
படிப்பும் உழைப்பும்!
படிப்பு தேவை-அதோடு
உழைப்பும் தேவை-முன்னேற
படிப்புத் தேவை அதோடு
உழைப்பும் தேவை!
உண்மை தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே-நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே-எதற்கும் ( படி )
பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு-மன
பக்குவம் கொண்டு
மக்கள் முன்னேறக்
காரணம் ரெண்டு-அதுதான் ( படி )
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம் கண்ட
சர் சி.வி.ராமனும் தொழிலாளி!-எதற்கும் ( படி )
ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர்-மேலும்
பணம் சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்-மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும்-எதற்கும் ( படி )
[சங்கிலித் தேவன், 1960]
