
- சாதனைகள் நிறைந்த வருஷம்
புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு காலகட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.
அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும். “சமீபத்தில் எழுத்து வாசகர் ஒருவர் தன் கடிதத்தில் பின் வரும் வரிகளை எழுதி இருந்தார்”. ‘எழுத்து கவிதையில் காட்டிவரும் சாதனை நீங்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததாயிராது என நம்புகிறேன்’.
அவர் குறிப்பிட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை…
உண்மையில், புதுக்கவிதை 1959-ல் எழுத்துவில்தான் பிறந்தது என்று சொல்ல முற்படமாட்டோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, ந.பி.யும் கு.ப.ராவும் வல்லிக்கண்ணனும் பிறப்பித்துவிட்ட குழந்தை அது. ஆனால் 1959 முதல் இன்று வரைய நாட்களில் தான் இந்தப் புதுக்கவிதை இடம் கண்டு பிடிக்கப்பட்டு நாமகரணமும் இடப்பட்டது.
‘வசனத்தை முறித்துப் போட்டு எழுதுவது, ‘விஜிடபிள் பிரியாணி’, ‘கோவேறு கழுதை,’ யாப்பு தெரியாமல் ஏதோ கிறுக்கல்கள் என்றெல்லாம் கண்டவாறு பரிகாசத்துக்கு உள்ளாகி இருந்த ஒரு முயற்சிக்கு மதிப்பு கிடைத்துவிட்டது. இந்த நாட்களில் தான் பாரதியின் ‘வசனகவிதை’ ஏற்றுக் கொள்ளப்பட்டு ந.பிச்சமூர்த்தியின் புதுக்கவிதைகளும் இன்று அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.
ந.பி. ஆரம்பித்து வைத்த புதுக்கவிதை முயற்சி இயக்கம் எழுத்துவில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன் ஒன்று சேர, பின்னர், தி.சோ. வேணுகோபாலன், டி.கே. துரைஸ்வாமி, தரும சிவராமு, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன், குறிப்பாக இன்னும் சிலரும் கலந்து கொண்டு புதுக் கவிதையை வளப்படுத்தி வருகிறார்கள், சுமார் இருபத்தைந்து கவிகளின் குரல்களை எழுத்து வாசகர்கள் இந்த நான்கு ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் கேட்டுவந்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குரல்கள் ஒரே தொனியாக இல்லாமல் பல்வேறு விதமாக தன் தன் ஒலியைக் காட்டும் முகமாக அமைந்திருப்பதை பார்க்கிறோம். அவர்கள் வைக்கும் முத்திரைகளும் வேறு வேறு.
இந்தச் சமயத்தில் 1912-17ல் ‘இமேஜிஸம்’ என்ற படிமக் கொள்கையை வைத்துக் கொண்டு இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் டி.இ. ஹும், எஸ்ரா பவுண்டு, ரிச்சர்ட் ஆல்டிங்கடன், எமிலோவல் போன்றோர் கவிதை புனருத்தாரணத்தில் முழு மூச்சாக ஈடுபட்டதை கவனத்துக்குக் கொண்டுவர வேண்டி இருக்கிறது. தங்களுக்கு முன் சென்ற பெரியவர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
எஃப்.எ.ஸ் ஃபிளிண்ட் என்பவர் எழுதினார்.
‘Rhyme and metre are artificial and external additions to poetry and that the various changes that can be rung upon them were worked out. They grew more and more insipid until they have become contemptible and encumbering.’
இது இன்றைய தமிழ்க் கவிதை சம்பந்தமாக எவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறது! பல நூற்றாண்டுகளுக்கு முன்பு படைப்பான விரல்விட்டு எண்ணக் கூடிய சில சிறந்த நூல்களுக்குப் பிறகு இந்த நூற்றாண்டு ஆரம்பகால பாரதிக்குவரும் வரையில், சொல் ஆடம்பரமும் நச்சுப்படுத்தப்பட்ட உள்ளடக்கமும் மலிந்த படைப்புகள் எத்தனை? பாரதிக்குப் பிறகு இன்றுவரை கூட அதே ரீதியில், கற்பனையும் கருத்தும் இல்லாமல் பத்திரிகை செய்யுள்களாக தீபாவளிக்கும் பொங்கலுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஐந்தறைப் பெட்டியிலிருந்து ‘ஃபார்முலா’ ரீதியாகத் தயாராகும் ஓசைச் சொல் செய்யுள்களும் மெட்டுப் பாட்டுகளும் எத்தனை? இதை வைத்துத் தமிழில் 2000 கவிகள் இருப்பதாக ஒரு பெருமை வேறு!
புதுக்கவிகள் இயக்கம் இதையெல்லாம் உடைத்து மீட்சி பெற இயங்குகிற இயக்கம். இதில் தன் பங்கை இந்த நான்கு ஆண்டுகளாக செலுத்தி வருவதுதான் எழுத்துவின் சாதனை. வாசக அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல் எதிர் பார்த்திராதது தான். ஆனால் அது நடந்து விட்டது- எதிர் பார்த்திருந்தாலும் அதுக்கு மேலாக, எழுத்து பிரசுரம், வெளியீடுகளாக வெளி வந்திருக்கும். ‘காட்டு வாத்து’ம் (ந.பிச்சமூர்த்தி) புதுக்கவிதைகள் தொகுப்பும் இதுக்கு சான்று?
1962-ல் ‘எழுத்து’ ஏடுகளில் வந்த கவிதைகள் பலவும் கருத்து ஆழம், கற்பனை வளம், வாழ்க்கைத் தத்துவம், மற்றும் நயங்கள் அநேகம் கொண்ட வளமான படைப்புகளாக விளங்கின. டி.கே. துரைஸ்வாமி, சி.மணி, எஸ். வைதீஸ்வரன், தருமு சிவராமு, வல்லிக்கண்ணன் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளனர். தி.சோ. வேணுகோபாலன், கி. கஸ்தூரி ரங்கன், மயன் ஒவ்வொரு கவிதை படைத்துள்ளனர். புதிதாகக் கவிதை எழுத முற்பட்டிருந்த பலரது கவிதைகளும் இவ்வருடம் எழுத்து இதழ்களில் இடம் பெற்றன. சி.சு. செல்லப்பாவும், சு. சங்கரசுப்ரமணியனும் கவிதை முயற்சிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டனர். ஆங்கிலத்திலிருந்து பல கவிஞர்களின் படைப்புகள் தமிழாக்கப்பட்டு பிரசுரமாயின. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் மூன்று வந்துள்ளன.
இவ்வருடத்தில், புதுக்கவிதையில் நெடுங்கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிச்சமூர்த்தியின் ‘காட்டுவாத்து’ம் சி.மணியின் ‘நரகம்’ கவிதையும் சிறப்பான படைப்புகள்.
‘நரகம்’ விசேஷமானது இதை வெளியிட்டபோது, 43-வது ஏட்டில் புதுக்கவிதையில் ‘ஒரு மைல் கல்’ என்று தலையங்கம் எழுதி ‘எழுத்து’ பெருமைப்பட்டது.
“எழுத்துவில் இதுவரை வெளிவந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான கவிதைகள் புதுக்கவிதையின் சத்தான, தாக்கான குணங்களை நிரூபித்திருக்கின்றன. சி. மணியின் ‘நரகம்’ புதுக்கவிதை முயற்சியில் ஒரு மைல் கல்லை நாட்டுகிறது. நீளத்தில் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவ அழகு, படிமச் சிறப்பு, வாழ்க்கைப் பார்வை, மதிப்பு, தத்துவ நோக்கு, உத்திகையாளுதல் இத்யாதிகளில் சிறப்பு விளங்குகிறது. பிரிட்டிஷ் கவி டி.எஸ். எலியட்டின் ‘ஜே ஆல்ஃப்ரட் ப்ரூஃபராக்கின் காதல் கீதம்’ பாழ் நிலம் பாணியில் தமிழில் வெளிவரும் முதல் நீண்ட கவிதை அல்லது குறுங்காவியம் என்று இதைப்பற்றி நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் கவிதையை வெளியிட வாய்ப்புப் பெற்றதில் எழுத்துக்குப் பெருமை.”
‘நரகம்’ புதுக்கவிதையில் ஒரு சோதனை முயற்சி; வெற்றிகரமாக அமைந்த நல்ல சாதனை, நாகரிக நகரத்தில் திரியும் ஒருவனது உணர்வுக்கிளர்ச்சியை, காம உணர்வு தூண்டி விடும் உள்ளக் குழப்பத்தை, அதை வேதனையாக வளர்த்துவிடுகிற புறநிலைகளை, அவனுடைய ஏக்கங்களை விவரிக்கிறது இந்நெடுங் கவிதை. வர்ணனைகளும், புதுப் புது உவமைகளும் நயமாகச் சித்திரிக்கப்படுகின்றன இதில்.
உலக இலக்கியத்தில் புதுக்கவிதை பிரமாக்கள் தங்கள் படைப்புக்களில் பழங்கவிதைகளிலிருந்து சில சில வரிகளை, பொருள் பொதிந்த வாக்கியங்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு தங்களுடைய கற்பனையை வளர விடுவதை ஒரு உத்தியாக அனுஷ்டித்திருக்கிறார்கள். சி.மணியும் இவ்உத்தியைத் திறமையாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். அவருடைய உவமைகள் புதுமையானவை.
‘காலத்தின் கீற்றுகள்
வாசமாவில் மறைவதென
உள்ளங்கைக் கோடுகள்
இருளில் மறையும் வேளை
தந்த துணிவு செங்கையை
உந்த நின்ற தையலர்,
தலைவன் வரவும் சற்றே
உயரும் தலைவி விழியாக
மறைக்கும் சேலை சாண் தூக்கி,
காக்கும் செருப்பை உதறிவிட்டு
கடலுக்கு வெம்மை யூட்ட
கிழக்கே அடிபெயர்ந்து
அலையை அணைக்கவிட்டார்
ஓரடி ஒளிரும் கால்கள்
மாசறு மதங்கள் போல
வானுக்கு வழிகாட்ட.’
ரேடியோவை பாடவிட்டு, அதில் எழுந்த சங்கீதம் பிடிக்காததால் படீரென அதை
நிறுத்திய செயலுக்கு அழகான ஒரு உவமை–
‘திடுமென் றோராண் வரவே
வாரிச் சுருட்டும் மரபு
வளர்த்த வொரு மங்கையென
விரைந்தே யணைத்து விட்டு
பேயறைந்த நிலையில் வெறிக்க!’
இப்படி நயங்கள் பல கொண்டது ‘நரகம்’
‘தமிழகம் கீழுமல்ல
முழுவதும் மேலுமல்ல;
உலையேற்றி விட்டு
சோறாக்க மறியல்;
பட்டினியும் அழிவுமே
கிடைத்த பயன்;
பின்னாலும் போகவில்லை
முன்னாலும் நடக்கவில்லை;
நடுக்கிணற்றில் நிகழ்காலம்’
என்று நாட்டின் நிலையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது இதில்
கே. அய்யப்ப பணிக்கர் கேரளத்தில் கவிதை உலகில் தனி இடம் பெற்றவர். அவருடைய படைப்புகளில் சிறந்ததான ‘குருக்ஷேத்திரம்’ எனும் நெடும் கவிதையை நகுலன் மலையாளத்திலிருந்து தமிழாக்கினார். அது ‘எழுத்து’ 48-வது இதழில் வந்தது.
1962-ன் பெரிய சாதனை பிச்சமூர்த்தி கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்ததும், ‘புதுக் குரல்கள்’ தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டதும் ஆகும்.
ந.பி. 1938 முதல் 1962 முடிய எழுதிய கவிதைகளில், தேர்ந்தெடுத்த 35 கவிதைகள் கொண்ட தொகுப்பு ‘காட்டு வாத்து’.
அதன் முன்னுரையில்- ‘எதிர்நீச்சு’ என்ற தலைப்பில்-பிச்சமூர்த்தி எழுதியுள்ள கருத்துக்கள் இவை-
‘இம் முயற்சி ஆற்றில் எதிர்நீச்சல் போடும் முயற்சி, பாதையில்லாக் காட்டில் பயணம் செய்யும் முயற்சி. இம்மாதிரி கவிதையின் அமைப்பு முறையில் அனுபவத்தால் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே போகும். இலக்கண வரையறை என்று எதுவும் லேசில் அகப்பட்டு விடாது என்பதும் எனக்குத் தெரிந்தது. இத்தொகுப்பிலும் அந்த மாறுதலைக் காணலாம். முடிவான முறையைக் கண்டு விட்டேன் என்று சொல்லமாட்டேன். மற்றபடி கவிதைகளின் வெற்றி தோல்விகளைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது என் வேலையன்று.
ஆனால் இரண்டொரு பொது விஷயங்களை மட்டும் கூறலாம். கவிதை கவிதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது. மதத்தின் குரலாக இருந்திருக்கிறது மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை காணும் என்று தோன்றுகிறது. காதல் மட்டும் அகத்துறை என்று வகை செய்வது மன இயல் சாத்திரத்திற்குப் பொருந்தாது. இத்தொகுப்பில் கதை போல் இருப்பவற்றில் கூட, கதைச்சுவையைவிட தொனிச்சுவை ஓங்கி நிற்பதைக் காணலாம். எதிர்காலத்து நெடுங்கவிதை இந்தப் போக்கில் செல்லாமல் கதைச் சுவையை நம்பினால் கவிதை அம்சம் குன்றிவிடும். கவிதை இனி நாவலுடனோ நாடகத்துடனோ போட்டியிட முடியாது.
புதுக்கவிதைக்கு ஏற்ற வாழ்நிலை ஏற்பட்டு விட்டதை நாம் மறுக்கக்கூடாது. அச்சுயந்திரமும், லைப்ரரிகளும், மௌன வாசிப்பும் தோன்றிய பிறகு, -அவை தோன்றாத காலத்தில் அமல் செலுத்திய கேள்வி மரபும் ஸ்தூலக்காதின் ஆட்சியும் கண்ணெதிரே மறைந்து வருவதைக் கண்ட பிறகு-கவிதையை வேறு விதமாக அமைக்க ஏன் முயலக்கூடாது?
ஸ்தூலமான சொல்லுக்கும் நயத்திற்கும் அப்பாற்பட்ட பொருளும் அமைதியும் உண்டு என்பது என் நம்பிக்கை. அந்த அடிப்படைகளைத் தொட்டு நான் கவிதையை அமைக்க முயன்றிருப்பதால் பருந்தும் நிழலும் போலுள்ள இசையை இவற்றில் காணலாம். ஸ்தூலத்தை விட சூக்குமத்திற்கு அதிக சக்தி உண்டென்ற அணுயுகம் நமக்குக் காட்டி விடவில்லையா?”

One Comment on “வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”
Comments are closed.