
அன்று வேறு கிழமை
தமிழில் முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தனின் கவிதைகள் ஆரம்பத்தில் அவ்வளவு எளிதில் பத்திரிகைகளில் பிரசுரமாகவில்லை. இதை நகைச்சுவை உணர்வுடன் இப்படிக் குறிப்பிடுகிறார்.
'கடவுள் விஷயமாக நான் எழுதிய கவிதைகள் உள்ளூர்ப் பெரியவர்களிடம் தெரியவந்தன. இதில் ஒன்று மூதேவியைப் பற்றியது. இதைப் படித்த நண்பரொருவர் மிகவும் வருத்தப்பட்டார். மூதேவியைப் பற்றியெல்லாம் எழுதாதே. இதற்குப் பரிகாரமாக பஜகோவிந்தத்தை தமிழில் எழுது என்றார். இந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக மூதேவியைப் பற்றிய கவிதையையே வரியை மாற்றியமைத்துப் பரிகாரம் செய்தேன்.
'என்னிடத்தில் அப்போது துர்க்கையைப் பற்றிக் கவிதைகள் இருந்தன. அவற்றில் ஐந்து கவிதைகளைத் துண்டுப் பிரசுரமாகச் சிங்கப்பெருமாள் கோயில் நரசிம்மன் என்பவர் வெளியிட்டார். இவர் அரங்கநாதன் கோவிலில் பரிசாரகர். இதுதான் முதலில் பிரசுரமான கவிதை? பத்தாண்டுக் காலத்துக்குப் பத்திரிகைகள் எவையும் என் கவிதைகளைப் பிரசுரம் செய்யவில்லை. ஏனென்றும் தெரியவில்லை.
1960ஆம் ஆண்டு நான் ஞானக்கூத்தன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டேன். வேறு பெயர்களிலும் எழுதினேன். அவை என்னவென்று கூட நினைவில்லை. எழுதியவை ஜி.உமாபதி, பூவை எஸ் ஆறுமுகம் இவர்களைக் கொண்டு வெளிவந்த உமாவில் சில கவிதைகளும் மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்நாடு என்ற பத்திரிகையின் வார மலரிலும் வெளியாயின. பல கவிதைகள் வெளியாகவில்லை என்பதால் கிழித்துப் போட்டு விட்டேன். 1960இலிருந்து 1968 வரை எழுதிய கவிதைகள் ஐந்நூறு இருக்கும். எஞ்சியவை நான்கைந்து கூட இராது. அதற்கும் பிரதி கிடையாது. அன்று தமிழக முதலமைச்சராக இருந்த காமராசருக்கு நான் எழுதிய சீட்டுக் கவிதை தமிழகத்திற்குத் தமிழ்நாடு பெயர் வைப்பு பற்றியது. நினைவில் உள்ளது. பிறகு 1968 இல் சி.மணி நடத்திய 'நடை'யில் பிரச்னை கவிதை வெளியாயிற்று. இதைத்தான் பிரசுரமான என் முதல் கவிதையாகக் கருத வேண்டியிருக்கிறது.'
ஞானக்கூத்தனின் முதல் கவிதையை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
1968ஆம் ஆண்டு பிரசுரமான பிரச்னை கவிதை. அந்தக் காலத்தில் இம்மாதிரியான கவிதையை ஞானக்கூத்தனைத் தவிர யாருக்கும் எழுதத் தோன்றியிருக்காது.
அந்தக் காலத்து வீடுகளில் அதுவும் கிராமப்புறங்களில் திண்ணை உள்ள வீடுகள் அதிகம் இருக்கும். எந்த வீடும் கிராமத்தில் திண்ணை இல்லாமல் இருக்காது. அந்தத் திண்ணையில் வழிப்போக்கர்கள் இரவில் படுத்துவிட்டு காலையில் எழுந்து போய் விடுவார்கள். பெரிய திண்ணையாக இருந்தால் அதிகம் பேர்கள் வருவார்கள். அப்படிப் படுக்க வருபவர் தலையை எங்கே வைப்பதாம் என்ற கேள்விக்கு வேறு ஒருவர் பதில் சொல்வதுபோல் சிறப்பாக எழுதி உள்ளார். அதுவரை பத்திரிகைகளில் வெளிவந்த புதுக்கவிதைகளுக்கு ஒரு திருப்புமுனையாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருந்தன என்று தோன்றுகிறது.
ஞானக்கூத்தன் நண்பர்களான சா.கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன், ந. கிருஷ்ணமூர்த்தி எல்லோரும் சேர்ந்து அன்று வேறு கிழமை என்ற அவருடைய கவிதைத் தொகுதியை அவருடைய திருமண பரிசாக்கத் தயாரித்துக் கொடுத்தார்கள்.
அது ஒரு வித்தியாசமான தொகுப்பு. அன்றைய மிக முக்கியமான ஓவியர்கள் முதன் முறையாக ஒரு கவிதைப் புத்தகத்திற்கு ஓவியங்கள் வரைந்து கொண்டு வந்துள்ளார்கள்.
அந்தத் தொகுதியின் பெயர்தான் 'அன்று வேறு கிழமை.'
