
பிரிந்து போகிறார்கள். மக்கள்
கூட்டம் கூட்டமாய்ப் பிரிந்து போகிறார்கள்,
பேருந்துகளில், அகலமான
நடைமேடைகளும் மஞ்சள் கண்ணுடைய
தொங்கும் கடிகாரங்கள் உள்ள
ரெயில் நிலையங்களில்
சிற்றூர்களில் நகரங்களில்
பிரிந்து போகிறார்கள். பெற்றோர்கள், பிள்ளைகள்,
காதல – காதலியர்கள், தம்பதிகள், துறவிகள்
ஏழைகள், பணக்காரர்கள் பிரிந்து போகிறார்கள்.
கப்பலில் போகிறார்கள். மாலை
ஆறு மணிக்கு வடமேற்கில் போகும் விமானத்தில்
பிரிகிறார்கள்
பிரிந்து போகிறவர்கள் ஒரு திசையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
இதோ மெல்லப் பிரிகிறது ஜூலையின் பிற்பகல்
சொல்லவா போகிறது ஒரு காரணம் அதற்கு.
