
“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.
“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.
“முதலில் நல்லது, கெட்டது என்பதைப் பாகுபாடு செய்து பார்த்துக் கொள்ளத் தெரியவேண்டாமா?” என்றார் பள்ளிக்கூட உபாத்தியாயர் ராமகிருஷ்ணன். அவருக்கு எப்பவுமே அகராதிகளில் நம்பிக்கை அதிகம். விவாதம் ஏதாவது சூடாக நடந்தால் . அடிப்படைகளை முதலில் தெளிவு செய்துகொள்ள வேண்டும் என்று தொடங்கிவிடுவார்.
“பாகுபாடு செய்து கொள்கிற காரியத்தை மனிதன் எந்த அவனுடைய நிமிஷமும் செய்து கொண்டுதான் இருக்கிறான். ஒவ்வொரு விநாடியுமே நல்லதற்கும் கெட்டதற்கும் உள்ள தார தம்மியங்களைச் சீர் தூக்கிப் பார்க்கச் செய்கிற முயற்சிதான் என்று சொல்லலாம். ஆனால்…” என்று பிரசங்க மேடைத் தோரணையில் அழுத்தமாக அர்த்த பாவத்துடன் நிறுத்தினார் சிவராமன்.
‘ஆனால்… என்ன? முடித்து விடுங்கள்” என்றார் ஷண்முகம் செட்டியார்.
சிவராமன் சொன்னார் : “நாம் நல்லதென்று நினைப்பதெல்லாம் நல்லதாக முடிவதில்லை; நாம் கெட்டதென்று நினைப்ப தெல்லாம் கெட்டதாகவும் போய்விடுவதில்லை.”
‘அப்படியானால், எந்தக் காரியத்தையுமே செய்துவிட்டு, பத்து வருஷம் கழித்துத்தான் அது நல்லதா கெட்டதா என்று முடிவு சொல்லத் தொடங்க வேண்டும்” என்றார் ராமகிருஷ்ணன்.
ஆமாம். ஹிட்லர், முதல் ஐந்து வருஷங்களில் ஜெர்மனிக்கு
நல்லதே செய்தான் என்று பிரிட்டிஷ் ராஜதந்திரிகள்கூடக் கூறிக் கொண்டுதான் வந்தார்கள். பிறகு….” என்றார் சிவராமன்.
“ராஜ தந்திரிகளை எடுத்துக் கொண்டு பலனில்லை. அவர்கள் நல்லதையும் கெட்டதையும் கடந்தவர்கள்” என்றார் ஷண்முகம் செட்டியார்.
‘உண்மையே! ராஜதந்திரிகள் இன்று ஒன்று சொல்லுவார்கள். நாளை ஒன்று சொல்லுவார்கள். அவர்கள் நல்லது கெட்டது, உண்மை பொய் எல்லாவற்றையும் கடந்தவர்கள்” என்றார் சிவராமன்.
ஊருக்கு இந்தக் காலத்தில் நல்லது செய்பவன் ராஜ தந்திரியாகத்தான் இருக்க முடியும். மேடைப் பிரசங்கியாகத்தான் இருக்க முடியும் என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் பரவி இருக்கிறது. சமீப காலத்தில்தான் இது” என்றார் ஷண்முகம் செட்டியார்.
“தோல்வியுற்ற நல்லெண்ணங்கள்தானே நரகத்தின் சுவர்களை எழுப்புகின்றன” என்றார் ராமகிருஷ்ணன்.
நாங்கள் நால்வரும் மாலை வேலையில் மெல்லென வீசிய தென்றலை அனுபவித்துக் கொண்டு நகருக்கு வெளியே ஒரு சிறு வாய்க்காலின் மதகின் மேல் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தோம்.
என் வழக்கமான அந்தக் கோஷ்டியிலே நான்தான் அதிகமாய்ப் பேசுகிறவன் என்று பெயர். ஆனால் ஊருக்கு நல்லது என்கிற பேச்சு எடுபட்டவுடனேயே நான் மௌனமாகிவிட்டேன். மனசிலே இத்தனை நாளும் எங்கேயோ பதுங்கிக் கிடந்துவிட்ட ஒரு விஷயம் தலைதூக்கியது; பழைய ஞாபகம், பதினைந்து பதினாறு வருஷத்துக்கு முந்திய ஞாபகம் ஒன்று வந்து மூண்டு கொண்டது; அது அவ்வளவாக இன்ப ஞாபகம் அல்ல.
பதினைந்து பதினாறு வருஷங்களுக்கு முன் நான் பி.ஏ. படித்து முடித்துவிட்டேன். நடுவில் உத்தியோகம் தேடுகிற காலம். சிலநாள் கிராமத்தில் இருக்கலாம் என்று வந்திருந்தேன். நாலைந்து மாதங்களுக்கு மேல் தங்குவதாக உத்தேசமில்லை. வீட்டிலே பாட்டி இருந்தாள். அப்பாவும் கிராமத்துக்கு வந்திருந்தார். சுகவாசிகளுக்கு நல்ல இடம். அரைக்காவேரி ஜலமும் போய்க் கொண்டிருந்தது.
ஜூலை மாசம் என்றுதான் ஞாபகம்.
தெருவிலே அதிகம் பேர் இல்லை. ஏழெட்டுக் கிழவர்கள் இருந்தார்கள். பத்துப் பன்னிரண்டு பாட்டிமார்கள் இருந்தார்கள். முழுக் குடும்பமாக மூன்று தலைமுறையுள்ள ஏழெட்டுக் குடும்பங்கள் இருந்தன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் தெருவிலே புழுதியிலே நாள் பூராவும் அளைந்து கொண்டிருக்கும். இருபது வயசுக்குட்பட்ட வாலிபர்கள் இரண்டொரு பேர்வழிகள் இருந்தார்கள்.
அந்த வாலிபர்களில் ஒருவன் சாமா. அவன் சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்து ஏழைக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவன். பட்டணத்திலே படித்து அவ்வருஷம் பி.ஏ. ஆனர்ஸ் பரீட்சையில் நன்றாகத் தேறியிருந்தான். அந்த நாட்களில் நாள் பூராவும் அந்தப் பையனுடன் உட்கார்ந்து உலகிலுள்ள எல்லா விஷயங்களையும் பற்றி மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கு ஒரு திருப்தி.
அப்போது அவ்வாலிபன் ஒரு லட்சியவாதி. இப்போது…. இப்போது அவன் உயிருடன் இல்லை.
அது வேறு கதை. இருக்கட்டும்.
சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்தின் மேலண்டைக் கோடியிலே ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருக்கிறது. முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்திலே கூட அந்தப் பிள்ளையார் விக்கிரஹம் ரொம்பவும் அழகாக இருப்பது போல எனக்குத் தோன்றும். பணக்காரப் பிள்ளையார் கோயில் தான். அந்தக் கோயிலுக்கென்று படுகையில் இரண்டு ஏகரா நிலமும், தெருவிலே ஒரு வீடும், ஒரு தென்னந்தோப்பும் இருந்தன. இத்தனைக்கும் பிள்ளையாரின் சார்பில் வாரிசாக இன்றையத் தலைமுறையில் இருந்தவர் ஸ்ரீமான் மகாலிங்கையர் அவர்கள்.
எங்கள் தெருவில் வேறு எதைப் பற்றியும் அபிப்பிராய ஒற்றுமை கிடையாது. நாலு பேர் கூடினால் ஆளுக்கொரு பக்கமாகத் தான் இழுப்பார்கள். தெரு நலன், சொந்த நலன், ஊர் நலன் எதையுமே பார்க்காமல், அவன் சொன்னான் என்பதற்காக இவனும், இவன் சொன்னான் என்பதற்காக வேறு ஒருவனும், மாறுபட்ட அபிப்பிராயங்கள் கூறுவார்கள்-எதிர்மாறான காரியங்கள்தான் செய்வார்கள். யார் யார் எப்படிச் சொல்லுவார்கள் என்று யோசிக்கக் கெட்டிக்காரத்தனமும், அதனால் லாபமடைய வேண்டியதற்கான யுக்திகளும், தந்திரங்களும் அயோக்கியத்தனமும் படைத்தவன்தான் தெருவிலே தலைவன்-அவன் வைத்தது சட்டமாகிவிடும். இந்த வேலையை ஒரு தலைமுறையாகத் திடமாகத் தீர்மானமாக, லாபகரமாகச் செய்து வந்தவர் மகாலிங்கையர்.
தெருவிலே வேறு எதைப் பற்றியுமே ஒன்றுபட்ட அபிப்பிராயம் கிடையாது. ஆனால் இந்த மகாலிங்கையரைப் பற்றித் தெருவிலே ஒரு அபிப்பிராயம்தான் உண்டு. மறு அபிப்பிராயம் கிடையாது.
சாமா, சாத்தனூரிலேயே பிறந்து வளர்ந்து பெரியவனானவன். அவனுக்கு மகாலிங்கையரைப் பற்றிச் சகலமும் தெரிந்திருந்தது. ஏதோ லீவுக்கு நாலு வருஷத்துக்கு ஒருதரம் வருவதும், போவதுமாக இருந்த எனக்கு, சாமா சொல்லித்தான் மகாலிங்கையருடைய சரித்திரம் பூராவுமே தெரியவந்தது.
லட்சியம் பேசுகிற வாலிபர்களாக அந்தச் சமயம் நாலுபேர் சேர்ந்ததின் விளைவு, சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்துக்கு நாங்கள் நன்மை செய்வது என்று தீர்மானித்தோம். ஊருக்கும் தெருவுக்கும் நல்லது எது என்று தீர்மானிக்க எங்களுக்கு அதிக நேரம் ஆகவில்லை. மகாலிங்கையரை ஊரில், பொதுக் காரியங்களில் தலை எடுக்கவொட்டாமல் செய்வது என்று தீர்மானித்தோம். அடிப்படையாகப் பிள்ளையார் கோயில் சொத்தில் அவருக்கிருந்த ஆதீனத்தை, அதிகாரத்தைப் பிடுங்கிவிடுவது என்று தீர்மானித்தோம்.
இதை நேரடியாகச் செய்ய வழி தேடினோம். ஆனால் ஊரில் சதமாக இருந்தவர்கள்-சாமாவின் தகப்பனார் உள்பட, எல்லோரும் மகாலிங்கையருடன் சண்டை பிடித்துக் கொண்டு ஒதுங்கிவிட்டார்கள். அத்தெருவில் வசிப்பது ஆகாத காரியம் என்று எண்ணம் அவர்களுக்கு. தவிர நம் பிள்ளையார் கோயில் சொத்தை அவர் கையிலிருந்து பிடுங்கிவிட்டால், அவர் சாப்பாட்டுக்கே தகராறாகி விடும். தங்களுக்கு உலைவைத்து விடுவார் அவர் என்று பயந்தார்கள். அதாவது பிள்ளையாருடைய சொத்தை அவர் எடுத்துக் கொண்டு போனால் போகட்டும்; நம் பக்கம் வராமல் இருந்தால் சரிதான் என்று அவர்கள் வாதம். நீங்களும் அவர் பக்கம் போகாதீர்கள்; போனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஆபத்து என்பது அவர்கள் கட்சி.
ஆனால், நாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவதாக இல்லை. நாங்கள் முதலில் மறைமுகமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக நேரிடையாகவும் மகாலிங்கையரிடம் பிள்ளையாரைப் பற்றியும் பிள்ளையாருடைய சொத்தில் அவர் சாப்பிட்டதும் போகப் பாக்கியைக் கொடுத்துவிட வேண்டியது பற்றியும் பிரஸ்தாபித்தோம். மகாலிங்கையர் முதலில் எங்களை அலக்ஷியம் செய்துவிடத்தான் பார்த்தார். முடியவில்லை. சமயம் நேர்ந்தபோதெல்லாம் நாங்கள் ஊசியால் குத்துவது போலக் குத்திக் குத்திக் காட்டிக் கொண்டிருந்தோம்.
மகாலிங்கையரைத் தெருவில் பார்த்துவிட்டால் போதும், “பிள்ளையாருக்குத் தும்பிக்கை எங்கேடா?” என்பான் சாமா.
“பொதுச் சொத்துப் படுகைக்குக் காவல் வைத்திருப்பார்” என்பான் அவன் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞன் யாராவது.
“சாகப் போகிற கிழத்துக்கு ட்வில் ஷர்ட்டு எதுக்கடா?” என்பான் சாமா.
“பிள்ளையார் சொத்துத்தானே! ஸில்க்கும் போட்டுக் கொள்வான்” என்பான் இன்னொருத்தன்.
அவரவர்கள் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லிப் பார்த்தார் மகாலிங்கையர். பெரியவர்கள் மகாலிங்கையரைப் பார்த்துச் சிரித்தார்கள். எங்களைக் கண்டிப்பது போலச் சில சமயம் பாசாங்கு செய்வார்கள். ஆனால் அந்தக் கண்டிப்பிலே அவர்களுக்கு மனசில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
ஒரு பத்து நாள் வெளியூருக்குப் போய்விட்டார் மகாலிங்கையர். ஆனால் எங்கே போவது? எங்கே போனாலும் திரும்பி வந்துதானே ஆகவேண்டும்? திரும்பி வந்ததும் பிள்ளையார் கோயில் சொத்துக் கணக்குகளை-பன்னிரண்டு வருஷத்துக் கணக்குகளை-அவரிடம் கேட்பது என்று தீர்மானித்தோம்.
மகாலிங்கையர் சாத்தனூர் திரும்பிய இரண்டாவது நாள் தெருவில் கிழவர்களாக ஆறேழு பேர் கணக்குகளைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. -மகாலிங்கையர் உள்பட-அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மத்தியானம் மணி மூன்றிருக்கும். அன்று புதன்கிழமை என்று ஞாபகம்.
தெருவில் முக்கியமானவர்கள் நாலைந்து பேர்களுக்கு எங்கள் த்தேசத்தைத் தெரிவித்துவிட்டு, சாமா தலைமையில் நாங்கள் ஆறேழு வாலிபர்கள் மகாலிங்கையர் வீட்டுத் திண்ணையை நோக்கி நடந்தோம்.
ஆட்ட சுவாரசியத்தில் முதலில் மகாலிங்கையர் நாங்கள் வந்ததைக் கவனிக்கவில்லை. கவனித்ததும் தப்பி ஓடிவிட முயலுபவர்போல நாலு பக்கமும் மிரள மிரளப் பார்த்தார்.
சாமா சொன்னான்: “பிள்ளையார் கோயில் வரவு செலவுகளைப் பார்க்கவேண்டும். கணக்குத் தேவை, மகாலிங்கையர் வாள்!” என்றான்.
“நானா? என்னையா?” என்றார் மகாலிங்கையர் தடுமாற்றத்துடன். அவரிடம் கணக்கேது, வழக்கேது? தனிக்காட்டு ராஜாவாக ஆட்சி நடத்திய தன்னை யாராவது இப்படிக் கேட்பார்கள் என்று கனவில்கூட அவர் நினைத்திருக்கமாட்டார்.
“உங்களைத்தான்” என்றான் சாமா.
எழுந்து உள்ளே போக யத்தனித்தார் மகாலிங்கையர்.
சாமா ‘கொல்லையிலே ஓடிப் போயிடப் போறார்! யாராவது கொல்லை வாசலண்டை போங்கடா’ என்றான். ஆனால் எங்களில் யாரும் அங்கிருந்து நகரவில்லை எல்லோரும் வேடிக்கை பார்ப்பதில் ஈடுபட்டிருந்தோம்.
ஆனால் மகாலிங்கையர் ஓடிப் போக முடியவில்லை. பிள்ளையார் கோயில் சாவியைக் கொணர்ந்து திண்ணையில் போட்டார். “யார் வேண்டுமானாலும் கோயில், தோட்டம், படுகை எல்லாவற்றையும் இன்று முதல் பார்த்துக் கொள்ளலாம். எனக்கு வேண்டாம் அந்தப் பொறுப்பு” என்றார்.
ராமமூர்த்தி சாஸ்திரிகள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். ஊரிலே நல்லவர் என்று பெயர் அவருக்கு. பரம ஏழை. அங்கிருந்தவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பிள்ளையார் கோயில்
சாவியை எடுத்து அவரிடம் தந்தார்கள். வேண்டாம் வேண்டாம் என்று அவர் ஒதுங்கிவிடப் பார்த்தார். ஆனால் அன்று முதல் அவரே பிள்ளையார் கோயில் சம்பந்தப்பட்ட மட்டில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது என்று ஏற்பாடாயிற்று.
மகாலிங்கையரைப் பழைய கணக்குகளை யாரும் கேட்சு வில்லை. “தெருவிலே பெரியவர்; ஐயோ பாவம்” என்று விட்டு விட்டார்கள்.
அன்று வரையில் சாமாவுக்கும் எங்களுக்கும் வெற்றிதான். தெருவுக்கு நல்லது பிரமாதமாக ஏதோ சாதித்துவிட்ட மாதிரி நினைத்துக் கொண்டுதான் நாங்கள் வீடு போனோம்.
ஆனால் நாலைந்து வருஷங்களுக்குப் பிறகு ஒருதரம் நான் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் போய் இருந்தபோதுதான் தெரிந்தது. பிள்ளையார் கோயில் சொத்து விஷயம் முன்னைக்கிப் போது ஒன்றும் மாறிவிடவில்லை. கர்ப்பக்கிருஹத்தில் ஒரே விளக்கு முணுக் முணுக்கென்று எரிந்து கொண்டிருக்கிறது. மகாலிங்கையர் காலத்தில் க்ஷுணமாகிக்கொண்டிருந்த மேலண்டை சுவர் இப்போது முழுவதும் க்ஷணமாகி விட்டது. வடவண்டைச் சுவர் க்ஷுணமாகிக் கொண்டிருக்கிறது. மகாலிங்கையருக்குப் பதில் ராமமூர்த்தி சாஸ்திரிகள் பிள்ளையார் சொத்துக்களைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் காரியத்துக்காக முனைந்து இல்லாதபாடும் பட்ட சாமா இறந்துவிட்டான்.
பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு எனக்குச் சாமாவின் ஞாபகம் வந்தது.
என் நண்பர்கள் அன்று ஊருக்கு நல்லது செய்பவர்களைப் பற்றிக் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய விவாதத்திலே கலந்து கொள்ளவில்லை.
