க.நா.சு. /மனோதத்துவம்

யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது நான் செய்தது பிசகுதான்.  அவசரப்பட்டு விட்டேன். ஆனால் செய்ததைச் செய்தாகிவிட்டது. இப்போ வருத்தப்பட்டுப் பயன் என்ன?

நான் அவனிடம்-என் அண்டை வீட்டுக்காரனிடம்-பல தடவைகள் சொல்லக் கூடச் சொன்னேன். “இதோ பார்; ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்த மாதிரி ரேடியோவை உரக்கத் திருப்பி விட்டாயானால், ஜாக்கிரதை நான் என்ன செய்வேன் என்று சொல்ல முடியாது. கோபம் வந்துவிடும்-கோபக்காரன் நான். கோபத்தில் உன்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவேன்” என்று பல தடவைகள் அவனையே கூப்பிட்டுச் சொன்னேன்.

மற்றபடி அவன் என் அண்டை வீட்டுக்காரன் நல்லவன்தான். அவன் பெண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் ஊருக்கு அனுப்பி விட்டு அந்தச் சமயத்தில் தனியாக இருந்தான். சுற்றுப்புறத்தில் அவனைக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டார்கள். மற்றபடி அவனைப் பற்றி எனக்கு எவ்விதமான தொந்திரவும் கிடையாது. இந்த மாதிரி நள்ளிரவில் திடுதிடுப்பென்று தூக்கம் வருகிற சமயம் பார்த்து ரேடியோவை உரக்க வைத்து விடுவான்.

பல தடவைகள் சொன்னேன்.

பிறகு சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சொல்லச் சொல்ல அவன் சிரிப்பதும், மேலும் மேலும் ரேடியோவை உரக்க வைப்பதும் எனக்கு ஆத்திரமூட்டியது. வேறு வழியில்லை. அவனைக் கொன்றே விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

சௌகரியமான நாள், பொழுதும் கிடைத்துவிட்டது. என் மனைவி தன் பிறந்த வீட்டுக்குப் போனாள். நான் அண்டை வீட்டுக்காரனைக் கொன்றுவிடுவது பற்றி என் மனைவி இல்லாத ஆட்சேபங்களை எல்லாம் செய்து கொண்டிருப்பாள்-பெண் பிள்ளையோடு பேசி யாரும் ஜயிக்க முடியுமா?

என் மனைவி வீட்டிலில்லாத ஒருநாள் பார்த்து நான் அண்டை வீட்டுக்காரனைச் சுட்டுக் கொன்று விட்டேன். தோட்டத்தில் ஆழக் குழிதோண்டி, அவனைப் புதைத்தும் விட்டேன். என்னைப் பற்றி யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் வர நியாயமில்லை. என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்ததுகூட யாருக்கும் தெரியாதே!

அண்டை அசலார் அவனைக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவன் என்று கருதினார்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருக் கிறேன் இல்லையா? ஆகவே அவர்கள் அவன் அரசாங்கத்துக்குப் பயந்து சாமர்த்தியமாகப் பதுங்கி விட்டான் என்று எண்ணி விடுவார்கள். என்னை அவன் மறைவுக்குக் காரணமாக்க யாருக்கும் தோன்றாது.

என் மனைவி திரும்பி வந்த முதல் நாள் இரவே பன்னிரண்டு மணிக்கு என்னைக் கேட்டாள். “ரேடியோ சப்தம் இன்னும் கேட்கவில்லையே!’ என்று.

“நாலைந்து நாளாகக் கேட்கவில்லை. ஊரிலில்லைபோல் இருக்கு!” என்றேன் நான் சுருக்கமாக.

இரண்டொரு நாட்களுக்குப் பிறகு என் மனைவி சொன்னாள்: “அண்டை வீட்டுக்காரன் பிரபல கம்யூனிஸ்டு கட்சிக்காரனாம். அவன் ரகசியமாகப் பதுங்கியிருக்கிறான் போலிருக்கிறது.”

“ஆமாம். யார் கண்ணிலும் படாமல் பதுங்கி விட்டான்” என்றேன் நான்.

அதற்குப் பிறகு இரவு நேரம் நிம்மதியாக இருந்தது. என்னால் சரியாகத் தூங்க முடிந்தது.

இது கொஞ்நாள்தான். ஒரு நாள் இரவு முன்போலவே பன்னிரண்டு மணி அடிக்கிற சமயத்தில், நான் தூங்க ஆரம்பிக்கும் சமயத்தில் மீண்டும் அண்டை வீட்டு ரேடியோ ஒலிக்கத் தொடங்கியது. பழைய மாதிரியே நான் கலைந்த தூக்கத்தில் கோபமாக அண்டை வீட்டுக்காரனை வாயில் வந்தபடி எல்லாம் திட்டினேன்.

நான் போட்ட சப்தத்தில் என் மனைவி விழித்துக்கொண்டு “என்ன அது?” என்று கேட்டாள்.

“அடுத்த வீட்டில் மீண்டும் ரேடியோ கேட்கத் தொடங்கி விட்டது” என்றேன்.

“என் காதில் விழவில்லையே” என்றாள் என் மனைவி.

“அதோ “பொடொ பொடா, பாடுகிறதே முன்னெல்லாம்விட அதிகச் சப்தம் போட்டு…”

“என் காதில் விழவேயில்லையே! சொப்பனம் கிப்பனம் கண்டிருப்பேள். பேசாமல் தூங்குங்கோ!” என்று சொன்னாள் என் மனைவி,

“உனக்குக் காது செவிடாகி விட்டது” என்றேன் நாள்.

என் மனைவிக்கு அன்று இரவும் சரி,அதற்குப் பிறகு வந்த இரவுகளிலும் சரி-ஒன்றும் காதில் விழவில்லை. எனக்கு மட்டும். முன்போலவே, என் அண்டை வீட்டுக்காரனின் ரேடியோ காதில் விழுந்து கொண்டிருந்தது.

அப்பொழுதுதான் உணர்ந்தேன்-நான் செய்துவிட்ட காரியம் தவறானது என்று. பிசாசுகளிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் காதில் நள்ளிரவில், தூங்குகிற சமயத்தில் ஒலித்த அந்த ரேடியோ சப்தம் பிசாசு வர்க்கத்தைச் சேர்ந்ததா?

ஒரு வாரம் பார்த்தேன். அதற்கு மேல் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஊருக்குப் புதுசாக வந்து, பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த ஒரு மனோதத்துவ சாஸ்திர நிபுணரைப் பார்த்து அவரிடம் என் விஷயத்தைச் சொல்லலாம் என்று தீர்மானித்தேன். வெறும் டாக்டரிடம் என் நோய் தீராது. மனோதத்துவ நிபுணர் தீர்த்து வைக்கலாம். பார்க்கலாமே என்று போனேன்.

மனோ தத்துவ நிபுணரைப் பார்க்க நான் போன சமயம் அவருடன் வேறு யாரும் இல்லை. அவர் தனியாகத் தன் மேஜை மீதிருந்த இரண்டு வெள்ளை யானைக் குட்டிகளுடன் கொண்டிருந்தார் விளையாடிக் வெள்ளை யானைக் குட்டிகளை என்னைக் கண்டதும் சட்டை பையில் எடுத்துப் போட்டுக்கொண்டு “என்ன விஷயம்?” என்று என்னை விசாரித்தார்.

சொன்னேன்: “இரவு நேரங்களில் என் காதில் மட்டும் ரேடியோ பாடத் தொடங்குகிறது” என்று,

“பக்கத்து வீட்டில் அகாலத்தில் உரக்க ரேடியோ வைத்தால் போலீஸாரிடம் சொல்லி நிறுத்தச் சொல்லிவிடலாமே. என்னைத் தேடிக் கொண்டு வரவேண்டாமே” என்றார் டாக்டர்.

“ஆனால் என் காதில் ஒலிக்கிற ரேடியோ உண்மையில் உள்ள ரேடியோ, அல்ல. கற்பனையில் உள்ள ஒரு ரேடியோதான். அதாவது உலகில் இல்லாத ஒரு ரேடியோ என் காதில் மட்டும் வந்து பாடுகிறது” என்றேன்.

“விசித்திரமாக இருக்கிறதே! அது எப்படி?” என்று மனோதத்துவ நிபுணர் என்னைக் கேட்டார்.

“என் அண்டை வீட்டுக்காரனை நான் சுட்டுக் கொன்றது முதல் இப்படிக் கேட்கிறது. அவன் தன் ரேடியோவை நள்ளிரவில் உரக்க வைக்கிறான் என்பதற்காக, நான் அவனைச் சுட்டுக் கொன்றேன்” என்று உண்மையை டாக்டரிடம் ஒப்புக் கொண்டேன்.

டாக்டர் தலையை வேகமாக ஆட்டினார். “நீர் அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றார்.

எனக்குக் கோபம் வந்தது. “எது செய்திருக்கலாம் எது செய்திருக்கக் கூடாது என்று எனக்கே தெரியும். அதுபற்றி அபிப்பிராயம் கேட்க நான் உம்மிடம் வரவில்லை” என்றேன்.

என் கோபம் தணிந்ததும், மனோதத்துவ டாக்டர் நிபுணரிடம் கோர்வையாக நடந்ததை எல்லாம் சொன்னேன். ரொம்பவும் கவனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார். எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். கம்பியில்லாத திறந்த ஜன்னல் ஓரமாக, காற்று ஜிலுஜிலுவென்று அடித்த இடத்தில் நின்று கொண்டுசொன்னார்.

“விஷயம் எளிதுதான். நீங்கள் செய்த காரியம் உங்கள் மனசைப் பலமாகத் தாக்கியிருக்கிறது. அத்தாக்குதல் காரணமாக உங்கள் காதில் எந்த ரேடியோவிலிருந்து தப்ப விரும்பினீர்களோ, அந்த ரேடியோ ஒலித்துக் கொண்டிருக்கிறது.”

நான் பொறுமையிழந்தவனாகக் குறுக்கிட்டேன். “அதெல்லாம் சரி, நிபுணர் அவர்களே! அதிலிருந்து தப்ப வழி சொல்லுங்கள்” என்றேன்.

“ஒரு தாக்குதலிலிருந்து மனத்தைச் சமாளிக்க, மனத்தை இன்னொரு தாக்குதலுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வளவுதான். பிறகு ரேடியோச் சப்தம் காதில் விழாது. அது மறைந்துவிடும். இரண்டாவது தாக்குதலுக்குக் காரணமான வேறு ஒன்று அதன் இடத்தைப் பிடித்து கொள்ளும். விக்கலுக்கு மருந்து சொல்வார்கள் பாருங்கள்; அது மாதிரி” என்றார் அந்த மனோதத்துவ நிபுணர்.

“என்ன செய்யலாம். சொல்லுங்கள்.”

“இதுவரை நான் சொன்னதற்கு எனக்குச் சேர வேண்டிய பீஸ் நூறு ரூபாய், மேலும் வழிசொல்லித்தர பீஸ் ஐந்நூறு ரூபாயாகும்” என்றார் மனோதத்துவ நிபுண டாக்டர்.

என்னிடம் நூறு ரூபாயும் இல்லை. ஐந்நூறு ரூபாயும் இல்லை. சிறிது நேரம் யோசித்தேன்.

கம்பியில்லாத ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். நிபுணரின் ஆபீஸ் ஐந்தாவது மாடியில் இருந்தது. ஜன்னலிலும் கம்பிகள் இல்லை, கீழே வீதியில் காரும் டிராமும் ஜனங்களுமாக ஒரே கூட்டமாக இருந்தது.

சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று.பலித்தால்  பார்க்கலாம். பலிக்காவிட்டால் நஷ்டமில்லை.

மனோ தத்துவ நிபுணரைச் சட்டென்று ஜன்னல் வழியாகக் கீழே தள்ளிவிட்டேன்.

நிபுணர் சொன்னது சரிதான். இரண்டாவது தாக்குதல், ரேடியோ சப்தத்தை என் அகக்காதுகளில் இருந்து அகற்றிவிட்டது.

 சில சமயம் மனோதத்துவ நிபுண டாக்டரின் வெள்ளையானைக் குட்டிகள்  என் கண்முன் தோன்றி  நாட்டியமாடும்.   அதை  நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு யானைக் குட்டிகளைக் கண்டால் ரொம்பவும் பிடிக்கும்.

1966

க.நா.சு. /குழந்தையில்லாத் தாய் – விருட்சம் நாளிதழ்

One Comment on “க.நா.சு. /மனோதத்துவம்”

Comments are closed.