அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை”

வளர்ச்சி வேகம்

சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும் போது எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது. மூன்றே மூன்று ‘கியாஸ்’ லைட்டுகளை வைத்துக்கொண்டு நாடங்கள் நடைபெற்ற போதும் நான் நடித்தேன்; இன்று கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் நடித்து வருகிறேன்.
எவ்வளவு பெரிய மாறுதல்கள்!…எவ்வளவு அருமையான சுவை மிகுந்த வரலாறு இது!! எண்ணிப் பாருங்கள்!
இந்த வரலாற்றை நாம் ஆராய வேண்டியது அவசியமல்லவா?
தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிடமுடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக்கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராயவேண்டும்.

அவ்வை டி. கே. சண்முகம்/நாடகக் கலை – விருட்சம் நாளிதழ்