வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. பிச்சமூர்த்தி கட்டுரை

புதுக்கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று ரீதியில் எழுதுவதற்காகவே இத்தொடர் பிறந்தது. அதனால்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான 1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பலரகமான அபிப்பிராயங்களையும் முழுக்கட்டுரைகளாக அவ்வப்போது எடுத்தெழுத நேரிட்டது
1960களில் புதுக்கவிதை புதிய வேகம் பெற்று வளரத் தொடங்கியது. அப்போதும் அந்த முயற்சியைக் கேலி செய்தும். குறை கூறியும், கண்டித்தும் பேசியவர்களும் எழுதியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களது எதிர்ப்புக்குப் பதில் கூறுவது போல, ந.பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரை ‘எழுத்து’ (பிப்ரவரி 1961) 14வது ஏட்டில் வெளிவந்தது.
கருத்தாழம் கொண்ட, ‘வசன கவிதை’ என்ற அந்தக் கட்டுரையை அப்படியே எடுத்தெழுதுவது, இவ் வரலாற்றுக்கு அவசியமானது என்று நான் கருதுகிறேன். சிந்தனைத் தெளிவோடும் அழுத்தத்துடனும் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை இன்றைய ரசிகர்களுக்கும் இனிவரும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வசன கவிதை

“வசன கவிதை என்று கிடையாது, அது கவிதையே ஆகாது என்று ஒரு விமர்சகர் கூறியிருக்கிறார். ஏன் இல்லை, ஏன் ஆகமுடியாது என்று தர்க்க ரீதியாக எனக்கு விளங்கவில்லை. வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை என்பது உண்மைதான். வசனம் நமக்கு செய்தியைத் தெரிவிக்கிறது. நம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விஷயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப் போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்புகொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. நேரிடையாக உள்ளத்தைத் தொட்டு புதிய அனுபவத்தை எழுப்ப முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் லோகாயத உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மனஅசைவை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால் வசனத்தை கவிதையைப் போல் செயல் படுத்த முடியாதா? கூடாதென்ற நியதி உண்டா? இல்லை. அம்மாதிரி செயல்படும் பொழுது வசனம் தன் தொழிலை விட்டுக் கவிதையின் தொழிலை ஏற்றுக் கொண்டு விடுகிறது என்றுதான் ஏற்படும். பார்வைக்கு வசனம்; உண்மையில் கவிதை.
மற்றொரு விஷயம். இப்பாகுபாடு தெளிவை உத்தேசித்து செய்யப் பட்டதே ஒழிய நிரந்தரமானதென்று கருதக் கூடாது. நோக்கத்தினால் அவை பாகுபாட்டைச் சேர்ந்த தன்மையோ மற்றொரு பாகுபாட்டைச் சேர்ந்த பெருமையையோ அடைகின்றன. ஜுரத்தில் வேகம் ஏறுவது போல் உணர்ச்சி கூடினால் தரையில் நடக்கும் வசனம் சிறகு பெற்றுக் கவிதையாகிவிடும்.
ஒரு உதாரணத்தைக் கொண்டு பார்ப்போம். பாரதியார் ‘காட்சி’ என்ற தலைப்பில் சில வசனகவிதைகளை இயற்றித் தந்திருக்கிறார்.
‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடைத்து காற்றும் இனிது. தீ இனிது. நிலம் இனிது. ஞாயிறும் நன்று. திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.’
என்று முதல் கவிதை தொடங்குகிறது.
இது வசனமா? தர்க்க அறிவுக்கு என்ன புரிகிறது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலல்லவா இருக்கிறது. சுருதி பேதமாக அல்லவா இருக்கிறது? ஆம். வசன ரீதியாகப் பார்த்ததால் விளைந்த வினை இது. இது கவிதை. செய்தி சொல்ல வந்த, விஞ்ஞானத்தை விளக்க வந்த வசனமல்ல. சிருஷ்டியின் அனுபவத்தைக் கூறும் உணர்வுள்ள சொற்கள்.
எனவே வசனம் கவிதையாக முடியாதென்று முன் கூட்டியே முடிவு செய்வது தர்க்கத்திற்கு ஒவ்வாது. மனிதனுடைய மொழிகள் அடைந்துள்ள மாறுபாட்டையும், கவிதை என்னும் துறை அடைந்துள்ள வளர்ச்சியையும் சரித்திர ரீதியாக உணராத குற்றம்தான் இம்மாதிரி அபிப்பிராயங்களுக்குக் காரணமாகிறது.
கவிதையின் சரித்திரத்தைப் பார்த்தால், பாட்டிலிருந்தே கவிதை பிறந்திருக்கிறதென்று தோன்றுகிறது. முதல் முதலாக மனிதன் பாடத்தான் பாடியிருப்பான். இத்துறையில் அவனுடைய ஆதி குருமார்கள் என்று குயிலையும் மாட்டையும் கரிச்சானையும், நீரொலியையும் இடியையும் இவை போன்ற எண்ணற்றவையையும் தான் கொள்ள வேண்டும். எனவே பாடினான் என்பதைவிட இசைத்தான் என்றே கூறலாம். ஒருக்கால் வாயால் இசைக்கும் முன்னரே இசைக்கருவிகளைக் கண்டுபிடித்திருக்கவும் கூடும். வண்டடித்த மூங்கிலில் எழும் ஒலியைக் கொண்டே புல்லாங்குழல் கண்டு பிடித்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இசைக் கருவிகளைக் கொண்டு இசையறிவு விரிந்திருக்கக்கூடும் நாதசுரத்தில் சாகித்யத்தைப் பழக தத்தகாரங்களே போதுமானவை என்று சொல்லப்படுவதையும் இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம். வார்த்தைகளை உருவி விட்ட மெட்டைத்தானே வாத்யத்தில் கேட்கிறோம். முதல் முதலாக சொல்லுக்கு அதிக இடமற்ற இசையே பாட்டாக உலவிற்று என்று கருதலாம்.
மனிதனுடைய சிந்தனையும் உணர்ச்சியும் வளர்ச்சி அடையத் தலைப்பட்ட பிறகு வெறும் இசையால் உண்டாகும் இன்பத்துடன் பொருளையும் மன நெகிழ்ச்சியையும் வியப்பையும் துயரத்தையும் சொற்களின் மூலம் ஊட்டி இசைக்க நிரந்தரமான அடிப்படையையே அளிக்கலாமே என்ற ரகசியம் மனிதனுக்குப் புலனாகிவிட்டது.
சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்றபிறகு தோன்றும் ஓயுமொலி சொல்லொணாத ஏக்கத்தை உண்டாக்குகிறது என்பது நம்முடைய அனுபவம். ஆனால் மனிதன் உயிரின் பெருவெள்ளத்திலிருந்து பிரிந்த தனித்துளி; மூலத் தொடர்பறுந்து வாழ்வெனும் துயரக்கடலில் விழுந்து தத்தளிப்பதாகக் கருதி தவிக்கும் ஜீவன். இந்தப் பிரிவினைத் துயரத்திற்கு வேதனைப்படுவது போன்ற வேதனை தரும் சொற்களையும் இவ்வேகத்துடன் கோர்த்து விட்டால் இசை கவிதையாகி விடுகிறது. காற்றில் தோன்றி காற்றில் மறையும் இசை கால்பெற்று நிலைத்து உணர்ச்சிக்குத் தீயூட்டும் சிறப்பை அடைகிறது. இப்பொழுது இசை வெறும் குறிப்பற்ற கிளர்ச்சியாக இல்லாமல் பொருளுள்ள பாட்டாகிறது. கவிதையாகிறது.
ஆனால் ஒன்று, இரண்டு வகையிலும் காதென்னும் பொறி வழியே தான் இந்த இன்பமும் அனுபவமும் தோன்றியாக வேண்டி இருக்கிறது. காதை முன்னிறுத்தியே இதுவரை கவிதை எழுதப்பட்டு வந்திருக்கிறதென்பதை இங்கு நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இன்னும் கவிஞர்களில் பலர் கவிதை புனைவதற்குமுன் சந்தத்தையோ பாவகைகளின் இரண்டொரு வரிகளையோ நினைவில் கொண்டு பரிசலாக்கி கவிதையின் சொற்களை மீதேற்றி கவிதை புனைவது எனக்குத் தெரியும். யாப்பிலக்கண அறிவின்றியே வெற்றிகரமாக கவிஞர்கள் இந்தக் காரணத்தினால்தான் ஒலிக் குற்றமின்றி கவிதை புனையமுடிகிறது.
இப்பொழுது முக்கியமான பிரச்னை என்னவென்றால், காதை நம்பாமல் கவிதையைத் தோற்றுவிக்க முடியாதா என்பதுதான். அனுபவத்தில் புதுமையைக் காட்ட விரும்பும் கவிஞன் இது இயலும் என்பதைக் கண்டான். கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே, சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கிறதென்ற உண்மையைப் புதுக்கவிஞன் கண்டுபிடித்தான். கவிதை சொற்களில் இல்லை ஒலி நயத்தில் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இரண்டுக்கும் காரணமான தன்னிடத்தில் இருக்கிறதென்ற பேருண்மையை, அதிருஷ்ட வசத்தால் தான் பெற்ற அனுபவத்தில் இருக்கிறதென்ற ரசனை நுட்பத்தை உணர்ந்தான்.
இந்த அடிப்படையின் மீது பார்க்கும் பொழுது கவிதை காதை நம்பித்தான் வாழவேண்டுமென்ற அவசியம் தோன்றவில்லை. கவிதையின் மரபுக் கொத்த அங்கங்களும் இக்கருத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. கவிதைக்கு உயிர் நாடியான உவமை அணி பெரும்பாலும் கண்ணைச் சார்ந்த அலங்காரம். காதை நம்பிக் கவிதை பிறக்க வேண்டியிருந்த நிலையிலும் கூட, கவிதையின் சிறப்பெல்லாம் ஐம்பொறிகளின் தயவையும் மீறிய நேரிடையான அனுபவத்தால், இயற்கையான நுண்ணுணர்வால், ஏற்படுவதென்ற உண்மையை எப்படி மறந்துவிடமுடியும்?
இந்த உண்மையின் காரணமாகவே, ஒரு பொறிக்கு உரித்தான தொழிலை மற்றொரு பொறியின் மீதேற்றி கவிதையில் சிறப்பைக் கூட்டும் கற்பனை முறை கையாளப்பட்டு வந்திருக்கிறது.
ஒரு உதாரணத்தைக் கொண்டு இதை ஆராய்வோம். ஆனால் ஒரு எச்சரிக்கை இது இலக்கிய விசாரமேயன்றி, மன இயல் விமர்சனமே அன்றி, சரித்திர ரீதியான தொடரல்ல என்பதை மறக்கலாகாது. ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதியார் பாடினார். இயற்கையாக ருசியை நாக்கின் மூலமே உணர்கிறோம். காதின் மூலம் இந்த ருசியை உணரலாம் என்பது இயற்கைக்கு முரண்பட்டது. ஆனால் கவிஞர் இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்கிறாரே. நாக்கின் தொழிலைக் காதின் மேலேற்றித் திடுக்கிடும் புதிய அனுபவத்தைக் கூறுகிறாரே! ஆம். நாக்குக்கு இனிப்பாவது போல காதுக்கு இனிப்பாக இருக்கிறது என்கிறார். அதாவது பொறிகளுக்குள்ள வேறுபாடு உடலியலைப் பற்றிய வரையில் உண்மையே ஒழிய மன இயலைப் பற்றிய வரையில் வேறுபாடாகாது. இரண்டின் விளைவும் ஒன்றுதான் என்ற தத்வ ரகசியத்தை மறைமுகமாகக் காட்டுகிறார்.
வேறுவிதமாகக் கூறினால், பொறிகள் தங்கள் தங்கள் தொழில்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும் என்ற தத்வரீதியாகக் கொள்ளலாம். கவிதையின் ஒருமைப்பட்ட, உடனடியான அனுபவத்தை விளைவிப்பது ஆறாவது பொறியாகி மனமேயாகும். பொறிகள் தபால்காரனைப் போல். செய்தி என்று உணரும் சக்தி மனத்திற்குத்தான் உண்டு. எனவேதான் பொறிகள் தனித் தன்மையை இழந்து, பதிலியாகக்கூட இயங்கி கவிதையென்னும் விளைவுக்குக் கருவியாகின்றன.
நாக்கின் தொழிலைக் காது மேற்கொள்வது போல, காதின் தொழிலை கண் ஏற்க முடியாது? முடியும் என்று கவிஞன் கண்ட பொழுது தோன்றியதுதான் வசன கவிதை. இந்தக் காரணத்தாலேயே அச்சு இயந்திரம் தோன்றிய பிறகே வசன கவிதை சாத்யமாயிற்று, காதை அடிப்படையாகக் கொண்ட எதுகை மோனைகளுக்கு இப்பொழுது அவசியமில்லாமல் போய்விட்டதென்பது கசப்பான புதிய உண்மை.
எதுகை மோனைகளாலும், சந்தத்தாலும் கவிதைக்குக் கிடைத்து வந்த இசைப் பயனை ஸ்தூல நிலையிலிருந்து சூக்ஷ்ம நிலைக்கு உயர்த்தக் கூடிய கவிதை முறை சாத்யமாகி விட்டது. சொற்களைத் தொடுக்கும் ஜாலத்தாலேயே கவிதையின் பிறப்பிடத்திலேயே அதை எழுப்பிக் காட்டும் கடினமான கவிதைக் கலைக்குத் தூண்டுதல் ஏற்பட்டுவிட்டது. இசையை இசைவாக மாற்ற வேண்டிய கடமை உண்டாகி விட்டது. எனவே பல கோடி ஒலி அமைப்புகளிலே சிலவற்றைத் தேரந்தெடுத்துக் கவிதையில் ஒலி இன்பத்தைக் கூட்டுவது போல பல கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் பொறுக்கி எடுத்து இசையவைக்கும் முயற்சி புதிய கவிதை ஆயிற்று, யாப்புக் கிணங்காத வகை என்று குறிப்பிடுவதற்காகவே கவிதை என்ற சொல்லுடன் ‘வசன’ என்ற சொல்லையும் சேர்த்து இப்புதிய முறையைக் குறிப்பிடுகிறார்கள். பார்த்தால் வசனம்; பாய்ந்தால்-நெஞ்சில் பாய்ந்தால்-கவிதை.
மரபுக்கிணங்கிய கவிதையில் ஒலி நயம் என்று ஏதோ தனியாக இருப்பதாகக் கூறுவதே ஒரு பிரமை என்று வாதிக்கக்கூட இடமிருக்கிறது; கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் கவிதையில் தெரிவிக்க ஏறக்குறைய குறிப்பிட்ட வார்த்தைகளால் முடியும். வேறு சொற்களை உபயோகித்தால் கருத்தும் உணர்ச்சியும் மாறிவிடும். கருத்திலோ உணர்விலோ ஏற்படும் இசையே ஒலிநயம் என்ற தனிப்பேருடன் நடமாடுகிறது.
பாம்பைப் பற்றிய மரபான கருத்தொன்றை ஆராய்ந்து பார்ப்பது இந்த வாதத்திற்குத் தெளிவை அளிக்கும். பாம்புக்குக் கட்செவி என்று பெயர். அதாவது பாம்புக்குக் காது கிடையாது என்று ஏற்படுகிறது. ஆனால் மகுடிக்கு முன் ஆடுகிறதே என்று சொல்லக்கூடும். பழம் நூல்களெல்லாம் பாம்புக்கு இசை உணர்ச்சி அதிகம் என்று கூறுகின்றனவே என்று சொல்லக்கூடும். ஊர்வன வகை ஆராய்ச்சியாளர்கள் பாம்பு இசையைக் கேட்டு ஆடவில்லை; கண்ணுக்குத் தெரியும் மகுடியோ மற்றப் பொருளோ அசைவதற்கு ஏற்ப ஆடுகிறது என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே பாம்பு ஒலிநயம் காண்பதாகக் கூறுவதெல்லாம் ஒரு பிரமை. மரபுக்கிணங்கிய கவிதையின் ஒலிநயம் என்று கூறுவதும் இதைப் போன்ற ஒரு பிரமையே. உண்மையில் மகுடியின் இசையைப்போல் கவிதையில் ஆடும் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அனுபவித்துத்தான் கவிதாரசனை பெறுகிறோமே அல்லாது வேறெதுவுமில்லை என்றே கூறலாம்.
வசன கவிதையை முதல் முதலாகக் கண்டு பிடித்தவர் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். அன்று முதல் இப்புதுத்துறையில் முயற்சிகள் நடை பெற்றே வருகின்றன. இம்முறையால் கவிதையைத் தேக்கிக் காட்ட முடியாதென்பதற்குத் தகுந்த காரணங்களை யாரும் சொல்லவில்லை. மனிதனால் சந்திரனுக்குப் போக முடியாதென்று கூற யாரும் இன்று துணிவு கொள்ள மாட்டார்கள். புறவுலகில் சாத்ய மற்றதென்று கருதப்படுவது சாத்யமாகும் பொழுது மனத்துறையில் மட்டும் புதுமை ஏன் சாத்யமாகக் கூடாது? யாப்புக்கிணங்கிக் கவிபுனைபவர்களில் சொத்தை சொள்ளை தோன்றுவது போல வசன கவிதைத் துறையிலும் இருக்கலாமே ஒழிய, புது முறைக்கே தோல்வி ஏற்பட்டு விட்டதாகத் தர்க்க ரீதியாகக் கொள்ள முடியாது. கருத்துக்களின் இசைவே, உணர்வின் சலனமே, கவிதாசிருஷ்டியின் ஒருமையே புதுக்கவிதையாகும்.
‘ரவி, மதி, தாரகைக்கு வணக்கம்’ என்று எட்வர்ட் கார்ப்பெண்டர் என்னும் அமெரிக்கக் கவி ‘ஜனநாயகத்தை நோக்கி, என்னும் நீண்ட கவிதையைத் தொடங்குகிறார். இவ்வரியை ஒரு நிமிஷம் கவனிக்கலாம். இது நம்முடைய அறிவுக்கு எந்தச் செய்தியையும் சொல்லவில்லை. எந்தப் பொருளையும் குறிப்பிடவில்லை. ஆனால் நமக்குப் புதிய உண்மை ஒன்றை-மறந்து போனதை நினைவூட்டுவதென்றாலும் சரிதான்-இது கூறுகிறது. புதிய கதவம் ஒன்றைத் திறந்து உலக சிருஷ்டியுடன் நமக்கிருக்கும் உறவு முறைகளைக் காட்டுகிறது. சிருஷ்டியின் பெருவெளியில் நம்மைப்போல் செல்லும் சகப்பிராணிகள் இருப்பதையும், நாமும் அவர்களும் சேரந்து ஒரே நோக்குடன் தோழமையுடன் இயங்குவதையும் சுட்டிக்காட்டி, குசலம் விசாரித்து, வணக்கம் செலுத்துகிறது. சிருஷ்டி என்னும் மகத்தான கூற்றுத்தான் கவிதை என்ற உண்மையை நாம் உணர்கிறோம்.
கவிதைக்குப் பிறப்பிடமான ஒருமையையும் இசைவையும் உணர்கிறோம். எனவே, இவ்வரியைப் படித்ததும் ஊன் பொதிந்த குறுகிய குடிசையில் தொல்லைப்படும் நம் சிற்றுணர்வு விடுதலை பெற்று விரிந்து பறக்க உதவிய இவ்வனுபவத்தைக் கவிதை என்று உணர்கிறோம்.
இதே அகண்ட இசைவைத்தான், கவிதைத் தன்மையைத்தான், பாரதியாரின் ‘காட்சி’யிலும் காண்கிறோம். வசன கவிதைக்கு இதுவே மற்றொரு சிறந்த உதாரணமாகும்.
பாரதியாருக்குப்பின் இத்தடத்தில் சென்றவர்கள் குறைவு. கு.ப. ராஜகோபாலன் ஓரளவும், நான் சற்று விரிவாகவும், வல்லிக்கண்ணன் சிறிதும் இத்துறையில் சோதனைகள் செய்துள்ளோம்.

புதுமைப்பித்தன் தம் கவிதையில் புதிய கவிதா சோதனைகள் நடத்தினார். ஆனால் பெரும்பகுதிகள் கலிவெண்பா வாகவே ஒலிக்கின்றன. இச்சோதனையை இப்பொழுது சிலர் தொடர்ந்து செய்வது வரவேற்கத்தக்கது. வெற்றி தோல்வி கவிஞனுக்கு இல்லை.

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””

Comments are closed.