வல்லிக்கண்ணன் /புதுக்கவிதை பற்றி

பிச்சமூர்த்தி கட்டுரை பிரசுரமானதற்குப் பிறகு, ‘எழுத்து’ ஏட்டில்கவிதை, வசனகவிதை பற்றிய சர்ச்சைகள் அதிகமாக இடம் பெற்றன. ‘எழுத்து’ 15-வது ஏட்டில் தலையங்கப் பகுதியாக, ஆசிரியர் தனது எண்ணங்களை வெளியிட்டிருந்தார். ‘எழுத்து அரங்கம்’ பகுதியில், இலங்கை ஆர். முருகையனும், திருப்பத்தூர் பொ.சுந்தரமூர்த்தி நயினாரும் தங்கள் கருத்துக்களை விரிவாக எழுதியிருந்தனர். எஸ். முருகையன் எழுதிய ‘கவிதைக் கலை’ என்றொரு கட்டுரையும் இடம் பெற்றிருந்தது ‘ஃப்ரி வெர்ஸ்’ பற்றிய அரைப்பக்க விளக்கம் ஒன்றும் காணப்பட்டது.
புதுக்கவிதை வேறு, வசன கவிதை வேறு என்று பிரித்துப் பேச முற்பட்ட ‘எழுத்து’ ஆசிரியர், ந.பி.யின் சில அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தகுந்ததாகும். அதன் முக்கியத்துவம் கருதி, ‘புதுக் கவிதைபற்றி’ என்ற ‘எழுத்து’ (மார்ச் 60) தலையங்கக் கட்டுரையை அப்படியே தருகிறேன்–

“கற்பனை எழுத்து உருவ வகைகளில் கவிதைதான் மிகச் சிறந்த வெளியீட்டு சாதனம் என்று சொல்லப்படுகிறது. கவிதையின் பாஷையே ஒருதனித்தன்மை கொண்டது. ஓசை நயவார்த்தைகள், வார்த்தைத் தொடர்களால் அமைந்த ஒரு தனிச் சிறப்பான அமைப்பு முறைகளைக் கொண்டு, தனித்து குறிப்பிடப்படுவது. வாழ்க்கையும் மனோபாவனையும் ஒரு கலைப்பாங்கான உள்ளத்தில் பொறிகளால் பாதிக்கப்பட்ட சில மனப்பதிவுகளை ஏற்றுகின்றன. இந்த மனப் பதிவுகளை உணர்ச்சி ரீதியாக உரைத்துப் பார்க்கும் கவிஞன் அதை மொழியின் மூலம் இறுகிய, உறைந்த நடையில் கொடுக்கிறான். இந்த நடையில் அர்த்த வலுவுடன் செழிப்புடன் ஒரு அழகும் இருக்கிறது. அழகுடன் ஒரு இசைத்தன்மையும் (மியூசிகாலிட்டி) இருக்கும்.
இந்த இசைத்தன்மைதான் கவிதையை வசனத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது. ஆனால் இசைத்தன்மை என்பதை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கவிதைத் துறையில் குறிப்பிட வேண்டும். சங்கீதத்துக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் கவிதைக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை எந்த சந்தர்ப்பத்திலும் நாம்-அசந்து மறந்துகூட- குழப்பிக் கொள்ளக்கூடாது.
வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவே கவிதைக்கும் சங்கீதத்துக்கும் வித்தியாசம் உண்டு. பாரதி தன் கவிதைகள் பலவற்றில் சங்கீதத்துக்கு உரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவரது படைப்புகள் கவித்தரம் குறைந்துதான் காண்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று அவரது அத்தகைய படைப்புகளைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுகள் எல்லாம் கவிதைகள் என்று கருதும் ஒரு ஏற்புநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக்கூடியது.
எனவே, கவிதைக்கு வேண்டிய இசைத் தன்மை பிச்சமூர்த்தி கூறியதுபோல ‘சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஒரு ஓயுமொலி’ என்பதுதான் முக்கியம். ஓயுமொலி சொப்பனக் குரல் மாதிரி நம் காதுகளில் தாக்கக்கூடியதாக இருக்கக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த ஓயும் ஒலி சொப்பனக் குரல்தான் ஒலிநயம் என்று சொல்கிறோமே அந்த மென்மையான இசைத்தன்மை வாய்ந்தது. இந்த ஒலிநயம் சுருதிமீட்டலாக ஓடும் கவிதையில். வசனத்திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்றாலும் கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றமே வேறு. இந்த ஒலிநயத்தைக் கொணர்வதில் தான் கவிஞன் சாமர்த்தியம் இருக்கிறது.சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஓசையை தாளப்படுத்திக் காட்டி கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல.
இந்த மென்மையான ஒலிநயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் புதுக்கவிதை முயற்சி. சந்த அமைப்பு ஒழுங்கற்று கையாளப்பட்டிருக்கலாம். இதைப்பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஒலிநயம் அதில் இருக்கத்தான் செய்யும். இதனால் மரபான கவிதையில் ஒலிநயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சந்தமும் எதுகை மோனையும் சொற்கட்டும் ஒலிநயத்தை ஏற்றக்கூடியவை தான். அதை உணரச் செய்ய வைப்பவைதான். ஆனால் சீர் அசை தளைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வெளித் தெரியும் படியான தாளக்கட்டுடன் அமைந்த கவிதைகளை விட புதுக்கவிதையில் ஒலிநயத்துக்கு இடம் அதிகம்.
‘மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலிநயம் என்று தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்க இடம் இருக்கிறது’ என்று பிச்சமூர்த்தி கூறுகிறார். ‘ஒலிநயம் என்ற குணநியதியை முற்றாக புறக்கணிப்பது வசன கவிதை’ என்கிறார் முருகையன். ‘வசன கவிதை என்பது கவிஞன் தன் உணர்வை தோன்றிய போக்கில் சிதறவிடுவதாகும்’ என்கிறார் கைலாசபதி. ஆனால் இந்த மூன்றுக்கும் பதில் சொல்வது போல அமைந்திருக்கிறது. புதுக்கவிதை முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்த கு.ப. ராஜகோபாலன் எழுதியுள்ள சிலவரிகள்.
“வசன கவிதைக்கும் யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி
எல்லாம் வந்தாக வேண்டும். வரும் வகை மட்டும் வேறாக இருக்கும். வசன கவிதைக்கும் எதுகை மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த அலங்காரங்களை எல்லாம் உள்ளடக்கினது கவிதை. அது அவற்றை இஷ்டம் போல மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே இருக்கவேண்டும் என்றால் இருக்காது.”
கு.ப.ரா. புதுக்கவிதை முயற்சி பற்றிக் கூறியுள்ள இந்த வரிகள் திட்டவட்டமாகவே அதன் தன்மை பற்றி தெரிவிக்கின்றன. புதுக்கவிதையில் ஒலிநயம் இருப்பதன் அவசியத்தை அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. அதை வெறும் பிரமை என்று தள்ளினதாகத் தெரியவில்லை. அவர் கூறி இருப்பவைகளுடன். ‘ஃப்ரி வெர்ஸ்’ பற்றிய சில வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் புதுக்கவிதை முயற்சி செய்பவர்களது முறையான நோக்கு புலப்படும்.
நடுவில் ஒரு வார்த்தை, வசன கவிதை என்ற பதச்சேர்க்கை பற்றி இந்த வார்த்தை எப்படியோ உபயோகத்துக்கு வந்து விட்டது. இங்கிலிஷ் மொழியில் செய்யப்பட்ட ‘ஃப்ரி வெர்ஸ்’ என்ற சொல்லின் அர்த்தமாக கருதப்பட்டு உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசனம் என்ற கவிதைக்கு மாறுபட்ட, ஒரு பதத்தை அதில் இணைந்திருப்பதால் தெளிவான ஒரு பொருளுக்கு, வியாக்கியானத்துக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. இந்த பதச்சேர்க்கையை முன் வைத்தே வாதப் பிரதி வாதங்கள் நடைபெறுகின்றன. வசன கவிதை என்பது ‘கோவேறு கழுதை’, ‘விஜிடபிள் பிரியாணி’ என்று பரிகாசமாக பேசப்படுகிறது. புதுக்கவிதை முயற்சி என்றால் அது வசன கவிதைதான், ‘யாப்புக்குப் புறம்பான’ வசனத்தை ஒடித்துப்போட்டு எழுதுவதுதான்’ என்று முடிவு கட்டப்படுகிறது.
புதுக்கவிதைகள் வசன கவிதைகளாகத்தான் இருக்கும் என்று கருதுவதற்கு இல்லை. வசன கவிதைகள் எல்லாம் புதுக் கவிதைகள் என்று சொல்லி விடவும் முடியாது. புதுக்கவிதைகள் உருவ அமைப்பில் மட்டுமல்ல; உள்ளடக்கம் சம்பந்தமாகவும் சில புதிய இயல்புகளைப் பெற்றிருப்பதாகும். சோதனை கு.ப.ரா கூறியுள்ள அலங்கார அம்சங்களைப் பொறுத்தது மட்டுமல்ல. ஒரு கலைஞனை உடன் நிகழ்கால வாழ்க்கை பாதித்து அவனை உணர வைத்திருப்பது. வாழ்க்கையிலும் கலையிலும் மதிப்புத் தரநிலை தேடுவது இவைகள் சம்பந்தமாகவும் உண்டு. எனவே வசனகவிதையையும் புதுக்கவிதையையும் வித்தியாசப்படுத்திக் கொள்வதுதான் முறையானதாகும். குழப்பிக் கொண்டால் தற்காலக் கவிதை சம்பந்தமாக ஒரு அபிப்பிராயம் விழுவதற்கு இடமே ஏற்படாது போய்விடும்.
இதில் இன்னொரு விசேஷம். வசன கவிதைக்கான சில இலக்கண அம்சங்களை கூற ஒருவர் முற்படும்போது புதுக் கவிதைக்கான சில நியதிகளையும் அதில் நாம் காண்கிறோம். கு.ப.ரா. வசன கவிதை பற்றி சொன்னாலும் புதுக்கவிதை பற்றிய விளக்கமாகவே அது இருக்கிறது. பிச்சமூர்த்தியின் வாதத்திலும் சில புதுக்கவிதை சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. புதுக்கவிதை சம்பந்தமாக புதுமைப்பித்தன் கூறியுள்ள சில வரிகளைப் பார்ப்போம்.
‘ரூபமில்லாமல் கவிதை இருக்காது. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளதென்று கொள்ளவேண்டும்… இன்று ரூபமற்ற கவிதையென சிலர் எழுதி வருவது இன்று எவற்றையெல்லாம் ரூபம் எனப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் எனக் கொள்ள வேண்டுமேயொழிய அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை.’
இப்படி அவர் கூறும்போது மரபானவை என்று நாம் கருதி உள்ள உருவ வகைகளை வைத்து புதுக்கவிதை முயற்சிகளை மதிப்பிடக் கூடாது என்று அவர் கருதுவதாகத்தான் படுகிறது. அத்துடன் கவிதைக்கு உரிய (கு.ப.ரா. குறிப்பிட்ட அலங்காரங்களுடன் கூடிய) கவிதைக்கு கரு, கருத்து இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இன்று வசனகவிதைகள் என்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கையில் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல, என்றும் கூறி இருக்கிறார். புதுக்கவிதையையும் வசன கவிதையையும் அவர் பிரித்துப் பேசி இருப்பது தெரிகிறது. யாப்புக்கும் கவிதை நடைக்கும் உள்ள உறவு பற்றிக் கூறுகையில்,
‘யாப்பு’ முறையானது, பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்கும் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைச் சேர்ப்பதல்ல’,
என்று குறிப்பிட்டிருக்கிறார். மேல் நாட்டு புதுக்கவிதை முயற்சிகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று, பேச்சு வழக்கில் உள்ள இசைவான வார்த்தைகளையும் வார்த்தைத் தொடர்களையும் கவிதையில் நிறையப் புகுத்துவது. பேச்சு அமைதியையும் புதுக்கவிதைகளில் காணமுடியும். எனவே புதுக் கவிதைகள் அமைவதற்கு உதவுபவைகளில் சொற்களின் முக்கியத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது கவிதைக்கு ஒலிநயம் போலவே சொல் அமைவும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதைக் காட்டும் பின்வரும் கு.ப.ரா.வின் கவிதை வரிகள்.

கவிகள் களைப்பின்றி காவியமியற்ற
நின் கண்கள் என்ன நிலைக்காக் கவர்ச்சியில்
கருமை தட்டியவை?
யுகம் யுகமாக மனிதனை
மாயை போல மயக்க
உன் கருவளையும் கையும்
என்ன சொற்சுவையில்
சுருதி சேர்ந்தவை?
மானிடன் மார்பில்
ஒவ்வொரு அடியிலும் எதிரொலிக்க
உன் கால் மெட்டி
என்ன வெள்ளி இசையில்
இன்பம் காட்டியது?

இந்தச் செய்யுளுடன் பாரதியின் காட்சிகளில் உள்ள வரிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புதுக் கவிதைக்கும் வசன கவிதைக்கும் பல அம்சங்களில் உள்ள வித்தியாசம் தெரியும். பாரதியின் காட்சி வரிகளில் வரும் சொற்கள் ‘சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்களாக’ இருக்கலாம். ஆனால் அவைகளின் சேர்க்கையிலே இசைத்தன்மை பிறக்கவில்லை. ஆனால் கு.ப.ரா வின் கவிதையில் வரும் சொற்களும் சொற்கோவைகளும் தங்கள் கருத்து, உணர்வு இசையினால் மட்டுமின்றித் தங்கள் ஒலி இசைவினாலும் சிறப்பாக-முதன்மையாக-கவிதை ரூபத்திற்கு உதவி இருக்கின்றன.
புதுக்கவிதை சத்தான, தாக்கான முயற்சி. அதன் எதிர் காலம், பழங்கவிதையின் இயல்பும் சிறப்பும் அறிந்து மரபை மீறி மரபு அமைக்கும் வழியாக கவிதை உள்ளம் படைத்தவர்கள் கையாளும் வழி வகைகளைப் பொறுத்து இருக்கிறது.

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ்