வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. புதுக்குரல்கள்

“கவிதைத் துறையில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கவிதைத் தொகுப்பு இது. பாரதிக்குப் பிறகு அந்த கவி காட்டிய பாதையில் சென்று உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் சோதனை செய்துள்ள 24 கவிகளின் 63 கவிதைகள் அடங்கி இருக்கின்றன. இந்த இருபதாம் நூற்றாண்டு மனிதனுக்குத் தான் வாழும் உலகம் ஒரு விசித்திர போர்க்களம் அவனுக்கு ஏற்படும் மோதல்கள் சிக்கலானது. அவற்றின் வெளியீட்டை இந்தப் புதுக்குரல்களில் காண்கிறோம். ஒருவர் நோக்கு மற்றவருக்கு இல்லை. ஒருவர் அனுபவம் மற்றவரிடமிருந்து மாறுபட்டது. அவரவர் நம்பிக்கையும், வேறு வேறு. அவரவர் சொல்திறனும் நானா விதமானது. அவநம்பிக்கையும் நம்பிக்கையும், சமுசயமும் தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும் ஆசையும் ஆதங்கமும் லட்சியமும் யதார்த்தமும் உண்மையும், போலியைக் கண்ட ஆத்திரமும் எத்தனை விதமாக ஒலிக்கின்றன இவர்கள் குரல்களில்!”
‘எழுத்து பிரசுரம்’ ஆன ‘புதுக்குரல்கள்’ பற்றிய ஒரு அறிவிப்பு இது. 1962 அக்டோபரில் இத்தொகுப்பு வெளியாயிற்று. அதுவரை ‘எழுத்து’வில் அச்சாகியிருந்த சுமார் 200 கவிதைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றன.
“இந்த தொகுப்பு தெரிவுக்கு பொறுப்பு நான்தான் என்றாலும் (சுமார் 200 கவிதைகளிலிருந்து 63 கவிதைகளை தேரந்தெடுப்பதில்) தன் மூப்பாக நடந்து கொண்டு விடவில்லை நான். நண்பர்கள் சி.மணி, பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன், எம். பழனிசாமி, ஆர். வெங்கடேசன், என்.முத்துசாமி ஆகியோரிடமிருந்து தெரிவு பட்டியல்களைக் கேட்டு வாங்கி என்னுடையதையும் சேர்த்து முடிவு செய்தது இது. அவர்கள் குறிப்பிடாததும் சில சேர்க்கப்பட்டிருக்கும். ஆனாலும் புக்கவிதைத் துறையில் நல்ல ஈடுபாடுள்ள ஆறேழு பேர்கள் மதித்தவை அடங்கிய தொகுப்பு இது. அவர்கள் உதவி இன்றி என் வேலை சுளுவாகி இராது. எனக்குள் உள்ள இருட்டடிப்புகள் என் தெரிவுக்கு குந்தகம் விளைவித்திருக்கவும் கூடும்” என்று சி.சு. செல்லப்பா, இத்தொகுப்புக்கு உரிய கவிதைகள் தேர்ந்து எடுக்கப்பட்ட விதம்பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய நேர்மை பாராட்டப்பட வேண்டிய பண்பு ஆகும்.
செல்லப்பா இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை (‘நுழைவாசல்’) நல்ல ஆய்வுரையாக அமைந்துள்ளது.
உலக இலக்கியத்தில் புதுக்கவிதையின் தோற்றம் குறித்தும், கவிதையின் தன்மை பற்றியும் இம்முன்னுரையில் கூறப்பட்டுள்ளவை கவனத்துக்கு உரியன.
“மேற்கே இந்த புதுக்கவிதை பிறந்ததைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது லாபகரமானது, எந்த ஒரு கவியும் தன் காலத்தில் பிறந்தவன் தான் என்றாலும் அதுக்கும் மீறி எழுத்து அடிப்படைகளை பேருண்மைகளை, வ.வே.சு. அய்யர் குறிப்பிட்டிருப்பது போல அகண்டப் பொருளின் சாயைகளை, காட்டுபவனாக என்றைக்குமாக நிற்பவன். இருந்தாலும் ஒரு காலத்துக் கவி இதயம் பற்றிக் கொண்ட அம்சங்களை அடுத்த கால கவி இதயம் வாங்கிக் கொள்கிறதில்லை; முடிகிறதில்லை. மதிப்பு என்று சொல்கிறோமே அது தலைமுறைக்குத் தலைமுறை வித்தியாசப்படுகிறது. அடிப்படை மாறாமல், மேல் மாற்றங்களாக, முகச்சாயல் மாறுதல்களாக ஏற்பட்டு வருவது தெரிந்தது. அபூர்வமாக அடிப்படையைத் தொட்டாலும் அடிப்படை வெள்ளத்துக்கு முன் நாணலாக வளைந்து கொடுத்து நிமிர்ந்து விடுகிறது. இந்த முகச்சாயல் மாறுதல்களில் உலுக்கல்கள் எந்த நாட்டு இலக்கியத்திலும் ஏற்படாமல் இல்லை. கிளாஸிஸம், ரொமாண்டிஸிஸம், ரியலிஸம் இப்படி கவியின் மனப்பாங்கிலே, உள்ளடக்கத்திலே அனுபவ வெளியீட்டிலே மாறி வந்திருக்கின்றன.
இந்த மாறுதல்களில் ஒன்றாக, 1910க்குமேல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள கவிகள் சிலர் சேர்ந்து, கவிதைப் புனருத்தாரணத்தை குறிக்கோளாகக் கொண்டு இமேஜிஸ்ட்கள் என்ற கோஷ்டி உருவாகியது. பிரெஞ்சு இலக்கியத்தைப் பின்பற்றி வெர்ஸ் லிப்ரெ என்ற சுயேச்சா கவிதை முறையின் சாத்தியங்களை ஆராய்வதில் அக்கறை காட்டினார்கள். சொல் சிக்கனம், சகஜத்தன்மை, பேச்சு அமைதி, செம்மை, நூதன படிமப் பிரயோகம் ஆகிய தன்மைகளைக் கவனித்து கவிதைகளை அமைக்கலானார்கள், டி.இ. ஹு ம், எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலியட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் புதிய தொனியும் நூதன நடையும் நவீன படிமப் பிரயோகமும் அவைகளில் தெரிந்தன. விஞ்ஞான, இதர தொழில்துறை தகவல்களை உள்ளடக்கிய குறியீடுகள், பயனாகும் சொற்கள் பொருத்தப்பட்டு ஒரு புதிய பாணியே தோன்றியது.
ஒரு வரிக்கு இத்தனை சீர் இருந்தால் இந்த ரக கவிதை என்று, ஒரு வரியின் நீளம் சம்பந்தமாக ஏற்கெனவே வலிந்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பை விட ஒரு நிறுத்து பேச்சு அல்லது சிந்தனைப் போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பினால் நிர்ணயிக்கப்படும் ஒரு வரி நீளம் மேல் என்று ஃபிரெஞ்சு சுயேச்சா கவிதை சோதனைக்காரர்கள் கூறியது இவர்களைப் பாதித்தது. அதே சமயம் ஒவ்வொரு வரியும் அடிநாதமாக இடையறாத ஒலிநயம் (ரிதுமிக் கான்ஸ்டென்ட்) கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினதையும் மனதில் போட்டுக் கொண்டார்கள். ஒரே தொகை அசை, சீர்களைப் பயன்படுத்துகிறபோது, திரும்பத் திரும்ப ஒரே விதமான ஓசை நய சப்தம் தான் விளைகிறது. மரபான கவிதை இந்த விதமான ஒரு இடையறாத ஓசை நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆனால் சுயேச்சா கவிதையோ தன் உள்ளடக்கத்துக்கும் பேச்சுக் குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்பட்ட தேவைக்கு ஏற்ப வேறுபடும் ஒரு ஓசை நயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்பது அவர்கள் கருத்து. இந்த இடையறாத ஒலிநயத்தோடு அவர்கள் ஒன்றிப்பையும், பாட்டர்ன் என்கிறோமே- ஒருவித ‘தினிசு’ அதையும் சாதிக்க ஒரு வரிக்குள்ளேயே நிறுத்துகளை அளவமைய அமைத்தல், மோனை, ‘காடென்ஸ்’ என்கிறோமே, குரல் இறக்கம் ஏற்றம், ஓரொரு சமயம் சந்தமும் கூட, ஆகிய சாதனங்களை சிபார்சு செய்தார்கள். ஆக, மொத்தத்தில், இன்று கவிதை வெளியிட வேண்டியிருக்கிற புதிய விஷயத்துக்கு இடம் கொடுக்க, சந்தக் கவிதைக்கு ‘ஓவர் ஹாலிங்’ அதாவது பழுது பார்த்துச் செப்பனிடல் தேவை என்று கருதினார்கள்.
உருவம் விஷயம் இப்படி இருக்க, உள்ளடக்கம் விஷயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது ஃபிராய்டின் கருத்துக்களால் கவிஞர்களது அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும் ஆழமும் பெற்றது. உணர்வு உலகத்தில் இன்னும் ஆழத் துளாவி துருவிப் பார்த்தார்கள் மென்மையானதும், சிக்கலானதும் கூட்டுக் கலப்பானதும். திட்டமான எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களை எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப்பதிவுகளை, மாறுபடும், இனம் தெரியாத ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளித் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினார்கள். அதே சமயம் புற உலகமும் அவர்களைப் பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள் பிரபஞ்ச விசாரணையிலே புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஐக்யத் தன்மை வாய்ந்தது என்பதோடு தொடர்ந்து ஓடும் ஒரு தாரை, சென்றது. நிகழ்வதுடன் பிணைகிறது. நிகழ இருப்பதின் வெளிக் கோட்டை உருவாக்க ஒரு கணம் மறுகணம் என்றெல்லாம் இருந்தாலும் ஒன்றை அடுத்து ஒன்றாக இடையறாமல் தொடர் நிலையாக ஓடிக் கொண்டிருக்கும் கணப்பொழுதுகளால் ஆவது தான் வாழ்க்கை. ஒவ்வொரு நிகழ்கணப்பொழுதும் எல்லாக் காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கணப்பொழுதில் நின்று பார்க்கிற கவிதையின் பார்வையின் காலம் வெளி இரண்டும் பேதமற்றுப் போய்விடுகின்றன என்ற, காலம் வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.
ஆக, அகபுற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்றாண்டு ஆரம்ப காலத்தவன் புதுக்கவியாக மலர்ந்தது மேல் நாட்டில் கவிதை உலகம் கண்ட அனுபவம். அது பூத்த பூக்கள் நிறைய.
இதற்குப் பின், தமிழில் பாரதி செய்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு. புதுக்குரல் கவிஞர்கள் சிலரது சிலபடைப்புக்களை செல்லப்பா இம்முன்னுரையில் ஆராய்ந்திருக்கிறார்.
1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டீயம், மார்க்சீயம் இரண்டிலிருந்தும் மனோதத்துவ லோகாயத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது’ என்ற தகவலும் இம்முன்னுரையில் காணக்கிடக்கிறது.
மார்க்சிய தத்துவத்தினால் பாதிக்கப்பட்டவர்களும்-மார்க்சிய நோக்குடன் வாழ்க்கையையும் சமூகத்தையும் கவனித்துத் தங்கள் எண்ணங்களைச் சொல்கிறவர்களும் அவர்களது கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழில் புதுக்கவிதை எழுத முற்பட்டார்கள். அது பிந்திய நிகழ்ச்சி.
‘எழுத்து’ ஏடுகளில் கவிதை எழுதியவர்களும், ‘புதுக்குரல்கள் கவிஞர்களும் ஃபிராய்டிச தத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சில விமர்சகர்கள் குறிப்பிட முன் வந்தார்கள். இது தவறான கணிப்பு ஆகும்.
வாழ்க்கையை கவனித்து, வாழ்வும் காலமும் அன்றாட நிகழ்ச்சிகளும் உள்ளத்திலும் உணர்விலும் உண்டாக்கிய அதிர்வுகளை எழுத்தாக்க முயல்கிறவர்கள் அனைவரும் ஃபிராய்டீசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லேபில் ஒட்டுவது தவறான செயல் தான். அதேபோல் சமூகத்தில் காணப்படுகிற வறுமை, பணத்திமிர், இதர கொடுமைகள் சீர்கேடுகள் முதலியன ஏற்படுத்துகிற உள்ளத்துடிப்புகளை எழுத்தாக்குகிற எல்லோரையும் மார்க்சீயத் தத்துவப் பாதிப்பு பெற்றவர்கள்-மார்ச்சியப் பார்வையோடு பிரச்னைகளை அணுகுகிறவர்கள்- என்று முத்திரை குத்தி விடுவதும் தவறான கணிப்பாகவே முடியும்.
ஃபிராய்டிசம், மார்க்சிசம் போன்ற தத்துவங்களைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட, வாழ்க்கையாலும், அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எழுத்துக்களாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதை எடுத்தாலும் அதற்கு அயல்நாட்டுத் தத்துவப் பெயரைச் சூட்டி விட்டால்தான் விமர்சனம் பூர்த்தி பெற்றதாகும் என்று நினைப்போடு விமர்சிக்க முற்படுகிறவர்கள் தங்கள் அறிவுப் பிரகாசத்தையும் மேதைத் தனத்தையும் வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறார்கள்.
‘புதுக்குரல்கள்’ தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஐந்து (ந.பி., கு.ப.ரா கவிதைகள்) ‘எழுத்து’ காலத்துக்கு முற்பட்டவை மற்றவை 1959-62க்கு உட்பட்ட நான்கு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை.
மா.இளைய பெருமாள் 1. கி.கஸ்தூரி ரங்கன் 2. இ.எஸ். கந்தசாமி 2. சு.சங்கர சுப்ரமண்யன் 2. எஸ். சரவணபவானந்தன் 1. பெ.கோ. சுந்தரராஜன் 2. பேரை சுப்ரமண்யன் 1. சிசு. செல்லப்பா 3. தரும சிவராமு 8. டி.கே. துரைஸ்வாமி 4. டி.ஜி. நாராயணசாமி 1. சுப. கோ. நாராயணசாமி 1. சுந்தரராமசாமி 5. ந. பிச்சமூர்த்தி 2. யோ. பெனடிக்ட் 1. சி.மணி 3. க.நா. சுப்ரமண்யம் 2. ஞா. மாணிக்கவாசகன் 1. முருகையன் 1. கே.எஸ். ராமமூர்த்தி 1. கு.ப. ராஜகோபாலன் 3. வல்லிக்கண்ணன் 4. தி.சோ. வேணுகோபாலன் 6. எஸ். வைத்தீஸ்வரன் 5. ஆக 24 கவிகளின் 63 கவிதைகள்.
‘கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக்காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது’ என்ற ந.பி.யின் விளக்கத்தை நிரூபிக்கும் அருமையான கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவ்வாறான கவிதைகளிலும் ஒரு ஒலிநயம் இருப்பதை ரசிகர்கள் உணரமுடியும்.
தமிழுக்குப் புதுமையானது இத்தொகுப்பு” இது போன்ற தொகுப்புகள் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தயாரிக்கப் படவேண்டும். அப்போதுதான் கவிதையின் வளமும், வளர்ச்சியும் புலனாக வாய்ப்பு ஏற்படும்.
‘புதுக்குரல்கள்’ முதல் பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு, அதன் இரண்டாம் பாதிப்பு பிரசுரமாக வாய்ப்பு கிட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம் எம்.ஏ. வகுப்புக்கு ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை பாடப் புத்தமாகத் தேர்வு செய்தது. இது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். ஆகவே, செல்லப்பா அதன் இரண்டாம் பதிப்பை 1973 ஜூலையில் கொண்டுவந்தார்.

இது ‘திருந்திய பதிப்பு’முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்த சில கவிதைகள் நீக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் அகற்றப்பட்டு, புதிதாக மூன்று பேர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிலரது கவிதைகளில் முதல் பதிப்பில் அச்சாகியிருந்தவற்றில் சில படைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் நண்பர் செல்லப்பா ‘தன்மூப்பாக’ செயல் புரியவில்லை; விமர்சகர் சி. கனகசபாபதியின் ஆலோசனையோடும் உதவியோடும் இத் திருத்தப்பட்ட பதிப்பை உருவாக்கினார் என்று அறிய முடிகிறது.

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””

Comments are closed.