எல்.ரகோத்தமன்/வெள்ளைக் காகிதம்

இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை: ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.. அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை. இருபத்திரண்டு வயதில் வாழ்க்கைக் கனவுகளை அரங்கேற்ற மேடையமைத்துக் கொண்ட கோலாகலமான அந்த வியாழக்கிழமை; இன்று. இன்றும் விபாழக்கிழமை தான்; இப்படி எல்லாமே வியாழக்கிழமையாய் இருப்பது வியப்பாக இருந்தது;
அன்புள்ள அப்பா
விஜியின் அநேக நமஸ்காரம். கடிதமே போடாததற்கு மன்னிக்கவும் எனக்கு அவர் ஆபிஸிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்திருக்கிறது என்ன முடிவு செய்வதென்று தெரியவில்லை; அத்தை உங்களிடம் கேட்டு முடிவு செய்யும்படி கூறி விட்டார்கள் (கடிதம் மேலும் நீண்டது)

இப்படிக்கு
உங்கள் மகள் விஜி

ஒரு நிர்மால்யமான விடியலில் மனம் எதையோ விழுங்க முடியாமல் தவிக்கும் தவிப்பில் என்னை அணைத்து படுத்துக் கொண்டிருக்கும் பிந்துவின் தலையைக் கோதிக்கொண்டேயிருந்த சுகத்தினிடையே இரு வாரங்களுக்கு முன் அப்பாவுக்கு போட்ட கடிதத்தின் வரிகள் மனதில் வந்து போயிற்று.
அதற்கு பின் ஒரு நாள் ட்ரங்க்காலில் பேசினார் அப்பா, அதுவும் உட்குரலாய் மனதில் எதிரொலித்தது.
·ஒரு மாசம் டயம் கேப்போம். அதுக்குள்ள உனக்கும் ஒரு ஸ்ட்டடி மைண்ட் வரும். கொஞ்ச நீள் வேணும்னா உன் அத்தைய கூட்டிண்டு இங்க வந்து இரு. உன் அம்மா பிந்துவையும் பாக்க ஆசைப்படறா.. உனக்கு மேல அவ இருக்கா.. நீ வந்தா அவளுக்கும் தெம்பா இருக்கும்..உனக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்…’
`வேண்டாம்பா.. நான் வரலே. அம்மாவ பாத்தேன்னா ஓன்னு அழுதுடுவேன்.. எனக்கு தெம்பு இல்ல..’ மூக்கை உறிஞ்சி உறிஞ்சி விம்மிய விம்மல் அப்படியே மனதில் உயிர் பெற, கண்களில் தேங்கிய நீர போர்வையால் துடைத்துக் கொண்டு பிந்துவை இறுக அணைத்துக்கொண்டேன். பின் மெல்ல அணைப்பை தளர்த்தி சீராகப் படுக்க வைத்துவிட்டு கட்டிலிலிருந்து இறங்கிக் கொண்டேன்.
கொல்லையில் அத்தை குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்படி, இப்படி, ஆனை பூனை என்று உருட்டுகிற விரட்டுகிற ஜாதியில்லை அத்தை. என்ன அழகாய்ப் புரிந்துகொண்டு விட்டார். இன்று நான் வேலைக்குப் போகவேண்டும் என்றவுடன் சீக்கிரமே குளியலாகிறது.
இப்பன்னா பத்து மணிக்குப் போறான். அப்பல்லாம் அவனுக்கு எட்டரைக்கே ஆபீஸ்.. நாலு நாலரைக்கே எழுந்துண்டா தான் சரியா இருக்கும்…’
அவருக்கு அந்த நாலு நாலரையை ஏழு மணியாக்கியது நான் தான். அத்தைக்கு சாப்பாட்டு வேலையோடு சரி. இரு வேளையும் கோவிலுக்குச் செல்வது, சாயங்காலம் கதாகாலட்சேபம் கேட்பது, பிந்துவோடு கொஞ்சுவது, சமயத்தில் கவனித்துக் கொள்வது… மகனுக்குச் செய்துசெய்து பெற்ற சுமையை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்தார். சிறிது நாட்களாக எல்லாம் நிதானம். யார் இனி அந் நிதானம் விலக வேண்டும். இன்று விலக ஆரம்பித்து விட்டது. அதான் அத்தை இவ்வளவு சீக்கிரம் குளித்தாகிறது. ‘டங்.. டிங்” – சுவர்க் கடிகாரம் ஆறடிக்க ஆரம்பித்தது. பிரஷ்ஷில் பேஸ்ட்டைப் போட்டுக் கொண்டு பாத்ரூமில் நுழைந்தேன்.
‘அப்பா.. நான் வேலைக்குப் போறேம்பா… வீட்லயே இருந்து போரடிக்கறது…
‘எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்ல.. உன் அம்மா சரின்னா எவ்வளவு பெரிய வேலைக்கும் போ…’
‘அம்மா சம்மதிக்கவில்லை. சீதா. புவனா, சித்ரா… என்று ஊரில் இருக்கிற எல்லா தோழிகளையும் காட்டினேன்… அசையவில்லை. அழுதுகூட பார்த்தேன். ஊஹூம்…நடக்க வில்லை. கடைசியில், ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா…’ என்று ஒரு வியாழக்கிழமையில் பஜ்ஜி, சொஜ்ஜியுடன் விருந்து தான் நடந்தது. அப்புறம் எத்தனையோ வேலைகள் கடமை என்ற பெயரில் வந்துவிட்டது.
‘விஜி…! இன்னிக்கி சீக்கிரமா ஆபீசுக்கு போணும்…’ எட்டரைக்குள்ளாக அவசர அவரமாக சமயலை முடித்து, சாப்பிட்டு எழுவதற்குள் பேன்ட் சட்டைகளை எடுத்து வைத்து, பிந்துவை வாசல்வரை எடுத்துச் சென்று ‘டாடா’ காண்பித்து, பின் நிதானமாய் அவனை குளிக்க வைத்து, காக்கா கதை கொக்கு கதை என்று ஒவ்வொரு விழுங்கலுக்கும் கதை சொல்லி ஊட்டி…
‘விஜி… பிந்து யாரக் கொண்டிருக்கான் சொல்லு… எங்க பக்கத்துல யாரோட ஜாடையும் இல்ல.. உங்கப் பக்கத்துலையும்
இருக்கற மாதிரி தெரியல…’
‘லேசா எங்க அப்பா ஜாடை இருக்கு. அந்த கைய ஊணிண்டு உக்கார்றது சிரிக்கறதெல்லாம் பாத்தா உங்கள போல இருக்கு…’ பிரஷ்ஷை கழுவி செல்ஃபில் வைத்துவிட்டு திரும்பும் பொழுது, குழந்தை பிந்து தூக்கக் கலக்கத்துடன் வந்து எட்டிப்
பார்த்தான்…’
‘குட் மார்னிங்.. தூங்கியாச்சா.. சமத்தா ஈ பண்றயா..’
ம்..பேத்து..’ வலது கையை நீட்டியது குழந்தை,
‘இதோ போடறேண்டா கண்ணா…’
எலாஸ்டிக் நிஜாரை கீழே இறக்கி பிந்துவை பாத்ரூம் போகவைத்தாள். பின் விரல்நுனியில் பசையை வழித்துக் கொண்டிருக்கும் போதே, பக்கத்தில் இருந்த ட்ரம் நீரில் கையை தளப் தளப் என்று அடித்து சட்டையெல்லாம் நனைத்துக் கொண்டுவிட்டான். என்னை அறியாமல் இடது கை பிந்துவின் முதுகில் இரண்டு தட்டு தட்டிவிட்டது. பதிலுக்கு குழந்தை என்னை அடித்து முரண்டு செய்தது. பின் சாரி சொல்லி, சமாதான வார்த்தைகளினால் இணக்கம் கொண்டு ஒரு வழியாக அவனுக்கு பல்லை தேய்த்து விட்டேன்.
‘அப்பாட்ட தான் ஈ பண்ணிப்பேன்..’ பிந்துவின் காலை பிடிவாதங்களில் இதுவும் ஒன்று. அதை மறக்கடிக்க பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.
“ஏண்டி…. விஜி குழந்தைக்கு பல் தேச்சாச்சின்னா இந்த பால கொஞ்சம் பாத்துக்கோ..’ உள்ளே இருந்து அத்தையின் குரல் வந்தது.
“நீங்க வச்சுட்டுப் போங்கோ. நான் பத்துக்கறேன்.” குரல் கொடுத்துவிட்டு, பிந்துவுடன் ஸ்டவ் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டேன். சமையல் மேடையில் அத்தை தன் வேலையைத் தொடங்கியிருந்தார்.
ஆம்..! ஒன்பது மணிக்குக் கிளம்ப வேண்டும். டிஃபன் பாக்ஸ் சகிதத்துடன் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் கிளம்ப வேண்டும். பிந்துவுக்கு “டாடா” சொல்ல வேண்டும். செல்லமாய் அவன் இடுகிற முத்தத்திற்கு வரும்பொழுது சாக்லட் வாங்கி வரவேண்டும். ஆபீஸ்… போகவேண்டும்.
எப்படி இருக்கும் ஆபீஸ்? எல்லாரும் ஃபைல்களைப் புரட்டிக் கொண்டு இடையிடையே காபியைச் சுவைத்த வண்ணம் வேலையோடு வேலையாக நண்பர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டு- அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிற ப்யூன்களிடம் வம்பிழுத்த வண்ணம் தடதடவென்று ஓடிக்கொண்டிருக்கிற டைப்ரைட்டர் சத்தத்தில் மூழ்கி – எப்படி இருக்கும் ஆபீஸ்? கண்ணாடியறையிலிருந்து “ட்ரிங். ட்ரிங்” என்ற மணி அழைப்பிற்கு“எஸ்.. ஸார்!” – என்று அடக்கத்துடன் போய் நிற்க வேண்டுமோ?! இப்பொழுதே மனதில் ஒரு படபடப்பு…
காபியை கலந்து முடித்துவிட்டு, வாசலில் நேற்று வாங்கிய காய்கறியை அத்தைக்கு நறுக்கிக் கொடுத்தேன். பிந்துவைக் குளிக்க வைத்து ட்ரஸ் செய்து விட்ட கையோடு குளிக்கச் சென்றேன்.
ஆபீஸ்க்குப் போனதும் அவர் ஃப்ரண்ட் சுந்தரேசனைப் போய் பார்க்க வேண்டும். அடிக்கடி வீட்டுக்கு வந்து பழக்கப்பட்ட மனிதர் அவர். மிகவும் ப்ராக்டிகலாகப் பேசுபவர். அவர் ஒரு நாள் பெரிய லெக்ச்சரே பண்ணினார்.
“மூர்த்தி வேல செஞ்ச ஆபீஸ்லேயே வேலைக்கு சேர்ரோமேன்னு தயங்காதிங்க சிஸ்டர்.. இது ஒரு நல்லசந்தர்ப்பம். தினம் நான்கு சுவர்களைப் பார்த்து பார்த்து கழிக்க வேண்டிய பேராட்டத்திலிருந்து விடுபட உங்களுக்கு ஒரு வேலை முக்கியம். நீங்க வேலைக்குப் போறது உங்களுக்காக மட்டுமில்ல.. உங்ககிட்ட இன்னொரு தலைமுறை இருக்கு. நாளைக்கு அது வளர்ந்து கேள்விகளாய்க் கேட்கும். அதுமட்டுமல்ல, அந்தத் தலைமுறையின் சக்தியே வேறு. அதன் சிந்தனை அம்மாவை எதிர்ப்பதாகக் கூட இருக்கும். அதன் தேவைகள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அதுக்கு நிறைய தீனி போட வேண்டியிருக்கும். உரம் கூட்ட வேண்டியிருக்கும். வெறும் சமைத்துப் போட்டு வளர்ப்பது அதற்கு போதாது. அதைவிட முக்யம் நீங்க அந்த தலைமுறையோடு சேர்ந்து வளர வேண்டியது அவசியம். அந்த அவசியம் பூர்த்தியாக பூர்த்தியாக உங்களுக்கும் வளர்ச்சி கிடைக்கும். சக மனிதர்களை, வெளி உலகை தெரிந்து கொள்ளும் வாய்ப்பின் மூலம் கிடைக்கும் அனுபவத்தின் வழி உங்களிடம் வளரப்போகும் தலைமுறைக்குச் சொல்லப்படும் அறிவுரைகள் ஏற்கப்படும். அதன் சில பிடிகளாவது உங்கள் கையில் இருக்கும். தவிரவும், நிகழ்கால இருளை மறந்து தினம் சில மணி நேரங்களாவது மனம் வேறு திசையில் இயங்குவது உங்கள் உடலுக்கு ஒரு ஆரோக்யத்தைத் தேடித்தரும். மேலும், வேலை பழக்கப்பட்டு காலத்தோடு இயந்திர கதியில் இயங்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும். வீண் மனக் குடைசல்களெல்லாம் நின்று போகும். வாழ்க்கை நேற்றோடு முடிவதல்ல
சுந்தரேசனைப் போல் இவ்வளவு தெளிவாக என்னிடம் யாரும் பேசியதில்லை. அதெல்லாம் சிலரால் தான் முடியும் போலிருக்கிறது. மேலும் அவருடைய யதார்த்தமான பேச்சு அத்தைக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருந்தாலும் என் அப்பா அம்மாவிடமும் ஒரு வார்த்தை கேட்கச் சொல்லிவிட்டார். அதற்கு அப்பா ஒரு இரண்டு பக்கத்திற்குப் பெரிதாய் நீட்டி முழக்கி.. இறுதியில் “தைரியமா வேலையில சேரவும்” என்று சம்மதித்திருந்தார். அது மட்டுமல்ல, என் தங்கை நளினா பேங்க் எக்ஸாம் எழுத மனு போட்டிருப்பதாகவும் எழுதியிருந்தார். என்ன மாற்றம் இது? எல்லாவற்றுக்கும் காரணம் நான் தான் என்று தோன்றிற்று.
“சிஸ்டர்.. நாளைக்கு வேணும்னா நானே நேரா வீட்டுக்கு வந்து அழச்சிட்டு போறேன். இதுல எனக்கு எந்த சிரமமும் இல்ல.”
நான் தான் வேண்டாம் என்றேன். அவர் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார். நான் ஒரு மூலையில் இருக்கிறேன். வீணான அலைச்சல் எதற்கு? தெரியாத ஊரா என்ன? ஆபீஸிலேயே வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டேன். அப்பா கூட அப்படித்தான் சொல்லியிருந்தார்.
உலர்த்திவிட்டு கொடியில் துவைத்த துணிகளை வரும்பொழுது அடுப்படியில் அத்தையின் சமையல் ஏகமாய் முடிந்திருந்தது. ஏதோ சில சில்லறை கவனிப்புகள் தான் பாக்கி. சமையலின் மணம் ஹால் முழுதும் நிறைந்தது.
என் அறைக்கு வந்து வியர்வையைத் துடைத்தபடியே ஃபேனை சுழல விட்டேன். ஒரு அனாயாச திரும்பலில் சுவரில் மாட்டியிருந்த அவரின் படம் கண்ணில் பட்டது. ஒரு நிமிஷம் அந்தக் கள்ளமற்ற பார்வை மனதில் தைத்தது. அவர் வேலை பார்த்த ஆபீஸிற்குப் போகப்போகிறோம் என்ற நினைப்பு ஊறும் பொழுதே இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. இனம் புரியாத ஒரு உணர்வு மின்சாரமாய்ப் பாய்ந்தது. ஒரு பெரிய சக்தி என்னுள் முறிந்து விழுவது போல் பிரமை. அடிவயிற்றில் என்னவோ செய்தது. கையெல்லாம் வியர்த்தது. ஃபேன் சுற்றியும் பயனில்லை. அப்படியே கட்டிலில் சரிந்து தலையணையை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டேன். மன பாரம் கண்களில்
நீராய் வெளியேறியது. அழ அழ மனம் லேசாவது போல் இருந்தது. அழுதேன். அழுதேன். ஆசை தீர அழுதேன் சுதந்திரமாய் அழுததில் ஒரு நிம்மதி. அப்பாடா..! எவ்வளவு பெரிய வெற்றிடம். தனிமை. எல்லாம் அகன்றது போல் இருந்தது. நிதானமாய் தலையணை ஈரத்தை வருடிக் கொண்டிருந்த பொழுது, “ஏண்டி.. விஜி நேரமாகல்ல..” அத்தையின் குரல் கதவருகே ஒலித்தது. சட்டென்று திரும்பியதில் என் அழுத கண்களை அத்தை பார்த்து விட்டார்.
“ஏண்டி.. அழுதுண்டே இருந்த..?” இப்ப என்ன வந்துடுத்துன்னு அழற. அழுதுட்டா எல்லாம் சரியாய்டுமா. சிரிச்சுண்டே ஒண்ணு கால சுத்தி வர்றதே.. அதுக்காக வேண்டியாவது அழமா இருக்க வேண்டாமோ… நீ உன் புருஷனுக்காக அழுதுட்டா, என் புள்ளைக்காக யார் அழறது!’ – அத்தையின் கண்களில் லேசாய் நீர் தேங்கியது.
“நேரமாயிடுத்து.. முகத்தத் துடச்சிண்டு சாப்ட வா..
அத்தையைப் பற்றி ஏன் நினைக்கவில்லை? துக்கம் எனக்கு மட்டும் இல்லையே. பார்த்தால் அத்தைக்குத் தானே இழப்பு அதிகம். ஆமாம்.. அத்தை தன் தலைமுறையை எப்படி வளர்த்தெடுத்தார்? எந்த ஆபீஸுக்கு வேலைக்குப் போனார்? இவருக்கு எங்கே கிடைத்தது ஊன்றுகோல்? எப்படியானால் என்ன? யார் யாருக்கு, என்னென்ன வழியில் எப்படியெப்படி நிர்ப்பந்தமோ அப்படியப்படி தானே வாழ்ந்தாக வேண்டும். வளர்ந்தாக வேண்டும்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அத்தை டிஃபன் பாக்ஸை தயார் செய்துவிட்டார். வீட்டைவிட்டுப் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றில் ஏதோ செய்தது. தெரு முழுதும் எல்லோர் கண்ணிலும் படும்படி நடந்து போக மனம் கூசியது: அவர் இல்லாமல் வெளியில் தனியே சென்றதில்லை. அப்படி எத்தனை தடவை போயிருப்பேன்? விரல்விட்டு எண்ணி விடலாம்.
சாப்பிட்டு எழுந்தேன். அறையில் சென்று உடை மாற்றிக்கொண்டேன். ஸ்வாமியை சேவித்தேன். அவர் படத்திற்கு நமஸ்கரித்துவிட்டு எழுந்தேன். கண்களின் ஓரம் கட்டியிருந்த ஈரத்தை கைகுட்டையால் துடைத்துவிட்டு அத்தை கொண்டுவந்து
நீட்டிய டிஃபன் பாக்ஸை வாங்கி ஹேண்ட் பேக்கில் வைத்ததும் பிந்துவைத் தேடியது கண்கள்.
“பிந்து எங்க அத்தை?’
“இங்க தான இருந்தான். அதுக்குள்ள எதிர்த்த வீட்டுக்குப் போய்ட்டான் போல இருக்கு… சித்த இரு அழச்சிண்டு வரேன்..” அத்தை போய் பிந்துவை அழைத்துக்கொண்டு வந்தார்.
“மம்.. சாப்டுட்டு சமத்தா பாட்டியோட இருக்கணும். பாட்டி பிஸ்கட் சாக்லேட்டெல்லாம் கொடுப்பா… அடம் பண்ணாம சமத்தா இருக்கணும்.. அம்மா டாடா போய்ட்டு இதோ வந்துருவேன்..”பிந்துவைத் தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவனை அத்தையிடம் கொடுத்தேன்.
வாசற் கதவை திறந்தவள்.. அப்படியே சிறிது நேரம் தயங்கி நின்றிருந்தேன். அத்தையை பார்த்தேன். அந்தப் பார்வையின் பொருள் அத்தைக்கு புரிந்திருக்க வேண்டும்.
“பஸ் ஸ்டாப் வரைக்கும் வேணும்னா வரவா..?”
“ம்..” என்று பதிலாய்த் தலையசைத்தேன்.
அத்தை கொல்லைக் கதவை எல்லாம் சாத்திவிட்டு, பிந்துவையும் தூக்கிக்கொண்டு வாசற் கதவைப் பூட்டி வெளியே வந்தாள். சேலையை கழுத்தைச் சுற்றி போத்திக்கொண்டு, தலை குனிந்தபடி மௌனமாய் அத்தையோடு பஸ் ஸ்டாப் நோக்கி
நடக்கலானேன்..
ஒரு புதிய தொடர்கதையை வெள்ளைக் காகிதத்தில் எழுதப் போகிறேன்.


1983

எல்.ரகோத்தமன்/ஓட்டம் – விருட்சம் நாளிதழ்