்சியவாதப் போக்கைப் பின்பற்றுகிறவன். கம்ப ராமாயணம் ஓர் அற்புதமான இலக்கியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்திருக்க இயலாது. அதன் பாத்திரங்கள் பலவும் தரைக்கு ஓர் அடி மேலே நிற்பவைதான். கம்பன் கவிதை காலத்தை வென்று நிற்கிறது. என் பாத்திரங்கள் லட்சியப் பாத்திரங்களாக இருந்தாலும் காலத்தை வென்று நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இலக்கியத்தில் யதார்த்தவாதம் என்பது ஒரு போக்கு. லட்சியவாதம் என்பது இன்னொரு வகைப் போக்கு. இந்த இரண்டு போக்குகளும் தமிழுக்குத் தேவைதான். இன்னும் சொல்லப் போனால் தமிழில் பொதுவுடைமை சித்தாந்தத்தை மையப்படுத்திப் பல படைப்புகள் வருகின்றன. அவை சிறப்பாகவே இருக்கின்றன. பொதுவுடைமை வாதம் என்பது கூட லட்சிய வாதம் தானே?
நா.பா. தம் ஐம்பத்தி நாலாம் வயதில் காலமாகி விட்டார் என்பது உண்மைதான். அவர் தம் எழுத்துகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் கூட உண்மைதானே?
……… ………. ……….
