திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

  1. மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. 61

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும். 63

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக் கூடியவை.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.

  1. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக்
குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69

நல்ல மகனைக் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல். 70

“ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு”, என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்”

Comments are closed.