க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்

1
ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.
ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், கம்பிகளுக்கிடையில் காலை விட்டு எடுக்க முடியாமல் தவிப்பதும், தெருவோடு போய்க் கொண்டிருக்கும் கூடைக்காரர்களைக் கூப்பிடுவதும், தலையணையைக் கம்பிக்கப்பால் செலுத்த முயலுவதுமாக அவள் ஒரு விநாடிகூட ஓயாமல் ஏதோ துருதுரு வென்று விஷமம் செய்து கொண்டிருந்தாள். நாள் பூராவையும் அந்த ஜன்னல் படியிலேயே கழித்துவிட அவள் தயார்தான்.
ராமசாமிக்கு வயது நாற்பதுக்குமதிகமாகி விட்டது. வெள்ளெழுத்து வந்து கண்ணாடி கூடப் போட்டுக் கொண்டு விட்டான். பத்திரிகையைச் சற்று தூரத்திலேயே படித்துக் கொண்டு, பாப்பா மேல் ஒரு கண்ணும் பத்திரிகையின் மேல் ஒரு கண்ணுமாக இருக்க முயற்சிசெய்து கொண்டிருந்தான். மொத்தத்தில் பத்திரிகைப் படிப்பில் அப்பொழுது அவன் அதிகமாக முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பாப்பா செல்லப் பெண். ஒரே பெண். ராமசாமிக்குக் கல்யாணமாகி இருபது வருஷங்களுக்குப் பிறகு, ராமேசுவரம் திருப்பதி என்று விடாமல் ஸ்தல யாத்திரை செய்து, அவர் பெற்ற பெரும் செல்வம். ராமசாமியின் மனைவி அந்த நாட்களில் வேண்டாத தெய்வங்கள் இல்லை; நோற்காத நோம்புகள் இல்லை;
இப்படிப் பிறந்த பெண் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்பவும் செல்லம் என்று சொல்லவும் வேண்டுமா? பாப்பாவுக்கு வயசு இன்னும் நாலாகவில்லை. கண்டிப்போ தண்டனையோ அறியாது வளர்ந்தவள். பயமென்பதை அறியாமல் கணீரென்று குரல்
கொடுத்து வெடுக்கென்று பேசுவாள்.
“பாப்பா! விஷமம் பண்ணாதே!” என்றான் ராமசாமி. அந்த உத்தரவுக்கு எவ்விதப் பயனும் இராது என்று அறிந்த குரலில்.
“ஏன் அப்பா? இப்போ விஷமம் பண்ணக் கூடாதா? நீ படிச்சுண்டிருக்கையா?” என்று மிகவும் சாதுவாகக் கேட்டாள்
பாப்பா.
“விஷமம் பண்ணப்படாது என்றால் பண்ணப்படாதுதான்? ஏன், என்ன என்றெல்லாம் என்ன விசாரிப்பு வேண்டியிருக்கு? ஆமாம். கைகால் ஜன்னல் கம்பிகளுக்கிடையில் மாட்டிக் கொண்டு விடும்; வலிக்கும். அழுவே…’
“உம் உம் உம்…னு அழுவேனா?” என்று பொய் அழுகை அழுது காட்டினாள் பாப்பா.
“ஆமாம்” என்றான் ராமசாமி.
“போடா! படவா அப்பா! நான் அப்படித்தான் விஷமம் பண்ணுவேன்” என்று இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் செலுத்த முயன்று கொண்டே சொன்னாள் பாப்பா.
இதைக் கேட்டுக் கொண்டே பக்கத்து வீட்டுக்காரர் வந்து சேர்ந்தார், ராமசாமியைத் தேடிக் கொண்டு “ஏன் பாப்பா! நீ எவ்வளவு சின்னவள்? அப்பா எவ்வளவு பெரியவர்? அவரைப் போய் போடா, வாடா, படவா என்றெல்லாம் நீ சொல்லலாமோ?” என்று கேட்டார்.
“என் அப்பாவை நான் அப்படித்தான் சொல்வேன்” என்று திடமாக, நீ யார் என்னைக் கேட்க என்கிற தோரணையிலே பதில் அளித்தாள் பாப்பா.
“மற்ற எந்த சமயத்திலாவது என்றால், பாப்பாவுக்கு இசைவு கேடாக ஏதாவது பதில் சொல்லி இன்னும் கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் அடுத்த வீட்டுக்காரர். ஆனால் அப்போது அவர் ராமசாமியிடம் ஒரு பத்து ரூபாய் கைமாத்தாகக் கடன் கேட்க வந்திருந்தார். ஆகவே பாப்பாவிடம் மேலும் பேச்சுக் கொடுத்துக் காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று பாப்பாவிடம் சம்பாஷிப்பதை நிறுத்திக் கொண்டார்.
2
ஊரிலுள்ள, எண்ணிக்கையற்ற சர்க்கார் இலாகாக்களில் ஏதோ ஒன்றில் வேலை பார்ப்பவன் ராமசாமி. போதுமென்ற மனத்துடன் பணக்காரனாக இருக்கப் பழகியவன். சமீபகாலம் வரையில் அவன் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், பட்டுக்கோட்டை என்று நடுத்தரமான ஊர்களில் இருந்து உத்தியோகத்தைப் பார்த்துப் பழகியவன். அவன் சம்பளத்தில் அந்த ஊர்களில் வேறு என்ன வசதிகள் கிடைத்ததோ இல்லையோ, இட வசதியாவது சுமாராக இருந்து வரும். இப்போது சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் இடவசதிக்குத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது.
மாசம் பிறப்பதன்முன், முப்பது அல்லது முப்பத்தோராம் தேதி சாயங்காலமே, பிடித்தம் கிடித்தம் எல்லாம் போக நூற்றைம்பதே சொச்சம் கையில் வந்துவிடும் அவனுக்கு. அந்தப் பணத்தை அடுத்த முப்பதாம் தேதிவரையில் வைத்துக் காலந் தள்ளியாக வேண்டும். பிரும்ம வித்தைதான்; கத்தி முனையில் மற்ற நடப்பது போன்ற அசகாய சூரத்தனமான காரியம்தான். ஊர்களில் எப்படியோ, ஏதோ மனிதத் தன்மை மிகுந்தவர்களின் உதவியினால் சமாளித்து வந்துவிட்டான் ராமசாமி. பட்டணத்திற்கு வந்தபிறகுதான் சமாளிப்பது மிகமிகச் சிரமமாக இருந்தது. ஆனால் வாழ்வது சிரமமாக இருந்தது என்பதற்காகத் தற்கொலையா செய்து கொண்டுவிட முடியும்.
ஒரு கூடம், அந்தண்டைக் கோடியில் ஒரு சமையலறை, இந்தண்டை ஒரு அறை-இந்தப் பகுதிக்கு மாதம் முப்பது ரூபாய் வாடகை. இதற்கே “தேவலையே! நல்ல இடமாக, மலிவாகப் பிடித்து விட்டாயே!” என்று நண்பர்கள் பொறாமைப்பட்டார்கள். முப்பது ரூபாயைக் காலணாக்களாக மாற்றிப் பரப்பி வைத்தால், கூடமும் அறைகள் இரண்டும் நிரப்பி, ஒரு பத்திருபது காலணாக்கள் மிஞ்சும் என்று ராமசாமி சில சமயங்களில் எண்ணிப் பார்ப்பதுண்டு; லைட், வேலைக்காரி, செலவு எல்லாம் செய்ததில்லை. மேற்கொண்டு கூடக்குடியிருந்தவர்களுடன் பகிர்ந்து தரவேண்டியது என்று ஒப்பந்தம்.
அவனும் அவன் மனைவியும் மட்டும்தான் என்றால்கூடத் தேவலை. துருதுருவென்று காலார ஓட விரும்பிய சின்னக் குழந்தைக்குத் தான் இந்த ஏற்பாடு மிகவும் சிரமமாக இருந்தது. வாசலில் ஓடக் கூடாது! குறுகிய சந்தில் எந்த நேரத்தில் எருமை மாடு ஓங்காரம் செய்து கொண்டு துள்ளி வருமோ?
மணியும் பிரேக்குமில்லாத சைக்கிள்கள் பட்டணத்தில் எத்தனை உண்டோ அத்தனையும் அந்தத் தெரு வழியாகத்தான் போகின்றன. தெருவிலே பெரிய பெரிய கார் வைத்துக் கொண்டிருக்கிற பணக்காரர்கள் வேறு இருக்கிறார்கள். பட்டணத்துத் தெருவாச்சே! தெருவை யடைத்துக் கொண்டு, பூம் பூம் என்று ஊதிக்கொண்டு, டாக்ஸி கார் வரும், சொந்தக் கார் வரும், ஆண்கள் ஓட்டுகிற கார் வரும் பெண்கள் ஓட்டுகிற கார் வரும், ஓட்டத் தெரிந்தவர்கள் ஓட்டுகிற கார் வரும், ஓட்டத் தெரியாதவர்கள் ஓட்டுகிற காரும் வரும். தினுசு தினுசான சப்தங்கள் கொடுத்துக் கொண்டு கை வண்டிக்காரர்கள் வந்து வந்து போவார்கள். நாலு வயசு முதல் பதினெட்டு வயசு வரையில் நிரம்பிய பையன்கள் அந்தச் சந்திலே பகல் எந்நேரத்தில் கிரிக்கெட் ஆடுவார்கள் என்று சொல்ல முடியாது.
எது எப்படியானாலும் பாப்பாவைத் தெருப்பக்கம் போகவிட தப்பித்தவறி அவள் ஓடிவிட்டாளானால், திருப்பி முடியாது. அவளை உள்ளே அழைத்து வரும் வரையில், எந்த நிமிஷம் என்ன நேருமோ என்று மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு, கதிகலங்கி நிற்க வேண்டியதுதான்.
ஜன்னல்படியிலே அந்தக் குழந்தைக்கு நின்று கொண்டிருப்பதே எப்போதும் பெரும் ஆனந்தமாக இருந்தது. ஒரு நாளில் தூங்காத பொழுதில் பாதிக்கும் அதிகமாகவே ஜன்னல் படியில் நின்று கொண்டே போக்கிவிடுவாள் பாப்பா. தெருவிலே சாமான் கூவிக் கொண்டு போகிறவர்களுக்கெல்லாம் அவள் ஆப்த சிநேகிதம். ஒவ்வொருவரும் நின்று அவளிடம் இரண்டொரு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார்கள். விற்பவன்கூட, நின்று ராமசாமி கடலை வாங்கமாட்டானா என்று பார்த்துவிட்டு, பாப்பா கையில் நாலு கடலை கொடுத்துவிட்டுத் தான் மேலே போவான்.
3.
ராமசாமி குடியிருந்த வீடு திருவல்லிக்கேணியில் ஜனசந்தடி அதிகமான பகுதியில் ஒரு குறுகலான சந்தில் இருந்தது. வீட்டில் முன் போர்ஷனில் கீழண்டைப் பகுதியில், அவன் குடியிருந்தான். நேர் எதிரேயுள்ள மேலண்டைப் பகுதியில் அவனுடையதே போன்ற சமையல் அறை, கூடம், முன்னறை இவை அடங்கிய பகுதியில் இன்னொரு குடும்பம் குடியிருக்கிறது. இளந்தம்பதிகள்-கையில் நாலு மாதக் குழந்தையுடன். நடுவில் நாலு தாழ்வாரங்கள்; ஒரு சிறிய முற்றம், அதில் குழாய் எல்லாம் பொது. வீட்டில் முதல் மாடியிலும், பின்கட்டிலுமாக வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அது பெரிய குடும்பம்; பதினைந்திருபது அங்கத்தினர்கள் கொண்ட குடும்பம். குடக்கூலியிருப்பவர்களை அவர்கள் அதிகமாகத் சில சமயம் உதவக்கூட தொந்திரவு செய்வது கிடையாது. இந்த நாளில், பார்க்கப்போனால், அது மிகவும் உதவுவார்கள். சௌகரியமான இடம் என்றுதான் சொல்லவேண்டும்.
ராமசாமியினுடைய முன்னறை ஜன்னலில் உட்கார்ந்தால் தெருவில் ஒரு பகுதியும், தெருவுக்கப்பால் ஏழெட்டடி தூரத்தில் ஆனால் இருந்த எதிர்வீடும் தெரியும். நல்ல வேளையாக எதிர்வீட்டில், இந்த ஜன்னலுக்கு நேர் எதிராக ஜன்னல் கிடையாது. எதிர்வீட்டு மாடியில் யார் நின்றாலும், இந்த ஜன்னலும் அதை சில சமயம் ராமசாமி அடுத்துள்ள கட்டிலும் நன்கு தெரியும். கட்டிலில் படுத்திருக்கும்போது எதிர்வீட்டு மாடியில் யாராவது வந்து பெண்கள் யாராவது வந்து நின்றால், கட்டிலில் நிற்பார்கள். படுத்துக் கிடப்பது ராமசாமிக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். அந்தப் பக்கம் கண்ணைத் திருப்பாமலிருக்க முயலுவான். ஆனால் எந்நேரமும் இல்லா அது எப்பவும் சாத்தியமாகிற காரியமா? விட்டாலும், எப்பொழுதாவது ஒரு சமயம், பல சமயங்கள் எதிர் வீட்டு மாடியில் அடிக்கடி வந்து நின்று தன் ஜன்னலைப் பார்த்த பெண்மணியைப் பார்க்க நேர்ந்ததுண்டு.
அந்த அம்மாளுக்கு வயது முப்பத்தைந்து இருக்கும். ஆனால் ஆடை அலங்காரங்கள் எல்லாவற்றையும் கவனித்தான். அவளைப் பதினேழு, பதினெட்டு வயசு என்றுதான் சொல்ல வேண்டும். அவள் முகத்திலே துயரம் சூழ்ந்து படர்ந்திருந்தது; அழகான பெண்மணிதான் என்றாலும், அவள் துயரத்திலாழ்ந்திருந் தாள் முதலில் பாக்கியம் கண்களில்தான் படும். இப்படி ஒரு தடவை ஓடிப்போன குழந்தை எதிரில் வந்த சைக்கிளைத் தப்ப எந்தப் பக்கம் திரும்புவது என்றறியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, பாக்கியம் பாப்பாவை வாரி எடுத்துக்கொண்டு தன் வீட்டு மாடிக்குப் போய்விட்டாள். இந்த மாதிரி சம்பவத்துக்கென்று, பாப்பாவை எதிர்பார்த்து வாங்கி வைத்திருந்த பிஸ்கோத்தையும் சாக்லேட்டு களையும், இரண்டு கைகளும் நிறையக் கொடுத்துத்தான் ராமசாமி வீட்டில் கொணர்ந்து விட்டாள்.
4
அன்றும் வழக்கம் போலக் கட்டிலில் ராமசாமி படுத்துப் படித்துக் கொண்டிருந்தான். ஜன்னலில் வழக்கம் போலவே பாப்பா விளையாடிக் கொண்டிருந்தாள். அடுத்த வீட்டுக்காரர் வந்து பத்து ரூபாய் கைமாத்துக் கேட்டுவிட்டு, கிடைக்காதென்று நம்பிக்கை யிழந்து திரும்பிய பிறகு ராமசாமி மீண்டும் பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டத் தொடங்கினான்.
பாப்பா கேட்டாள்: “ஏண்டா அப்பா! உன்கிட்டே காசே இல்லையாடா அப்பா? அந்த மாமாகிட்ட பொய் சொன்னயே! அதான் சட்டைப் பையிலே காசு வச்சிருக்கயே, நீ நிறைய!” என்றாள் பாப்பாடை,
தன் குழந்தை இப்படிச் சமத்தாகப் பேசியது ராமசாமிக்கு உண்மையிலேயே ரொம்ப ரொம்பப் பெருமையாகத்தான் இருந்தது. கருவம் ஓங்கி வளர்ந்தது அவனுக்கு. “அடி சமத்தே!” என்று தன் பெண்ணை வியந்து கொண்டான். பிறகு சொன்னான்: “உலகத்திலே எல்லோருமே உன்னைப் போலக் கள்ளம் கபடமற்றவர்களாக இருந்து விட்டார்களானால், உலகமே மிகவும் நல்ல இடமாகி ஒரு தவறுகூட நடக்காத லட்சிய பூமியாகி விடுமே. விடாதா?”
எழுந்து, தன் பெண்ணை வாரி எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டு, உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.
‘தலை இப்பத்தான் வாரிண்டேன் அப்பா-தலையைக் கலைக்காதே அப்பா!” என்றாள் பாப்பா.
மறுபடியும் நாலு தரம் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ராமசாமி. வேண்டுமென்றே பாப்பாவின் வாரிய தலை மயிரைக் கோதிக் கலைத்து விட்டான். பாப்பா பொய்யழுகை அழுது. கொண்டே தன் குஞ்சுக் கைகளால், பூப்போன்ற கையால், அவன் மார்பில் பட்பட்டென்று அடித்தாள்; தன் மிருதுவான கால்களால் அவன் வயிற்றில் உதைத்தாள்.
இவ்வளவுக்கும் பிறகுதான் ராமசாமி நிமிர்ந்து எதிர்வீட்டு மாடியைப் பார்த்தான்.
வழக்கம் போலவே எதிர்வீட்டுப் பாக்கியம் தன் மாடி வராண்டாவில் நின்று கொண்டு பாப்பாவையும் தன்னையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கண்டான்.
அவள் முகத்திலே, கண்களின் ஆழத்திலே எல்லையே அற்ற விசனம் குடிகொண்டிருந்தது என்று கவனித்தான் ராமசாமி.
குழந்தையில்லாத அந்தப் பெண்மணிக்கு எதிரில் தான் அப்படிப் பாப்பாவைக் கொஞ்சியது தவறு என்று எண்ணினான் ராமசாமி. ஒரு கணம் மனம் துணுக்குற்றது.
சீதாலட்சுமியைக் கூப்பிட்டு “அடீ! பாப்பாவுக்குச் சுத்திப் போடு” என்றான்.
‘பாப்பாவுக்கு மட்டும் என்ன? உங்களுக்கும் சேர்த்துச் சுத்திப் இருங்கோ” என்று சமையலறையில் வேலை போடுகிறேன். அலுப்பில் எகத்தாளமாகப் பதிலளித்தாள் அவன் மனைவி.5
சொல்லி வைத்தாப்போல அன்றிரவே பாப்பாவுக்கு ஜுரம் வந்து விட்டது; கடுமையான ஜுரம். மேனி சிவக்க, காலை நாலு மணி முதல் குழந்தை துடிக்கத் தொடங்கிவிட்டாள்.
“ஊரெல்லாம் அம்மையாக இருக்கிறது! ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றாள், விஷயம் தெரிந்ததும் எதிர்வீட்டுப் பாக்கியம்.
பாப்பாவைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் ஏதோ மருந்து கொடுத்தார். இரண்டு நாள் கழித்துத்தான் எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியும் என்றார்.
ஆனால் நாலு நாள் கழித்துத்தான் டைபாய்டு மாதிரி இருக்கிறது என்றார். மேலும் இரண்டு நாள் கழித்து டைபாய்டுதான் என்று சொல்லிவிட்டார்.
ராமசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் விலவிலத்துவிட்டது. அந்த நாட்களில் எல்லாம் ஒரு காரியமும் அவர்களால் சரிவரச் செய்யவே பாப்பாவுக்கு வேளா வேளைக்கு மருந்து முடியவில்லை. கொடுப்பது, உணவு கொடுப்பது என்பதுகூட சீதாலட்சுமியால் சரிவரச் செய்ய முடியவில்லை. ராமசாமி அவளைக் கோபித்துக் கொள்வான்; அவள் அவனைத் திருப்பிக் கோபித்துக் கொள்வாள். எதிர்வீட்டுப் பாக்கியம் ஆரம்பத்தில் காலையில் ஒருதரம் சாயங்காலம் ஒருதரம் என்று வந்து பாப்பாவைப் பார்த்துவிட்டுப் போவாள். டைபாய்டு என்று தெரிந்த இரண்டாவது வாரம் அவள் அந்த வீட்டிலேயே குடியிருக்கத் தொடங்கிவிட்டாள் என்று இரவு பதினொன்றரை வரைக்குக் சொல்வதுகூட மிகையாகாது. கொடுக்க வேண்டிய மருந்தையும், பாலையும் தந்துவிட்டு, வீடு திரும்புவாள். அதிகாலையில் வந்துவிடுவாள் பாப்பாவுக்கு ஆக வேண்டிய காரியங்களைச் செய்து தருவதற்கு.
பாப்பா, என் பாப்பா, பாக்கியத்தின் பெண்ணா, சீதாலட்சுமி யின் பெண்ணா என்று ராமசாமிக்கே சந்தேகம் தட்டத் தொடங்கி விட்டது. பெற்ற தாய் சமைப்பது, சாப்பிடுவது, குழந்தைக்கு வெந்நீர் வைத்துக் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கில்லாதவள் ஆகிவிட்டாள். மருந்து ஒரு பாட்டில் ஆவதற்கு முன் இன்னொரு பாட்டில், பதினைந்து பதினாறு ரூபாய் கையை விட்டுத் தானே போட்டுத் தன் கணவனை வாங்கிவரச் சொல்லி விடுவாள் பாக்கியம். இப்படி இரண்டு மூன்று பாட்டில்களாவது அவள் வாங்கியிருப்பாள் என்றுதான் ராமசாமிக்குத் தோன்றியது. இதைத் தவிர ஹார்லிக்ஸ் புட்டிகள், பழங்கள் என்று வாங்கி வந்து ராமசாமியிடம் மாத மத்தியில் கொண்டேயிருந்தாள் பாக்கியம். டாக்டருக்குப் பணம் தரப் பணமில்லாது போனபோது, பாக்கியம் தான் ஒரு பத்து ரூபாயைச் சீதாலட்சுமியிடம் டாக்டருக்குத் தரச் சொன்னாள். இதெல்லாம் எப்படிக் கணக்குப் பார்த்து, என்று கொடுத்துத் தீரப் போகிறதோ என்று ராமசாமிக்குப் பயமாகத்தான் இருந்தது. சீதாலட்சுமி அதையெல்லாம் பற்றி நினைத்ததாகவே தெரியவில்லை.
குழந்தைக்கு என்ன ஆகுமோ என்கிற கவலை சீதாலட்சுமி யைச் செயலற்றவள் ஆக்கிவிட்டது. பாக்கியத்துக்கும் அந்தக் கவலையில்லாமலா இவ்வளவும் செய்தாள். கவலையிருந்திருக்கும்; ஆனால் அந்தக் கவலை அவளைச் செயலில் கவனமுள்ளவளாகச் செய்தது என்று எண்ணினான் ராமசாமி. பாக்கியம் மட்டும் உதவி செய்ய அப்போது இருந்திராவிட்டால், குழந்தையின் கதி என்ன ஆகியிருக்குமோ என்று ராமசாமி ஏங்கத் தொடங்கிவிட்டான். டயப்படி எல்லாம் சரிவரச் செய்து வந்தால்தான், மருந்து உணவு எல்லாம் உரிய காலத்தில் அளவு தவறாமல் சேர்ந்து வந்தால்தான் குழந்தைக்குக் குணமாகும் என்றார் டாக்டர். அதெல்லாம் வேளா வேளைக்குச் சரிவர நடக்கும்படி பார்த்துக் கொண்டவள் பாக்கியம் தான்.
.கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் இந்த நிலைமை நீடித்தது. இந்த ஒன்றரை மாதமும் எதிர்வீட்டு பாக்கியம் எப்பொழுது சமைத்தாள் என்ன சாப்பிட்டாள், எங்கு சாப்பிட்டாள் என்று ராமசாமிக்கும் தெரியாது; சீதாலட்சுமிக்கும் தெரியாது. தங்கள் வீட்டில் சாப்பிடச் சொன்னதற்கு மறுத்துவிட்டாள் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். மருந்து கொடுப்பது, பெட் பானை எடுத்து வைப்பது, துணிமணிகளை அடுக்கி மடித்து வைப்பது, பழங்கள் உரித்துப் பிழிந்து கொடுப்பது, டைம்டேபிளைப் பார்த்து மருந்து கொடுப்பது எல்லாம் அவள்தான். அப்படியாக ஆறு வாரங்கள்! இனி ஒன்றும் டேஞ்சர் இல்லை; குழந்தைக்கு உணவு சரிவரக் கொடுத்துக் கொண்டு வந்தால் உடம்பு தேறிவிடும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். பாப்பாவின் தோள் பட்டையில் புரண்ட சுருண்டடர்ந்த சிறு கூந்தலைக் கத்தரித்தாகிவிட்டது. அவள் முகமே மாறிவிட்டது. ஆனால் இந்த மட்டும் உயிருக்கு ஆபத்தில்லாமல் ஊனம் எதுவும் ஏற்படாமல் இந்த மட்டுக்குக் குழந்தை தப்பிவிட்டது பற்றி ராமசாமிக்கும் சீதாலட்சுமிக்கும் திருப்திதான். குழந்தையைக் காப்பாற்றித் தந்தவள் பாக்கியம்தான் என்று அவளிடம் அவர்கள் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.

6.
பாப்பா எழுந்து நடமாடத் தொடங்கியபின் ஒரு நாள், அது மாதக் கடைசி-இன்னும் இரண்டொரு நாளில் சம்பளம் போட்டு விடுவார்கள்-ராமசாமி எதிர்வீட்டு மாடிக்குப் போனான். அங்கு அன்றுதான் அவன் முதல் தடவையாக பாக்கியத்தின் கணவனைச் சந்தித்தான். அதற்கு முன் அவரைப் அவன் பல தடவைகள் பார்த்ததுண்டு, பேசியதில்லை. இன்று அவரிடம் மருந்து, பழம், முதலியவற்றிற்கெல்லாம ஆன செலவுகளைக் கேட்டுக் கொண்டு, சம்பளம் வாங்கியதும் முதல் காரியமாகத் திருப்பிக் கொடுத்து விடுவது என்று தீர்மானத்துடன் வந்திருந்தான்.
ஆனால் பாக்கியமோ அவள் கணவனோ கணக்குச் சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். ராமசாமி எவ்வளவு சொல்லியும் அவர்கள் காதில் வாங்கவே மறுத்துவிட்டார்கள்.
“எனக்கொரு குழந்தை பிறந்து அதற்கு நீங்கள் இவ்வளவு செய்தால், நான் பணம் திருப்பிக் கொடுத்தால் நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா?” என்று கேட்டார் பாக்கியத்தின் புருஷன் வேங்கடராமன்.
“என் குழந்தைதானே அதுவும்? என் குழந்தைக்குச் செய்ததற்கு நான் எதற்குப் பணம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றாள் பாக்கியம்.
இன்னும் எப்படி வற்புறுத்துவது என்று ராமசாமி தயங்கும் போது, பாக்கியம் சொன்னாள்: “பாப்பாவுக்கு உடம்புக்கு வந்ததே, என்னால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது!” என்றார் அழமாட்டாத குறையாக.
“என்ன அது?” என்று திடுக்கிட்டுக் கேட்டார் ராமசாமி.
“ஆமாம்! உங்கள் மடியில் அந்தக் குழந்தை அன்று செல்லமாக உட்கார்ந்து உதைத்ததைப் பார்த்துத்தான் பொறாமைப்பட்டேன் பாவி நான்! அதுக்கு மறுநாளே பாப்பாவுக்கு ஜுரம் வந்துவிட்டது,’ என்றாள் பாக்கியம்.
அப்படித்தான் ராமசாமியும் நினைத்தான். அன்று குழந்தைக்குச் சுத்திப்போடு என்று தன் மனைவியைக் கூப்பிட்டுச்

530
சொன்னது அவனுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதையெல்லாம் வெளிப்படையாகச், சொல்ல முடியுமா? “அதற்கும் பாப்பாவுக்கு உடம்புக்கு வருவதற்கும் என்ன சம்மந்தம்?” என்றான் ராமசாமி.
“சம்மந்தம் உண்டோ இல்லையோ நமக்கு எப்படித் தெரியும்! ஆனால் அன்று முதல் அவளுக்கு மனசு குறுகுறு என்கிறது”, என்றார் வேங்கடராமன்.
ராமசாமி மனிதர்களின் மனத்தைப் பற்றி வியந்துகொண்டே வீடு திரும்பினான். உள்ளே வந்ததும், பாப்பா அவனைக் கேட்டாள்: “அம்மா வரேன் என்றாளா?” என்று ஆவலுடன் விசாரித்தாள்.
“அம்மா உள்ளே சமைக்கிறாள்” என்றான் ராமசாமி.
“இந்த அம்மாவைக் கேட்கவில்லை நான், எதிர் வீட்டிலிருக்கிறாளே அந்த அம்மா வரேன்னாளா?” என்று விசாரித்தது குழந்தை.
தன் குழந்தையைப் பற்றிப் பெருமையாகத்தான் இருந்தது ராமசாமிக்கு. ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

1966

க.நா.சு/ஊருக்கு நல்லது – விருட்சம் நாளிதழ்