
- தமிழ் நாடக வரலாறு
நம்முடைய தமிழ் நாட்டில் இன்று நாடகக் கலை நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழியாளர்களெல்லாம், பிற நாட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். உண்மைதான். ஆனால் இந்த முன்னேற்றம் நமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய நிலையை அடைவதற்கு நமக்குதவிய பெரியவர்கள் யார்? அதற்காக நாம் எத்தனை ஆண்டுகள் சிரமப் பட்டோம்? நமது பாதையிலே எப்படிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கி முன்னேறவேண்டி வந்தது என்பதையெல்லாம் நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உண்மையை ஒளிக்காது சொல்ல வேண்டுமானால், சிறப்பாக, சென்றகால நாடக வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நன்கறிந்து தெளிவு பெற்று முன்னேற வேண்டிய கடமையும் உரிமையுமுடைய நாடகக் கலைஞர்களும், நாடகத்துறையிலே நடமாடி இன்று திரைப்படத்துறையிலே இடம் பெற்றுள்ள திரைப்படக் கலைஞர்களும் கூட இதுபற்றி நன்றியுணர்ச்சியோடு சிந்திக்கிறார்களா என்று நாம் சந்தேகப் படவேண்டி இருக்கிறது.
1918-ஆம் ஆண்டில் என் ஆறாவது வயதில் நான் நாடகத்துறையிலே சேர்க்கப் பெற்றேன். கடந்த 49 ஆண்டுகளும் நாடகத்துறையிலே என் வாழ்க்கை கழிந்தது. இடையிடையே சந்தர்ப்ப சூழ்நிலைகள் திரைப்படவுலகுக்கு என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கின்றன. 1985-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறேன். நானும் என் சகோதரர்களும் நடித்த ‘மேனகா’ என்னும் திரைப்படம் 1935 ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. 1953 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகர் தேர்வில் என்னைச் சிறந்த நடிகனெனத் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தினார்கள். அதன் பிறகு, 1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தார், சிறந்த நாடக நடிகன் என என்னைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்கள். 1962ல் புது டில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியின் சார்பில் சிறந்த நாடக நடிகன் எனும் விருதை நம் பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கினார்.
இடையிடையே திரைப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்று வந்துள்ள போதிலும், இன்னும் நான் நாடக மேடையில்தான் தொடர்ந்து பணி புரிந்துகொண்டு வருகிறேன். என்னை நாடக நடிகனென்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன்.
1918 இல் தொடங்கிய என் நாடக வாழ்க்கை, நடிகனாகவும்,நாடக ஆசிரியனாகவும், நாடகத் தயாரிப்பாளனாகவும் என்னை இதுவரை வளர்த்து வந்திருக்கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன
(இன்னும் வரும்)

One Comment on “அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை””
Comments are closed.