
இரண்டு காதல் வண்டுகளில்
ஒன்று
தேடிவந்த ரோஜாப்பூக்களை
எங்கே காணோம் என்று
கேட்டது
மனிதர்க்கு காதலர் தினமாம்
என்று சொன்னது மற்றொன்று.
இரண்டு காதல் குருவிகளில்
ஒன்று
ஏனிந்த பெற்றோர்கள் கவலையில்
இருக்கிறார்கள் என்று
கேட்டது
மனிதர்க்கு காதலர் தினமாம்
என்று சொன்னது மற்றொன்று.
இரண்டு காதல் தும்பிகளில்
ஒன்று
ஏன் மேல் தட்டு உணவகங்கள்
வண்ணத்தில் ஒளிர்கின்றன
என்று கேட்டது
மனிதர்க்கு காதலர் தினமாம்
என்று சொன்னது மற்றொன்று.
இரண்டு காதல் கிளிகளில்
ஒன்று
இளைய பருவத்தினருக்கு
ஏன் இந்த உற்சாகம் என்று
கேட்டது
மனிதர்க்கு காதலர் தினமாம்
என்று சொன்னது மற்றொன்று.
இரண்டு காதல் புறாக்களில்
ஒன்று
அடடா யாரிவர்கள் கற்களை
எறிந்து காதலை எதிர்ப்பது
என்று கேட்டது
இவர்கள் கற்கால மனிதர்கள்
என்று சொன்னது மற்றொன்று
