பிரமிள்/சாமுண்டி

“அயோத்தி, அத்தினாபுரம், காவிரி பூம்புகார், சைதாப்பேட்டை… ரோட்டுக்கு கீழே இன்னொரு ரோடு. மேலே மனுசன் போறான் வாறான். கீழே கொதக்குப்புதக்குனு பிராய்டு வீட்டு அன்கான்ஷஸ் மைன்டாட்டம் நகர்ந்துகிட்டு வருது இம்மாம் பெரிய அகலத்துல மனுசன் விட்டுக் கழிச்ச சாக்கடை. சிந்துவெளி முத்திரை, நாலுவேதம், ஆறு சாஸ்த்திரம், அறுவத்தினாலு கலை, ஆனையேத்தம், குதிரை யேத்தம், ஒரு அம்பை உட்டா அது நூறு ஆயிரமா மல்ட்டிப்ளை பண்ணி கூடாகூடமா நொய்யினு சாக்கடைத் தேக்கத்துலேருந்து கிளம்பற கொசுக்களாட்டம் வர்ரப்போ அதன் மறைவிலே கபகபன்னு ஒளிச்சுவாற பிரம்மாஸ்த்ரம், நாராயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம், இதெல்லாம் புளுகுடாங்கற உப்பாநிஷத்து, திரிபிடக்கு, அடியைப் புடிச்சு பாடின சங்கம் பொய்ட்ரி, மனுசனுக்கு உதவாத மனுதர்மம், மாமனுக்கேத்த கீதை, மச்சிக்கேத்த குறளு, நாடியிலே சோசியம், உள்வீட்டு ஏட்டுச்சொரக்காயில் ஜனக்கூட்டத்தின் ஜாதகக்குறிப்பு, எதுகை மோனை, ஏண்டா இதுன்ன புதுக்கவிதை, வெட்டடா தட்டடாங்கற அரிவா சுத்தி, கத்திக்கிட்டு தர்மத்தை அறுக்கிற சக்கரம், அஸ்தமிக்கிற சமயத்துலே போட்டோவுக்கு போஸ் குடுத்த உதய சூரியன்… எல்லாமே கரகாட்டம் போட்டு பாதாளத்துலே ஸ்லோ மோஷனில் யுகாந்திர யாத்ரை வருதுடா. புள்ளைகுட்டி இல்லாத புணர்ச்சி விந்திலேருந்து புஸ்வாணப் புரட்சி வரைக்கும் அந்தப் பாதாளக்குழாயில் ஒண்ணடி மண்ணடி. எந்த அவதாரமும் எந்த யுகத்து தர்மாவேசப் புரட்சி சாஸ்த்ரமும் சாதிக்காத சமத்துவம் நிலவுதுடா அந்தக் குழாயிலே… அதுக்குள்ளதாண்டா எனக்கு நேத்து டூட்டி… பீ டூட்டி!’ என்றான் சாமுண்டி. தண்ணி போட்டிருக்கிறான்.
இந்த யூகத்தினால்தான் நான் ஒன்றும் எதிர்வாக்குத் தரவில்லை. என்னால் தரமுடியாது என்பது ஒரு பக்கம் இருக்க, “என்னடா ரெண்டு நாளா ஆளக் காணம்?’ என்ற என் அனுதாபக் கேள்விக்கு அவன் தந்த இந்தத் தோரணையான பதிலைக் கேட்டு, “பதிலா இது?’ என்று நான் கேட்டிருக்கவேண்டியது, கேட்கவில்லை.
காக்கி பேண்ட் ஜிப்பைச் சேர்த்து மேல்வாக்காக இழுத்து கிளிப்பை அழுத்திவிட்டு என் செய்யூரிட்டி வேலைக்குரிய டியூனிக்கைக் கொக்கியில் இருந்து எடுத்து உதறினேன். நான் வேலை செய்யும் சுக்குணியப்பன் அண்ட் சன்ஸ் கோடவுன்கார பாலசுந்தரத்தின் தயவில் அருகாமையிலேயே கிடைத்த ஒரு ரூம், ஒரு கிச்சன், ஒரு வராந்தாப் பொந்து அது. வராந்தாவில் சாமுண்டி நின்று இடது கையை ரூம் வாசற்படியில் முட்டுக் கொடுத்து வலது காலை ஊன்றி இடது காலை கிருஷ்ணாவதார முறையில் மடக்கி கால் விரல்களை வலது பாதத்துக்கு வலப் பக்கமாக ஊன்றி வலது கையை இடுப்பில் வைத்தபடி, “அய்யப்பா என் கோவணம் புதுசுப்பா,’ என்றான்.
டூட்டி முடிந்ததும் குளித்துவிட்டுக் கோவணத்தை மாற்றுகிற தன்னுடைய சுத்த வஸ்த்ரானுஸ்டானத்தை அறிவிக்கிறானாம். அதற்காக வெறும் கோவணதாரியாக மட்டுமே இந்தச் சென்னை மாநகரத் தெருவில் பஸ் ஏறாமல் எந்த பஸ்காரன் ஏறவிடுவான்? நடையாக நடந்து இப்படி விஸிட் வரவேண்டுமா? கேட்கப்பட்ட என் பழம்பெரும் கேள்வி! அப்பப்போ நான் கேட்கும்போது தத்துவக் கோணம், அரசியல் கோட்பாட்டுக் கோணம், அழகியல் கோணம், போதாததுக்கு இதை எல்லாம் மிஞ்சிய மருத்துவக் கோணத்தில் எல்லாம் இருந்து தனது கோவணத்தை நியாயப்படுத்திவிடுவான் சாமுண்டி. கேட்கிறவன் அறிவை மதிக்கிறவனாக இருந்தால் உடனே அவுத்துக் போட்டு அவனைப்போல் நிற்கவேண்டும். அவனுடன் சிறுபிராயத்திலிருந்து பழகிய தோஷம். நான் ஒரு புக் ரீடர். அவ்வளவு தான். அறிவை இவ்வளவு தூரம் மதிக்கிறது அது இது எல்லாம் வராது நல்லவேளையாக.
பாலசுந்தரம் தமது கோடவுனில் சரக்கு மேற்பார்வைக்கும் கணக்கர் வேலைக்கும் அவனைக் கேட்டார். “செக்யூரிட்டியாகவாவது இரு, படிச்சவன் நீ!’ என்றார். அவன் எல்லாவிதமான மரியாதைக்கார வேலைகளையும் ஒரு வெறிச்சிரிப்புடன் மறுத்துவிட்டவன். அந்த வெறியின் பின் நின்றது ஒரு வெறுமை. அதை நானறிவேன். ரிடையராகி விட்ட எங்களூர் தமிழ் வாத்யாரான வி.பி.எஸ். மெய்யன் அறிவார். அறிவார் என்றாலும் அதை அறிந்த கணத்திலிருந்து அவருக்கு அறிநிலை இல்லை. உயிர்மட்டும் ஒரு நகைச்சுவைத் துணுக்கிற்குள் சிரிப்பை எதிர்பார்த்து நிற்கும் கருப்பொருளாக இன்னும் இருந்து கொண்டிருந்தது.
நான் சாமுண்டியின் கோவணத்தைப் பார்க்காமல் இருக்க முயன்ற படி, அவனது கண்களையும் சந்திக்க தைரியம் இல்லாமல், தங்கப் பெயின்ட் பூசின பிளாஸ்டிக் பட்டன்களை டியூனிக்கில் மாட்டத் தொடங்கினேன்.
“சொல்லுடாலே, அகர முதல…’ என்ற தமிழ் வாத்யார் வி.பி.எஸ். மெய்யனின் பிரம்பு தேவப்புள்ளைகள், பாப்பாரப்புள்ளைகள், புள்ளைப் புள்ளைகளின் தலைகளுக்கு மேலே ஏரோப்ளேன் மாதிரிக் கிளம்பி ஒட்டாமத்தட்டாம தூரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்ட அரிசனப்பசங்களுக்குள் குறிவைத்து சாமுண்டியைக் காட்டியது.
என்னருகே என்னைப்போல முழங்கால்வரை கட்டின முண்டுடன் உட்கார்ந்திருந்த அவன் விசுக் என்று எழும்பி, “பகாசுர முதலை எல்லாம் சாதிபகவன் சார்,’ என்றான். புரிந்த எனக்கு “பகீர்’ என்றது. மற்றப் பசங்கள் எவருக்குமே புரிந்த குறிப்பு இல்லை. கண்மண் தெரியாமல் சாமுண்டிக்கு பிரம்படி தரப்போகிறார் வாத்யார். அந்த அடி பரவி எங்களுக்கும் விழும் என்றிருந்த என்னை வியப்பில் ஆழ்த்தியது மெய்யனின் கம்யூனிஸத்தனமான “கெக்கெக்கே’ சிரிப்பு.
ஏற்கெனவே “தமிழ் வாத்யார் ரொம்ப நல்லவாள்றா’ என்று ஒலிச்சேஷ்டையுடன் சாமுண்டி கூறியிருந்ததின் தாத்பர்யம் அப்போது தான் எனக்குப் புரிந்தது. இரண்டு மூன்று நாட்கள் நான் ஸ்கூல் கட் என்பதால் இது முன்பே எனக்குத் தெரியவில்லை.
“யாப்பிலக்கணம் தெரியாத மண்டு. சார் என்பதை நீக்கி “”முதற்றே யுலகு” என்பதைச் சேர்க்கவேண்டும். எங்கே நீ சொல்லு!’ என் முன்வரிசைச் சூட்டிகைப் புள்ளைப்புள்ளை ஒன்றிடம் கேட்கிறார் மெய்யன். அது கோலாகலமாக, “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு,’ என்று ஒப்பிக்கும்போதே, இப்படிக்கூட ஒரு முட்டாள் ஜன்மமா என்ற பாவனையில் கைகாட்டி, “வெவ்வெவ், வெவ்வே’ என்கிறார் மெய்யன். எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.
சாமுண்டி என் சட்டையில்லாத முதுகில் சதக் என்று கிள்ளினான். எனக்கு பைத்யகார ஆஸ்பத்திரி என்றால் எப்படி இருக்கும் என்றொரு லேசான தெளிவு ஏற்பட்டதே தவிர ஒன்றும் புரியலை. “பொர்ச்சிடா!’ என்றான் சாமுண்டி. முதன்முதலாக அப்போதுதான் அந்தச் சொல் என் அறிவிற்குள் விழுகிறது.
“புரட்சி வருதுடா புள்ளைங்களா!’ என்றார் மெய்யன். என்றபடி இரண்டு கைகளையும் அகல விரித்தார். முதலில் கொடுத்த சிலுவைப் போஸ் திகுதிகுவென்று எரியும் நெருப்பு போஸ் ஆக மேல்நோக்கி ஆடியது. வேஷ்டிக்கட்டு தடுத்திருக்காவிட்டால் அப்படியே ஒரு நடராஜ் போஸ்கூட கொடுத்திருப்பார் என்பது என் அந்தரங்கக் கருத்து. தொடர்ந்து “ஹய்யா’ என்று ஓடிவந்தார்கள் கார்ல் மார்க்ஸும் அம்பேத்கரும், பெரியார் ராமாசாமி “உய் உய்’னு விஸில் அடிக்கிறாரு. பொல்லுக்கம்பை ஊனிக்கிட்டு “நானும் நானும்’ என்று மகாத்மா காந்தியாரு. “சாதிமத சேதி சரித்திரத்தின் பேதி,’ என்றார் மெய்யன். அப்புறம் ஒரு எல்லையில்லாத முக்கோணத்துவம், அதை இப்படி பிளாக்போர்டில் எழுதிக் காட்டினார்.

(இங்கே ஒரு வரைபடம் வரும்)

தத்துவம் புரியாவிட்டாலும் முக்கோணங்களின் டிசைன் பிடித்திருந்தது. சிலேட்டுகளில் எழுதிக்கொண்டோம் தாறுமாறாய்.
கல்வீட்டில் வாழக்கூடாது. ஊர்க்கோவிலுக்குள் போகக்கூடாது. வேதசாஸ்திரம் அனுஷ்டானம் கிடையாது. சொம்பு, பட்டு, நெய் ஏதும் தொடப்படாது. ஜாதிக்காரன் கண்ணிலேயே படப்படாது. ஸ்கூலுக்குப் போனாலும் தனிப்பானைத் தண்ணிதான். இதெல்லாம் நியாய அநியாயக்கோணம் ஒன்றிலிருந்து எங்களுக்குக் காட்டப் பட்டாலும் கார்ல் மார்க்ஸின் சுரண்டல் தத்துவம் இல்லாவிட்டால் “ஏன்’? என்பது புரிந்திராது. எனவே, “காரில மார்க்ஸ் வாராரு’ என்ற ஒரு தினுசான சுலோகத்தை சாமுண்டி உருவாக்கினான். காரணம் பசங்களான எங்களுக்கு கார் என்றால் கண்கொள்ளாக் காட்சி.
குளத்து மேட்டில் போயிருந்து ஆரும் காணாமல் கெட்ட வார்த்தைகளைக் கத்தி விழுந்து விழுந்து சிரித்த சாமுண்டியும் நானும், “காரில மார்க்ஸு வராருடா புள்ளைங்களா!’ என்பதையும் சேர்த்துக் கத்தினோம். குட்டிப்பசங்களுக்கு எங்கள் சுலோகங்கள் அத்துபடியாக வில்லை. ஆனாலும் உற்சாகமாய், “காரல் மாரல்’ என்று கத்திக் கொண்டு சாமுண்டிக்குப் பின்னால் ஓடினார்கள். இப்போதும் எங்கள் சேரியில் சாமுண்டியை, “காரல் மாரல்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
குடிசையின் வளைக்கம்புகளில் செருகப்பட்டு ஓலைக்கருப்பு ஏறிய புத்தகங்கள், ஒன்று இரண்டு பத்து என்று சாமுண்டியிடம் சேர்வதை அப்போதே கண்டுகண்டோன். சாமுண்டி மீது குறிவைத்த வி.பி.எஸ். மெய்யன் கொடுத்த புத்தகங்கள் அவை.
ஒருநாள் மெய்யன், “என்னடா உங்களுக்குள்ளேயே ஜாதிக்குள்ளே ஜாதி?’ என்று கேட்டார். நாங்கள் பரபரவென்று முழித்தோம். “பறையர் பள்ளர், தோட்டி, அருந்ததியர், ஆதிதிராவிடர் எல்லாருமே தீண்டாமைக் குள்ளே. ஆனால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கலியாணம் வாடிக்கையிலே, அப்புறம் எங்கனடா வரும் புரட்சி?’ என்று கூச்சல் போட்டார்.
இதற்கு ஒரு பின்னணி உண்டு. மெய்யன் தமது செல்வாக்கு சொல்வாக்கு இரண்டையும் பின்னி, வேறு சில ஆசிரியர்கள், உள்ளூர் அரசியல்வாதப் புள்ளிகள் ஆகியோரைப் பிணைத்து, “பொதுப் பானைத் தண்ணீர் புரட்சி’ ஒன்றைக் கொண்டுவர முயன்றார். கூட்டம் போட்டபோது பல கைகள் தட்டப்பட்டாலும், ஜாதீயப் பிதாமகர்கள் தீண்டப்படாதவர்களுக்குள் இருந்த வேறுபாடுகளைப் பயன்படுத்தி மெய்யனை முறியடித்து விட்டார்கள். ஆபரேஷன் சக்ஸஸ், நோயாளி குளோஸ். அதாவது ஸ்கூலில் அடுத்த நாள் பொதுப்பானையை மெய்யன் கொண்டு வந்து வைத்தபோது, பிரின்ஸிபால் சில தீண்டப் படாத வகுப்புப் பிரதிநிதிகளை முன்வைத்து, “இவங்களெல்லாம் இத ஒத்துக்கிட்டா செய்யுங்க.’ என்றார். அவர்கள், “ஒங்கிளுக்கென்ன சாமி, உதைபடுறது நாங்கல்ல!’ என்றார்கள். “உதைச்சா திருப்பி உதைங்கடா!’ என்று சொல்லக்கூடிய மெய்யன் திடுக்கிட்டார். “நேத்தெக்கல்லாம் ஒத்துக்கிட்டீங்களே?’ என்றார் ஹீனஸ்வரமாக. “அது நாங்கல்லை சாமி. அது வேறு சாதி அரிசனங்க. நாங்க வேற சாதி அரிசனங்க.’
“காந்திகூட பப்ளிசிட்டிக்காக ஒண்ணு ரெண்டு தவிர மற்றபடி ஆரும் போகாம மூடிக்கிடந்த கோவிலுக்குள்ளதான் அரிசனங்களுக்கு ஆலயப்பிரவேசம் நடத்தினாரு,’ என்றார் பிரின்ஸிபால். “இதெல்லாம் தேவையான ஷோ தான் மிஸ்டர் பொய்சொல்லா மெய்யன். ஆனால் பிராக்டிகல் இல்லே. காந்தியான காந்தியே புரிஞ்சுகிட்ட விஷயம் இது.’
அருகே வரிசையாக நின்ற பசங்களுக்கு அன்றுதான் மெய்யனின் ஃபுல் நேம், பொய்சொல்லா மெய்யன் என்று தெரிந்து. அசத்தல் பேருடா என்று கிசுகிசுத்தான் சாமுண்டி.
பிஞ்சுகளான எங்களுக்கு நாட்டகத்தின் சமூக வக்ரம், அதன் இரும்புத்தனமான மூர்க்கம் எத்தகையது என்று புலனாகவில்லை. மிஸ்டர் பொய்சொல்லா மெய்யன் கிளாஸ் ரூம்களில் சொல்ல விரும்புகிறதைச் சொல்லலாம். ஆனால் அரிசனப்பசங்களுக்குத் தனிப்பானைத் தண்ணிதான் என்று முடிவாயிற்று.
ஓரிரு நாட்களுக்கு பின்பு கணக்கு வாத்யார் சுந்தரநாதன், “அன்னிக்கு நீங்க பொதுப்பானைப் புரட்சிக் கூட்டத்தில் பேசினது, ஆஹா! இலக்கியம்னா இலக்கியம், கல்ச்சர்னா கல்ச்சர்!’ என்றதும் மெய்யன் “சீ’ த்தூ! மனுசனாடா நீ!’ என்று காறித் துப்பவும் கைகலக்காத குறையாக இருவருக்கும் சண்டை. மெய்யன், “டேய், சுந்தரசாமி அந்தரநாதா, உன் மண்டைக்குள்ளே இருக்கிறது மனுசத்தனம் இல்லாத இலக்கியப் பு…’ என்று முடிவாகக் கத்தினார். இதன் தாத்பர்யம் சாமுண்டிக்கும் எனக்கும் பரிபூர்ணமாகப் புரியா விட்டாலும் எங்கள் குளத்துமேட்டுக் கெட்டவார்த்தைக் கட்சியில் பொய்சொல்லா மெய்யனும் இருக்கிறார் என்றொரு குஷி.
இங்கிலீசும் தமிழுமாய் நிறைய கட்சிகளின் பிரசுரங்களைப் படித்தல், எழுதிப் பார்த்தல் எல்லாம் இருந்தாலும் முறையான கல்விச்சாலைப் படிப்பு ஏறத்தாழ எஸ்.எஸ்.எல்.சிக்கும் முன்பே சாமுண்டிக்கு நின்றுவிட்டது. எனக்கு மிலிட்டரி ஆர்வம். ஒரு தடவை இதற்காக மெட்ராசுக்கு ஓடிப்போய் வயது போதாது என்று பத்திரமாகத் திரும்பி வந்துவிட்டேன்.
புத்தகப் படிப்பை விடாவிட்டாலும் கிணற்றில் தூர் எடுக்கும் வேலையில் சாமுண்டி நிபுணன் ஆகிவிட்டான். கிணறுகளுக்குள் தண்ணீரைக் கொண்டுவரும் ஊற்றுக்கள் அபூர்வமாய் சில பாதாளக் குகைகள் என்று அவன் ஏதோ இங்கிலீஷில் படித்து வைத்திருந்தான். ஒருநாள் சரியாக ஊறாத ஒரு பாறை ஊற்றின் தூர் அடைப்பை உடைத்து உள்ளே போனவன் சுமார் ஐந்து நிமிஷங்களாக வெளியே வரவில்லை. திடீரென்று ஊற்றிலிருந்து நீர் குபுக் என்று வந்தது. கூடவே குத்துக்கம்பை இரண்டு கைகளிலும் பிடித்தபடி கால்கள் முன்னாடியும் தலை பின்னாடியுமாக சாமுண்டி வெளியே வந்து கிடந்தான். பிரக்ஞை யில்லாமல் கிணற்றுக்கு வெளியே கொண்டுவந்து போடப்பட்டதுமே நல்ல காற்றில் அவனுக்கு பிரக்ஞை வந்துவிட்டது.
அவன் செய்தது முரட்டு வேலை என்ற என் விமர்சனத்துக்கு பதில் சொல்லவோ ஏதோ நினைத்தவனாக என்னைப் பார்த்த சாமுண்டி, “இது மூச்சு. உள் மூச்சு. உனக்குப் புரியாதுடா அய்யா அப்பா,’ என்றான்.
“என்னமோ படித்துத் தொலைத்துவிட்டுப் பண்ணிப் பார்த்திருக்கிறாய்’ என்று கத்தினேன்.
“ஒரு பீடி இருந்தாக் குடு,’ என்றான். நம்ப உலகத்தில் தான் இருக்கிறான் என்று பீடிக்கட்டை எடுத்துக் கொடுத்தபோது நான் ஏமாந்துவிட்டேன். பேச்சின் திசையை சாமுண்டி மாற்றிவிட்டான்.

  • * *
    ஏற்கனவே ஒரு நைட் வாட்ச்மேன் வேலைக்கு நம்பகமான ஆளைத் தேடி வந்தவர்களுடன், என்னைக் கூப்பிட்டு, மாற்றலாகிப் போய் விட்ட மெய்யனின் நண்பர்கள் சிலர் பேசினார்கள். வேலை மெட்ராஸில். சாமுண்டி மறுத்துவிட்டதால்தான் எனக்கு வேலை கிடைத்தது.
    “ஜாதி என்ன?’ என்ற பேச்சு வந்தபோது, “உங்களுக்கு எது வேணும் ஜாதியா நம்பிக்கையா?’ என்றார்கள் மெய்யனின் ஆட்கள். வந்தவர்களுக்கு இந்தப் பேச்சு பிடிக்கவில்லை என்பது “டெம்பரவரி வேலைதான்’ என்ற அவர்களுடைய முன்பின் முரணான பேச்சில் தெரிந்தது. பஸ் மாறி ரயில் ஏறியபோது, ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி குஜராத்தில் தீபாவளியிலோ திருநாளிலோ ஜாதிக்காரர்களின் முன்னால் சங்கீதமாக ஒரு ஹரிஜன் பாடிவிட்டான் என்று சேரி சேரியாகப் பூந்து அடித்து எரித்து விரட்டிய செய்தி, சிலர் பேச்சில் அடிபட்டுக்கொண்டிருந்தது.
    ஒரு கண்ணாடிக்காரர், “காந்தி பிறந்த மாநிலம் அது,’ என்றார். “அடுத்த ஜன்மம் இருப்பது உண்மை என்றால் தாம் ஒரு ஹரிஜனமாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாராம். அப்படிப் பிறந்திருக்கக்கூடிய காந்திக்கும் செமத்தியாக கொடுத்திருக்கிறான்கள்.’
    சக பயணிகளுக்கு இந்த டைப் பேச்சு பிடிக்கவில்லையோ புரிய வில்லை. ஏதோ ரயில் கடகடப்புக்குள் ஒரு கமுக்கமான மௌனம். ஜன்னலருகே உட்கார்ந்திருந்த நான் அவரை, “யார்ரா இவன்?’ என்கிற மாதிரிப் பார்த்தேன். எதிர்ப்பலகையில் நடுவே உட்கார்ந்திருந்து என்னைத் தாண்டி ஜன்னலருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்த அவரது கண்ணாடியில், வெளியே உதயமாகிவிட்ட பூரணநிலவின் வட்டம். விடமாட்டார் போலிருந்தது. “எல்லாவிதமான புரட்சிகளும் இதே விதமாகத்தான் போலிருந்தது. எல்லாவிதமான புரட்சிகளும் இதே விதமாகத்தான் முடிகின்றன,’ என்றார் இலக்கண சுத்தமாய். “ஜே. கிருஷ்ணமூர்த்தி அடையாறில் தாம் நடக்கிற பாதையில் ஏதும் குப்பை கிடந்தால் அதை சிரத்தையோடு எடுத்துக் குப்பைத்தொட்டியில் போடுவார். நான் பார்த்திருக்கிறேன். அவரை ஒரு உலக ரட்சகராகக் கண்டுபிடித்த மாய்மாலக் கதைகளை விடாமல் பயாகிராபி எழுதுகிற எவரும், அவர் இப்படிக் கடைசிவரை தமது பாதையில் கிடந்த குப்பையைத் தாமே தொட்டியில் போட்டதைப் பதிவு செய்யவில்லை. பாத்ரூம் கிளினர் வருவதற்கு முன்பு, தாமே அதைக் கிளீன் பண்ணி விட்டு கிளீனர் வந்ததும் அவரை வியக்கவைக்கும் விஷமத்தை அவர் செய்வது பற்றி தேசிகாச்சார் என்ற யோகாசன டீச்சர் எழுதியதைப் பலரும் படிக்கட்டும் என்று ஜெராக்ஸ் பண்ணி, கிருஷ்ணமூர்த்தி லைப்ரரியில் போட்டேன். அங்கே பொறுப்புள்ள ஒருவர், “தில் இஸ் இன் பேட் டேஸ்ட்,’ என்று அதை அகற்றிவிட்டார். தம்முடைய அசுத்தத்தை அகற்ற இன்னொருவன் வேண்டுமென்று அதற்காக ஒரு சமூகக் கட்டுமானத்தையே உருவாக்கி வைத்துக்கொள்வது எப்பேர்பட்ட குட் டேஸ்ட்,’ என்றவர் கண்ணாடியைத் தூக்கி நிலவை “நிலவுதானா’ என்று செக் பண்ணுகிற மாதிரிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார். “இப்பவும் சிட்டிகளில் பாதாளச்சாக்கடைக்குள் மனிதனை இறக்கித்தான் அடைப்பைக் குத்திவிடுகின்றான்கள். இதற்கெல்லாம் மேல் நாடுகளில் மெஷின் உண்டு. ஆர்யபட்டா செயற்கைக்கோளை மேலே விடுகிறவன், ஹரிஜனபட்டா சாக்கடை மெஷினை ஏன் கீழே விடமாட்டேங்கறான்?’
    சரியான சாமுண்டி என்று அவருக்கு மானசீகமாய்ச் சாமுண்டிக்குத் தரும் செல்லக் கிள்ளு ஒன்றை மட்டும் அன்று தந்தாலும், இன்று அவர் சொன்னது மீண்டும் அதே தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

சொன்னபடி வேலை தற்காலிகம்தான். ஆனால் வேறு தொடர்புகள். இரண்டு மாற்றங்கள். பிறகு மெய்யனின் பால்யகால நண்பர் பால சுந்தரம் சந்திப்பு. கோடவுனில் எனக்கு ஃபுல் யூனிபாரத்துடன் செக்யூரிட்டி வேலை. கடிதங்களுக்கு லேசில் பதில் எழுதாத சாமுண்டி, சென்னைக்கு வந்து ஏதோ கட்சித்தொண்டு செய்யப்போவதாக எழுதியிருந்தான். ஆனால் ஆளைக் காணோம். அப்போது ஒருநாள் பாலசுந்தரம், “அம்பேத்கர் நினைவுநாள் கூட்டத்துக்கு வர்றயா?’ என்றார். “நாம்பளாச்சு வேலையாச்சு, கூலியைப் பிரிச்சு ஊருக்கு கொஞ்சம் மணியார்டர் பண்ணிட்டு சிட்டியிலே ஜாதிக்காரிகளை பஸ்ஸிலே இடிக்கிறது போதாதோன்னு எரிச்சலோடு நினைச்சாலும், “சரி’ன்னேன்.
ஊர்வலமா அந்தச் சிலையிலிருந்து இந்தத் திடலுக்குப் போற தெல்லாம் வேண்டாம். எங்கே கூட்டம்? தெரிஞ்சுக்கலாம் என்று கேட்டால், “இது வேறே, தனிக்கூட்டம். அண்ணாநகர் டவர் வடக்குல ஒரு மீன் தண்ணியை கக்கிக்கிட்டிருக்கும். அங்கின ஒரு ஆள் வந்து, வாற நியூஸ் எல்லா பொய்ம்பான். நான் சொல்றது மெய்யினு நீ சொல்லணும். அவன் கூட்டத்துக்கு இட்டாந்திடுவா,’ என்றார் பாலசுந்தரம்.
இந்த நாடகம் தினுசாகத் தோன்றினாலும் பொய் மெய்யில் பொய் சொல்லா மெய்யனைக் கண்டுகொண்டேன். “ஆருக்கும் சொல்லக் கூடாது,’ என்றார் பாலசுந்தரம் முடிவாக. “கரக்ட் டைம் பார்த்து வா. வாட்சை செட் பண்ணிக்க.’
நான் “புரட்சி வருதா ஸார்?’ என்று கேட்கவில்லை. ஏனென்றால் மெய்யன், சின்னப்பசங்களாக நாங்கள் இருக்கும்போதே அரிஜனக் குழந்தைகளை அப்பப்போ ஆருக்கும் தெரியாமல் சேர்த்து விபரம் கேட்பார். புரட்சி பற்றி புரிந்துகொள்ளக் கூடியவர்களை தனியாக்கி ஞாபகம் வைத்துக்கொள்வார். நாங்கள் வாலிபமான பிறகு மெய்யன் தலைமையில் கூட்டம் கூடிய விபரத்தை சாமுண்டி சொல்லி யிருக்கிறான். கூட்டத்தில் வேறு இடங்களின் தேசங்களின் புரட்சி முறை, ஆயுத முறை, அரசியல் முறை, நம்பி இறங்கலாமா என்பது எல்லாம் பேசப்பட்டது. “சூடு இல்லை’ என்பதுதான் இதைப் பற்றி சாமுண்டியின் தீர்ப்பு. இருந்தும் இப்போது “நம்ப பாலசுந்தரம் சார் சொல்றாரே, போய்ப் பார்க்கலாம்’ என்று டவர் பஸ்டாப்பில் இறங்கி தெருவைக் கடக்குமுன் வாட்சைப் பார்த்தால் இருபது நிமிஷத்துக்கு மேல் இன்னும் நேரம் இருந்தது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து சற்றே தள்ளி நடந்துபோய் அங்கிருந்த “பங்க்’ கடையில் சார்மினார் வாங்கி ஒன்றை உருவிப் பற்ற வைத்துக் கொண்டேன். அது மாலையை நோக்கி சரிந்து கொண்டிருந்த “பீக் அவர்’. ஒரே திசையில், நான் நின்ற பக்கத்துத் தெருவில் இரும்பு நெரிசலாகக் கார், பஸ், ஸ்கூட்டர் ஓட்டம். அதன் கரடுமுரடான சப்தத்தில் சிந்திப்பதுகூட மனசுக்கு கேக்காது. போதாதுக்கு பஸ்ஸிலிருந்து இறங்குவதும் போவதும் வருவதுமான உயர் மட்டத்துக்கு உபரிமட்டமான ஆபீஸ் மண்டல எறும்பு மனிதர்கள். கொஞ்ச நேரம் நின்று அந்த முகங்களில் குடிகொண்டிருந்த ஏகோபித்த மந்தைத்தனத்தைப் பார்த்தால். “புரட்சி வந்த பிறகும் இது இதுவாகத் தானே இருக்கப்போகுது?’ என்று எந்த செகுவேராவுக்கும் நாடி விழுந்துவிடும்.
சிகரெட்டை ஊதிக்கொண்டிருக்கும்போது, சற்றுத் தள்ளி என் பக்கம் இருந்த பஸ்ஸ்டாண்டில் பஸ்ஸிற்குப் பதிலாக ஒரு கறுப்பு அம்பாஸிடர் வந்து லகுபதனக் காகமாக நின்றது. பின் ஸீட்டிலிருந்து ஜோல்னாப் பையுடன் ஒருத்தி இறங்கினாள். சிம்பிள் சுடிதாரை மீறியே அவளது கட்டுடலின் வளைவுகள் தெரிந்தன. குறிப்பாகப் பார்க்க எதுவும் இல்லாத இடத்தில், இப்படி ஒரு சில வளைவுகள். காரிலேயே போய் வருகிறவள் அல்ல என்பது அசமந்தமாக அவள் காரிலிருந்து இறங்கிய தோரணையிலேயே தெரிந்தது. காரின் பின்சீட் கதவு உடனே மூடவில்லை. உள்ளே இருந்து ஏர்கண்டிஷனில் வெளிறிய ஒரு ஆண் கை வெளியே வந்தது. அதில் பிளாஸ்டிக் பேப்பரூடே தெரிந்தது மார்பளவு வரக்கூடிய ஒரு ரோஜா மாலை. நான் உடனே முகத்தைத் திருப்பியிருக்க வேண்டியவன். அந்த நங்கை நல்லாள் அந்த மாலையைப் பார்த்த முகபாவத்தில் உள்ளூரத் துணுக்குற்றேன். அந்த முகபாவத்தை நான் கவனித்திராவிட்டால் இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்காது.
சேரிக்கு அருகே புதர்க்காட்டுக்குள் நானும் என் சின்னத் தங்கையும் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்தபோது ஒரு குட்டிநாகம் இத்தனூண்டு படத்தைத் தூக்கியபடி ஒரு புதரிலிருந்து இன்னொன்றுக்கு ஓடியது. அதைத் தங்கை பார்த்ததைத்தான் நான் பாம்பு குட்டியைப் பார்க்கும் முன் பார்த்தேன். ஆடாமல் அசையாமல் நின்றிருந்த அவளது பாப்பா முகத்தில் பீதியும் அருவருப்பும் ஒன்றாகப் பின்னி ஒரு வக்ரமான திடீர் முதிர்ச்சியை ஏற்றியிருந்தன. மறுகணம் திரும்பி பாம்பை பார்த்ததும், “பாம்புடீ!’ என்று அவளை இழுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன்.
அன்று என் குட்டித் தங்கை பாம்பைப் பார்த்தபோது அவளது முகம், இந்த ரோஜாமாலையை இந்த நங்கைநல்லாள் பார்த்தபோது இவள் முகம், இரண்டு இடம் காலம்மாறி, நான் இவள் கையைப் பிடித்து, “பாம்புடீ’ என்று இழுத்துக்கொண்டு ஓடத் தோன்றியது. அதற்குள் மாலை அடங்கிய பிளாஸ்டிக் கவரை இவள் தனது ஜோல்னாப் பைக்குள் வைத்துவிட்டு காருக்கு டாட்டா காட்டினாள். மறுவினாடி அவளையும் என்னையும் ஒரு கொத்து ஆபீஸ்காரிகள் மறைத்தார்கள். பிறகு அவள் அவர்களை முந்தி தெருவைக் கடந்துகொண்டிருப்பது தெரிந்தது. நானும் தெருவைக் கடந்தேன். நான் டவருக்கு போக வேண்டிய அய்யப்பன் கோவில் பாதையும் அவள் போன பாதையும் ஒன்று. டவர் இருந்த பார்க்கின் மெயின்கேட் அருகே ஒரு வேன் அருகில் வந்ததும், அருகே நின்று கொண்டிருந்தவன் வேன் முன் கதவைத் திறந்தான். அவள் டிரைவர் ஸீட் அருகே உட்கார்வதைக் கவனித்தபடி, தாண்டிப்போய் பார்க்கிற்குள் நுழைந்தேன். புதர்க் காட்டுக் குட்டிப் பாம்பு நிகழ்ச்சியின் மனப்பிரதிமையை என் இப்போதைய அர்த்தமற்ற டென்ஷனுக்காக சபித்தபடி டவரின் வடக்குப் பக்கம் எது என்று நிதானிக்க நான் நிற்கவும், “அய்யப்பா, நீ ஒரு பொய்யப்பா!’ என்றபடி கைகளை சிலுவையாக விரித்தான் எதிரே வந்த சாமுண்டி.
பான்ட் ஷர்ட்டில் ஆள் அடையாளமே தெரியவில்லை. “வா, மற்றவர்கள் எல்லாம் வந்தாச்சு. இந்த “பாஸ் வேர்ட்’ பாச்சா பூச்சா எல்லாம் உனக்காக மட்டும்தான். அப்படியும் நீ லேட். எபவ்ட் டர்ன்டா, அங்கே எங்கே போறே?’ என்று வந்த வழியில் என்னைத் திருப்பினான். நாங்கள் வெளியே வந்து திரும்பி நடந்தது வேனை நோக்கியா? நான் நின்றேன்.
“என்னாது?’ என்றான் சாமுண்டி. நான் முகத்தில் கேள்வியுடன் வேனைச் சுட்டிக்காட்டினேன். அவன் புன்னகையில் பதில் தந்தான். “ஆரு பொண்ணு?’ என்றேன். வெறும் புன்னகை விசாலித்துப் பரந்தது. அநாவசியமான கிசுகிசு குரலில், “ஊரிலேருந்து லவ் பண்ணி வெரட்டிக்கிட்டு வந்திருக்கேன். அரிசனப் பொண்ணுனாலும் நம்ப சாதி அரிசனத்தில் இல்லை. எங்க மேரேஜ் நடக்கும். பொய்சொல்லா மெய்யனின் மாணவப் பெண்மணிகளுக்குள் தலையாய புரட்சித் திலகம். நைல் தவழும் எகிப்து, பாபிலோன், சிந்துவெளி, அப்படியே குமரி வரை வடிவமான தாய்க்கண்டம் அவள். சூழ்ந்து கோஷிக்கும் சமுத்ரம் நான். பொண்ணை எங்கே பார்த்தே?’ என்றான். நான் இந்த டெலிவரிக்கு அதிகக் கவனிப்புத் தராமல், வேனின் முதுகுப்பக்கத்தைத் கவனித்தேன். “அவள் பெயரே தாயம்மாள்தான்டா,’ என்று முடித்தான் சாமுண்டி.
“ரோஜா மாலை?’ என்றேன்.
“அம்பேத்கர் படத்துக்கு அவ போட்டுட்டு வீட்டுக்குக் கொண்டு போய் பூட்டி வைக்கணும்னாளே அதுவா இருக்கும். ஏன் கேக்கறே?’ அவனது குரலில் ஒரு ஸ்வர வேறுபாடு. என் முகபாவத்தைக் கவனித்து விட்டான். நான் வேனைப் பார்த்தபடி, “திரும்ப வீட்டுக்குக் கொண்டு போற மாலையா? அவகூட அம்பாஸிடர் காரில் வந்த ரோஜா மாலை யாச்சே. பாங்கிப் பெட்டகத்திலேன்னா வச்சுப் பூட்டணும்,’ என்றேன்.

“டாக்டர் சாமுண்டி இப்போ அமெரிக்காவிலே பெரிய கான்ஸ்டிட்டியூஷனல் லாயர். சர்வதேசீய தாழ்தப்பட்டோர் உரிமைகளை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் அவர் பேசியதை நேற்று அவர் எனக்கு அனுப்பி யிருக்கிறார்,’ என்றார் கிளினிக் கட்டிலில் சார்த்தி உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்த மெய்யன் முன்பு வெறுமனே கிணற்றில் தூர் எடுத்துக்கொண்டிருந்த சாமுண்டி இப்போது சென்னை மாநகர் சாக்கடையின் மல மூத்திர பாதாளக் குழாய்க்குள் ஏற்படும் அடைப்புகளை மூச்செடுத்து உள்ளோடிக் குத்திவிடும் அடியோ அடி மட்டத் தோட்டி என்பதை அறியவேமுடியாத மனோஸ்தம்பிதத்துடன்.
ரோஜாமாலையை சாமுண்டி தாயம்மாளிடம் இருந்து பிடுங்கி ஒரே வீச்சில் மலர்களை உருவியபோது வெளிப்பட்ட கருவி என் வசம்தான் இப்போதும் இருக்கிறது. அதிநவீன முறையில் இரண்டு மணிக்கும் மேற்பட்ட பேச்சை, ஒரு கிசுகிசுவைக்கூட, சுமார் இருபது அடி குறுக்களவு உள்ள வட்டத்துக்குள் கேட்டு அது பதிவு செய்யக் கூடாது. மாலை பிடுங்கப்பட்டதுமே தாயம்மாள் சரேலென்று வேனிலிருந்து குதித்து விடுவிடுவென்று மெயின் தெருவை நோக்கி நடந்து போய்விட்டாள். அவளை நோக்கிச் சாமுண்டியின் கை நீண்டு, ஏதோ ஒரு கணத்தைப் பற்றி இழுத்து நிறுத்தி அதற்கு முன்னும் பின்னும் கால ஓட்டம் ஏதுமற்று அதை மட்டும் ஸ்தம்பிக்கச் செய்யமுயன்று வெறுமையைப் பிடித்த வியர்த்தத்தோடு தளர்ந்தது.
வேனில் மீந்திருந்தவர்களுடன் ஏறி மெய்யன் எங்களுக்காகக் காத்திருந்த ஒரு கட்டிடத்துக்குப் போய் அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவர் முகம் இரும்பாக மாறி, சாமுண்டி தாயம் மாளைப் பற்றிநிறுத்த முயன்ற முஷ்டியாக இறுகி, உடனே சிரித்தது. அந்தச் சிரிப்புமட்டும் இன்னும் மாறவில்லை. அவரைப் பொறுத்தவரை காலம் ஏதோ ஒரு கணத்தில் ஸ்தம்பித்துவிட்டது.
இரண்டொரு வாரத்திலேயே சாமுண்டி எங்கள் சுக்குணியப்பன் கோடவுனுக்குப் போன் பண்ணி ஒரு குறிப்பிட்ட பிள்ளையார் கோவிலுக்கு வரச்சொன்னான். “கோவிலுக்கா?’ என்றேன். தனக்கு கல்யாணம் என்றான். “தாயம்மாவோடு,’ என்று அவன் சேர்த்துக் கொண்டபோது எனக்கு மனம் குமட்டியது.
“என்னடா சொல்றே?’ என்றேன். “ஹல்லோ?’
சாமுண்டியோடு சேர்த்து புரட்சி வகுப்புக்கு மெய்யனால் தயாரிக்கப்பட்ட அரிஜனப்பசங்களுள் இருவர் இப்போது ரிமாண்ட் ஜெயிலில் கற்ற வித்தையை பிக்பாக்கெட்டுக் கைவரிசையாக மாற்றி இருக்கிறான்கள்,’ என்றது சாமுண்டியின் குரல் இலக்கணம் பிசகாமல். “தாயம்மாளை உளவுக்கு உபயோகித்தவரே என்னை அழைத்துச் சென்று காட்டினார். பசங்கள் தாயம்மாள் விலாசத்தை போலீசுக்குக் கொடுத்து, அது அவர் விலாசமும் ஆகி இருக்குடா! அவர் கையில் நான் தாயம்மாளுக்கு எழுதிய கடிதங்கள் இருக்குடா பாவி. கட்டிக்கிறியா கம்பி எண்ணறயாங்கறாண்டா. அந்தவேளை பார்த்து இந்த பிள்ளையார் கோயில் ஏரியா டூட்டி எனக்கு. அன்னிக்கு மாதிரி லேட் பண்ணாமல் கண்டிஷனா டயத்துக்கு வாடா அய்யா அப்பா.’
அதென்ன பிள்ளையார் கோயில் ஏரியா டூட்டி என்று நான் அறியு முன்னால் போனை வைத்துவிட்டான். அவன் குறிப்பிட்ட கோவிலுக்குப் போனபோது, மைலாப்பூரின் வடகிழக்குச் சந்து பொந்துகளுக்குள் இருந்த அந்த ஏரியா நாறிக்கொண்டிருந்தது. பாதாளச் சாக்கடை அடைசல். தெருவில் அதன் கங்கா பிரவாஹம். பரிகார வேலை நடந்துகொண்டிருந்தது. ஏற்கனவே நான் பார்த்த லகுபதனக் காகமாக வந்துநின்ற காருக்குள்ளிருந்து புதுப்புடவைக்கட்டுடன் தாயம்மாளும் கூடவே ஏர்கண்டிஷனில் வெளுத்த அந்தக் கையோடு ஒரு மாஜிக் கம்யூனிஸ எழுத்தாளரும் இறங்கினார்கள். “இவர் பெயர் தெரியாதவர்களுக்கு தமிழ் நவீன இலக்கியப் பரிச்சயமே இல்லை என்றுதான் அர்த்தம். நாகபாலு என்பார்கள். ஏம்ப்பா அய்யப்பா, படிச்சிருக்கேல்ல “வே,வே, பல பல்டிகள்’ங்கற நாவல்…’ என்று எனக்கும் இதர நண்பர்களுக்கும் அறிமுக லெக்சர் அடித்துக்கொண்டிருந்தார் பாலசுந்தரம். என் கண்கள் தாயம்மாளின் வயிறு எவ்வளவு உப்பியிருக்கிறது, ஏன் இந்தக் கெடிபிடிக் கல்யாணம் என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது.
கோவில் பக்கமாக இருந்து, “எங்கே மாப்பிள்ளை?’ என்றது ஒரு ஐயர் குரல். “இந்த நேரம் பார்த்து அதுவும் இந்த எடத்துல சாக்கடை அடைப்பா?’ என்று நாகபாலு அடித்தொண்டை என்று நாம் நம்பிக் கொண்டிருந்த வாயால் ஊரறிய முணுமுணுத்தார்.
திடீரென்று சாமுண்டியின் “ஏரியா டூட்டி’ எனக்குப் புரிந்தது. அதேகணம், வேலை நடந்துகொண்டிருந்த ஒரு கண்வாயிலிருந்து உடலெங்கும் மலம் வழிய “குபுக்’ என எழுந்து ஒரே எவ்வில் வெளியே வந்தான் சாமுண்டி. “எங்கே தாலி?’ என்று அவன் கேட்டபோதுதான் அவனை மற்றவர்கள் அடையாளம் கண்டார்கள். கல்யாணப்பார்ட்டி அலறிச் சிதறி ஓடிப்போன இடம் இன்றுவரை தெரியவில்லை.
சாக்கடையின் கங்கா பிரவாஹம் கண்வாயை நோக்கித் திரும்பி வற்றிக்கொண்டிருந்தது. அன்று நான் பார்த்த அதே கோவணக் கோலம்தான் இன்றும் சாமுண்டிக்கு.

“மிஸஸ் தாயம்மா சாமுண்டி எழுதிய அன்டச்சபிளிட்டி அண்ட் தி சோஷியல் ஸ்டேட்டஸ் ஆஃப் இன்டியன் விமன் இன் ஜெனரல் என்ற புக் படிச்சிருக்கியா? எங்கே ஒரு ஜனத்தொகை தீண்டப்படாதது ஆகிறதோ அதை அப்படி ஆக்கும் சமூகம் தனக்குள்ளேயே புதுப்புது வித தீண்டாமைகளையும் உருவாக்கும். இன் ஈகுவாலிட்டி பிரீட்ஸ் ஃபர்தர் இன்ஈகுவாலிட்டி,’ என்றார் மெய்யன் என்னைப் பார்த்து விரலை ஆட்டிச் சிரித்தபடி, தாயம்மாள் அட்ரஸ் தெரியாத விதத்தில் தலைமறைவாகி விட்டாள் என்ற விபரத்தைச் சொல்லியும்கூட கிரகிக்க முடியாதவராக.
நான் என் குரல்வளைக்குள் ஏதோ ஒன்று கரடுமுரடாக திரள்வதை உணர்ந்து ரூமுக்கு வெளியே கிளினிக்கின் மூன்றாவது மாடி வராந்தாவுக்கு வந்தேன். தூரத்தே கட்டிடங்களை மீறி நின்றது ஒரு புராதன மிருகத்தின் முதுகெலும்பு போன்ற டவர். குரலுக்குள் திரண்டது அழுகையாக அன்றி ஒரு உறுமலாக ஓங்கரித்து வெளி யுலகத்தின் மீது பாய்ந்தது.

“பட்டன் ஒன்றுக்குரிய துளை கீழே, துளை ஒன்றுக்குரிய பட்டன் மேலே,’ என்றான் சாமுண்டி, இரண்டு கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக்கி டெலஸ்கோப்பாகப் பிடித்து என் டியூனிக்கை மேலும் கீழும் பார்த்தபடி. நான் ஒரு அசட்டுப் புன்னகையுடன் பட்டன்களைக் கழற்றத் தொடங்கினேன், மீண்டும் சரியாக மாட்டுவதற்காக.
(1996)

லயம் (பிரமிள் நினைவிதழ்). ஜுலை 1998.

பிரமிள் படைப்புகள் : தொகுதி2: கதைகளும் நாடகங்களும் ((பதிப்பு : கால சுப்ரமணியம், 2018), லயம் / பிரமிள் அறக்கட்டளை வெளியீடு என்ற தொகுதியிலும் இக்கதை உள்ளது.

“சாமுண்டி’, சென்னைத் தெருவில் திடீரென்று பார்த்த ஒரு நிகழ்ச்சியின் பாதிப்பில் எழுந்தது. சாக்கடை அடைப்பை நீக்கிவிட்டு, தலையில் இருந்து மலம் உடல் முழுவதும் வழிய எழுந்து வந்த ஒரு துப்புரவுத் தொழிலாளியைப் பார்த்த அதிர்ச்சி மனதுக்குள்ளேயே இருந்து நீண்ட காலம் கழித்துப் பிறந்தது இக்கதை. அசுத்தத்தையும் அசிங்கத்தையும் போற்றிச் சிலர் எழுதியதும், முனியாண்டி என்று பெயர்களை வைத்துக்கொண்டதும், இக்கதைக்குப் பின்னணியாகும். இதில் வரும் மெய்யன் என்ற ஆசிரியர் பிரமிளின் இளமைக்காலத்தில் அவருக்கு உண்மையில் ஆசிரியராக வாய்த்தவர்தான். அய்யப்பன் ரயிலில் கேட்கும் ஒருவரின் பேச்சிலும் சாயலிலும் (“நீலம்’ கதையில் பஸ்ஸில் அருகமர்ந்து பேசி வருபவரும்) பிரமிள் தன்னையே பிரதிபலிப்பது தெரிகிறது. சாமுண்டி ஒரு பெண் தெய்வப் பெயராயினும் ஆணுக்கும் உரியதாக இருக்கிறது. ஒரு நிகழ்விலிருந்து கதையை எப்படியெல்லாம் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் கதை இது. கடைசியாக எழுதிய இது அச்சில் வெளி வருவதற்கு முன்பே பிரமிள் மறைந்துவிட்டார். பிறகு லயம் நினைவு இதழில் வெளியிடப்பட்டது. பிரான்சிலிருந்து வெளிவந்த சரிநிகர் அல்லது ஈழநாடு பத்திரிகையில் ரவிக்குமார் முயற்சியில் இது மறுபிரசுரம் பெற்றதாகவும் ஞாபகம். நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு எழுத்தாளரையும் சில நபர்களையும் சாயலூட்டுவதாயும் சில இடங்கள் வரும். (கால சுப்ரமணியம்)