நெல்லை க.சோமசுந்தரி/சுட்ட நெருப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

மகிழ்ச்சியாய் நட்டு வைத்த
மஞ்சணத்தி மரம்
வேலியிட்டு வெகுதூரத்தில்
பூத்து நிற்கும் பூவில் தெரிகிறது?
மரணித்த அப்பா உயிர்ப்பாய்…
நேசித்த தோட்டத்தின் அடையாளம்!

காலச் சூழலில் விற்றுக் கடந்த
கிராமத்து வாசம்!
சிறுபிராயத்து ஞாபகமாய்
மனதில் எட்டிப் பார்க்கிறது!

ஒவ்வொரு மாற்றத்திலும்
கனமாய் வெளிப்படும் அழிக்க முடியாத
இயலாமையின் சில சுவடுகள்
நமக்குள் அழுத்தமாய் எதையோ…
உணர்த்தியபடி நகர்ந்து கொண்டே
இருக்கின்றன!

உடைந்த கண்ணாடி துண்டுகளின்
பிம்பங்களைச் சரிப்படுத்தி
ஒட்ட வைக்க முயலும் போதெல்லாம்…
நிதர்சனங்கள் என்றுமே
சுட்ட நெருப்பை மட்டுமே
ஜுவாலையாய் பிரதிபலிக்கின்றன?

ஒவ்வொரு முறையும் மீள்பார்வையின்
மறுபதிப்பு என்பது
காரணங்கள் அற்ற
புரிபடாத?…
இவ்வாழ்வில்
நினைவின் படிமங்களில் எந்த
மாற்றத்தை நமக்குள்
தந்து செல்கின்றன