
கும்பகோணத்தில் நான் ரெயில் ஏறும்போது வண்டியில் ஒரே கூட்டமாக இருந்தது.
இடம் பூராவையும் ஒரு கல்யாணக் கோஷ்டி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. குடம் குத்து விளக்கு, பருப்புத் தேங்காய், புதுப்பாய் சகிதம், பிள்ளை, பெண், பிள்ளையின் பெற்றோர் தம்பி தங்கைகள், பெண்ணின் தாய் தங்கைகள் என்று வண்டியில்- எட்டுப் பேர் இருக்கவேண்டிய வண்டியில் பதினெட்டுப் பேர்வழிகள் இருந்தார்கள்.
“இதைவிட மூன்றாவது வகுப்பு வண்டியில் கூட்டம் குறைவாக இருக்குமே!” என்று சொல்லிக் கொண்டே ஒருவர் போய்விட்டார். அவரைத் தவிரக் கல்யாணக் கோஷ்டியைச் சேராதவர்கள் நாங்கள் மூன்று நாலு பேர் இருந்தோம்.
சின்ன பையன் ஒருவனை விசாரித்ததில் கல்யாணக் கோஷ்டி திருவட மருதூரில் இறங்கிவிடும் என்று தெரிந்தது. அடுத்த ஸ்டேஷனுக்கு அடுத்த ஸ்டேஷன். பதினைந்து நிமிஷம், அல்லது ஜாஸ்தியானால், இருபது நிமிஷம். பாதகமில்லை. வண்டி வழியிலேயே நின்று கொண்டிருக்கலாம் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
காசையும் அதிகமாகக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டு பிரயாணம் செய்ய வேண்டி வந்ததைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன் நான். மற்றவர்களும் அப்படித்தான் போலும். நாங்கள் அதிகமாகப் பேசவில்லை.
திருநாகேசுவரத்தில் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது. திருவடமருதூரும் வந்துவிட்டது. “ஒண்ணும் விட்டுப் போக வில்லையே” என்று வண்டியில் கீழேயும் மேலேயும் பார்த்துவிட்டு கல்யாண கோஷ்டியினர் எல்லோரும் இறங்கியவுடன் நாங்கள் நாலு
பேர் வண்டிக்குள் போய் மூலைக்கொருவராகத் திண்டில் சாய்ந்து கொண்டு செளகரியமாக உட்கார்ந்து கொண்டோம்.
ஒருவர் வைதிக சிரேஷ்டர். அவருக்கு வயது ஐம்பத்தைந்து இருக்கும். மெல்லிய கம்பிக்கரை வேட்டியைப் பஞ்ச கச்சமாகக் கட்டி, பட்டுக்கரை அங்கவஸ்திரத்தை யோக வேஷ்டியாக அணிந்திருந்தார்.. அவரும் கல்யாணக் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இல்லை என்று தெரிந்தது.
எனக்கு எதிர்மூலையில் உட்கார்ந்திருந்தவர் கோட்டும் ஸூட்டும் அணிந்திருந்தார். ஏதோ உத்தியோகத்திலிருப்பவர்போல இருந்தது. அவருக்கு வீடும் சொத்துச் சுதந்திரமும் பெண்டாட்டி பிள்ளைகளும் ஏராளமாக இருக்கவேண்டும் என்று அவரைப் பார்த்துத்தான் அனுமானித்துக் கொண்டேன். வயசு நாற்பதுக்குள்தான் இருக்கும்.
மூன்றாவது ஆசாமி ஒரு இருபத்திரண்டு இருக்கலாம். இருபது வயசு வாலிபன். இன்றைய வாலிபர்களிடமிருந்து சற்றும் மாறுபட்டவனல்ல. படித்துக் கொண்டிருப்பான். அல்லது படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருப்பான். வாழ்க்கைப் போரில் ஈடுபடாதவன் மாதிரி இருந்தது. இன்னும் ரயில் திருவடமருதூரை விட்டுக் கிளம்பியதும், ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு, ரயிலில் ஒரு குறுகிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு உத்தியோகஸ்தர் பேச்சைத் தொடங்கினார். தவிரவும் நாலு பேர் பேசாமல் இருப்பது எப்படி? நாலு பேருக்கும் திருவடமருதூர் வரையில் உட்கார இடம் தராமல் எங்களை நிற்க வைத்துவிட்ட அந்தக் கல்யாணக் கோஷ்டியிடம் எங்களுக்குக் கோபம் வருவது சகஜம்தானே!
அந்த உத்தியோகஸ்தர் கல்யாணங்களைப் பற்றி, அந்தக் கல்யாணக் கோஷ்டியை மனசில் வைத்துக் கொண்டு, பேசத் தொடங்கினார். “பட்டுப்பாய், குடம், குத்துவிளக்கு, பருப்பு தேங்காய் என்கிற சம்பிரமங்களில் மட்டும் நமக்கு இன்னும் நம்பிக்கை விடவில்லை” என்றார்.
“குடும்ப வாழ்விலேயே நம்பிக்கையற்றுப் போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்களில், குடும்ப வாழ்வு பற்றிய சின்னங்களில் மட்டும் நம்பிக்கை இருந்து என்ன பலன்?” என்றார் உத்தியோகஸ்தர்,
நான் பதில் சொல்லாமல் அந்த வாலிபனைப் பார்த்தேன், அவன் வயசில் பொதுவாகக் கவியாணத்தைப் பற்றியும், அவன் சிந்திப்பவனாகத்தானே இருக்க வேண்டும்? அவன் பதில் சொல்லுவான் என்று அவனைப் பார்த்தேன்.
‘”அந்தச் சம்பிரதாயங்களைத் தவிர இன்றையக் கல்யாணங்களில் வேறு எதுவும் இருப்பதில்லை” என்றான் அந்த வாலிபன்.
உலகத்திடம் அதிருப்தி அடைந்து அந்த அதிருப்தியை வெளியிடுவதற்கு உலகில் எந்தக் காலத்திலும் எந்தத் தேசத்திலுமே உரிமை இருந்துதான் வந்திருக்கிறது. வாலிபம் மாறி நாற்பதாவது வயசுடன் வெள்ளெழுத்து வரும்போதுதான் ‘மனிதனுக்குப் பொதுவாக நம்பிக்கை பிறக்கிறது என்று சொல்லவேண்டும். இந்த நம்பிக்கை இருபதாவது வயசிலேயே உதித்திருந்தால், என்னவெல்லாமோ நாம் சாதித்துப் புரட்டியிருக்கலாமே என்று மனிதர்களில் பலருக்குத் தோன்றுவதுண்டு. இது எனக்கே அனுபவபூர்வமான உண்மை.
என் மனசிலிருந்த வெளிப்படாத சிந்தனைகளைத் தொடர்ந்து நான் சொன்னேன்; ‘மனிதனுக்கு மனித குலத்திடம் உள்ள நம்பிக்கை காரணமாகத்தான் வருஷத்தில் இத்தனை கல்யாணங்கள் நடக்கின்றன” என்றேன்.
“மனிதனுக்குப் பூரணமாக நம்பிக்கையற்றுவிட்டாலும் தேவலை – அல்லது பூரணமாக நம்பிக்கை ஏற்பட்டு விட்டாலும் தேவலை. இன்றுள்ள நாம் இரண்டும் அற்ற ஒரு நிலையில் ஊசலாடுகிறோம். அதுதான் சிரமமாக இருக்கிறது” என்றார் உத்தியோகஸ்தர்.
“வயசு ஆக ஆக நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை என்பது உதித்து வளருகிறது” என்றேன் நான்.
“அதேபோல வயசு ஆக ஆக சுபாவமாகவே நம்பிக்கை யுள்ளவர்களுக்கு நம்பிக்கை தேய்கிறது” என்றான் வாலிபன்.
“ஆகவே மொத்தத்தில் உலகத்தின் நம்பிக்கைக்குச் சராசரிக் கணக்கு நேர்பட்டுவிடுகிறது” என்று சொல்லிச் சிரித்தார்
இதுவரை பேச்சில் கலந்து கொள்ளாமல் சும்மா இருந்துவிட்ட வைதிக சிரேஷ்டர் சொன்னார்; “இந்தச் சம்பிரதாயங்கள் வெறும் சடங்குகளாக மாறிவிடாத, அர்த்த புஷ்டியான காரியங்களாக இருந்த காலமும் உண்டல்லவா?” என்று கேட்டார்.
“இருந்திருக்கலாம். எப்படி நிச்சயமாகச் சொல்வது?” என்றான் வாலிபன், சர்வ ஜாக்கிரதையாக. வைதிகத்தில் அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு.
“இருந்திருக்கத்தானே வேண்டும்? அப்படி இல்லாவிட்டால் இன்று செய்து கொண்டிருப்பதெல்லாம், வெறும் புரளி, பரஸ்பர ஏமாற்று, ஒப்பந்தம் என்றுதானே ஏற்பட்டுவிடும்” என்றேன் நான்.
“அப்படிச் சொல்கிற ஒரு கட்சியும் உண்டல்லவா?” என்றான் வாலிபன்.
“உண்மைதான். எனக்கும்கூட அப்படிச் சொல்கிற கட்சியை ஆதரிக்கத்தான் தோன்றுகிறது! ஆனால் மனிதனுக்கு என்னவோ எப்படியோ நம்பிக்கை என்கிற ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறதே! அதைத் தப்புவது எப்படி?”
ஆடுதுறையில் நின்றுவிட்டு வண்டி கிளம்பியது,
“இன்று உலகைச் சீர்திருத்த முன்வருகிறவர்கள் எல்லோருமே பழையது எல்லாவற்றையும், சம்பிரதாயங்கள் சடங்குகள் உள்பட எல்லாவற்றையும் புரளிகள் என்றுதான் கூறுகிறார்கள்” என்றார் உத்தியோகஸ்தர், வாலிபனுடைய கட்சியை ஆதரிப்பவராக.
“பழைய புரளிகளில் நம்பிக்கை வைக்காதீர்கள் என்று…” வாலிபன் தொடங்கி முடிக்குமுன் வைதிக சிரேஷ்டர் சொன்னார்.
“எங்கள் புதுப் புரளிகளில் நம்பிக்கை வையுங்கள் என்னும் சீர்திருத்தவாதிகள், பழசு பூராவையும் புரளி என்று சொல்கிற நவீனவாதிகள், என்று சொல்கிறார்கள்” என்றார்.
‘பழைய உண்மைதான் என்று எனக்குத் தோன்றியது. புரளிகள் தேய்ந்து மங்கிவிட்டன; உயிரற்று விட்டன. எங்களுடைய புதுப் புரளிகள் புது மெருகு அழியாமல் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் நம்பிக்கை வைப்பது சுலபம், நம்புங்கள்’ என்றுதான்
நாகரிகவாதிகள் சொல்கிறார்கள்.
ஒரு புரளிக்குப் பதில் வேறு புரளியை நிறுத்தி நிமிர்த்தி வைத்து என்ன பயன்?அரசியல்
வாதிகளின் கைகளிலும் நாக்கிலும் அகப்பட்டுவிட்ட கொள்கைகள் போல உண்மை திரிந்து விடுகிறது-உருவெல்லாம் மாறிவிடுகிறது.
“ரஷியாவில்….” என்று உத்தியோகஸ்தர் தொடங்கினார்.
ஆனால் வைதிக சிரேஷ்டர் அவரைக் கையமர்த்திச் சொன்னார்: “அரசியல் விஷயங்களைப் பற்றி நமக்கெல்லோருக்கும் இன்று நன்றாகத் தெரியும். கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போலச் சொல்லிச் சொல்லி நம்மை எல்லாம் பழக்கி இருக்கிறார்கள். அரசியலைப் பற்றி இப்போது வேண்டாம்’ என்றார்.
“அரசியலைப் போலத்தானே மற்ற வாழ்க்கை வழிகளிலும் பலர் நம்மைக் கிளிப் பிள்ளைகள் போலச் சொல்லிச் சொல்லிப் பழக்கியிருக்கிறார்கள்” என்று கேட்டான் வாலிபன்.
“உண்மை போலத்தான் தோன்றுகிறது. ஆனால் நமது சம்பிரதாயங்கள் நம்முடைய வாழ்வுக்கு அழகு தருகின்றன என்று சொல்லத் தோன்றவில்லையா?” என்றார் வைதிக சிரேஷ்டர்.
நான் இதை எதிர்பார்க்கவில்லை வைதிக சிரேஷ்டரிடமிருந்து . சம்பிரதாயத்தின் அழகைப் பற்றிப் பேசிய அவர் சம்பிரதாயமாக இகபர மோட்ச சாதனங்களைப் பற்றிப் பேசவில்லை. நவீனமான வைதிக சிரேஷ்டர்தான்! நவீனமாக சம்பிரதாயத்தின் சார்பில் ஒரு விஷயம் சொன்னார். அதுவே அழகாக இருந்தது.
“தட்டுப் பந்தலுக்கு வாழை மரம் கட்டினால் அழகாகத்தான் இருக்கிறது என்று இந்த நாளிலும்கூட எல்லோரும் ஒப்புக் கொண்டு விடுவார்கள்” என்றேன் நான்.
வண்டி தியாகராஜபுரத்தில் நின்றது. ஸ்டேஷனை அடுத்த தெருவில் ஏதோ கல்யாணம் போலும். நாதஸ்வரம் லேசாகக் காற்றில் மிதந்து வந்து எங்கள் காதில் விழுந்தது. வண்டி கிளம்பி அதிக தூரம் போவதற்குள்ளாகவே, நாதஸ்வர இசை மறையத் தொடங்கி விட்டது. ரெயில்வண்டியின் “கட கட குப் குப்” சப்தத்தின் முன் நாதஸ்வர சப்தம் நிற்க முடியுமா, என்ன?
வைதிக சிரேஷ்டர், அதையே உதாரணமாகச் சொன்னார்: “பழைய சம்பிரதாயங்கள் என்பது நாதஸ்வரத்தைப் போன்றது. புதுசாக ஏற்படுகிற காரியங்கள் எல்லாம் ரெயில் வண்டிப் புகையும்
சப்தமும் போலத்தான்” என்றார்,
வாலிபனுக்கும் சட்டென்று பதில் சொல்லத் தெரியவில்லை. உத்தியோகஸ்தர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். ஒரு நிமிஷ மௌனத்துக்குப் பிறகு வாலிபன் சொன்னான்; “அது என்னவோ! என் தலைமுறையின் நிலைமை திரிசங்கு ஸ்வர்க்கமாகத் தான் இருக்கிறது! புரியாத பல விஷயங்களில் உள்ளம் குழம்புகிறது. புரியவில்லை என்பதற்காக விட்டுவிடுவது சாத்தியமாவதில்லை. புரிந்துகொண்டுதான் மேலே சொல்வது என்பதும் சாத்தியமாக இல்லை” என்றான்.
நான் சொன்னேன்: “என்னுடன் படித்த ஒரு வாலிபனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. அவன் டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கல்யாணத்துக்காக வரும்போது சென்னையில் கல்யாணச் சடங்குகளை எல்லாம் அவனுக்குப் புரியும்படியாக விளக்கும் ஒரு புஸ்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தான். அதைப் படித்ததன் விளைவு என்ன ஆயிற்றுத் தெரியுமோ இல்லையோ?” என்றேன்.
“என்ன?” என்றார் உத்தியோகஸ்தர்.
“அதுவரை வைதிகப் பற்றுள்ளவனாக இருந்தவனுக்கு அதற்குப் பிறகு வைதிகத்தில் வெறுப்பே ஏற்பட்டுவிட்டது” என்றேன் நான்.
‘கல்யாணம் நடந்ததாஇல்லையா?” என்று கேட்டான் வாலிபன்.
“நடந்தது, நடந்தது. அதுவும் அவனாக விரும்பிய பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடாகியிருந்தது. நடக்காமல் இருந்து விடுமா? நடந்தது. ஆனால் வைதிகமான குடும்பத்தின் அந்தக் கல்யாணம் அதிக வைதிகமில்லாமல் நடந்தது” என்றேன் நான்.
வைதிக சிரேஷ்டர் இனியும் பேசாதிருக்கக் கூடாது என்று எண்ணினாரோ என்னவோ; சொன்னார்: “சம்பிரதாயத்தின் அழகில் நம்பிக்கை வைக்காததன் பலன் அது” என்றார்.
“அப்படியானால் மூட நம்பிக்கைதான் நியாயமானது என்கிறீர்களா?” என்றான் வாலிபன்.
“மனிதன் மூடன்தானே?” என்றார் வைதீக சிரேஷ்டர். இதற்கு என்ன பதில் சொல்வது என்று எங்களில் ஒருவருக்கும் தெரியவில்லை.
மனிதன் மூடனா? அல்லவே அல்ல.
மனிதன் ஞானிதானா? இதற்கும் அல்லவே அல்ல, என்றுதான் பதில் சொல்லத் தோன்றுகிறது.
நரசிங்கன்பேட்டையில் வண்டி நின்றுவிட்டுக் கிளம்பியது.
வைதிக சிரேஷ்டர் வாலிபனை விசாரிக்கலானார்: பெயர் குலம் கோத்ரம் எல்லாவற்றையும். கலியாணமாகிவிட்டதா என்றும் விசாரித்தார். ஆகவில்லை இன்னும் என்று தெரிந்து கொண்டதும் அவனுக்குத் தக்க இடங்களாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு வந்தார்.
அவருடைய சாமர்த்தியத்தை வியந்து கொண்டே நான் அந்த வாலிபன் தந்த விவரங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். அவன் நாகபுரியில் வேலையிலிருந்தான். சம்பளம் நூற்றைம்பது ரூபாய். நல்ல சொத்துள்ளவர் வீட்டுப்பிள்ளை. நல்ல குலம். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். நல்ல வரன்தான்.
வைதிக சிரேஷ்டர் கெட்டிக்காரர்தான்.
“கல்யாண விஷயமாக என்னைக் கேட்டு என்ன பிரயோசனம். பெரியவாள் பார்த்துச் செய்து வைப்பார்கள். எனக்கு அப்பா, அம்மா அண்ணன்மார்கள் இரண்டு பேர் எல்லோரும் இருக்கிறார்கள்” என்றான் வாலிபன்.
“அது சரி, மற்றபடி உங்களுக்குச் சம்மதமானால் மற்றதெல்லாம் சம்பிரதாயம்தானே!” என்றார் வைதிக சிரேஷ்டர்.
“இத்தனை நேரம் சம்பிரதாயங்களின் அழகைப் பற்றிப் பேசி வந்த நீங்களே, இப்படி வெறும் சம்பிரதாயந்தானே என்று கூறலாமா?” என்று அவரை மடக்கினான் வாலிபன்.
கதிராமங்கலம் ரோடு தாண்டிவிட்டது. குத்தாலம் வந்து கொண்டிருந்தது.
வாலிபனுக்கும் வைதிய சிரேஷ்டருக்கும் நடந்த சம்வாதத்தை அனுபவித்துக் கொண்டு சிரித்தார் உத்தியோகஸ்தர்.
கடைசியாக அந்த வாலிபன், “நான் குத்தாலத்தில் இறங்கி விடுவேன்” என்றன்.
‘குத்தாலத்தில்தான் நானும் இறங்குகிறேன்” என்றார் வைதிக சிரேஷ்டர். “குத்தாலத்தில் எங்கே, யார் ஆத்தில்….?” என்று விடாமல் தொடர்ந்து கேட்டார்.
குத்தாலம் ஸ்டேஷன் வந்துவிட்டது. எழுந்து கொண்டே வாலிபன் பதில் அளித்தான்: “பெண் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன், ஸ்டேஷனில் எங்கப்பாவும் அம்மாவும் வந்திருப்பார்கள்” என்றான்.
வண்டி ஸ்டேஷனில் நின்றது. ஸ்டேஷனில் ஒரே கூட்டம். பெண் பார்க்கப் போய்க் கொண்டிருந்த வாலிபனையும், வைதிக சிரேஷ்டரையும் கீழே இறங்கவிடாமல் ஒரு கல்யாணக் கோஷ்டி எங்கள் வண்டியில் ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது. கூட்டம் வந்துவிடும். மறுபடியும் இடநெருக்கடிதான்.
பிளாட்பாரத்தில் இறங்கிவிட்ட வாலிபன் வைதிக சிரேஷ்டரிடம் “என் பெயரே கல்யாணம்தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
ரெயில் குத்தாலத்தை விட்டுக் கிளம்பிவிட்டது. வண்டியில் ஒரே கூட்டம். புதுப்பாயும், புதுக்குடமும், குத்துவிளக்கும், பருப்புத் தேங்காயும் மணப்பெண்ணும், மணப் பிள்ளையும் எட்டு பேர் உட்கார வேண்டிய இடத்தில் இப்போது பதினெட்டுப் பேர் இருந்தோம்.
1966

Arumai