
- வளர்ச்சி
பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ‘காட்டு வாத்து’ புதுக்கவிதைகளின் தொகுப்பான ‘புதுக்குரல்கள்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.
பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்ட சி. கனகசபாபதி புதுக்கவிதை பற்றி ‘எழுத்து’ இதழ்களில் விரிவான கட்டுரைகள் எழுதினார். ‘எழுத்து’ ஐந்தாம் ஆண்டில் (1963) இவை பிரசுரமாயின.
‘காட்டு வாத்து’ தொகுதி பற்றியும் ந.பி. யின் கவிதைத் திறன் பற்றியும் அவர் ‘புது மனிதனுக்குப் பாடும் பழமை வழி வந்த புதுயுகக் கவிஞன்’ என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்று எழுதினார்.
(எழுத்து ஏடு 49)
‘இன்றைய மனக்குரல் வகைக்கு ஏற்ப ஒலிக்கும் புதுக்கவிதைகளின் தொகுப்பை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை எழுத்து 51-வது ஏட்டில் வந்தது.
‘கவிதை கதையாக இருந்திருக்கிறது. வரலாறாக இருந்திருக்கிறது மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை’ வெளியிடும் முயற்சியே புதுக் கவிதை, என்ற ந. பிச்சமூர்த்தியின் கருத்துக்கு விளக்கமும் விரிவுரையுமாக அமைந்திருந்தது கனகசபாபதியின் ஆய்வு.
காலந்தோறும் கேட்கும் குரல் வகை புதியது. ஒரு காலத்துக் குரல் வகை போல் அடுத்த கால, அதற்கு முன் காலக்குரல் வகை இருப்பதில்லை. சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்றவாறு காலப்பாகுபாடு செய்து கொண்டு பார்த்தால் அவ்வப்போது புதுப் புதுக் குரல்வகை கேட்டது அகச்செவியில் படும்.
‘தமிழ்க் கவிதையின் குரல் வகையில் இம்முறையில் அறிய வேண்டியது அவசியம். உள்ளடக்கம் பற்றிய குரல் வகைகளையே இங்கு நான் உரக்கச் சிந்திக்கிறேன். சங்க காலக் கவிதை காதலும் வீரமும் பற்றியே உரைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் காதலுக்குப் பதில் கற்பும், போர் வீரத்திற்குப் பதில் கருணை வீரமும் மனத்துக்கினிய நயத்துடன் கவிதையில் ஒலியலை எழுப்புகின்றன.
‘இவ்வாறு சங்க காலக் கவிதைக்கும் சங்கம் மருவிய காலக் கவிதைக்கும் இடையே குரல்வகையில் வேற்றுமை ஏற்பட்டது ஏன்? சமூக வாழ்வில் கட்டுப்பாடுகள் காலப்போக்கில் ஆட்சிக் கரங்களை நீட்டியதே காரணம் என்று சொல்ல வேண்டும். இந்த ஆதிக் காவியங்களின் காலத்திற்கு முன்பே திருக்குறளில் சங்க காலக் கவிதையில் கேட்காத ஒழுக்க ரீதியின் புதுக்குரல் ஒலித்ததை நாம் இன்றும் கேட்கமுடிகிறது.
ஆதிக் காவிய காலத்தை அடுத்து, மேன் மேலும் சமூகக் கட்டுப்பாடுகள் ஆதிக்கக்கரங்களை நீட்டிய காலத்தில் திருக்குறளைப்போல் சில நீதி நூல்கள் ஒழுக்க நீதிப் புதுக்குரலில் மேலும் உரக்கப் பேசினதை நாம் கேட்கலாம். இக்காலத்தை அடுத்து பக்தி இயக்கக் காலத்தில் பக்திக் கவிதை கடவுளைப் பற்றிய புதுக்குரல் இசைத்தது. அதற்கு முன் கடவுளைப் பற்றிப் பாடல்கள் பாடப்பட்டாலும் இக்காலத்தில் போல உள்ளுணர்வுடன் உண்மை வேகத்துடன் ஆனந்த பாவத்துடன் பாடப் படவில்லை என்பதால் இக்காலத்தின் பக்தி வகையின் குரல் வகை புதியது என்று உணரலாம். இதற்குப் பிந்திய காவிய காலத்தில் கடவுளுக்குப் பதில் கடவுள் தன்மை பற்றி புத்தம் புதுக்குரல் எழுந்ததை இன்றும் நாம் கேட்கிறோம். கம்பன் காவியமே இதற்குச் சான்று. கம்பராமன் மலர்களால் அர்ச்சிக்கப்படும் கடவுளாகத் தோன்றுவதைக் காட்டிலும் கவிதைச் சித்திர மலர்களால் உருவாக்கப்படும் கடவுள் தன்மை குடிவாழும் மனிதனாகக் காண்பதால் இதைத் தெளியலாம். இது அல்லாமல் காவிய காலக் கவிதையின் குரல் வகையில் முன்னை விடவும் சமுதாய பொதுமைக் குரலும் இழைந்துள்ளது என்றும் சொல்ல வேண்டும்.
‘பின்னர் சாத்திர வளர்ச்சிக் காலத்தில் கவிதையின் குரல் வகை மாறியது. மேல் உலக இயல் பற்றிய புதுக்குரலே அது என்று குறிக்கலாம். இவ்வாறே பார்த்துக் கொண்டே வந்தால் சித்தர்கள் காலக் கவிதையில் ஞானக்குரலும், பாரதி கவிதையில் புத்தம் புதியதான தேசமும் விடுதலையும் பற்றிய குரலும், ஒன்றை விட்டு மாறி இன்னொன்றாக ஒலித்ததை நாம் கேட்கலாம். பாரதியின் தேசீயப் புதுக்குரலில் ஆன்ம சக்திக் குரலின் இழைவும் உண்டு. பாரதிக்குப்பின் வாழ்வின் ஒரு புதுக்காலத்தில் இருக்கிறோம்’. இன்றைய புதுக்கவிதையின் குரல் மனத்தின் குரல். இதற்குமுன் என்றைக்குமே மனத்தின் குரல் கவிதையில் கேட்டதில்லை. மேலும் இன்றைய புதுக்கவிதையின் குரலில் மனிதனைப் பற்றியும் கேட்பதை உணரலாம். பிராய்டும் கார்ல்மார்க்ஸும் கொடுத்த கொள்ககைகளே இதற்குக் காரணம். (கனகசபாபதி கட்டுரையிலிருந்து)
இக்காலத்திய மனித மனங்களின் குரல்எப்படி எப்படி இருக்கிறது என்பதையும் விமர்சகர் சி.கனகசபாபதி நன்றாக அளவிட்டுச் சொல்லியிருக்கிறார் அந்தக் கட்டுரையில்.
‘மனத்தை ஊறுகாய் போட்டுப் புளிக்க வைக்கும் காலம் இது. கண்டது கடியதை விரும்பி நிரப்பி மனவீட்டை பாழ்படுத்துவோரும், திறந்த மனம் என்று பேசிக்கொண்டு மூடித்தெரியாதவரும், பரம்படித்துப் பண்படுத்தாத மனம் என்னும் தரிசான பொட்டல் வெளி கொண்டவரும், மனத்தின் அடிக்கல் நட்டுவைக்காமல் மேற்கட்டிடமும் பூச்சும் பெற்று உலா வருவோரும், மனம் திண்டாடித் திகைத்துத் தெருவில் நிற்பவரும் நம்மில் நிறைந்திருக்கக் காலம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம் போன போக்கு மனநோய் கவ்விப் பிடித்திருக்கின்றன. விஞ்ஞான எந்திரத் தொழில் வளர்ச்சி நூற்றாண்டை. நிகழ் நொடி வாழ்வின் நரம்பில் செவ்விதும் அபத்தமும் சுரங்களாக அடுத்தடுத்து ஒலிக்கின்றன. கூர்பற்களுடன் சுழலும் எந்திரச் சக்கரத்தின் இடையே அகப்பட்ட பட்டுப்பூச்சி போல் இந்த நூற்றாண்டு வாழ்வு சிக்கித் தவிக்கிறது. என்ன காரணம் இதற்குச் சொல்லித் தொலைப்பது? பொருளைத் தேடும் முயற்சியிலும் உறவிலும் அருளைத்தேடும் ஆர்வத்திலும் ஆன்ம வேட்டையிலும் கெக்கலிப்புகளும் ஓலங்களும் சீறலும் சறுக்கலும் வெள்ளமிட்டு அடித்துவரும் நிலைதான் காரணம். நோயிலே படுத்துவிட்டது கண்முன்னே நூற்றாண்டு மனிதனின் மனம். இது நோன்பிலே உயிர்ப்பு பெற வேண்டும். சேற்றிலே குழம்பி விட்டான் இம்மனிதன். இவன் திக்கிலே தெளிவு பெறவேண்டும். இப்படி நோயுடன் மருந்தையும் பற்றிய மனத்தின் குரலே தமிழில் புதுக்கவிதையின் குரல். வாழ்வை நையாண்டி செய்யும் எதிர்மறையில் நேசித்துக் குரல்வகை காட்டினாலும் வாழ்வின் ஆக்க உடன்பாட்டில் கலையின் ஒளியைக் காட்டுவதாகும். ஏதேனும் குறித்த தத்துவம் இதற்கு உண்டா என்றால் மனத்தின் தத்துவம் இது தழுவியிருப்பது எனக் கூறலாம். இந்த மனத்தின் தத்துவத்திற்குள் எவ்வளவோ பல அறிவுத் துறைகளின் புதிய பழைய புறநிலைக் கருத்துக்களும் உள் முகப்போக்குவரவும், வேண்டுமானால் உள்ளடங்குதலும் செய்வது உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.’
(எழுத்து 51)
மனித வாழ்வும், சுய அனுபவங்களும் இதர பாதிப்புகளும் ஏற்படுத்துகிற மனப்பதிவுகளையும் கருத்தோட்டங்களையும் கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக எழுதி வந்தவர்களோடு, அவ்வப்போது புதியவர்கள் சிலரும் இம்முயற்சியில் ஆர்வத்தோடு இறங்கினார்கள்.
இவர்களது படைப்புகளுக்கு ‘எழுத்து’ நல்ல ஆதரவு தந்தது; பாராட்டத் தகுந்த, ரசனைக்குரிய, இக்கவிதைகள் பலவற்றையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது இயலாத காரியம் ஆகும்.
என்றாலும் முக்கியமான ஒரு சிலவற்றை அவற்றின் தனித்தன்மைக்காக-எடுத்து எழுதவேண்டியது அவசியமாகிறது.
சுந்தர ராமசாமி எழுதிய ‘காலம்’ (எழுத்து 51) அருமையான கவிதை ஆகும்.
‘மணியின் முள்ளில் காலமில்லை.
காலமோ-’
என்று துவங்கும் அந்தக் கவிதை சிறிது நீளமானதுதான். கருத்தாழமும் நயங்களும் நிறைந்த அக்கவிதையில் காலத்தைப் பற்றி எண்ண ஓட்டம் படிப்படியாக வளர்கிறது. பிற-
மாயை என்றான் சங்கரன்!
அல்ல, மாயையும் அல்ல வென்றான்.
அரவிந்தனோ லீலை என்றான்,
லீலை தானோ என்று கேட்டான்
அறிந்தறிந்து
தத்துவப் பாகனையே கொல்லும்
யானை அது
இவ்வாறு சிந்தித்து உண்மை ஒளியைக் காண முயல்கிறது மனசு.
காலம் என்ற ஒன்று
யாளியின் வாய்க்குள்
விரலுணர
ஓசையெழ உருண்டோடும்
கண்ணுக்குப் படாத
கல் பந்து
குறையாத ஜாடியினின்று
நிறையாத ஜாடிக்குள்
பார்வைக்குத் தெவிட்டாமல்
வில்லாய் வளைந்து விழும்
விழுந்து கொண்டேயிருக்கும்
கட்டித்தேன் பெருக்கு.
தரைக்கே வாராது
காற்றோடு மிதந்தோடும்
பூப்பந்து.
கிணற்றினுள்ளே
கண்ணுக்குப் புலனாகும்
நதியின் பிரவாஹம்.
தேயாததை யெல்லாம்
தேய வைத்து,
தேய்மானம் ஒன்றே
தேயாதது என்று
தேய்த்தும் தேயாது
கோலோச்சும்
தேய்மானத் தத்துவம்,
எனக்கோ,
கடவுள் அளித்த ரஜா,
மரணவூரில்
ஆஜராகி வேலை ஏற்க
யான் பெற்ற
காலாவதி
மணியின் முள்ளில் காலமில்லை
அக்னியைத் தேடி
அலைந்த மனசோ
அடுப்பாய்ப் புகையுது.
பிச்சமூர்த்தி எழுதிய ‘வழித்துணை’ எனும் நெடுங்கவிதை 53 வது ஏட்டில் பிரசுரமாயிற்று. ‘புதுக்கவிதையில் இன்னொரு மைல்கல்’ என்று இதை வரவேற்று ‘எழுத்து’ அதே இதழில் தலையங்கம் தீட்டியுள்ளது. ‘அறிவு வார்ப்பான புதுரகப் படைப்பு’ என்று சி.கனகசபாபதி இதை விவரித்தும் விமர்சித்தும் தனிக்கட்டுரை எழுதினார். (எழுத்து 52)
பிக்ஷு வின் 1960 காலக் கவிதைகளை ‘இரண்டாவது கட்டக்கவிதைகள்’ என்று மொத்தமாக, தனியாக, ஆராய வேண்டும் என, அவரது முதல் கட்டக் கவிதைகள், (1934-1964) பற்றி எழுதியபோதே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, ந.பி.யின் கவிதைகள் பற்றிய என் எண்ணங்களை இத்தொடரில் அங்கங்கே நான் குறிப்பிடவில்லை. ‘வழித்துணை’ பற்றியும் அப்படியே.
புதிதாகக் கவிதை எழுத முற்பட்டவர்களில் நா.வெங்கட்ராமன் புதிய எண்ணங்களை தம் படைப்புகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இயற்கைக் காட்சிகளோடு விஞ்ஞான உண்மைகளையும் கவிதைப் பொருளாக்க வேண்டும் எனும் புதுக்கவிஞர்களின் துடிப்பு அவருக்கு உண்டு என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. ‘பிரசவம்’ என்ற கவிதையை ஒரு உதாரணமாகக் கூறலாம்.
ரவிக்கையின் சூடு
கடல் நீரைப் புகையாக்கி விண்ணேற்ற
காற்றோட்ட,
மலை மறிக்க
மழை பெய்யும்
மலை உச்சி மழை நீரை
புவி ஈர்க்க
அது
பேரருவியாகி
கொட்டும்: கொட்டும்
அதனடியில் குளிப்பதும், மகிழ்வதும்
நான் நீ மட்டுமா?
விஞ்ஞான மருமகள்
டைனமோப் பெண்ணாளும்
அருவியில் குளிக்கின்றாள்.
‘குளிக்காமல்’ கருவுறுதல்
குவலயத்தில் கண்டதுண்டு,
மருமகளோ
குளித்துக் கருவுறுகின்றாள்.
வட்ட வரிசைப் பற்கள்
புளி மாங்காய் கடிக்கவில்லை,
பச்சரிசி மெல்லவில்லை
வயிற்றில் கனக்கவில்லை,
ஆனாலும்
ஓர் கணத்துள்
பெற்றெடுத்து விடுகின்றாள்-
ஏழு
பாலுக் கழுதால்
அவளது
தாமிரக்காம்பில்
மின்பால் சுரக்கும்
டைனமோப் பெண்ணாள்
தன் காந்தக் கண்களினால்
குழந்தைகளை நோக்க,
புத்துலகைக் காண்கின்றாள்.
அனல் கக்கும்
ஒரு குழந்தை
ஒலி பரப்பும்
ஒரு குழந்தை
ஒலி வீசும்
ஒரு குழந்தை
ஒலி ஒளியைப்
படமாக்கும் இரட்டையர்கள்.
நிலம் நடுங்க
தாள் பதியும்
மர்மப்பிள்ளை?
ஓயாமல் காலத்தை
ஓட்டிக் காட்டும்
முள்ளுக்கைப் பிள்ளை
பிள்ளை பெற்ற பெருமையிலே
இருந்த பெண்ணாள்
பெயர் வைக்க வந்த
விஞ்ஞான சாஸ்திரியைப்
பார்த்தாளா?
நானறியேன்.
(எழுத்து 53)
நல்முத்து பற்றிய ‘கண்’ என்ற கவிதையும் ரசமானதுதான். நல்முத்து ‘ஆழ்கடல் வயிறு-அவனிக்களித்த-அற்புதப் புதையலோ?’ கடலின் சிப்பிக் கண்ணுள் தூசோ எதுவோ நுழைந்ததனால் சேர்ந்த துன்பச் சேமிப்போ, என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர்கிறது-
இல்லை இல்லை
துன்பம் எங்கேனும்
விண்ணில் போய் மின்னி
மாந்தர் கை சேர்ந்து
அரம்பையர் விரும்பும்
அணிகலனாமா?
விலை மலையாய்ப் போமா?
கண் தான் காட்சியா?
இல்லா விட்டால்?
நல்முத்தும்
வர்ணம் பூசின வெறும் எலும்பு
சுண்ணாம்பு பாஸ்பேட்
ஸோடா கார்பனேட் தானா?
(எழுத்து 54)
விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா. வெங்கட்ராமனின் ‘அந்தி’ எனும் படைப்பு.
துயிலும் முன் பரிதி
தூக்கி யெறிந்த
வெள்ளை வெற்றிலைக் காம்புகளை
ஆகாசத் தூசுக்கும்பல்
பொறுக்கி
மென்று
உமிழ்ந்த
எச்சில்
(எழுத்து 65)
கவிதையில் காலாகாலமாகக் கையாளப்பட்டு நைந்து போன விஷயத்துக்குக் கூடப் புதுமை சேர்க்க இயலுமா என்று புதுக்கவிதை சோதனை செய்யத் தயங்கவில்லை; நிலவு இம்முயற்சிக்கும் கை கொடுக்கிறது.
‘கிணற்றில் விழுந்த நிலவு’ என.எஸ்.வைதீஸ்வரன் எழுதியதையும் நிலவை கற்புக்கரசியாகக் கண்டும், நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் தி.சோ. வேணுகோபாலன் ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வேறு கோணங்களிலும் நிலவைப் பார்க்கிறார்கள் சிலர்.
விட்டெறிந்த இட்டலியோ
கட்டிவைத்த பழஞ்சோறோ
கொட்டி விட்ட கப் தயிரோ
சுட்டு வைத்த அப்பந் தானோ?
என்ன இழவேயானாலும்
எட்ட இருந்து சிமிட்டுது கண்
கிட்ட வந்து எட்ட வில்லை
பாடுபட்ட பாட்டாளி
கொட்டாவி விடுகின்றேன்
ஆவ்…….
உறக்கம் வருது பசிமறக்கும்.
இ. அண்ணாமலை என்பவரின் நோக்கு இது. (எழுத்து 66-67) சி. மணி காணும் தோற்றம் வேறு ரகமானது.
நல்ல பெண்ணடி நீ!
முகத்திரை இழுத்து விட
இரண்டு வாரம்
அதை எடுத்து விட
இரண்டு வாரம்
இதை விட்டால் வேறு
வேலையே இல்லையா உனக்கு?
என்று நிலவைப் பார்த்துக் கேட்கிறார் அவர். (எழுத்து 68)
அதே நிலவை சு.சங்கரசுப்ரமண்யன் வேறுவிதமாகப் பார்க்கிறார். (எ.69)
அவளோ
சினிமாக்காரி
உருவம் காட்டி
ஊரை மயக்க
ஒளி பாய்ச்சி
குளோசப்பில்
நிறுத்துகிறார் யாரோ.
அப்படியே
இருந்து விட்டாலோ
முகப்பருவும்
மேக்கப்பை
மீறிவிடும்.
எனவே தான்
ஒளி குறைந்தது
நிழல் பூசி
ஒளிக்கின்றார்
காமிரா வேலைக்கு
காரிகையா வெறுப்பு!
சி. மணியின் ‘கவிதை நினைவுகள்’ குறிப்பிடப் பெறவேண்டிய மற்றொரு அருமையான கவிதை. பரிகாசமும், சிந்திக்க வைக்கும் கருத்தாழமும் கொண்ட படைப்பு; 4 பகுதிகள் கொண்டது. (எ.61)
இருக்கின்ற பாலோ
இருவருக்குத்தான்
அளவோ குறையாது மூவர்
அருந்த வேண்டுமென்றால்
நீரைக் கொட்டி
சரிக்கட்டுவாள்.
பாலின் சுவை கெடுப்பாள்
அளவைப் பற்றிய கவலை
இல்லையென்றால்
நல்ல பாலைத் தருவாள்.
2வது பகுதியில், ‘மரபின் தூய பருத்திச் சட்டை, கவர்ச்சியான தோற்றத்துடன், களிப்பூட்டும் பலவண்ணங்களிலும் கண்கவரும் பலவகைகளிலும் கிடைக்கும்-நம்பிக்கையான பெருங்கடைகளில் என்பதனால் பலரும் ‘அளவெடுத்து’ சட்டையையே வாங்கினர். சிலருக்கு அது அமைந்தது. சிலருக்குப் பொருந்தவில்லை. அநேகருக்கு எப்படி எப்படியோ இருந்தது என்றாலும் மரபு முத்திரையில் மயங்கி அதை வாங்குவதிலே பலரும் ஆர்வமாக இருந்தார்கள். சிலர் மட்டும் அது சரியாக இல்லையெனத் தெரிந்ததும், வேண்டிய துணியை வாங்கிக் கொண்டுபோய். ‘உடலுக்குத் தக்கபடி, தைத்தார் சட்டை.’
3
ஓங்கு திரைப் பெருங்கட லுலகத்துமாந்தர்
வீங்குமுலை வருத்திடை மகளிரை மருவுவார்
இலங்குஞ் சோளிசேலை குழல் தமைக் கண்டதும்
மனங்கொடா ரோரிழி அலியிட மன்றோ?
சிறப்பான யாப்பிட்ட பனுவ லென்னும்
விரகஞ்சேர் வானின் மங்கை யிருக்க
யாப்பற்ற புதுக்கவிதையை யெப்படி
கைப்பற்ற துணிந்தா ரைம்புல னொப்பி?
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி
முகிலுடைத்த மாமழை
முறட்டுத் தோலுரித்த பலாச்சுளை
வறட்டுக் கோஷா எறிந்த மங்கை.
யாப்பற்ற கவிதை
அருவருக்கும் அலியல்ல;
மார்கழியின் மொட்டிரவில்
தென்றல் தரும் சூடுபோக்க
வெண்ணிலவின் பயன்துய்க்க;
உடை கலைந்த ஒரு தலைவி
இயற்கையெழில் கொட்டியிருக்க
செயற்கை யணி வேண்டாமென்று
ஒப்பனையை நீக்கிவிட்ட
வனப்பொளிர் கனவுப் பெண்;
கால் குழலாக எல்லாம் கவர்ந்து எழில் கனிய வீங்கி
ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பணைந்து வீங்கும்
வார்க்குலம் அறுந்த கொம்பை வரிமுலை
ஐயா இது.
4
அன்று மனிக்கதவை
தாயர் அடைப்பவும்
மகளிர் திறப்பவும்
செய்தார் மாறி மாறி;
என்றும்
புலவர் அடைப்ப
கவிஞர் திறப்பார்.
சி. மணி சிறியசிறிய -ஆயினும் நயங்கள் நிறைந்த- கவிதைகள் அநேகம் எழுதுயிருக்கிறார். 1963 -64 வருடங்களில். எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.
வெளுத்தது நான்கு
துவைக்க
வெளுத்தது
துணி.
காதலன்
சுவைக்க
வெளுத்தது
இதழ்!
ஞாயிறு
வெறிக்க
வெளுத்தது
நிலம்
வாழ்வு
நெறிக்க
வெளுத்தது
முடி.
வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ்
